இதழ் 70

என் கால்கள் வழியே… – 03

டெல்லிக்கான பயணம்..!

கடந்த பகுதியில விசா எடுத்தாச்சு. இனி இந்தியாவுக்கான பயணப்படல். இதுவரை இருந்த மகிழ்ச்சி சற்றே குறைந்து பதட்டம் தொற்றிக்கொண்டது. முதல் தனிக்குடித்தனம். இதுவரை டெல்லிக்கு போகப்போறன். இந்திய புலமைப்பரிசில் கிடைச்சிருக்கு என்ற சந்தோசம். விசா குத்தின பிறகு தான் சில யதார்த்தங்களை உணர, மனம் சற்று பயப்பிடவும் தொடங்கிச்சு. புது இடம். புது மொழி. நினைக்கையிலேயே பதட்டம்.

இந்த பதட்டத்தோடு டெல்லிக்கு எப்ப போறது என்டதில பெரிய குழப்பம். கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதரகம் ஒருநாளில அழைச்சு விசாவ குத்தி தந்திட்டாங்க. ஆனா. டெல்லிக்கு போக வேண்டிய திகதிய பல்கலைக்கழக ஆரம்ப திகதிய கேட்டு போகச்சொன்னாங்க. டெல்லி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களுடைய பதிவு அலுவலகம், இந்தியாவின் அரச உத்தியோகத்துக்கான பத்துப்பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்கு. திரைப்படங்களில தான் இந்திய அரச அலுவலகங்களின் அசண்டையை பார்த்து கேட்டு இருக்கிறேன். டெல்லி பல்கலைக்கழக முதுகலைகலைமானி ஆரம்ப திகதிய அறிவதற்கான இழுபறியில அனுபவபூர்மாகவும் அறிந்து கொண்டேன். தொலைபேசி அழைப்புக்கு பதில் இல்லை. பத்து மின்னஞ்சலுக்கு ஒரு குழுவான பதில் வரும். அதிலயும் திகதி இல்லை. செப்டெம்பர் நடுப்பகுதியிலேயே ஆரம்பிக்கும்னு சுருக்கமாக குறிப்பிட்டாங்க. மின்னஞ்சலில வந்த அனுமதி கடிதத்தில ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்னு போட்டிருந்தாங்க. எல்லாமே குழப்பம் தான். முடிவா ஒரு குழு மின்னஞ்சல் வாழ்த்தை போட்டு செப்டெம்பர் நடுப்பகுதியே ஆரம்பிக்கும்னு ஒரு விளக்கத்தை தந்தாங்க.

2023இல இந்தியாவில G-20 மாநாடு நடந்திச்சு. செப்டெம்பர் 09-10 டெல்லியில தான் நடந்திச்சு. ஆக அதை குறிப்பிட்டு நெருக்கடிகளை தவிர்க்க, டெல்லி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை செப்டெம்பர் நடுப்பகுதியே வாங்கனு விளக்கம் தந்தாங்க. ஆக நான் டெல்லி போறது செப்டெம்பர் நடுப்பகுதி தானுனு முடிவாய்ச்சு.

இலங்கைக்கான இந்திய தூதரகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்கள் பதிவு அலுவலக குழு மின்னஞ்சல்களை பார்த்து இலங்கையில இருந்து டெல்லி போற ஆட்கள நட்பு பிடிச்சிடுவம்னு தேடினா, கிடைச்சது சிங்கள மாணவி ஒராளின்ட தொடர்பு தான். அந்த மாணவியின் நட்பினூடாக இன்னொரு தமிழ் மாணவி டெல்லி வருவதையும் அறியக்கூடியதா இருந்திச்சு. அதவிட சிங்கள மாணவிகள் வேறு இருவரும் முதுகலைமானிக்கு டெல்லி போவது சிங்கள மாணவியின் நட்பால் அறிய முடிஞ்சுது. ஏற்கனவே சிங்கள மாணவர்கள் சிலர் டெல்லியில் கற்பதால் அவர்களின் உதவியை பெற்று டெல்லி சென்றவுடன் பல்கலைக்கழகம் செல்வது, பதிவு வேலைகளை செய்வதற்கான உதவிகளை சிங்கள மாணவிகளே பார்த்து கொள்வதாக நம்பிக்கை அளித்தார்கள். இலங்கையில நாம இரு தேசிய இனங்களாக அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், இந்தியாவுக்கு போன வெளிநாட்டு காரர் என்ற ஒரு அடையாளம். புதிய இடம் மற்றும் மொழி என்ற ஒரே நெருக்கடி தானே. இது ஒருவரை ஒருவர் தங்கி செயற்பட வேண்டியதாக்கியது. ஆக அனைவரும் சேர்ந்தே ஒருநாளில போவம்னு தீர்மானிச்சோம். செப்டெம்பர்-13னு முடிவு எடுத்தம். எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்திலயே Flight Ticket உம் போட்டோம்.

டெல்லி போற எதிர்பார்க்கை. டெல்லி பல்கலைக்கழகம் என்ற பெருமிதம். நிர்வாகத்தில அசண்டைனாலும் டெல்லி பல்கலைக்கழகம் இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்களில ஒன்னு. இன்று இந்தியாவை ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள் பலரும் மற்றும் ஆள விரும்பும் எதிர்க்கட்சி தரப்பு அரசியல்வாதிகள் பலரும் தமது பட்டக்கற்கையை டெல்லி பல்கலைக் கழகத்திலேயே முடிச்சிருக்கிறாங்கனு சான்றிதழ் சொல்லுது. ஆம் இந்தியாவின் பிரதமரின் பட்டச்சான்றிதழ் டெல்லி பல்கலைக்கழகத்தையே குறிப்பிடுது. அதவிட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எல்லாம் இங்க தான் படிச்சிருக்காங்க. அம்புட்டு பெருமைனா. நமக்கும் ஒரு பூரிப்பு தானே.

அந்த பூரிப்புடனேயே செப்டெம்பர் முதலாம் திகதி ஓய்வா இருக்கேக்க, டெல்லி பல்கலைக்கழக அரசறிவியில் துறை இணைய பக்கத்துக்க போய் பார்த்தா மறுபடி ஒரு குழப்பம். செப்டெம்பர்-04ஆம் திகதி முதுகலைமானி கற்கை ஆரம்பிக்குதுனு திகதி போட்டிருக்கு. என்னடா வில்லங்கம்னு அரசறிவியல் துறை மின்னஞ்சல தேடி அவங்களிட்ட எங்க பிரச்சினையை கொட்டி தீர்த்தா, அவங்க வெளிநாட்டு மாணவர் பதிவு அலுவலகத்த மிஞ்சினவங்களா இருந்தாங்கள். ஒரு பதிலுமே இல்லை. ஏற்கனவே செப்டெம்பர்-13க்கு Flight Ticketஉம் போட்டாச்சு. நடக்குறத பார்ப்பம்னு விட்டாச்சு.

சரி. வாங்க ஓடி போவம் செப்டெம்பர்-12. அதுக்கு இடையில எனது வருகை விரிவுரையாளர் உத்தியோகத்தின் இடைவிலகலின் போது மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு இரு வருட கற்பித்தலின் திருப்தியை தந்தது. வார்த்தை இல்லை. அதவிட வேலை எல்லாம் முடிக்க வேணும் என்ற இறுதிநாள் வரையிலான இழுத்தடிப்பு பதட்டங்கள் நல்ல அனுபவம். ஒவ்வொரு வேலை அனுபவத்தின் போதும் இறுதி வரை இழுத்தடிக்க கூடாது என்ற நினைப்பு. நினைப்பாகவே போகுது. மாறனும்.


ஆம். செப்டெம்பர்-13 அதிகாலையில டெல்லிக்கு விமானம். செப்டெம்பர்-12 பின்னிரவு சின்ன அண்ணான்ட நண்பருடைய முச்சக்கரவண்டியில கொழும்பில இருந்து விமான நிலையத்துக்கு வெளிக்கிட்டோம். இரவு சாப்பாடு விமான நிலையத்துக்கு பக்கத்தில ஒரு சாப்பாட்டு கடையில. அண்ணா கொத்துறொட்டி வாங்கினான். புயண பதட்டம் பசி இல்லை. சும்மா ரெண்டு வாய் எடுத்து போட்டேன். அப்ப அறியல ரெண்டு வருசத்துக்கு கொத்து றொட்டி எனக்கு அரிய உணவு என்று. சரி. விமான நிலையம் போயாச்சு. டெல்லிக்கு சேர்ந்து பயணிக்க மின்னஞ்சலில தொடர்பு கொண்டு வட்சப்ல தகவலை பரிமாறிய நண்பர்களுக்காக காத்திருந்தோம். நமக்கு எல்லாம் கடைசி நேரம் வரை இழுத்தடிக்குறது ஒரு பழக்கமாய் போய்ச்சு. விமான நிலையத்துக்கு முன்கூட்டியே போனாலும் அந்த வழக்கம் இம்முறை நண்பர்களால வந்திச்சு. அவர்கள் வருகை தாமதமாகவே நான் உள்ள போய் Check-in வேலைகளை செய்து முடிச்சாச்சு.

இங்க மறுபடியும் ஒரு பிரச்சினை. இது எனக்கு இல்ல. நண்பர்களுக்கு. அவர்கள் தாமதமாகினதால, அவர்களுக்கு Check-in பூட்டியாச்சுனு அங்க இருந்த அலுவலகர் கொஞ்சம் வெருட்டினார். நண்பர்கள் சிங்களவர்கள் என்றதால அவங்க அழுது தங்கள மொழியில் உரையாடியதால, பிறகு அவங்களயும் அனுமதிச்சாங்க. மொழி முக்கியம்னு விளங்கிச்சு. இதே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில நமக்கு இப்படி ஒன்னு நேர்ந்திருந்தா நாம அழ மட்டும் தான் முடியும். இந்த சம்பவத்த பதிவு செய்யேக்க எங்க வெளிநாட்டுக்காரங்க இலங்கைக்கு வருகின்ற போது படுற துன்பத்த சொல்றதும் பொருத்தமா இருக்கும். முரண்நகையான முடிவுகள். ஆம். விமான நிலைய அதிகாரிகள் புலம்பெயர் தமிழரிட்ட காசு பறிக்க அவங்கள மறிச்சு உன்ர கடவுச்சீட்டுல இது பிழை, அது பிழைனு தங்கன்ட மொழில கதைக்க. நம்ம உறவுகளும் எங்கள விட்டா சரினு காச கொடுத்திட்டு வருவாங்க. இன்னும் பலர் இவங்க தொல்லைய நினைச்சே இலங்கை வாறதுக்கு பயப்பிடுறாங்க. மொழியும் அதிகாரமும் பெரிய பிரச்சினை தான். நாம எதையும் பிரச்சினை வராத வகையில பார்த்துக்கிட்டா தான் நமக்கு பாதுகாப்பு.

சரி. நாம டெல்லி பயணத்துக்கு வருவம். இறுதியில விமானம் ஏறியாச்சு. கடைசி வரிசையில இருக்கை. இன்னும் 3.30 மணித்தியாலத்தில டெல்லியில தரையிறக்கம் என்ற பூரிப்புடனேயே தூக்கம். எழும்பினா டெல்லியில தரையிறக்கம் செப்டெம்பர் – 13 காலையில 6.00 மணி போல டெல்லி விமான நிலையம் வந்தாச்சு.

டெல்லியில் பயணிப்போம்..!

Related posts

துமியினூடாக தருமபுரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Thumi202121

வன் போக்கு நடத்தையை குறைத்தல்

Thumi202121

வினோத உலகம் – 33

Thumi202121

Leave a Comment