இதழ் 69

நல்லதோர் வீணை செய்தே… அதை நலங்கெட புழுதியில் எறிவதுவோ…?

வார்த்தையிலேயே மனசுக்குள் சிறகு பூட்டிவிடக்கூடிய உணர்வுதான் சுதந்திரம். இந்த சுதந்திரம் வேண்டுமென்று போராட்டங்கள் பல்வேறு பிரிவினரால் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மகளீர் தினம் வரும் இந்த மாதத்தில் மகளீர் சார்ந்த சுதந்திரம் பற்றி பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.

படிக்கும் படிப்பிலிருந்து திருமணத் தேதிவரை, சமூக முடிவுகளுக்குட்பட்டு, தன் ஆசைகளைத் தீயிட்டு, ஒரு குடும்பத்தின் வெளிச்சமாய் மாறி நிற்கும் நிலை இன்றும் உள்ளதா எனும் கேள்வியோடு எனது ஆசிரியர் பகுதியை ஆரம்பிக்கிறேன்.

சதை, இருத்தம், எலும்பு எனப் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஒரே உயிரினம்தான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், பெண்ணை பெண்ணை பலவீனம் ஆக்கியது எது? இந்தச் சமூகம்தான். யோசித்துப் பாருங்கள், நம் வீட்டில் இருக்கும் 20 வயதுப் பெண் `தனியே’ பக்கத்துக் கடைக்குச் செல்கிறாள் என்றால், 8 வயதுச் சிறுவனை அவளுக்குத் துணைக்கு அனுப்பும் கலாசாரம் இன்றும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. பெண் பலவீனமானவள் என்றும் மென்மையானவள் என்றும், ஆண் வீரமானவன் என்றும், கடினமானவன் என்றும் கருதப்படுகின்ற மூடநம்பிக்கை இந்த சமூகத்தில் இருந்து முற்றாக நீக்கப்படவில்லை. இதை சில பெண்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும்தான் மனக்கசப்பான விடயம்.

ஆனால் இவ்வாறு பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யும் கொடூர சம்பவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. குடும்பத்தின் கௌரவம், குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பல விஷயங்கள் வெளியில் தெரியாமலே மூடி மறைக்கப்படுகிறது. அப்படி வெளியில் தெரிகிற ஒரு சில குழந்தைகளின் மரணங்களும் நம்மால் ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கிறது.

அதுவும், சிறு பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அன்றாட செய்தியாகி விட்டன; மனதை அவை கனக்கச் செய்கின்றன.பள்ளியில் மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியர்கள் அசிங்கப்படுவதை, பத்திரிகைகளில் நாள்தோறும் பார்க்கிறோம். நல்லொழுக்கம், சிறந்த கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படி அறிவிழந்து நடந்து கொள்ளலாமா? வீட்டிலே கூட, நெருங்கிய உறவுகளாலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும், பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பெற்ற தந்தையே, தான் தூக்கி வளர்த்த மகளிடம் கொடூரமான செயலைச் செய்வது அக்கிரமத்தின் அநீதியின் உச்சம். மது மயக்கத்தாலும், போதைப் பொருட்களுக்கு அடிமையானதாலும் தான், பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன.

இதுதவிர, நாடு முழுவதும் ஆண்கள் சிலர் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஆண்மைத்தன்மை குறைந்ததாக அவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை தோன்றும். இதனால் பெண்களிடம் தங்கள் ஆண்மையை நிலைநாட்டுவதாக நினைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுகின்றனர். இந்த வன்முறைகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. தற்கால கல்லூரி மாணவர்களும், பள்ளிச் சிறுவர்களும்கூட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது, அவர்களுடைய உடல் நலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் சமூக நோயாகவும் மாறி அடுத்த பாலினத்தின் மீதான வன்முறையில் முடிகிறது.

இதுமட்டுமின்றி, பாதிக்கப்படும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து வெளியே சொல்வதில்லை. நடிகைகள், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிலர் உள்ளனர். ஆனால் அன்றாடம் செத்து செத்துப் பிழைக்கும் சாமானிய பெண்கள் குறித்து சமூகத்தில் யாரும் பேசுவதில்லை. இதற்குக் காரணம், அவர்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதேயில்லை என்பதுதான். சமுதாயத்தில் நம்மை தவறாக நினைப்பார்களோ? திருமண வாழ்க்கை என்ன ஆகுமோ?, கணவர் என்ன நினைப்பாரோ?, வேலைபார்க்கும் இடத்தில் விட்டுக்கொடுத்துப் போகவில்லை என்றால் வேலை போவிடுமோ? என்ற பல சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.

ஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை இல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.

இது தவிர, பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இதனால் குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. குழந்தைகள் தொலைந்துபோவது வரை அவர்கள் என்ன செய்கிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்பது தெரிவதில்லை. குழந்தைகளிடம் அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்துக்குள் இருக்கும் நெருங்கிய உறவினர்களே இழிவாக நடந்துகொள்கின்றனர். இதை குழந்தைகள் வெளியே சொல்லத் தயங்குகின்றனர் அல்லது அஞ்சுகின்றனர்.

பாலுணர்வு மற்றும் பாலியல் கல்வியைப் பற்றிய பேச்சு என்றாலே அதைக் கேட்கக்கூடாத அல்லது பேசக்கூடாத ஒன்று என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. எவ்வாறு ஒருவன் சாப்பிட, நீந்த மற்றும் கார் ஓட்ட தெரிந்திருக்கிறானோ அது போல், பால் கல்வியறிவு பெற்றிருத்தல் அவனை மகிழ்ச்சியாக வாழத்துணை புரிவதோடு சமூகத்தில் மற்றவர்களுக்கான பாலியல் ரீதியான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

ஆபாச திரைப்படங்கள், அசிங்கமான சமூக வலைதளங்கள் போன்றவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள் இல்லாதது தான், இது போன்ற வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம். அரைகுறை ஆடை அணிவதும், உடல் தெரிய உடை உடுத்துவதும் மட்டுமே, பிரச்னைகளுக்கு காரணம் என, பழியை பெண்கள் மீதே சுமத்துகின்றனர். பெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை. தத்தமது உடலமைப்பிற்கேற்ற வகையிலும் கௌரவமான முறையிலும் தாங்கள் கலந்து கொள்ளும் வைபவத்திற்கேற்ற முறையிலும் உடையணிவது சிறப்பு. நாகரிகமாக உடை அணிந்தாலும், கண்ணியமாக உடுத்துவது தான் பெண்களுக்கு அழகு, பாதுகாப்பு, அவசியமும் கூட! இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. அப்படியானால், பச்சிளம் குழந்தைகளிடமும், பள்ளி செல்லும் சிறுமியரிடமும், அவர்களின் உடையிலும், என்ன ஆபாசம் கண்டீர்? பெற்ற பெண்ணின், உடன் பிறந்த சகோதரியின் உடையில் ஆபாசமா அல்லது மன விகாரத்தின் வெளிப்பாடா? மூன்று வயதுக் குழந்தை மீதும் ஏழு வயதுக் குழந்தை மீதும் உங்களுக்கு தவறுதலாக நடந்துகொள்ளத் தோன்றினால் அது உங்களுக்கு ஏற்பட்ட மன நோய். இந்த மன நோய்க்கு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுங்கள். இதைத் தவிர்த்து, பெண்களையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்தாதீர்கள்.

இந்த சமூகச் சீரழிவை, சட்டத்தின் துணைகொண்டு மாற்றியமைக்க முடியாது. காரணம், அந்தச் சட்டத்தை ஏந்தியிருப்பவர்கள்தான் இந்தச் சீரழிவை விதைத்தவர்கள். இந்தச் சூழலிலிருந்து தனியாக யாரும் பாதுகாப்பு தேடவும் முடியாது. தனித்தனியாக திருத்தவும் முடியாது. குறிப்பிட்ட சமூகச் சூழல்தான் தனிநபர் பண்பாட்டை சீரழித்தது என்றாலும், தனிநபர்களாக அதனை மாற்றிக் கொள்ள இயலாது. ‘பெண்ணைச் சுற்றியிருக்கும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைத்து பற’ என்பதைத்தான் பாரதி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

”பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”

ஒரு பெண் தற்காப்பு ஆயுதத்தை வைத்துக்கொள்வதற்கு இணையானவை இந்த வரிகள். கனல் கக்கும் தன் பாடல்கள் மூலம் பெண்களுக்கு உத்வேகம் அளித்தவன் பாரதி. ஆம்! பயந்து அலறாமல் திருப்பித் தாக்க கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுபிள்ளைகள் தைரியமற்றவர்கள், வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதை வைத்தே இந்த காமுகர்கள் அவர்களை இலக்காக்குகிறார்கள். நாம் வாழும் உலகம் மிக மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே போதுமான தற்பாதுகாப்பு உத்திகளை சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தவறேதும் இல்லை.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்

Related posts

என் கால்கள் வழியே… – 02

Thumi202121

மடந்தை ஒழிப்போம் மானிடா…!

Thumi202121

இலக்கியம் முதல் இன்று வரை பெண்மையின் பேராற்றல்

Thumi202121

Leave a Comment