இதழ் 67

போதையைத் தொடாத ஆண்டு ஆகட்டும் 2024

கடந்த ஆண்டு துமியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எல்லோரும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு தங்கள் சொந்தக் காசில் பொங்கும் நிலை வரவேண்டும் என்கிற எங்கள் பிரார்த்தனையை முன்வைத்து இருந்தோம். பொருளாதாரப் பேரலைக்கு எதிராக நீந்திக் கரையேறும் முயற்சியில் எதிர்பாராத பல சூறாவளிகளை சமாளிக்க வேண்டி இருந்தது. அதில் முக்கியமானது போதைப்பொருள் பாவனை.

போதை என்றால் என்ன? அதன் விபரீதம் எப்படிப்பட்டது? என்பதை அறியாமலே போதை பாவனையில் ஈடுபடுகிறார்கள். போதை என்பது தன்னிலை மறக்கச் செய்து மனிதனின் சுய நிலையை சீர்குலைத்து, புத்தியை மயங்க வைத்து, நல்வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கிறது. இது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் அல்ல. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிப்படைகிறது. குடும்பத்தகராறு, கடத்தல்கள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் வெறிக்கொலைகள், வாள்வெட்டு வன்முறை, வாகன விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள் என சாதாரண வீட்டு மட்டத்தில் ஆரம்பித்து கிராமம், நகரம், பிரதேசம், மாவட்டம் மாகாணம், நாடு, அயல்நாடு, சர்வதேசம் வரை அதன் தாக்கம் பாரிய அளவில் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.

முன்னைய காலத்தில் ஒரு சில வகையிலான போதைப்பொருட்களே பாவனையில் இருந்தாலும் தற்போது புதுப்புது போதைப்பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றுள் சிறு பிள்ளைகள் உண்ணக்கூடிய உணவு வகைகள் முதல் பல இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த இரசாயனங்கள் வரைக்கும் உள்ளன.

மன அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடியவை, தூண்டிகளாக செயற்படக்கூடியவை, கஞ்சா சார்ந்த உற்பத்திப்பொருட்கள், மாயத் தோற்றத்தினை உண்டு பண்ணக்கூடியவை, அபின் சார்ந்த உற்பத்திகள், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் என ஆறு வகைக்குள் போதைப்பொருட்களை உள்ளடக்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்போது சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றமை துரதிஷ்டமானதாகும்.

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை என்பனவற்றால் நவீன போதைவஸ்துக்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையை பொறுத்தவரையில் நவீன போதைவஸ்துக்கள் 1980ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கின. இலங்கையில் முதலாவது ஹெரோயின் விற்பனையாளர் 1981ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி 270 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை மாவட்டத்திலுள்ள ஓர் ஊரில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

போதைவஸ்து பொருட்கள் பாவிப்பது, கடத்துவது, வைத்திருப்பது போன்றவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அநேகமான நாடுகளில் இவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இலங்கையிலும் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலமே போதைவஸ்து பாவிப்பதனால் ஏற்படும் தீங்குகளில் இருந்து எமது நாட்டு சமுதாயத்தை பாதுகாக்க முடியும். ஐஸ்’ என்றழைக்கப்படும் ‘கிரிஸ்டன் மெதாம்படெமின்’ என்ற ஆபத்தான போதைப்பொருள், 2 கிராம் அளவுக்கு வைத்திருந்தாலே மரண தண்டனை விதிக்கும் வகையில், நச்சுப் பொருள், அபின், அபாயகர மசோதா திருத்தச் சட்டம், கடந்த அக்…2022-நவம்பர்-19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

போதைப்பொருள் விற்பனை முகவர்கள் முன்னதாக போதைப்பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை பழக்கப்படுத்தி அவர்கள் போதைக்கு அடிமையான பின்னர், அவர்களுக்கு போதைப்பொருளுக்கான பணத்திற்காக அவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளாக மாற்றுகின்றார்கள். வடக்கு கிழக்கில் பாடசாலைகளில் இருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.

நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்களாக, சமுதாயத்தை தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பாடசாலை வளாகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும். நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் இன்றைய நிலையில் விரைந்து செயற்பட வேண்டிய தருணம். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும். அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினரும் முன்வர வேண்டும். இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து, அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி, தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை மீளுருவாக்கும் பொறுப்பு பாடசாலை சமூகம் உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள், மதகுருகளுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது.

அந்தவகையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அபயம் அறக்கட்டளை, சிவபூமி அறக்கட்டளை என்பவற்றோடு இணைந்து துமி அமையம் மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை “விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்” எனும் பெயரில் செயற்படுத்தி வருகிறோம். பாடசாலைகள் தோறும் சென்று இளையவர்களுடன் கலந்துரையாடி இந்த விழிப்புணர்வு செயல் வடிவம் பெற்றுவருகிறது. இதனை மேலும் பலவழிகளில் சமூகமயப்படுத்த பல்வேறு போட்டிகளையும் அறிமுகப்படுத்தி பெறுமதியான பரிசில்களையும் வழங்க இருக்கிறோம்.

எனவே 2024 ஆம் ஆண்டானது போதைப்பொருளுக்கு எதிரான போரின் முக்கிய ஆண்டாக இருக்கப்போகிறது. 2023 ஆம் ஆண்டில் பெருமளவு போதைப்பொருள் சம்பந்தமான கைதுகள் நடைபெற்று பல கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ” இந்த வருடம் முதல் எந்தப் போதைப்பொருளையும் தொட மாட்டேன்.” எனும் உறுதி மொழியை எல்லோரும் எடுத்து, அதனை மெய்வருந்திக் காப்போமேயானால் எமது எதிர்கால சந்ததிக்கு நல்ல வகையில் வாழும் தேசம் ஒன்றை கையளிக்கலாம்.

“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை.”

Related posts

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 04

Thumi202121

AI தொழில்நுட்ப சுவ சரியா அம்புலனஸ் முதல்கட்டமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆரம்பிப்பு.

Thumi202121

வினோத உலகம் – 31

Thumi202121

Leave a Comment