தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக்கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும்படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”
என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,
“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது.”
தமிழில் “அ” அன்பது எண் 8 ஐக் குறிக்கும் “வ” 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் “அவ” என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் “அவ லட்சணமே” எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் “எருமையே” எனப்பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் “மூதேவியின் வாகனமே” என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லாவீடே என்றால் “குட்டிச் சுவரே” என்று பொருள்.
“குலராமன் தூதுவனே” என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான “குரங்கே” என்றும் பொருள் படும். “ஆரையடா சொன்னாயது” என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரையென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள்படும். இத்துடன் “அடா” என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை “அடி” என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.