இதழ் 68

என் கால்கள் வழியே..

புதிதா ஒன்றை முயற்சிக்கலாம் என்ற எண்ணங்களுடனுயே இத்தொடருக்கான பிள்ளையார் சுழியை போடுறன். புதிதாக ஆரம்பிப்பதற்கு முன்னர், அப்புதிய முயற்சிக்கான அறிமுகமாகவே இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆம். இன்று Travel Blog எனும் காணொளி வடிவில் பயணக்குறிப்புகள் பரிணமித்து வருகையில், நான் மீள செல்கிறேன் வரி வடிவில் என் பயண நினைவுகளை சமுகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு. இதில் நான் என் பார்வைக்குள் என் எண்ணங்களுக்குள்ளால் அகப்பட்டதை உங்கள் எண்ணங்களுக்குள் விதைத்திட எடுக்கும் முயற்சியே ஆகும்.

என் ஒழுக்கத்தையும் இவ்அறிமுகத்திற்குள் சொல்றது தான் தொடர்ச்சியான வாசிப்புக்குள் என் எண்ணத்தின் ஒழுக்கப்புரிதலுடன் இணைந்து பயணிக்க ஏதுவாக அமையும். எனது இளங்கலைமானி மற்றும் அதன் பின்னரான கல்வியை சார்ந்து எனது ஒழுக்கம் அரசறிவியலை மையப்படுத்தியதாக அமைகின்றது. அதன் பின்புலத்திலேயே கல்லை பார்க்கும் என் பார்வையும் சிந்தனையும் அந்த கல்லின் மீது காணப்படும் அரசியல் அதிகாரத்தை நோக்கியதாகவே அமையும். பயணங்களில் நான் சந்தித்ததும், சிந்தித்ததும் பலதும் அவ்ஒழுக்கத்துக்குள்ளேயே அதிகம் சுழலுவது சகயமானதாக காணப்படும்.

எழுத்து உருவாக்கத்தின் பின்புலத்தையும் இங்கு இணைப்பது, வாசிப்பவர்களுக்கு இன்னும் சில வாசிப்புக்கான களத்தை திறக்க பயனுடையதாக அமையும். ஆம். நான் சே குவேராவின் தீவிர ரசிகன். போராட்டங்கள் நிறைந்த தேசிய இனத்தில் வாழும் பிரஜையாயினும், இப்படியும் ஒருவன் வாழ முடியுமா எனத்திகைத்து ரசிப்பது அந்த ‘சே”க்கு நிகர் எவருமில்லை என்பதே என் எண்ணங்கள். ஆம். இவர் வேறுவழி. சரி, சே குவேராவிற்கான புகழ்மாலை குறிப்பிற்கான காரணம். என் பயணக்குறிப்பு எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஆத்மார்த்த பின்புலம் சேகுவேராவின் பயணம் சார் கருத்துக்களே ஆகும். சே குவேரா பற்றிய வாசிப்புக்களில் யாவும், ‘அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ அவரது நண்பன் ஆல்பர்டோ கிரனாடோவுடன் மேற்கொண்ட பயண அனுபவங்கள்” நிச்சயம் தவிர்க்க இயலாத பதிவாகும். குழப்பம் வேண்டாம் எர்னஸ்டோ தான் சே குவேராவின் பெயர்.

1952ஆம் ஆண்டில் சே குவேரா மற்றும் ஆல்பர்டோ கிரனாடோவின் எட்டு மாத லத்தின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சே குவேராவின் எண்ணங்களையும் பார்வைகளையும் நாட்குறிப்பாக பேணியுள்ளார். இவ்நாட்குறிப்பு 2003இல் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவின் (Aleida Guevara) முன்னுரையுடன் மோட்டார் சைக்கிள் டைரிஸ் (The Motorcycle Diaries ‘Notes On Alatin American Journey’) எனும் நூலாக வெளிவந்துள்ளது.

இந்நூலில் சே தான் தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தை ஒரு இளைஞனுக்குரிய குமுறலுடன் பதிவு செய்திருக்கிறார். இப்பயணத்தின் போது ஆல்பர்டோ கிரனாடோ, ஒரு இளம் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் எர்னஸ்டோ குவேரா, ஒரு புகழ்பெற்ற பியூனஸ் அயர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த 23 வயதான மருத்துவ மாணவர், தங்கள் கண்டத்தை ஆராய முடிவு செய்தனர். அவர்கள் நார்டன் 500CC மோட்டார் சைக்கிளில் அர்ஜென்டினாவில் உள்ள கார்டோபாவிலிருந்து புறப்பட்டு சிலி, பெரு, கொலம்பியா மற்றும் வெனிசுலா வழியாக பயணித்தனர்.

இந்தப் பயணத்தின் அனுபவங்களே பின்னாளில் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது. இம்மாற்றத்தை லத்தின் அமெரிக்க நாட்டு பயணம் எவ்வாறு வடிவமைத்திருந்தது என்பதனை சே குவேரா தனது நாட்குறிப்பிலும், வாழ்க்கையிலும் நிறைவாக செதுக்கியுள்ளார். கியூபாவுக்காகப் போராடிய ஒரு அர்ஜென்டினன், தனது வாழ்நாள் முழுவதும் தனது புகழ்ச்சியில் ஓய்வெடுக்காமல், காங்கோவில் போரிடச் சென்றார். பொலிவியாவில் மற்றொரு போரில் தனது முடிவுக்கு வந்தார்.

உருகுவே பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் எதுவர்டோ காலியானோ சே குவேராவின் லத்தின் பயணத்தை பற்றி, ‘ஒரு பயணம், பல பயணங்கள். சாகசத்தைத் தேடி எர்னஸ்டோ குவேரா, அமெரிக்காவைத் தேடி எர்னஸ்டோ குவேரா, சேவைத் தேடி எர்னஸ்டோ குவேரா, இந்தப் பயணப் பயணத்தில் தனிமை, ஒற்றுமையைக் கண்டது, ‘நான்” ‘நாம்” ஆக மாறியது என்கின்றார். அஃதே பயணத்தின் சிறப்பு.

பயணங்கள் புதியனவற்றை எம்மோடு இணைத்து விடுகின்றது. நாம் பார்த்தவற்றிலிருந்து புதிய உலகிற்கான தரிசனத்தை அளிக்கின்றது. அம்மாற்றத்தை சரியாக உள்வாங்குகையில் பயணிகள் யாவும் ஏதொவொரு வகையில் புதியவர்களாகின்றார்கள். அது சே ஆகவும் ஆஹலாம்! மாறாகவும் நிகழலாம்! எவ்வாறாயினும் பயணம் மாற்றத்தின் ஆதாரம் என்பது நிதர்சனம்.

சே அளித்த உந்தலுடன் இந்த சேனன் தனது இந்திய பயணத்தில் என் பார்வையில் பட்டவற்றை எனது எண்ணங்களுக்குள் பதிந்தவற்றை என் எழுத்துக்குள் சுருக்கி தொடராக உருவாக்க முனைகிறேன்.

என் பயணத்துடன் உங்களையும் அழைத்து செல்ல அடி எடுத்து வைக்கிறேன்.

பயணிப்போம்!

Related posts

கம்பருக்கு பதிலடி கொடுத்த ஔவையார்

Thumi202121

தொடரச்சியாக நடைபெறும் துர்க்கா தேவி வீட்டுத்திட்டம் …

Thumi202121

வெள்ளம் வருமுன் தான் அணை கட்ட வேண்டும்

Thumi202121

Leave a Comment