மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.
தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.
தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும். வடக்கு, கிழக்கில் நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கை சனத்தொகையில் 100,000க்கு 14 அல்லது 15 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.
30 வயதுக்கும் குறைந்தவர்களே, அதாவது 15-24 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என, அண்மைக்கால ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்கொலைகளைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு பிரஜை மத்தியிலும் ஒரு தன்னம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். அப்போது தான், உலக நாடுகளுள் நாம் முன்னேற்றமடைய முடியும்.
இவ்வாறு தற்கொலைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் திட்டங்ளையும், இலங்கை அரசாங்கமும் வகுக்க வேண்டும். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை; பிரச்சினையே வாழ்க்கையும் இல்லை. எனினும், நம்பிக்கைத் துரோகத்துக்கு உயிர்களை மாய்த்து, தன்னுயிரை மாய்ப்பதுதான் தீர்வென்றால், பிறந்த குழந்தை முதல் சகலருமே ஒவ்வொருநாளும் உயிரைப் பலமுறை மாய்த்துகொள்ளவேண்டும். வாழ்வதற்கு உதவியவர்களை ஏமாற்றக்கூடாது; ஏமாந்துவிட்டோம் என்பதற்காய், வாழ்க்கையை வெறுக்கவும் கூடாது. இவ்வுயிர் உன்னுடையது அல்ல. அதைப் பலவந்தமாய் உன்னால் பிடுங்கிக்கொள்ள இயலாது; அடுத்தவர்களின் உயிர்களையும் பிடுங்கமுடியாது. ஆகவே, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழக்கிக்கொண்டால், யாருக்கும் இவ்வுலகில் பிரச்சினையே இருக்காது.
ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் “Working together to Prevent Suicide” என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.
என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.
முற்றும்.