இதழ் 68

மின்சாரம் உள்ளவரை அந்தக்காதல் நிலைக்கும்.

அந்த பூங்காவின் ஒவ்வொரு இருக்கைகளிலும் இருந்து ஒவ்வொரு விதமாக அவர்களை கவனிப்பது இப்போது கொஞ்சகாலமாக என் வழக்கமாக போய்விட்டது. எத்தனை மகிழ்வானவர்கள் அவர்கள்!

ஒளித்தெறிப்பின் ஓவியம் போன்றிருக்கும் அவர்களின் அருகில் இருக்கையில் எனக்கே நான் சிலவேளைகளில் பரிதாபமாகத் தெரிகிறேன்.

அவன் இராஜ உடை. இராஜ கம்பீரம். இன்பத்தின் எல்லைகளை இன்னும் நீட்டுவதற்காய் கைகளை விரிக்கிறான். ஆனால் அவனது இன்பத்தின் துளி அவன் கண்களிலல்லவா குவிந்து மின்னுகிறது. ஏனோ அவன் பெயரை பற்றி நான் சிந்தித்ததே இல்லை. அவனை யாரோ ஒருவனாக நினைப்பதாலே அவனைப்பற்றி எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. அதனால் அவனுக்கு ‘அவன்’ என்றே பெயரிடுகிறேன்.

அவன் கையருகே நிலா போல் கண்ணருகே அவள். சென்றவாரம் தான் புரிந்தது. அவளும் அவனைக் காதலிக்கிறாள். ஆம் இந்த விடயத்தை புரிந்து கொள்வதில் நான் கொஞ்சம் தமாதமானவன் தான். அந்த விவேகம் எனக்கிருந்தால் எத்தனையோ நாட்களை என் வாழ்நாளில் வீணாக்கியிருப்பானே.. சரி, என் கதை எதற்கு! எல்லாவற்றையும் முடித்துக் கொண்டுதானே கடல் கடந்து வந்து விட்டேன். உழைப்பும் உறக்கமுமே வாழ்வென்றான இந்த சிங்கப்பூர் நாட்களில் தான் இவ்வழியே ஒருநாள் இந்த ஒளிச் சிற்பத்தைக் கண்டேன். கண்டதும் ஏனோ நின்று விட்டேன். அன்று முதல் என்ன வியோதியோ தெரியாது; தினமும் இப்படி வந்து இந்த வெளிச்சக் காதலர்களை வெறித்துப் பார்ப்பது தான் என் மாலை வேலையாகிவிட்டது.

சரி.. சரி… என்னை பற்றி விடுங்கள்.. அவளைப் பாருங்கள்! அவள் அவனை எந்தளவிற்கு காதலிக்கிறாள் என்று உங்களால் காண முடிகிறதா?
அது அவனுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் ரகசியமாகும். எனக்கெப்படித் தெரியும் என்கிறீர்களா? ஒரு இரவில் கண்டுபிடித்தேன்.

ஒரு நாள் முழு இரவும் இப்படியே பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல என் பார்வையை விட்டு மறையத்தொடங்கினர் இருவரும். விடியல் தொடங்கியது.
சூரிய ஒளி புற உலகை உயர்த்தி விட்டதால், அழகிய அக உலகு தாழ்ந்து கொண்டிருந்தது.

என்னால் அவர்களது சங்கடத்தை புரிய முடிந்தது.

சம்பந்தமே இல்லாமல் அவனது தொழில் பற்றியும் குடும்பத்தை பற்றியும் சிந்தித்தேன். பாவம் அன்றைய வயிற்றுக்காக என்ன தொழில் செய்வான் அவன்? இல்லை இல்லை ஏன் பாவம்? தொழிலை செய்து வயிற்றை நிரப்பி வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? அப்படிஒரு வாழ்வை வாழ்ந்து அங்கும் இங்கும் உழன்று கொண்டிருக்கும் எத்தனையோ பேர் வாழ்வில் மகிழ்ச்சி என்ற சொல்லே மறந்துபோயிருக்கிறது. இந்த உலகில் யார் தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? அவன் வாழ்கிறானே ஒரு வாழ்வு – அதைப்போலொரு வாழ்வு யாருக்கு வாய்க்கும்! வாழ்வதாரமே இல்லாதவன் வாழ்வில் ஆதாரமாய் நிற்கும் அவளைப்போல் இங்கு யாராவது இருக்கிறார்களா? காதலிற்காக எதையும் செய்வார்கள்… கத்தியெடுத்து கையை கிழித்து கூட தம் காதலை நிரூபிக்க தவறாதவர்கள் – தன் காதலன் சமூகத்தில் தன்னை நிரூபிக்கும் வரை காத்திருக்கத்தான் மாட்டார்கள்! காதலில் நம்பிக்கை உண்டு; காதலனிடத்தில் நம்பிக்கை இல்லை.

காதலை விட பெரியது காலம். காலம் தவறிவிட்டால் காதலென்ன? காட்சியென்ன?
‘நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்’ எதார்த்தமான உலகில் எல்லா பேரன்பும் சென்று முடிவடைகிற கடைசி வார்த்தைகள் இவைதான். எனக்கு இதுவரை நிதர்சனமும் புரிந்ததில்லை. எதார்த்தமும் தெரிந்ததில்லை.

அன்று எது இல்லையோ என்னிடம் ‘அது’ இன்று இருக்கிறது. ஆனால் அன்று இருந்த வாழ்வின் இன்பம் ஒன்று கூட இன்றில்லை. இருந்திருந்தால் இந்த பொம்மைகளின் அருகில் நின்று இப்படி ஏன் புலம்பப் போகிறேன்.

இருப்பவன் தான் ஆசையும் படலாம் என்று சூத்திரம் வகுத்துள்ள சமூகத்தை எரிக்கலாம் என்று தோன்றுகிறது.

உழைக்கும் வழியறியா அவனை தன்னவனாக்கி ஒளி வீச வைத்த இந்த தலைவியின் காதல் ‘பெரியது’ என்று நான் சொன்னது ஏனென்று புரிந்ததா?

புரியாவிட்டால் பரவாயில்லை. காதலிப்பவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தால் காதல் என்றைக்கோ அழிந்திருக்குமாம். அறியாமை காதல் அல்ல. புரியாமை தான் காதல். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் இல்லாமையில் நிலையாமைதான் காதல் என்று நிரூபித்தது அன்றைய என் நிலை.

எதுவும் இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி ஒரு பெண்ணை நேசிக்கலாம் என்று சமூகம் இந்த அவனைப்பற்றியும் கேள்வி எழுப்பும். இதில் ஏதும் தவறு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. ஆனால் சமூகம் அபாண்டமாய் பார்க்கும். நல்லவேளை அவன் சமூகத்தை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் ஒருவேளை அவன் நிம்மதி இழந்திருக்கலாம். இன்று என்னைப்போல் இன்னொரு பூங்காக் கதிரையில் அவன் தனித்திருந்திருக்கலாம்.

காதல் என்ற வார்த்தைமீதே கடுங்கோபத்தில் இருந்த நான் இன்று இந்த அவனையும் அவளையும் கண்டு இப்படி இலயித்து நிற்பதற்கு அப்படி என்ன காரணம் தெரியுமா?

அவன் அதிஷ்டத்தை பற்றி எண்ணுகிற நான் அவன் துரதிஷ்டத்தை பற்றியும் எண்ணாமல் இல்லை. அவனால் இதற்கு மேல் அவன் காதலியிடத்தில் நெருங்க முடியாது. ஏன்?
செய்து வைத்த ஒளிச்சிற்பம் தானே! எப்படி நெருங்க முடியும்? ஆனாலும் நான் பொறாமை கொள்கிற அவனது பேரதிஷ்டம் என்ன தெரியுமா?

அவன் காதலி அவன் பார்வைக்கு ஒளி மங்கவே மாட்டாள். அவள் பார்வைக்கு அவனும் ஒளிமங்கமாட்டான். இருவரும் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். மின்சாரம் உள்ளவரை அந்தக்காதல் நிலைக்கும்.

Related posts

வெள்ளம் வருமுன் தான் அணை கட்ட வேண்டும்

Thumi202121

சிறு நடுத்தர நிறுவன (SME) வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் கொள்கைகள்

Thumi202121

என் கால்கள் வழியே..

Thumi202121

Leave a Comment