அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாம்…
அட.. அட.. அட..
அது சரி…!
அந்த அளவு, எந்த அளவு?
ஒரு பருக்கை போதும் எறும்புக்கு
ஒரு கைப்பிடி போதும் பறவைக்கு
ஒரு அகப்பை போதும் பூனைக்கு
ஒரு கோப்பை போதும் மனிதனுக்கு
ஆளுக்கு ஏற்ப
அளவு மாறும்…!
பசிக்கு ஏற்ப
அளவு மாறும்…!
உனக்கு போதும் என்றது
எனக்கு போதாது..
அவளை கொண்டாடவில்லை என்று சிலர்
அவளை அதிகம் கொண்டாடி விட்டார்கள் என்று சிலர்
அவள் சந்தித்து விட்டாள் என்று சிலர்
அவளை சந்தித்து விட்டார்கள் என்று சிலர்
அவள் அங்கே வரவில்லை என்று சிலர்
அவள் இங்கே ஏன் போனாள் என்று சிலர்
அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுக்கிறார்கள்…!
அவள் உலகம் தெரியாதவள் – ஆனால்
அவளை உலகத்திற்கு தெரியும்
அதுதான் பிரச்சினை…!
உன் வாயை மூடிவிட முயல்கிறார்கள் கவனம்…!
உன் காதுகளை இறுக மூடிக் கொள்
வென்றவர் கதைகளின் சாரம் அதுதான்
கடல் தாண்டி வென்றவள் நீ
கண்டங்கள் தாண்டியும் வெல்ல வேண்டும்
கலையும் கடவுளும் அருள வேண்டும்.