இந்திய பயணத்துக்கான வாய்ப்பு….!
ஆம். இந்தப்பகுதியில் எனது இந்தியா பயணத்துக்கான வாய்ப்பை, அதில் ஏற்பட்ட அனுபவங்களை வாசிப்பாளர்களுடன் உரையாடலாம்னு நினைக்கிறேன். இம்முறை இந்தியாவுக்கான பயணத்தின் வாய்ப்பு, என் அனுபவம் நிச்சயம் பட்டக்கற்கை மற்றும் பட்டப்பின் கற்கைக்காக இந்தியாவை தெரிவு செய்ய விரும்புவர்களுக்கான பயனுறுதியான தகவலை பெறக்கூடியதாக அமையும். நான் முதலாய் பெறும் அனுபவத்தை என்பின் அடியொற்றி நடை போடுபவர்கள் இலகு நடை போட வேண்டும் என்ற விருப்புடனேயே இப்பகுதியை பதிவு செய்கிறேன்.
இந்தியாவுக்கான இம்முறை பயணம் மூன்றாவது முறை. கடந்த இரு முறையும் ஆகக்கூடியது ஒரு மாதத்துக்கு உட்பட்டதாகவும், சுற்றுலா என்ற எண்ணங்களுக்குள்ளே தமிழ் நாட்டுக்குள்ளேயே அமைந்திருந்தது. இம்முறை எனது முதுகலைமானி கற்கைக்கானது. இரு வருடங்களுக்கானது. அதிலும் புதிய அனுபவ தேடல் என்ற முனைப்பு. ஏனெனில் இம்முறை பயணம் வட இந்தியாவிற்கு. இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு. இந்த பரவசத்துக்கு முதல் டெல்லிக்கான வாய்ப்பு நகர்வை உரையாடிடுவோம். அதே இப்பகுதியில் அவசியமானது.
ஆம். எனது இப்பயணத்திற்கான உந்துதல் இந்தியாவின் புலமைப்பரிசிலை சார்ந்தே அமைகின்றது. மார்ச் (2023) மாதம் அளவில் எனது விரிவுரையாளர் சி.திருச்செந்தூரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தியாவின் புலமைப்பரிசில் தொடர்பான விண்ணப்பத்துக்கான முன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். முழுமையான நம்பிக்கை இல்லாவிடினும் பகுதியளவிலான திருப்தியே காணப்பட்டது. எனினும் எனது விரிவுரையாளரின் முழுமையான உந்துதலே எனது ஆரம்ப முயற்சிக்கு காரணமென்பதில் மறுப்பதிற்கு இல்லை. தன் மாணவனை ஆசான் உயர்த்தி பார்ப்பதில் மகிழ்ச்சியடைவார் எனும் கூற்றுக்களின் நிதர்சனத்தை எனது விரிவுரையாளர் உயர் கற்கைக்கான புலமைப்பரிசில் அறிவிப்புக்கள் வரும்போதெல்லாம் என்னை நெறிப்படுத்தி தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தங்களிலேயே அறிந்து கொண்டேன்.
சரி. நாங்க விண்ணப்பத்திருந்த புலமைப்பரிசில் முடிவுகளை பார்ப்போம். இந்திய புலமைப்பரிசில் உயர் இலங்கை கல்வி அமைச்சுடன் இணைந்த செயற்பாடு என்ற நிலையில், மார்ச் மாதம் இலங்கை உயர்கல்வி அமைச்சின் இணையவழி(Online Portal) விண்ணப்பத்தையே செய்திருந்தேன். நான் முதுகலைமானி கற்கைக்கே பதிவு செய்திருந்தேன். மார்ச் மாத இறுதியில் கலாநிதி பட்ட ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எனினும் முதுகலைமானி கற்கைக்கு பதிவு செய்திருந்த நான் அழைக்கப்பட்டிருக்கவில்லை. எனது ஏமாற்றத்தை உணர்ந்த என் விரிவுரையாளர் ஆரம்பத்தில் கலாநிதி பட்ட ஆய்வளார்களுக்கான நேர்முகத்தேர்வுகள் முடிய முதுகலைமானிக்கான அழைப்பு வரும். காத்திரு. என ஆறுதல் வார்த்தைகளாய் கூறினார். நான் இந்திய புலமைப்பரிசில் முயற்சியின் முடிவு தோல்விதான் என்ற எண்ணங்களுக்குள் நகர்ந்து விட்டேன்.
ஏப்ரல் நடுப்பகுதியில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரலாய கல்விப்பிரிவின் மின்னஞ்சலில் இருந்து தங்களின் Online Portal–இல் (a2ascholarships.iccr.gov.in) விண்ணப்பிக்குமாறு சில அறிவுறுத்தல் அடங்கிய மின்னஞ்சல் வந்திருந்தது. முற்றுப்பெற்றது என நான் நினைத்த இந்திய புலமைப்பரிசில் நடவடிக்கைக்கு மின்னஞ்சல் காற்புள்ளி இட்டது. மின்னஞ்சல் கிடைக்கப்பெற்ற மறுநாள் யாழ்ப்பாணத்திலுள்ள உப இந்திய உயர் ஸ்தானிகரலாயத்திலிருந்து தொலைபேசி அழைப்பில் இணையவழியூடாக பதிவு செய்யுமாறு கூறியிருந்தார்கள். இவ்அழைப்பும் மின்னஞ்சலும் ஏறக்குறைய புலமைப்பரிசில் உறுதி என்றவாறு எனது பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர் சி.திருச்செந்தூரன் அவர்களும் நம்பிக்கையூட்டினார்கள். எனினும் என் மனதில் முழுமையடையாத திருப்தி.
மின்னஞ்சல் அறிவுறுத்தலின்படி கொழும்பு தூதரகத்தினூடாக (Through Indian Mission as Colombo) எனும் தெரிவினூடாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று ஒருவாரத்துக்குள் ஆவணங்களை உரிய முறையில் ஒழுங்குபடுத்தி இந்திய புலமைப்பரிசில் இணையவழியில் பதிவேற்றினேன். விண்ணப்பத்தில் ஐந்து இந்திய பல்கலைக் கழகங்களையும் கற்கையையும் தெரிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. என் தெரிவுகள் யாவும் வடஇந்தியாவை மையப்படுத்தியே இருந்தது. காரணம் வேறுபட்ட மொழி என்னை ஆங்கில மொழி பிரயோகத்துக்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை. மற்றும் தென்னிந்தியா நம் நாடு என்ற ஒரு உணர்வு.
இந்த இடத்தில என் பழைய அனுபவம் ஒன்றை பதிவு செய்றதும் பொருத்தமா இருக்கும். நான் முதல் தடவை 2017ஆம் ஆண்டு சென்னைக்கு செல்கையில் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்த மொழிப்பதட்டம் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. யாழ்ப்பாணத்துக்கு வந்ததொரு மகிழ்ச்சி. காரணம் என் மொழி. தமிழ். அந்த நினைவுகளின் ஆழமான பதிவின் தாக்கமும் வடஇந்தியா நோக்கிய தெரிவுகளுக்கு காரணமாகியது. இதற்கு இத்தோடு ஒரு வினாக்குறி இட்டாச்சு.
மறுபக்கத்தில் ஐரோப்பிய நாட்டு மோகமும் என் இரட்டை மனோநிலையில் மோதிக்கொண்டு தான் இருந்தது. அதற்கு உரம் போடும் வகையில் என் சீனி அண்ணனும் தன் நண்பர்களோடு உரையாடி என்னை Study Visa-இல் பிரான்ஸ் அழைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான். என் மனமும் குரங்காட்டம் நிலையின்றி தாவிக்கொண்டிருந்தது.
இந்நிலையிலேயே, ஏப்ரலில் அனுப்பிய இந்திய புலமைப்பரிசில் விண்ணப்பத்திற்கு ஜூன் நடுப்பகுதியில் பதில் மின்னஞ்சல் வந்தது. ‘டெல்லி பல்கலைக் கழகத்தில் என்னுடைய அனுமதி இந்தியாவின் மௌலான அஷாட் புலமைப்பரிசிலின் கீழ் தற்காலிகமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.” அளவிடமுடியாத மகிழ்ச்சி. மின்னஞ்சலில் என் பதில் ஏற்பை இணையத்தில் உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டது. என் விண்ணப்பத்தில் முதல் தெரிவாக டெல்லி பல்கலைக்கழகமே இருந்தது. முதல் தெரிவே உறுதிப்படுத்தப்பட்டு வந்திச்சு. கரும்பு தின்ன கூலியா வேண்டும். நான் உடனடியாக இணையவழியில் என் ஏற்பு பதிலை உறுதிப்படுத்தினேன். எனினும் இந்திய புலமைப்பரிசிலின் இணையவழி கோளாறு உடனடியாக ஏற்க முடியவில்லை. இது நாம புலமைப்பரிசிலுக்கு பதிவு செஞ்ச காலத்துல பெரிய இடர்பாடு. வழமையாக இந்தியாவின் புலமைப்பரிசில் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரியின் முதல் வாரத்தில் அதுசார்ந்த அறிவிப்புகள் வருவதுண்டு. கொரோனா தாக்கத்தின் இயல்புநிலை திருப்பத்தின் தாமதம் எமக்கான அறிவிப்பு மார்ச் நடுப்பகுதியிலேயே வந்திச்சு. தொடர்ச்சியாக இந்திய இணையவழி சேவையும் தன் பங்குக்கு நெருக்கடிய தந்திச்சு. எனினும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரலாய கல்விப்பிரிவின் உத்தியோகத்தர்கள் மின்னஞ்சல்களுக்கு (eduwing.colombo@mea.gov.in) உடனடியாக பதில் அளிப்பார்கள். அவர்களது சலிப்பற்ற செயற்பாடு உண்மையில் பாராட்டத்தக்கது.
எவ்வாறோ மார்ச் மாதம் தொடங்கிய புலமைப்பரிசில் தொடர்பான குழப்பமான சூழலுக்கு ஜுனில் ஒருவாறாக ஒரு திருப்திகரமான முடிவு கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. அதுக்கு பிறகு தான் தொடங்கிச்சு பயண இழுபறிகள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கு மாக. எனினும் இப்பெரும் பெறுமதி கிடைக்கப்பெறுகையில் இவ் இழுபறி பெரிய பொருட்டில்லை என என் மனமே அமைதியும் கூறியது.
ஏனென்றால் இந்திய புலமைப்பரிசில் என்பது அலிபாபாவின் விளக்கு போன்ற பேரதிஷ்டமே. இந்திய பல்கலைக்கழகத்தின் கற்கைக்கான முழுக்கட்டணமும் புலமைப் பரிசிலுக்குள்ளேயே உள்ளடக்கப்படும். அதுமட்டுமன்றி வாழ்க்கைச் செலவுக்கு மற்றும் தங்குமிட வாடகைக்கு மாதந்தோறும் கற்கைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. கசநந-யா வந்து படிச்சு பட்டத்தை வாங்கிட்டு நாட்டையும் சுத்திட்டு போங்கோனா கசக்கவா போகுது. இதில இந்திய அரசியல் இருக்கு. மறுப்பதற்கில்லை. தன் அயல் அரசின் மக்களை தான் சார்ந்த கருத்தியலுக்குள் வைத்திருக்கும் எண்ணங்களே ஆகும். அதிலும் குறிப்பாக கற்ற சமுகமே ஓர் அரசின் உயர் தீர்மானமெடுக்கும் சக்தி. அத்தீர்மானமெடுக்கும் சமுகத்திடம் தன்சார் அபிப்பிராயத்தை பேணும் முயற்சியே இந்திய புலமைப்பரிசிலின் அரசியல் இலக்கு. எல்லா அரசுகளும் ஏதோவொரு தமது தேசிய நலனுக்குள்ளேயே செயற்படும். எனவே இலக்கை நாம் தெளிவாக அடையாளங்கொண்டு பயணிப்பது நமது சமயோசிதம்.
ஆம். நாம் என் பயண ஏற்பாட்டுக்க வருவம். என் பெயர் எனக்கு பெரிய வில்லங்கம் தான். ‘மகாசேனன்”. இலங்கையை ஒருகாலத்தில ஆட்சி செய்த மன்னனின் பெயர். இந்த பெயர் எல்லாருடைய மனதிலும் இலகுவாக பதிஞ்சிடும். இதனாலேயே என் பல்கலைக்கழக காலத்தில் என் சிரேஷ்ட மாணவர்களின் அன்பு வதைகளுக்குள் அதிகம் மாட்டுப்பட்டுள்ளேன். ஆக இம்முறை பிரச்சினை ஆங்கில எழுத்தில. ஏப்ரலில் விண்ணப்பம் நிரப்புகையில் இருந்த சலிப்பு என் பெயர் பதிவிலேயே வெளிப்படுது. மகாசேனன்-ல (Makasenan) இறுதி N இல்லாம போய்ச்சு. அது ஒன்று. அடுத்தது அப்பான்ட பெயர ஆங்கிலத்தில ஒவ்வொரு காலத்தில வெவ்வேறு ஆங்கில எழுத்துக்களை மாற்றியுள்ளேன். விக்னேஸ்வரன்-ல ‘க்’-க்கு ‘C’ ‘K’ ‘G’-னு ஆசைப்படுறதெல்லாம் போட்டிருக்கன். க.பொ.த உயர்தர சான்றிதழ், க.பொ.த சாதாரண தர சான்றிதழ் மற்றும் என் கடவுச்சீட்டு மூன்றிலும் மூன்று விதம். எல்லாத்துக்கும் சத்தியக்கடதாசி முடிக்கனும். அது பெரிய துன்பம். சட்டத்தரணிய கொண்டு சத்தியக்கடதாசி தயாரித்து, உயர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தி, வெளிநாட்டு அமைச்சுல சான்றுபடுத்தி கொழும்புக்கான இந்திய துணைத்தூதரகத்திற்கு ஒப்படைக்கனும். நம்நாட்டு விவகாரம் தான் உலகறிஞ்ச விசயமாச்சே. வெளிநாட்டு அமைச்சுக்கு போறதுனா ஒருவாரத்துக்கு முதலே பதிவு செஞ்சு அனுமதி எடுக்கனும். அது பெரிய சுமை. எல்லா சுமையும் கடந்தா, தூதகரகத்தில நேரடியா ஒப்படைக்கேலாதாம். Visa Centre-க்கு ஊடாக தான் அதுவும். எல்லாரும் நல்லா உழைக்கிறாங்க என்ற எண்ணத்தோட அதுவும் அவ்வாறே செஞ்சு முடிஞ்சுது.
நான் இப்படியெல்லாம் இழுபறிபட, ஒருத்தன் யாழ்ப்பாண தூதரகத்தினூடாக(Through Indian Mission as Jaffna) என்று தெரிவு செஞ்சு போட்டவன் யாழ்ப்பாண தூதரகத்தோடேயே எல்லா வேலையையும் முடிச்சு விட்டான். விசாவும் யாழ்ப்பாண தூதரகமே கூப்பிட்டு கொடுத்து, நாலு போட்டோவும் எடுத்து தங்க பேஸ்புக்ல போட்டு விட்டாங்கள்.
நான் பெயர் பிரச்சினைக்கு ஒருக்கா கொழும்பு. அப்புறம் விசா எடுக்க கொழும்பு. இறுதியா பயணத்துக்கு கொழும்புனு. ஒரே கொழும்பு அலைச்சல் தான். இதுக்கும் என் மனமே ஆறுதல் சொல்லிச்சு. ‘எல்லாமே அனுபவம் தானே.” என் அனுபவம் எனக்கு என்ன நன்மையோ தெரியல. இந்த எழுத்துக்கள் வாசிப்பாளர்களுக்கு நன்மையாகட்டும்.
சரி. விசா எடுத்தாச்சு. இரண்டு வருஷம்னு குத்தி தந்திருக்காங்க. இனி டில்லி பயணம் தான். டில்லி பயணத்தையும், பல்கலைக்கழக முதல் நாளையும் தொடர்ந்து பயணத்தில் பார்ப்போம்.
பயணிப்போம்…!