இதழ் 69

இளங்குற்ற நடத்தையை தூண்டும் காரணிகளும் தடுக்கும் நுட்பங்களும்.

உலக நாடுகளில் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களில் குற்றநடத்தைகளில் ஈடுபடுபவர்கள் இளம் குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். (Unicef, 2019). குற்றவியல் நிபுணரான Ferdinand வரையறுப்பதன் படி சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாத நடத்தைகளில் ஈடுபடுகின்ற அல்லது விலகல் நடத்தையில் ஈடுபடுகின்ற சிறுவர்கள் இளங்குற்றவாளிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இளங்குற்ற நடத்தைகளின் வகைகள்
இளங்குற்றவாளிகள் அதிகளவில் மேற்கொள்ளும் குற்ற வகைகளில் முக்கியமானவையாக, திருடுதல், திருடுவதற்கு உதவி செய்தல், போதைப்பொருட் பாவனை, குழு மோதல், குழுவாகச் சென்று கொள்ளையடித்தல், பாடசாலை செல்லாதிருத்தல், பிறரை தாக்குதல் மற்றும் கொடுமைப்படுத்தல், கொலை செய்தல், சண்டையிடுதல், சூதாட்டம், வீட்டை விட்டு ஓடுதல், விடுதியை விட்டு ஓடுதல், பிச்சை எடுத்தல், போராட்ட குழுவில் இணைதல், ஆபாசப்படம் பார்த்தல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் பெண்களிடம் பலவந்தமாக நடத்தல், பாலியல் விலகல் நடத்தைகள், சமூக ஊடகங்கள் வழியாக பிறரை மிரட்டுதல், ஆயுதம் வைத்திருத்தல், போதைப்பொருட் கடத்தல், சட்டத்திற்கு புறம்பான ஓவியம் வரைதல், திகில் தேடும் நோக்கில் வாகனங்களை திருடி ஓட்டுதல், கடன் அட்டை மோசடி, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், அங்கீகரி;க்கப்படாத அணுகல், விலங்கு கொடுமை, பின்தொடர்தல், மோசடி.

இளங்குற்ற நடத்தையை தூண்டும் காரணிகள்
இள வயதினர் குற்ற நடத்தைகளில் ஈடுபடுவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. உடலமைப்பின் காரணமாக குற்றவாளிகள் உருவாகின்றனர் என்பது லோம்ரோசா (Lombrosa) என்பவரின் கொள்கை. புpற்காலத்தில் வந்த குற்ற நூலறிஞர்கள் இதை ஏற்கவில்லை. தொடர்ந்து வயது, பால், இனம் இவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் நிகழ்ந்தன. வறுமை, அறிவு மந்த நிலை என பல்வேறு காரணங்கள் இளங்குற்ற நடத்தையை தூண்டுவதாக கருதப்பட்டது. இளங்குற்ற நடத்தையை தூண்டும் காரணிகள் பின்வருமாறு:

உயிரியற் காரணிகள்
இளங்குற்ற நடத்தைக்கான பிரதான காரணியாக உயிரியற் காரணிகள் உள்ளன. மூளையில் காணப்படும் குறைபாடுகள், ஓமோன் சுரத்தலில் சமநிலையின்மை முதலியவற்றைக் குறிப்பிட முடியும். உதாரணமாக மரபியல் காரணிகள் காரணமாக உருவாகும் மனக்கிளர்ச்சி காரணமாக குற்ற நடத்தையில் ஈடுபடுவதைக் குறிப்பிட முடியும். கூடுதலாக மூளை வளர்ச்சியில் ஏற்படும் அசாதாரணங்கள்,Prefrontal cortex deficiencies முதலியன இளம் வயதினரின் முடிவெடுக்கும் திறன் மற்றும் தூண்டுதல் திறன் ஆகியவற்றைப் பாதிப்பதனால் குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கின்றது.

உடலியற் காரணிகள்
இள வயதினரில் காணப்படும் உடல் நோய்கள், உடற் காயங்கள், உடற்பாக இழப்புக்கள் காரணமாக உருவாகும் இயலாமை மற்றும் வலியுணர்வு அவர்களில் மன அழுத்தத்தையும், விரக்தியுணர்வையும், பழி வாங்கும் எண்ணத்தையும் தோற்றுவிக்கின்றது. இதனால் தூண்டப்படும் சிறார்கள் பிறரைக் காயப்படுத்தல், அடித்தல், கொலை செய்தல், விலங்குகளை தாக்குதல் முதலிய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக நண்பன் தன்னைக் காயப்படுத்தியதால் அவனை பழிவாங்கும் நோக்கில் அவனை கொடுமைப் படுத்துவதைக் குறிப்பிடலாம்.

உளவியற் காரணிகள்
இளமைப்பருவம் சிக்கல்களும் சவால்களும் நிறைந்த காலமாகும். புயலும், நெருக்கீடும், உளக் கொந்தளிப்பும் கொண்ட காலமாகும். இன்றைய சமுதாயத்தில் சமூக அநீதிகள், ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகள், அடிப்படை உரிமைகள் மறுப்பு, போலித்தனம், இவைகளை இளைஞர் சமுதாயம், காணும்போது கொதித்தெழுகின்றதாலும், ‘நான் யார்?” ‘நான் என்ன?” உலகில் எனது வாழ்வினதும் பொருள் என்ன? எதற்காக நான் வாழ்கிறேன்? சமுதாயத்தில் எனது இடம் என்ன? எங்கு போகிறேன்? இப்படியான கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்காததாலும் நெருக்கீடு, மன அழுத்தம், உளச்சிதைவு, தாழ்வுச்சிக்கல், மனவடு முதலிய உள நோய்களுக்கு உட்படுகின்றனர். இத்தகைய உள நோய்கள் அவர்களை குற்றச்செயல்கள் புரியத்தூண்டுகின்றன.

குடும்பக்காரணிகள்
குடும்பக்காரணிக்குள் பிரதானமனக குழந்தை வளர்ப்பு முறையை குறிப்பிடலாம். குழந்தை வளர்ப்பு முறை தொடர்பான ஆய்வுகள் தாய்- சேய் பிரிவினையை அனுபவிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் குற்ற நடத்தைகளை அதிகளவில் வெளிப்படுத்துவர் என தெரிவிக்கின்றன. ஒழுங்கின்மையும் கட்டுப்பாடின்மையும், அன்பின்மை, பிள்ளைகளின் குற்ற நடத்தைக்கு ஊக்கமளித்தல், அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்தல் மற்றும் அதிக கண்டிப்பாக இருத்தல் முதலிய குழந்தை வளர்ப்பு முறைகளும் இயங்குற்ற நடத்தையை தோற்றுவிக்கின்றன. இவற்றைவிட சிதைவடைந்த குடும்பம், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குடும்பம், முறையற்ற திருமணம், திருமணத்திற்கு அப்பாலான உறவுகள், குடும்ப உறவுகளிலிருந்து ஓரங்கட்டப்படல், பெற்றோரியம் மற்றும் பெற்றோரின் போதைப்பொருட்பாவனை போன்றவை தாக்கம் செலுத்துகின்றன.

பொருளாதாரக் காரணிகள்
இளங்குற்ற நடத்தையைத் தூண்டுவதில் குடும்ப வறுமை, இள வயதிலேயே தொழிலாளராக மாறுதல், பலவந்தமாக பாலியல் தொழில்களுக்கு உட்படுத்தப்படல், வர்க்கம் போன்ற பொருளாதாரக் காரணிகள் செல்வாக்கு செலுத்துவதைக் குறிப்பிடலாம். இளங்குற்ற நடத்தையில் ஈடுபடுகின்றவர்களில் பலர் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் பலர் ஆரம்பத்தில் சிறுவர் தொழிலாளர்களாகவே தோற்றம் பெறுகின்றனர். Birkenhead (2012), அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள், கல்வி என்பவற்றை வழங்க முடியாத குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் மத்தியில் இளங்குற்றநடத்தை முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது.

பாடசாலை
சமுகமயமாக்கலின் இரண்டாம் நிலை முகவராகத் தொழிற்படும் சமூக நிறுவனமான பாடசாலை சிறுவர்களை வினைத்திறனாக மாற்றும் தொழிலை செய்கிறது. குறித்த நிலையிலிருந்து பாடசாலை விடுபட்டு செயற்படும் போது சிறுவர்களுக்குத் தேவையான ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை முறையாகக் கற்றுக்கொடுக்கத் தவறுகிறது. Berger & Gregory (2009), பாடசாலை குற்றநடத்தை (School Deliquesce) பாடசாலைகளில் வர்க்கம் சார்ந்த அடுக்கமைவுகள், அடையாளப்படுத்தல் (Labeling) போன்றன இளங்குற்ற நடத்தைக்கான ஆரம்ப நிலையாக உள்ளன. சில சந்தர்ப்பங்களில் பாடசாலை இடைவிலகலும் இளங்குற்றநடத்தைக்கு காரணமாக அமையலாம். கல்வி மீதான வெறுப்பு, கல்வி அடைவுகளைப் பெறத் தவறுதல், பாடசாலை மீதான வெறுப்பு முதலியன இடைவிலகலைத் தூண்டுகின்றன. அதேசமயம் பாடசாலைகளில் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், பாரபட்சம் காட்டப்படுவதும் குற்ற நடத்தைக்கு காரணமாக உள்ளன.

இயல்பூக்கங்களும் உந்தல்களும்
இயல்பூக்கங்களும் (Instincts) உடன்பிறந்த கணத்தாக்குகளும் (innate impulses) வன்போக்கினையும் குற்ற நடத்தைகளையும் விளக்கப் பயன்படுத்தப்படுகின்றன. Sigmund Freud அடக்கி ஒடுக்கப்பட்ட மனவெழுச்சிகள், குற்றநடத்தைக்கு இட்டுச்செல்லும் எனக் குறிப்பிடுகிறார். அதேசமயம் Konrad Lorenz என்பவர் சண்டையிடும் இயல்பூக்கத்தினால் குற்றநடத்தை விளைவதாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு இயல்பாகவே ஒருசிலருக்குள் காணப்படும் மோசமான இயல்பூக்கங்களும் உந்தல்களும் குற்றநடத்தையை தூண்டுகின்றன.

இளங்குற்ற நடத்தையை குறைப்பதற்கான நுட்பங்கள்

  1. மீள சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்தல்.
  2. கல்வி கற்பதற்கான அல்லது ஆர்வமான தொழில்வான்மையினை விருத்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பளித்தல்.
  3. பெற்றோருக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள்.
  4. உளச்சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தல்.
  5. சிறுவர்களிடத்தில் சுய ஒழுக்கப்பண்புகளை சிறுவர் உளவியல் எண்ணக்கருக்களுக்கு அமைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
  6. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களை நடத்துவதற்கென விசேடமாகப் பயிற்சியளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களை நியமித்தல்.
  7. குற்றம் செய்யும் பிள்ளைகளின் குற்றம் செய்வதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதை தணிப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  8. நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைத் திணைக்களத்தை நாடுதல்.
  9. தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடகங்களில் வரும் குற்றநடத்தை தொடர்பான காட்சிகளைத் தடை செய்தல்.

இளங்குற்றநடத்தை பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாகக் காணப்படுவதனால் இதனைக் கட்டாயம் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இளங்குற்றவாளிகளை சமூகத்திலிருந்த ஒதுக்காது அவர்களையும் மனிதர்களாக நோக்குதல் வேண்டும். எனவே சமூகத்தில் இளங்குற்ற நடத்தை யுடையவர்களை இனங்கண்டால் அவர்களை வழிப்படுத்த பெற்றோர், ஆசிரியர், சமூகவியலாளர், உளவியலாளர், சட்டத் துறையினர் போன்ற துறைசார் வல்லுனர்கள் முன்வரவேண்டும். இன்றைய இளங்குற்றவாளிகள் முறையாக சீர்திருத்தப்படாது புறக்கணிக்கப்பட்டால் எதிர்கால சமுதாயம் குற்றங்கள் நிறைந்த சமூகதாக மாறுவதை தடுக்க முடியாது போய்விடும் என்ற உண்மையை நாம் அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும்.

Related posts

இலக்கியம் முதல் இன்று வரை பெண்மையின் பேராற்றல்

Thumi202121

மடந்தை ஒழிப்போம் மானிடா…!

Thumi202121

என் கால்கள் வழியே… – 02

Thumi202121

Leave a Comment