இதழ் 70

வன் போக்கு நடத்தையை குறைத்தல்

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் அதிகம் பேசு பொருளாக காணப்படுவது வன்போக்கு நடத்தைகள் ஆகும். இளைஞர்கள் மத்தியிலே அதிகரித்து வருகின்ற இந்த வன்போக்கு நடத்தைகளானது சமூகத்தை எந்த அளவிற்கு சீரழிக்கின்றது என்பதனை உணராது
இன்றைய இளம் தலைமுறை கொள்ளை தொடங்கி கொலை வரை உயிர்களின் மதிப்பு என்னவென்று அறியாது கண்மூடித்தனமாக வன்முறை நடத்தைகளுக்கு உட்படுவதனை காணமுடிகின்றது .உளவியலில் வன்போக்கு என்பது ஒருவருக்கு அல்லது சுற்றுச்சூழலில் உள்ள பொருட்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக தீங்கு விளைவிக்கின்ற நடத்தைகளை குறிக்கின்றது.

அந்த வகையில் வன் போக்கு நடத்தையானது ஒரு நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது உளரீதியாகவோ தீங்கினை விளைவிக்கும் ஒன்றாக காணப்படுகின்றது. வன் போக்கு ஆனது தீவிரமானதாக மாறுகின்ற போது அடிப்படையான உளநிலைக் கோளாறுகளை அல்லது வேறு வகையான மருத்துவப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம். அந்த வகையில் இந்த வன்போக்கானது பல்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது.

உதாரணமாக கோபம் அல்லது விரோதத்தை வெளிப்படுத்துதல், ஆதிக்கத்தினை நிலை நாட்டுதல், இலக்கினை அடைதல் போன்றவற்றிற்காக உடல் உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தல் இதனுள் அடங்குகின்றது. அடித்தல் உதைத்தல் குத்துதல் போன்ற உடல் ரீதியானவையும் சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் வாய்மொழி சார்ந்த கேலி, கூச்சல் ,ஒரு நபரை மிரட்டுதல், வார்த்தைகளால் திட்டுதல் போன்றவையும் இவ் வன்போக்கு நடத்தைகளாக காணப்படுகின்றன. இந்த வன்போக்கு நடத்தைகள் ஒவ்வொரு நபரும் வெளிப்படுத்தகின்ற முறையிலேயே வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்துபவையாக காணப்படுகின்றன.

வன்போக்கு நடத்தை என்றால் என்ன என்பது தொடர்பாக அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கொடுத்துள்ளனர்.

பரோன் மற்றும் பைரன் வன்போக்கு என்பது மற்றொரு உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கும் இலக்கை நோக்கி இயக்கப்படுகின்ற நடத்தை ஆகும்.

பண்டூரா வரையறுக்கப்பட்ட எதிர்மறை வன் போக்கு என்பது தனிப்பட்ட காயம் அல்லது சொத்து அழிவை விளைவிக்கும் செயல்கள் ஆகும்.

யு. பி மோஜ்இன்ஸ்கி வன் போக்கு ஒரு எதிர்மறையான ஒன்றாகும் இதன் விளைவாக மற்றுமொரு உயிரினம் வலி மிகுந்த தூண்டுதல்களை பொறுகின்றது. அந்த வகையில் ஒருவருக்கு கோபத்தினை தூண்டுகின்ற பொழுது அல்லது அதிகரித்த விரக்தி நிலைமையினாலோ அல்லது ஒருவருக்கு நேரடியாக கோபத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடு இடம்பெறுகின்ற போது வன்போக்கு ஏற்படும் என சமூக கற்றல் கோட்பாடு விளக்குகின்றது. இந்த வன்போக்கு நடத்தையினை எவ்வாறு பல்வேறு காரணிகள் தூண்டுகின்றதோ அதேபோல வன்போக்கு நடத்தையை இல்லாது அல்லது குறைக்கவும் பல்வேறு காரணிகள் உதவி புரிகின்றன.

நான்கு வகைகளில் வன்போக்கினை குறைக்கும் செயற்பாடுகளை குறிப்பிடலாம். அந்த வகையில்

1.உள ரீதியாக குறைத்தல்
ஆரம்ப காலங்களை பொறுத்தவரையில் கோட்ட நீக்கம் செய்தல் தண்டனை வழங்குதல் என்பவற்றின் மூலம் வன் போக்கினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கோட்ட நீக்கம்
என்பது ஒருவரிலே எழுச்சி பெற்றுள்ள வன்போக்கை பொருத்தமான வழிகளிலே வெளிப்படுத்தி வைப்பதாகும். அதாவது ஒருவருக்கு ஏற்படுகின்ற வன்முறை சார்ந்த உணர்வுகளை பாதகமற்ற முறையில் அதாவது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் தீர்த்துக் கொள்ளுகின்ற செயற்பாடாகும் .உதாரணமாக கூறும் போது ஒருவருக்கு கோபம் ஏற்படுகின்ற போது தலையணையை குத்துதல் கோபத்தை குறைக்க உதவும் இதன்போது அவர் பிறருக்கு தீங்கு பயக்காமல் தனது வன்முறை எண்ணத்தை குறைத்துக் கொள்வர். தண்டனை வன்போக்கினை குறைக்க உதவும் என்றாலும் அதன் மறுபக்கம் எதிர் விளைவுகளை உருவாக்கும் என உளவியலாளர்கள் கூறியுள்ளனர் அத்தோடு நகைச்சுவையூட்டுதல் விட்டுக்கொடுத்து செயற்படுதல், புரிந்துணர்வுடன் செயல்படுதல் வன்முறை சார்ந்த மனவெழுச்சி மேலோங்குகின்ற போது அதற்கு மாற்றீடாக வேறொரு மனவெழுச்சி துலங்களை காட்டுதல் என்பன உளரீதியான வழிமுறைகளாகும்.

2.உடல் ரீதியாக குறைத்தல்
யோகாசனம் செய்தல், தியானத்தில் ஈடுபடுதல் போன்றன மனதை ஒருமுகப்படுத்துவதற்கு சிறந்த வழிகள் ஆகும் .ஆகவே இவற்றில் ஈடுபடுதல் வன் போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைக்க உதவும். சாந்த வழிமுறைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தல், அவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், போன்றன பயனுடையதாக அமையும் அத்தோடு
முறையான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுதல் அவசியம் ஆகும்.

3.சட்ட ரீதியாக குறைத்தல்
வன்முறை சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும், சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துதலும் வன் போக்கினை குறைக்க உதவும். உதாரணமாக ஒரு சமூகத்தின் வன் போக்கினை தூண்டுகின்ற முக்கிய காரணியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. எனவே போதைப் பொருள் பாவனையை குறைத்தல், தடுத்தல் என்பவற்றின்
ஊடாக வன்போக்கினை குறைக்கலாம் சமுதாயத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் மற்றும் வறுமையை ஒழிப்பதன்
மூலமும் வன்முறை நடத்தையை குறைக்கலாம்.

4.சமூக ரீதியாக குறைத்தல்
வன்முறை அற்ற தொடர்பாடலை மேற்கொள்ளுதல் அதாவது பல்வேறுபட்ட வன் போக்கான செயல்பாடுகள் இடம்பெறுவதற்கு அடிப்படை காரணம் தொடர்பாடல் ஆகும் .இது சீரற்றதாக காணப்படுகின்ற போது வன் நடத்தைகள் வெளிப்படுகின்றன .அதாவது கடுமையான வார்த்தைப் பிரயோகம் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் செயற்பாடுகள் என்பவற்றை குறிப்பிடலாம் ஆகவே ஒரு விடயத்தையோ செய்தியோ வெளிப்படுத்துகின்ற போது முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் மற்றவரின் மனதை புண்படுத்தாத வகையிலும் இனிய மொழியை பேசுவதன் மூலம் வெளிப்படுத்துவது மற்றும் மற்றவர்களுடைய செய்திகள், கருத்துக்களை உள்வாங்குவது போன்றவை வன்முறையற்ற தொடர்பாடல் ஆக காணப்படுகிறது.

ஊடகங்களை சாதகமான முறையிலே பயன்படுத்துதல் வேண்டும். ஊடகங்கள் வன்முறையை தூண்டும் செய்திகளை காட்சிப்படுத்துவதை விடுத்து சமூகத்திற்கு நல்ல செய்திகளை வழங்கும் விதமாக தமது நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் தயாரிக்க வேண்டும் இதன் மூலம் வன் போக்கு நடத்துகளை குறைக்க முடியும் இவற்றை விட சமூக நற்பணிகளில் ஈடுபடுதல், சமூகத் திறன்களை வளர்த்தெடுத்தல், ஆன்மீக விடயங்களிலே அதிக நாட்டத்தை ஏற்படுத்துதல் அனைவரிடமும் அன்பு செலுத்துதல் என்பவற்றின் மூலம் வன்நடத்தைகள் இன்றி சமூகத்திற்கு பொருத்தமான சீரான நடத்தைகளை வெளிப்படுத்த முடியும்.

Related posts

என் கால்கள் வழியே… – 03

Thumi202121

யாருக்கானது இந்த முட்டாள் தினம்..?

Thumi202121

CSKஇன் வெற்றியின் இரகசியம்

Thumi202121

Leave a Comment