இதழ் 68

வெள்ளம் வருமுன் தான் அணை கட்ட வேண்டும்

அண்மைக் காலமாக டெங்கு நோயினால் கணிசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பரவ மூல காரணம் எமது சமூகப் பொறுப்பற்ற செயற்பாடுகளால் ஆகும். சுகாதார வைத்திய பரிசோதகர்களுக்கும், தண்டப் பணத்திற்கும் பயந்து சூழலை சுத்தமாக வைத்திருப்பதாக காட்டுகிறோமே தவிர, நாமாக உணர்ந்து அவர்கள் பரிசோதனைகளுக்கு முன்பதாகவே செயற்படுகிறோமா என்றால் இல்லை என்பதே பதிலாகின்றது.

எனவே எங்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டால்த்தான் சமூகப்பொறுப்பின் அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கும். அதற்கு முதலில் சாகாவரம் போன்றதொரு வரத்தை பெற்றிருக்கும் டெங்கு நுளம்புகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன. (DEN 1, DEN 2 , DEN 3, DEN 4) டெங்கு தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சினுள் விரிந்து செல்வதுடன் சில நபர்களிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படமாட்டாது என்பதுடன் இன்னும் சிலரிடம் நோய் அறிகுறிகள் தென்படும்.

இலங்கையில் தற்போது 140 வகையான நுளம்பு இனங்கள் காணப்படுவதுடன் ஈடிஸ் ஈஜிப்டை மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் ஆகிய இரண்டு நுளம்பு வகைகள் மாத்திரம் டெங்கு நோய் வைரஸை பரப்புவதில் பங்களிப்புச் செய்கிறது. இவ் இரண்டு நுளம்பு வகைகளை அவற்றின் உடம்பில் காணப்படும் அடையாளம் காரணமாக இலகுவில் இனங் காணலாம்.

ஈடிஸ் நுளம்பின் முட்டைகளுக்கு பாதகமான சூழல் மற்றும் காலநிலை நிலைமைகளினைப் பொறுத்துக்கொண்டு பல மாதங்கள் சாகாமல் வாழ்வதற்குரிய விசேட ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் இதன் காரணமாக நுளம்பின் குடம்பி சந்தர்ப்பம், கூட்டுப்புழு சந்தர்ப்பம் மற்றும் நிறைவுடலி சந்தர்ப்பங்கள் அழிக்கப்பட்டாலும் நுளம்பின் முட்டைகள் தேங்கியுள்ள கொல்கலனொன்றில் நீர் விழுந்ததும் முட்டை வெடித்து மீண்டும் நுளம்புகள் பெருகக் கூடிய ஆற்றல் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக கொல்கலன்களில் ஒட்டியுள்ள முட்டைகளை அழிப்பதற்கான விசேடமான ஒரு முறைமை காணப்படவில்லை. நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்தில் காணப்படும் இவ்வாறான இயல்புகளின் மாற்றங்களின் காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டெங்கு நுளம்புகளை இல்லாதொழித்தலானது இலகுவான காரியமல்ல.

எமது பகுதிகளில் டெங்கை ஒழிப்பதாயின் முதற்கட்டமாக டெங்கு நுளம்புகளைப் பற்றிய மேற் கூறிய விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும். அப்போது தான் நீரில்லாத கொள்கலன்களிலும் அவை மாதக் கணக்காக உறங்குநிலையில் இருந்து விட்டு, மழையையோ நிரையோ கண்டவுடன் உயிர்பெற்று வரும் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது தான் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

நுளம்பை கூட்டம் கூட்டமாக பெருக விட்டுவிட்டு, பெருகிய நுளம்பை அழிக்கவும், நுளம்பிடம் கடிவாங்காமல் ஓடி ஒளிக்கவும் வழி தேடுவது முட்டாள்தனம். வீட்டுச் சூழலை இயன்றவரை என்று இல்லாமல் கட்டாயமாக சுத்தமாக வைத்திருங்கள். நுளம்பிற்காக மட்டும் இதை சொல்லவில்லை. சுத்தமான சூழல் உங்களை வேறு நோய்நொடிகள் அணுகாமலும் தடுக்கும். உடல் ரீதியாக மட்டுமன்றி உள ரீதியாகவும் உங்களை பலப்படுத்தும் ஆற்றல் சுத்தத்திற்கு உண்டு.
குறிப்பாக கழிவு நீர் செல்லும் பாதைகள், மழை நீர் செல்லும் பீலிகளின் சுத்தத்தை அடிக்கடி கவனிக்க வேண்டும். அதோடு வெட்டி வீழ்த்தப்பட்ட வாழையின் அடிப்பகுதியிலும் நீர் தேங்காமல் மண் போட்டு மூட வேண்டும். இவ்வாறு ஏனைய நீர் தேங்கும் வழிகளையும் தேடித்தேடி இல்லாமல் செய்ய வேண்டும்.

அதோடு எமது பகுதிகளில் பயன்பாடற்ற காணிகள் பல உள்ளன. வருடக்கணக்கில் ஆள் நடமாட்டம் இல்லாததில் பற்றைகள் வளர்ந்து நுளம்புகள் பெருக பெருமளவில் பங்களிப்பு செய்கின்றன. அக்காணிகளை தயவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவாருங்கள். அல்லது குத்தகைக்கு கொடுங்கள். தானியங்களும் மரக்கறிகளும் விளைய வேண்டிய விவசாய நிலங்களில் நுளம்புகள் விளைந்து, மக்களை கொல்கின்றன.

எனவே, எங்களால் செய்யக்கூடிய கருமங்களை முதலில் செய்து முடித்து விட வேண்டும். அப்போது அரச திணைக்களங்கள் தாமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

“உலகத்தின் மிகப்பெரிய சொல் செயல்.”

Related posts

மனங்கள் மாற வேண்டும்…!

Thumi202121

என் கால்கள் வழியே..

Thumi202121

தற்கொலைகளால்தடமழியும்தலைமுறைகள் – 05

Thumi202121

Leave a Comment