இதழ் 69

வினோத உலகம் – 33

உலகின் மிகப்பெரிய பாம்பு என்று நம்பப்படும் 26 அடி நீளமுள்ள பச்சை அனகோண்டா பாம்பு ஒன்றின் காணொளி ஒன்றை விஞ்ஞானியான ஃப்ரீக் வோங்க் என்வர் பதிவிட்டுள்ளார். அமேசான் மழைக்காடுகளில் இருந்து இந்த புதிய வகை பச்சை அனகோண்டாவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் ‘மக்கள் தேர்வு’ விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்’ விருதை ‘BTS’இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இவ்விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.

தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ”கோல்டன்’ தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். 

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒருகுட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, “பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்த்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். இதுபோல, மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இளமையை நீட்டிக்கவும், தூக்கமின்மையை போக்கவும், குழந்தை பாக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் “எஜியாவோ” (Ejiao) எனும் மருந்திற்காக, கழுதைகளின் தோல்களை வேக வைத்து, அதில் பல பொருட்களை சேர்த்து பொடியாகவும், மாத்திரையாகவும், மருந்தாகவும் சீனாவில் விற்கப்படுகிறது.

பல ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர், உணவு, பெரும் சுமை தூக்குவது உள்ளிட்ட பல வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் 53 மில்லியன் கழுதைகளில் 3ல் 2 பங்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன.கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால், அவற்றை பலர் களவாடுவது அதிகரித்துள்ளது. திருடு போகும் கழுதைகளின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டறியப்படுவதாக கழுதைகளின் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

1990களில் சீனாவில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2021 காலகட்டத்தில் 2 மில்லியனுக்கும் கீழே குறைந்து விட்டது. இதையடுத்து, சீன நிறுவனங்கள், தங்கள் தோல் தேவைக்கு ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்துள்ளன.

2013ல் $3.2 பில்லியனாக இருந்த எஜியாவோவிற்கான சந்தை மதிப்பு, 2020ல் $7.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது மேலும் உயர்ந்தால், கழுதை இனத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், கழுதை தோல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடுகளில் விலங்கின ஆர்வலர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

Related posts

மடந்தை ஒழிப்போம் மானிடா…!

Thumi202121

நல்லதோர் வீணை செய்தே… அதை நலங்கெட புழுதியில் எறிவதுவோ…?

Thumi202121

இலக்கியம் முதல் இன்று வரை பெண்மையின் பேராற்றல்

Thumi202121

Leave a Comment