மோகினி, மோகத்தினால் அசுரர்களை மயக்குவதற்காக திருமால் எடுத்த ஓர் அவதாரமாகும். அழகான உடலைப் பெற்று அதைக் கொண்டு அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிவகை செய்தார் திருமால் . இங்கு அழகென்பது காமத்திற்காய்- அறிவை மயக்குவதற்காகப் பயன்பட்டமையை மாற்ற நினைத்தான் பிரமன். அழகென்பது தவத்திற்காகப் பயன்படுமாறு உருவாக்க முனைந்தான். அதற்காக அழகு நிறைந்த பெண்ணொருத்தியை படைத்தான். அவளுக்கு அகலிகை என்று பெயரிட்டான்.
உலகை முதலில் சுற்றி வருபவருக்குத் தன் மகளை மணமுடித்துத் தருவதாகப் பிரம்மன் கூறினான். அதன்படி கௌதமர் ஒரு பசுவை வலம் வந்து அகலிகையை மணந்ததாகச் சொல்லப்படுகிறது.
அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான் இந்திரன். தன் கணவனைத் தவிர பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசி அகலிகை என்பதை இந்திரன் புரிந்து கொண்டு, ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்குச் செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலியைப் புணர்கிறான். திரும்பி வந்த கொளதமர் நடந்ததை அறிந்து இருவரையும் சபிக்கிறார்.
இவ்விடத்தில் ஒரு தடுப்பு; கொஞ்சம் நில்லுங்கள்; இக்கதையை வான்மீகி சொல்லும் போது புதிதாக வந்திருப்பவன் இந்திரன் என்று அறிந்த பின்னும் அகலிகை அவனுடன் கூடி மகிழ்ந்திருந்தாள் என்கிறார். ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழோடும் பண்போடும் கலந்து பெயர்த்து எழுதிய கம்பரோ அகலிகையை “நெஞ்சினால் பிழைப்பிலாள்” என்றே கூறுகிறார்.

குடிலுக்குத் திரும்பிய கௌதமர், இந்திரனோடு அகலிகை இன்பமாக இருப்பதைக் கண்டு கோபம் கொள்கிறார். இந்திரனுக்கும் சாபமிட்டுவிட்டு, அகலிகையைக் கல்லாக மாறும்படி சபிக்கிறார். அவள் இந்திரன் கௌதமராக மாறி வந்தமையால்தான் இவ்வாறு நிகழ்ந்தது என்று விளக்கம் கூற, மனமிரங்கிய கௌதமர் அவள் புனிதமென்பது உண்மையென்றால் இராமரின் கால்பட்டு சாபம் நீங்கும் என்று கூறுகிறார்.
பின்பு, இராமாயணக் கதையின்படி இராமனின் பாதம்பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றாள் என்று தெரிகிறது.
இந்த சாப விமோசனத்திற்கு பின்னர் நடந்த கதை ஒன்று உள்ளது. அதை சொல்லுகிறார் புதுமையை தன் பேனாவில் ஊற்றி எழுதிய எழுத்தாளர் புதுமைப் பித்தன்.
வனவாசம் முடிந்து சீதையும் ராமனும் அயோத்தி நோக்கி திரும்பையில் மீண்டும் தன்னை பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்து காத்திருந்தாள்.
அவள் நினைத்தது நடந்தது.
ரதத்தைவிட்டு இறங்கி ராமனும் சீதையும் அகலிகை குடிலிற்குள் வந்தனர். இராமனது நெற்றியில் அனுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவும் அனுபவத்தால் பூத்திருந்தது.
ராமனை அழைத்துக்கொண்டு கௌதமர் வெளியே உலாவச் சென்றுவிட்டார்.
தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தையால் உள்ளத்தில் சுரக்கும் ஒரு பரிவுடன் அகலிகை சீதையை உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள்.
இராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது?

அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்து விட்டாள்.
“அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?” என்று கேட்டாள் அகலிகை.
“அவர் கேட்டார்; நான் செய்தேன்” என்றாள் சீதை, அமைதியாக.
“அவன் கேட்டானா?” என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது.
அகலிகைக்கு ஒரு நீதி, அவளுக்கு ஒரு நீதியா?
ஏமாற்றா? கொளதமர் சாபத்திலும் குற்றமில்லையா? இராமன் அன்று எடுத்துரைத்த நியாயங்கள் அவனிற்கில்லையா?
இருவரும் வெகு நேரம் மௌனமாக இருந்தனர்.
“உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.
“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.
“நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்?“
வெளியில் பேச்சுக் குரல் கேட்டது. அவர்கள் திரும்பிவிட்டார்கள்.
சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை.
அகலிகையின் கோபம் ராமன் மனசைச் சுட்டது;
ரதம் உருண்டது; உருளைகளின் சப்தமும் ஓய்ந்தது.
கொளதமர் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்தார். நிலைகாணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவர் கண்ணில் பட்டது.
புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விரல்கள் அகலிகை மனசின் சுமையை இறக்கிவிடாவா?
உள்ளே நுழைந்தார்
அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்கவேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.
கொளதமர் அவளைத் தழுவினார்.
கொளதமர் உருவில் வந்தது இந்திரன் வேடமாகப்பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி!
கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.
அகலிகை மீண்டும் கல்லானாள்.
உலகிற்காய சீதையையே தீயில் நிற்பித்த இராமனால் பெற்ற சாப விமோசனத்தை வேண்டாம் என்று வெறுத்தாள். அவள் மனச் சுமை மடிந்தது.

பெண் என்னும் பெருஞ்சக்தி்அது.
அதன் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள்.
ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. முதிர்ந்த கணவன் எத்தனை அநியாயம் செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
இது நளாயினி கதை.
நாளாயினியைப் போல் மீண்டும் புதுமைப்பித்தன் இன்னொரு பெண்ணைப்பற்றி நம்மிடம் எடுத்துக்காட்டுகிறார்.
அம்மாளு அவள் பெயர். ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. கணவன் முருகேசன் குதிரை வண்டி ஓட்டுகிறான். அம்மாளு, முருகேசன், அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை – ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள்குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு. வீட்டு வாடகை, போலீஸ் மாமூல், முருகேசன்தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு – எல்லாம் இதற்குள் தான்.
அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் தண்ணி போட்டு விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி டோக்கர்அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சுமூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப்பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோடஇன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?
அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.

எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.
சந்தின் பக்கத்தில் ஒருவன் – அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் கண் வைத்திருந்தவன்.
இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சிவார்க்கத்தான்!
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்’
புதுமைப்பித்தன் அறிமுகப்படுத்திய அந்த பொன்னகரம் உங்களை வாயடைக்கச் செய்து விட்டதா?
பெண் என்ற பெயரிற்குள் எத்தனையோ இரகசியங்கள் இன்னும் இருக்கின்றன. சமூகத்தின் கண்களிற்கு எல்லா வண்ணங்களும் தெரிவதில்லை. பெண்களும் எல்லா வண்ணங்களையும் காட்டுவதில்லை. காட்டினால் சமூகம் சரி பிழை என்ற துலாக்கோலோடு தீர்ப்பு சொல்லவே புறப்படும். அவள் நிலையோ சங்கடமோ சமூகத்திற்கு ஒரு பொருட்டில்லை.
பெண்ணைப்பற்றி எழுதுவதற்கும் பெண்ணியம் பேசுவதற்கும் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் பேராற்றலை தரசிக்கும் தைரியம் நம் சமூகத்தில் எத்தனை பேருக்கு உண்டு?
இங்கு நாம் அள்ளித் தெளித்தவை அபூர்வ மங்கைகளை பற்றிய கதையல்லை. ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் இருக்கின்ற அபூர்வத்தை பற்றிய கதைகளாகும். இலக்கியத்தில் எங்கோ நடந்த எப்போதே கண்ட கதைகளல்ல. இன்றும் அன்றாடம் நாம் வீதியில் காணும் அனைத்து பெண்களிடமுள்ள உள்ள ஆற்றல்களை இக்கதைகளில் காணலாம்.
‘நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர்நோக்குவது அவச்செயல் ஆகும்’ என காந்தி கூறியதுபோல, மண்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், பாய் முடைதல், கூடை முடைதல், ஆடு மாடு, கோழி வளர்த்தல், தேன் எடுத்தல் போன்ற சிறுகுடிசைத் தொழில்களை செய்து தங்களது பொருளாதாரத்தை இந்த சமூகத்தில் போராடி ஓரளவிற்கு பெண்கள் உயர்த்திக் கொண்டார்கள்.
பெண்ணின் பலம் என்பது பெண்ணிற்கானது மட்டுமல்ல. ஆணிற்கும் அதுவே ஆதாரம்.
மாலவனோ இலக்குமியைத் தன் நெஞ்சில் ஏற்று மலர்மகள் உறை மார்பனாய்க் காட்சி தந்துக் கருத்தில் நிறைகின்றார். நான்முகனோ நாமகளைத் தன் நாவில் கொண்டு நல்லறம் காக்கின்றார்.
பெண் அறிவும், மங்களமும் செல்வமும் தந்தருள்பவள் மட்டுமல்ல. ஆணுக்குத் தெளிவருள் தந்திடும் சோதியாய், ஆணின் உயரிய எண்ணங்கள் உயர்வெற்றி அடைய உதவும் சக்தியாயும் அமைகின்றாள்.

பெண் கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள். தன்னை உருக்கி, சிறுமைப் படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய்த் தான் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றுத் தியாகத்தின் வழி பெருந்தெய்வ நிலையை எய்தி நிற்பவள்.
நம் பார்வை இன்னும் பிரகாசமானால் வீட்டில் தொடங்கி வீதியில் காணும் அத்தனை பெண்களின் புதுமையையும் கொண்டாடத் தொடங்குவோம். பெண்ணைக் கொண்டாட ஒரு தினம் போதாது. ஒவ்வொரு நொடியும் அது நம் கடமையே..