இதழ் 70

செயல்வீரர் அல்லவா? அவர் சிறப்பெல்லாம சொல்லவா?

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் மிகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டு, அண்மையில் பங்குனி உத்திர திருநாளில் கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. இந்த ஆலய புனருத்தாரணத்தை அளவீட்டுப் பரிமாணத்தில் பார்த்தால் நீளத்தில் அதிகமாகி இருக்கிறது. அகலத்தில் அதிகமாகி இருக்கிறது. உயரத்திலும் அதிகமாகி இருக்கிறது. அரசர் காலத்தில் தான் ஆலயங்கள் கருங்கல்லால் கட்டப்படும். ஆனால் அவற்றிற்கும் பல்லாண்டுகள் எடுக்கும். இராஜ இராஜ சோழன் தொடங்கிய ஆலய நிர்மாணத்தை மகன் இராஜோந்திர சோழன் வந்துதான் பூரணப்படுத்த முடிந்தது. அதுதான் இன்றுவரை அதிசயங்களுக்குள் அகப்படாத அதிசயமாக தஞ்சையில் நிமிர்ந்து நிற்கும் பெருவுடையார் திருக்கோவில். ஆனால் பாலஸ்தாபனம் செய்து அண்ணளவாக ஆறே மாதங்களில் இந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நிறைவடைந்திருக்கிறது என்றால் இந்த இதனை சாதாரண விடயமாக கடந்து செல்ல முடியாது.

ஆலய உட்பிரகாரத்தின் நிலம் மற்றும் கருவறை முழுவதும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உள் வீதி சுற்று மதில்கள் உடைக்கப்பட்டு உள் வீதி அகலமாக்கப்பட்டுள்ளது. கூரை முழுவதும் கழட்டப்பட்டு, உறுதியான புதிய கூரை போடப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதி பாடல்கள் யாவும் கருங்கல்லில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பழைய தூண்கள் யாவும் இடிக்கப்பட்டு பொறியியல் ரீதியில் உறுதியான புதிய தூண்கள் அழகியல் வேலைப் பாடுகளுடன் நிர்மாதெய்வீகத் திருத்தலங்களின் புகைப்படங்களும், ஆலய வரலாற்றுடன் தொடர்புடைய சம்பவங்களின் படங்களும் பிரமாண்டமான முறையில் உட்புற சுற்றுச் சுவரில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபமும் அகலமாக்கப் பட்டுள்ளது. பஞ்ச கோபுரங்கள் உட்பட ஆலயம் முழுவதும் புது வர்ணம் பூசும் வேலைகளும் நடைபெறுகின்றன. அழகிய மின் விளக்குகள் ஆலயத்தின் அழகியல் வேலைப்பாடுகளை மேலும் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறு பல்வேறு கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் காலம் தாண்டி நிலைபெறுமாறு கருங்கற்களாலும் அழகியல் ததும்ப இந்த ஆலயம் ஆறே மாதங்களில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதை நினைக்கும் போது ஆச்சரியங்களால் சித்தம் நிரம்புகிறது. எத்தனை பெரிய கைங்கரியம். இந்த வரலாற்று சம்பவம் நடந்த காலப்பகுதியில் நாமும் வாழ்ந்தோம், இத் திருப்பணிகளை நேரில் கண்டோம் என்பதே பெரும் பாக்கியம். இது தலை முறை கடந்து தொடரும் பெரும் புண்ணியம்.

இந்தப் பாரிய திருப்பணி நேர்த்தியாக இந்தக் குறுகிய காலக்கிரமத்தில் நடந்து முடிந்திருக்கிறதென்றால் அதற்கு எமக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்திதான் காரணமென்பதை மறுக்க முடியாது. அவளருள் இல்லாமல் அவள் தாள் வணங்க முடியாது. இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக ஒருவரது அரும்பெரும் முயற்சி இருந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அவர் இல்லாவிட்டால் இவற்றை யார் செய்வார்கள் எனும் அளவிற்கு அணு அணுவாக தான் கற்பனையில் கண்டவற்றை ரசித்து ரசித்து நிஜமாக்கியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. உலக அளவில் ஈழத்தின் சைவத் தமிழ் பெருமைகளை பேச வைத்திருப்பதற்கு முக்கிய காரணமானவர். அறப்பணிகளுக்காகவும் சமயப் பணிகளுக்காகவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருமகனார். தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தின் தற்போதய நிர்வாகத் தலைவர். இலங்கையின் சகல பாகங்களிலும் பல்வேறு அறப்பணிகளை புரியும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர். ஆம். வாக்கு வன்மைக்கு ஏற்ப செஞ்சொற்செல்வர் என்று அழைக்கப்படும் கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்கள்.

ஈழத்தின் அடையாளங்கள் எல்லாம் யுத்தம் என்ற பெயரால் இல்லாது அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தனது பேச்சு வன்மையாலும் நேர்மையாலும் அகத்திலும் புலத்திலும் வாழும் உறவுகளின் நம்பிக்கைக்குரியவராக மாறி, அவர்களிடமிருந்து நன்கொடையாக கிடைத்த பெருமளவு பணத்தை கொண்டு, வரலாறு தாண்டி நிற்கும் பாரிய வேலைத் திட்டங்களை செஞ்சொற்செல்வர் மேற்கொண்டிருக்கிறார். இவர் ஆற்றுகின்ற பணிகளை எல்லாம் மற்றவர்கள் கற்பனையிலும் நினைக்க முடியாததாக இருக்கும். ஆனால் அவற்றை திட்டமிட்டு திறம்படவும் மிக விரைவாகவும் நிகழ்த்திக் காட்டி விடுவார். தலைமைத்துவத்தின் அத்தனை அம்சங்களுக்கும் வாழும் உதாரணமாக உள்ளார் ஆறு.திருமுருகன் ஐயா அவர்கள்.

சிவபூமி திருப்பணிகள் ஆகட்டும், தற்போது நடைபெற்ற துர்க்கையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக புனருத்தாரண திருப்பணிகள் ஆகட்டும் பெரியவர் தன்னை அதற்குள் முழுமையாக ஈடுபடுத்தி இரவு பகலாக தானும் அந்தந்த இடங்களிலே நின்று, மேற்பார்வை செய்து, வேலையாட்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு அவர் செயற்படும் விதம் அனைவரும் கற்க வேண்டிய பாடம்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.” எனும் வள்ளுவனார் வாக்கிற்கு இணங்க, உடனிருப்பவர்கள் அச்சப்பட்டாலும், தெய்வத்தின் மீதும் தான் செய்கின்ற அறத்தின் மீதும் நம்பிக்கை வைத்து திருப்பணிகளை துணிவோடு தொடங்கி பூரணத்துவமாக்குவது ஆறு.திருமுருகன் ஐயாவிற்கு வழக்கமான ஒன்று. துர்க்கையம்மன் ஆலயத்தின் இந்த பாரிய திருப்பணியை இவ்வளவு விரைவாக முடிக்க முடியாது, கும்பாபிஷேகத்தை பிற்போடலாம் என்று பலரும் சொன்ன போது அதை துணிவுடன் எதிர்கொண்டு பெருமளவு பணிகளை குறித்த நேரத்திற்குள் முடித்து கும்பாபிஷேகத்தையும் குறித்த திகதியில் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. “நாங்கள் எங்கள் வேலைகளை செய்து கொண்டு போவோம். நிறைவு பெற்ற வேலைகளோடு கும்பாபிஷேகத்தை நடாத்துவோம். ஏதாவது குற்றங்கள் இருந்தாலோ அம்பாளுக்கு பிடிக்கவில்லை என்றாலோ அவள் சமிக்ஞைகள் மூலம் காட்டுவாள். அப்போது நிறுத்திக் கொள்ளலாம்.” என்கின்ற நேர் சிந்தனையுடனான துணிவு செஞ்சொற் செல்வருக்கே உரித்தான தனி இயல்பு. தெய்வத்தையும் நாளையும் கோளையும் நினைத்து மற்றவர்கள் பயந்து கொண்டிருக்க, எல்லாம் நமக்குத் துணை செய்யும் என்று நம்பி காரியங்கள் ஆற்றுவதுதான் அவருக்கு இவ்வளவு பணிகளையும் ஆற்றும் நேரத்தை தந்திருக்கிறது.

எங்கள் மண்ணிலிருந்து ஒருவர் உலகறிந்த பேச்சாளராக, சேவையாளராக, அறப்பணியாராக, சமயப்பெரியவராக உள்ளமையை இட்டு நாமெல்லாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டும். அவர் செய்யும் பாரிய செயற்திட்டங்களுக்கு படிக்கற்களாக இல்லாவிட்டாலும் தடைக்கற்களாக இருந்துவிடவே கூடாது. ஆனால் நம்மில் சிலர் என்ன செய்கிறோம்? அவர் செய்பவற்றை மேலோட்டமாகப் பாரத்துவிட்டு அது தவறு இது தவறு என்று விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். அவரின் தூர நோக்குடனான உயரிய சிந்தனைகளை உணராமல் அவரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவை மகாபாவம். முற்றத்து மல்லிகைகள் மணப்பதில்லை என்பது சரியாகத்தான் உள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமையாக உள்ள போது அவரின் பணிகளுக்கு நாங்கள் எள்ளளவும் இடையூறாக இருக்கக் கூடாது. தெய்வத் திருவருளால் இப்படியொரு பெருமகனார் கிடைத்திருக்கிறார்.‌ பல மக்களும் அவரை நம்பி தமது சொத்துக்களை அறப்பணிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். எல்லோரது நம்பிக்கைக்கும் உரியவராக உள்ள இவரை தவிர்த்து இன்னொருவரை ஈழத்தில் காட்டுங்கள் பார்க்கலாம். இல்லை என்பதே நிதர்சனம். எனவே, ராமர் பாலத்திற்கு அணில்கள் செய்த உதவி போல நம்மாலான சிறு உதவிகளையேனும் செய்து அவருக்கு பக்கதுணையாக இருக்க வேண்டும். செஞ்சொற்செல்வர் மனதளவிலும் உடலளவிலும் பலமாக பல்லாண்டுகள் வாழ்ந்து மேலும் பல பணிகள் செய்ய எல்லாம் வல்ல இறை அருள் புரிய பிரார்த்திக்கிறோம்.

புகைப்படங்கள்
யாழ் நிக்கொன்

Related posts

காக்காய் பார்லிமெண்ட்

Thumi202121

CSKஇன் வெற்றியின் இரகசியம்

Thumi202121

துமியினூடாக தருமபுரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Thumi202121

Leave a Comment