இதழ் 71

உழைக்கும் கால்களே தவம் செய்யும் தாள்கள்

இளைஞர்களின் எதிர்காலம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? இன்றைய நாட்களில் பொழுதுபோக்கு செய்தி ஊடகங்களின் பெருந்தீனியாக பல இளைஞர்களது வாழ்க்கைச் சம்பவங்களே பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு போதையின் வசப்பட்டு அவர்கள் ஆற்றுகிற செயல்களின் அர்த்தங்கள் பற்றியோ விளைவுகள் பற்றியோ இன்றைய இளைஞர்கள் சிந்திப்பதில்லை. சிந்திக்கவும் அவர்களால் இயலவில்லை. இளையோரால் நிகழ்ந்துவிடுகின்ற சமூக குற்றங்களை வெறுமனே செய்தியாக நோக்கி இளந்தலைமுறை மீதான நம்பிக்கையில்லா போக்கை வளர்ப்பதுவே இன்றைய பெரும்பாலான ஊடகங்களினது தலையாய கடமையாயுள்ளது. அறியாமையில் குற்றங்களை நிகழ்த்திவிடுகிற இளந்தலைமுறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகின்ற பல செயல்களை ஊடகங்கள் தொடர்ந்தும் செய்து வருவதை அண்மைக் காலங்களில் காண முடிகிறது.

‘ஊடகங்களை குறைசொல்லக் கூடாதுதான். அதற்காக இளைஞர்களை குறை சொல்ல முடியுமா? அல்லது சமூகத்தை குறை சொல்ல முடியுமா?” ஒரு சமூகம் நாகரீகமானதாக வளர்வதற்கு மூல காரணமே அந்த சமூகத்தின் இளைஞர்கள் தான். அத்தகைய இளைஞர்கள் இப்படி சமூகத்தின் குற்றவாளிகளாய் மாறுவதற்கு என்ன காரணம்? எத்தனையோ காரணம் இருக்கலாம். ஆனால் ஏகமானதாக எல்லோரும் சொல்லக்கூடிய- எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு காரணம் ‘ஒழுங்கான ஒரு வேலையில்லை!” முறையான தொழிலில் இளைஞர் தம் கவனத்தை செலுத்துவாரானால் தேவையற்ற எண்ணங்கள் தானாக விலகி விடும் என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.
இன்றைய இளைஞன் படிக்கிறான்;இ பட்டதாரியாகிறான்;இ அறிஞன் ஆகிறான். அறிவின் பயன் என்ன செய்யவேண்டும் என்று அறிந்து செய்கிறானா?

மனிதன் விலங்குகளின்றும் வேறுபட்ட நிலை, உணவைத் தேடும் நிலையில்தான் தொடங்கியது. பின்னாளில் அவன் வளர, வளர உணவைத் தேடாமல் படைக்கத் தொடங்கினான். இந்தக் காலக்கட்டத்தில் தான் உழைப்பு வளர்ந்து கருவிகளுடன் மனிதனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. உண்ணும் உணவைத் தனது கடின உழைப்பால்-நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துப் படைத்து உண்ண ஆரம்பித்தான்.

உழைப்பு என்பது அனைவருக்கும்-மனித குலம் முழுவதுக்கும் உரிய பொறுப்பு. மனித குலத்தில் யாராவது சிலர் உழைக்காமல் வாழ்ந்தால் அவர்களுடைய உழைப்பின் பங்கை மற்றவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்று இந்தப் போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது. உழைக்காதவர்களும் அல்லது அரைகுறையாக உழைப்பவர்களும் அல்லது உழைப்பது போலப் பாவனை செய்பவர்களும் இன்று சமுதாயத்தில் பல்கிப் பெருகி வருகின்றனர். இது ஒரு சாபக்கேடு.
இந்தத் தவறான நடைமுறை பெரும்பாலும் படித்தவர்களிடையிலும் அதிகார வர்க்கத்தினரிடையிலும் பரவி வருகிறது.

நமது நாட்டில் உணவுப் பொருள்கள் வற்றாமல் வருகின்றன. ஆனால் பணப் பற்றாக்குறை இருக்கிறது. கடன் வாங்க வேண்டியிருக்கிறது. இது ஏன்? உழுவோர் உலகம் தமது உழைப்பை முறையாகச் செய்து நாட்டைப் பாதுகாத்து வருகிறது. மற்றத் துறைகளில் போதிய உழைப்புக் கிடைக்கவில்லை என்பது தானே உய்த்துணரக்கூடிய கருத்து.

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உழைப்பில் – எண்ணற்ற உயிர்த் தொகுதிகளின் உழைப்பில் வாழ்கிறோம். நாம் நமது ஒருநாள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று கணக்கிட்டால் நாம் இந்த உலகத்தில் மற்றவர்கள் அல்லது மற்றவை உழைப்பிலிருந்து நமது வாழ்க்கைக்கும் நுகர்வுக்கும் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியும்.

அப்படியானால், உழைக்காது வாழ்பவர்கள் பிறர் பங்கைத் திருடுகிறார்கள் அல்லது பிறருக்கு சுமையாக இருக்கிறார்கள். அண்ணல் காந்தியடிகள் ‘உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார்.

சமூகத்தின் ஒவ்வொரு இளைஞரும் எந்தவிதமான தூண்டுதலுமின்றி இயல்பாகவே உழைக்கும் உணர்வு பெறவேண்டும். என்று மனிதகுலத்துக்கு உழைப்பு ஜீவ சுபாவமாக அமைகிறதோ, அன்றே ‘சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற ஊதியம்” என்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும்.

உழைப்பின் சின்னமாகிய காய்த்துப்போன கைகளும் கால்களும் எல்லோரும் பெறவேண்டும். ஒருநாள் நபிகள் நாயகம், தம்மைக் காண வந்தவர்களுடன் கட்டித் தழுவியும், கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றியும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வழங்கிக் கொண்டிருந்தார். அப்படி வந்தவர்களுள் ஒருவரின் கையைப் பற்றிய அண்ணலார் நபிகள் நாயகம் நீண்ட நேரம் திரும்பத் திரும்ப அவர் கையைக் கண்களில் ஒற்றிக்கொண்ட தோடன்றி, கண்களில் நீர்மல்க நின்றுகொண்டிருந்தார். மற்றவர்கள் காரணம் கேட்டபோது, ‘இவருடைய கைகளில் உழைத்துக் காய்த்துப்போன சுவடுகள் இருந்தன. அவை எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன.” என்று நபிகள் நாயகம் அருளிச் செய்ததாக அவர் வரலாறு கூறுகிறது.

மனிதன் இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மட்டுமே திளைத்து வாழ நினைக்கிறான். இன்ப நுகர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கொள்கிறான். உழைப்பே வாழ்க்கையின் உயர் குறிக்கோள் என்பதை மனிதகுலம் உணரவேண்டும். உழைப்பின் வழி, இன்ப நுகர்ச்சியும் மகிழ்ச்சியும் தானாய் கிடைக்கும்.

உழைப்பு, உடலுக்கு உறுதி சேர்க்கும். அறிவு வளர்ச்சிக்கும் உதவும். இந்த உலகில் பலவற்றிற்கு எல்லை உண்டு. ஆனால், அறிவுக்கும் ஆளுமை நிறைந்த உழைப்புக்கும் சக்திக்கும் எல்லையே கிடையாது. மூளை இயங்க, இயங்க அறிவு வளரும். உழைப்பு தொடர்ந்து இடையீடின்றி நிகழின் உழைக்கும் சக்தியும் வளரும். அறிவு பூர்வமாகவும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் உழைத்தால் களைப்பு வாராது. மாறாகக் களிப்புணர்வே தோன்றும்.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிடத் தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான் சமூகத்திற்குப் பயன்படுவான். சமூகத்தில் ஒரு நிலையான இடத்தை முன்னேறிப் பெறுவான். இதுவே வாழும் நியதி.
ஆழ்கடலின் மேலே புல் பூண்டுகள் மிதக்கும், செத்தைகள் மிதக்கும். ஆனால், முத்து ஆழத்தில்தான் கிடக்கும். முத்தை விரும்புவோர் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கித்தான் முத்தை எடுக்கவேண்டும். அதுபோல, வாழ்க்கையில் அரும்பயனையும் வெற்றியையும் விரும்புவோர் உழைத்தல் வேண்டும்.

உடம்பு, உழைப்பினாலாயது. உழைப்பதற்கே உரியது. இரும்பு, பயன்படுத்தப் பயன்படுத்த உறுதிப்படும். நீண்ட நாட்களுக்கும் பயன்படும். உழைப்பில் பயன்படுத்தப்படாத இரும்பு துருப்பிடித்து அழியும்; விலை மதிப்பையும் இழக்கும். இரும்பு துருப்பிடித்து அழிவதைவிட, உழைப்பில் பயன்படுவதன் மூலம் தேய்வதே மேல்.

‘வேலை செய்வது கடினம், ஆனால், எந்த வேலையும் கடினமன்று” என்பது ஒரு சைப்ரஸ் பழமொழி. வேலை செய்வது கடினமல்ல. வேலை செய்ய விருப்பம் இல்லாததால் வேலை கடினமாகத் தோன்றுகிறது. ஆனால், ஆர்வத்துடன் அறிவறிந்த ஆள்வினையின் மூலம் எந்த வேலையையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும்.

ராபர்ட் புரூஸ் என்ற அரசன் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். பலமுறை போர்முனையில் தோற்றான். கடைசிப் போரில் தோற்று ஒரு குகையில் ஒளிந்திருந்தான்.அந்தக் குகையில் ஒரு சிலந்தி, வலைபின்னிக் கொண்டிருந்தது. அடிக்கடி சிலந்தியின் பின்னலில் நூலிழை அறுந்து போயிற்று. ஆனால், சிலந்தி விடவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலை பின்னும் முயற்சியில் வெற்றி கண்டது, இதனைக் கவனித்த அரசன் ராபர்ட் புருஸ், எழுச்சி பெற்றான். போருக்கு ஆயத்தமானான்; போரிட்டான்; வெற்றியும் பெற்றான். அதுபோல் தொடர்ச்சியாக நடைபெறும் உழைப்பு, வெற்றியை ஈட்டித் தரும்.

இன்று வேலை செய்யும் நேரத்தைவிட, ஓய்வு, இளைப்பாறுதல் – இந்த வகையில்தான் அதிக நேரம் செலவழிக்கப் பெறுகிறது. ஒரு கடமையைச் செய்து முடிக்கும்வரை இளைப்பாறுதல் என்ன வேண்டியிருக்கிறது?
பணிகளுக்கிடையில் இளைப்பாறுவது மிகவும் தவறு. இடறினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உழைப்பினைத் தொடர்ந்து செய்தலுக்குரிய உறுதி தோன்ற வேண்டும்.

உழைப்பாளிகள் இழப்புக்கள், துன்பங்கள் இவைகளைப்பற்றிக் கூடக் கலங்க மாட்டார்கள். ‘வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்?” என்பது அவர்களுடைய நெஞ்சுறுதியுடன் கூடிய பாங்கு. இத்தகு மனப்பாங்கினைப் பெற்றவர்களே உலகில் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் உச்ச நிலையை அடைந்தார்கள் என்றால், அவர்கள் திடீர் என்று தாவிக் குதிக்கவில்லை. மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் உழைத்து முன்னேறினார்கள்.என்று லாங்பெலோ கூறினார். நமது ஒளவையாரும்,
‘மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் 
கருமமே கண்ணாயினார்.”
என்றார்.

குறிக்கோளிலேயே கவனம் செலுத்துபவர்கள் உயர்வு, தாழ்வு, மானம், அவமானம் பார்க்க மாட்டார்கள். எவர் தீமை செய்தாலும் அத்தீமையைக் கண்டு அஞ்சிப் பணியிலிருந்து-உழைப்பிலிருந்து விலகார். காரியம் முடியும்வரை தூங்க மாட்டார்கள். பசியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தான் எடுத்துக்கொண்ட இலட்சியத்தை நோக்கியே பயணம் செய்வார்கள்.

உழைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அறிவுழைப்பு. மற்றொன்று உடலுழைப்பு. இவ்விரண்டு உழைப்புக்களிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது கிடையாது. ஆனால் காலப்போக்கில் உடல் உழைப்பை இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருப்பதை இன்றைய சமூக அமைப்பு உணர்த்துகிறது. அறிவுழைப்பாளிகள் உயர்ந்தவர்களாக மதிக்கப் படுகின்றனர். இது நெறிமுறையன்று. அறிவுழைப்பும் உடலுழைப்பும் இணைந்து செயல்பட்டால்தான் நாடு வளரும். இன்று உடலுழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதால் அரசுப் பணிமனைகளில் ஏவலர்களாகக்கூடப் பணி செய்ய முன் வருகின்றனர். ஆனால் தோட்டப் பண்ணை அமைக்க முன் வருவதில்லை.

வாழ்வையும் வேலையையும் மதிக்காமல் வெறுக்கிறார்கள். இந்தத் திசையில் செல்லும் இளையோரை மடைமாற்றி இயற்கையான இயல்பூக்கம் நிறைந்த படைப்பாளிகளாக வாழும் நெறிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் எல்லாருமே அந்தத் திசையில்தான் செல்லவேண்டும்.

எல்லாம் வல்ல இறைவனே உழைப்புக்கு மதிப்புக் கொடுத்து, திருநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசு கொடுத்தான்! திருநாவுக்கரசர் செய்தது கைத் திருத்தொண்டு. பார்வாழத் திருவீதிப் பணி செய்தது- அதாவது தெருவை சுத்தம் செய்தது.
மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், வைகை யாற்றங்கரையில் கொற்றாளாய்க் கூலிக்கு மண் சுமந்த வரலாறு, உழைப்பின் உயர்வை உணர்த்துவதாகும்.

இன்றைய இளைஞர்கள் பலர் பத்தாவது படித்து விட்டாலே மண்வெட்டி தூக்க விரும்புவதில்லை. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று வள்ளுவத்தை உணர்தல் வேண்டும். உடலுழைப்பு இகழப்படும் நாட்டில் தேக்கமும், அழிவும் உண்டாகி வளர்ச்சிப் பாதை கடினமாகி விடுகிறது. உழைப்பு இகழப்படும் சமுதாயத்தில் பண்டப் புழக்கம் குறையும்.

ஆதலால், அறிவுழைப்பாளிகள் ஏழைகள் செய்யும் உடலுழைப்பைச் செய்ய முன்வர வேண்டும். உடல் உழைப்பாளிகள் அறிவாளிகளுடன், அறிவியல் மேதைகளுடன் கலந்து உறவாடித் தங்கள் உடலுழைப்பை அறிவியல் சார்ந்ததாக அமைத்துக்கொள்ள வேண்டும். அறிவுழைப்பாளிகளும் உடலுழைப்பாளிகளும் ஒன்று சேர்ந்து உழைத்து உலகியலை நடத்தும் போதுதான் மனித குலம் ஒன்றுபடும்;. அற்புதங்கள் நிகழும். நம்மிடத்தில், நம்முடைய சமுதாயத்தில், பல தீமைகளை அகற்ற உழைப்பு உதவி செய்யும்.

‘சின்னச் சின்னக் கவலைகளால் அளிக்கப்படும் தொந்தரவு, குடித்தல், புகை பிடித்தல், காமந்தகாரனாகத் திரிதல், வறுமையில் கிடந்து உழலுதல், அழுக்காறு வயப்பட்டுப் புழுங்குதல்: வறுமொழியாளருடன், வம்பப்பரத்தருடன் கூடித் திரிதல், கோள் சொல்லுதல், பயணில் பேசுதல், சிறுசிறு கலகங்களைத் தூண்டி விடுதல்-செய்தல் முதலிய தீமைகள் இன்றைய இளையோரிடமிருந்து உழைப்பாலே விலகும்.” என்பது வால்டேர் கருத்து. இன்றைய தீமைகளுக்கெல்லாம் அடிப்படை உழைப்பின்மையேயாம்.
மனித சமுதாயத்தின் பிணிகளையும், துயரங்களையும் போக்கக்கூடிய தனிச் சிறப்பான மருந்து உழைப்பேயாம்.

சுட்டெரிக்கும் வெயிலில் தன் வியர்வையை முதலிட்டு சுமை தூக்கும் ஒரு தொழிலாளியை அட்டையில் காண்கிறீர்கள். இவன் தூக்கும் சுமை தான் இவனுக்கு சுகத்தை தருகிறது. இவன் குடும்பத்துக்கு சுகத்தை தருகிறது. அந்த சுமை இடம்மாறியதால் சமூகத்திற்கு சுகத்தை தருகிறது.‌ ஆக, சுமை சுகமாவதற்கு உழைப்பு தேவைப்படுகிறது.

முயற்சிக்கும் உழைப்புக்கும் சில தடைகள் வருவதும் உண்டு. முதலில் நிற்கும் பெரியதடை ஊழ். ஊழ்-விதி -வினை-தெய்வம் என்பன ஒரு பொருள் சொற்கள். நமது மக்களில் பலர் ஊழின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்து உழைக்காமலே வாழ்கின்றனர். உழைத்தாலும் ஊழின் துணை இல்லாது போனால் காரியம் கை கூடாது என்ற கருத்து நமக்கு இருக்கும்வரை ஊழை வெற்றி பெற இயலாது. ‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாளிலேயே ஆகும்.” என்பது அவர்கள் கூறும் பழமொழி. ஆனால் இது உண்மையன்று.

ஒரு காரியம் நிறைவேற எவ்வளவு உழைப்புத் தேவைப்படும் என்று ஓர் அளவிருக்கும். அதையும் சூழ் நிலையையும் ஆராய்ந்தறிந்து கணக்கிட்டுக்கொண்டு முறையாக அறிவார்ந்த உழைப்பு செய்யப் பெறின், வெற்றி கிடைக்கும். ஊழ், தடையாக இருக்காது. ஊழினை மாற்றுவதற்கே பிறப்பு. ஊழினை வெற்றிபெறப் பழக்கங்களை, வழக்கங்களை, வெற்றிபெற வேண்டும். நாள் தோறும் புத்துயிர்ப்பு பெறவேண்டும்.

அடுத்து உழைப்புக்கு ஒரு பெரிய தடை கடவுள் நம்பிக்கை – கடவுள் வழிபாட்டின் அடிப்படையில் தோன்றிய தவறான நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை தேவை கடவுள் வழிபாடும் தேவை. ஆயினும் கடவுளே எல்லாவற்றையும் தருவான் என்று விண்ணப்பித்தலில் என்ன பயன்? கடவுள் பருப்பொருள் எதையும் தரமாட்டான். தன் நம்பிக்கை, சோர்விலா மனம், உழைப்புக்குரிய ஆற்றல், இவையே கடவுளால் ஆன்மாக்களுக்கு வழங்கப் பெறுபவை. ஆதலால், கடவுள் நம்பிக்கையோ, வழிபாடோ மட்டும் வெற்றியைத் தந்துவிடும் என்று வாளா இருத்தல் கூடாது. உழைப்பாளர்களின் முன்னேதான் கடவுள் வாய்ப்புக்களை அருளிச் செய்கிறான். ஆதலால் ஊழ், நல்ல நாள், கெட்ட நாள் என்ற எண்ணத்தில் உழைப்பை ஒத்திப்போடக் கூடாது. உழைப்பைத் தவிர்க்கக் கூடாது. கடின உழைப்பே கடவுள் பக்தியின் அடையாளம். உழைப்பின் பயனை, ஆக்கத்தை, மற்றவர்க்கும் வழங்கி வாழ்விப்பது ஆக்கம்.

உழைப்பு நிறைந்த வாழ்க்கையே நோன்பு. உழைக்கும் கால்களே தவம் செய்யும் தாள்கள் என்றது புறநானூறு. உழைக்கும் எருதே நந்தி;. கடவுட் கொடியின் சின்னம். ஏறுதான் இறைவன் ஊர்தி, எருது உழைப்பின் சின்னம், ‘உழுத நோன்பகடு அழிதின் றாங்கு” என்பது புறநானூறு. உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஒருவன் செல்வந்தனாய் இருப்பதை விட உழைப்பாளியாக இருப்பது உயர்வு. செல்வம் அழியும். உழைப்புத் திறன் அழியாது. ஊக்கம் என்பது உள்ள எழுச்சி, பணிமேற் செல்வதற்குரிய பாங்கு. ஒளவைப் பாட்டியாரும் ‘ஊக்கமது கைவிடேல்” என்றார்.

உழைப்பின் அருமைப்பாட்டை உலகச் சிந்தனையாளர்கள் ஒரு குரலில் புகழ்கின்றனர். உன் கண் முன்னே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள மனித நாகரீகத்தைப் பார்! உன் முன்னே இருக்கும் மாட மாளிகை, கூட கோபுரங்களைப்பார். அவ்வளவும் ஆக்கம்! சென்ற காலத் தலைமுறையினுடைய படைப்பு! இந்த மகத்தான சாதனையைப் பார்த்த புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பிரமித்து நிற்கிறான்! விண்ணில் உள்ள விண்மீன்கள் உழைப்பாளிகளின் உடலில் தோன்றியுள்ள கொப்புளங்கள், என்று பாடுகின்றான். ‘அறிவற்றவன் சிரத்தையுடன் கூடிய உழைப்பை இழந்தவன், கெடுப்பார் இல்லாமலே கெட்டுப்போகிறான்”;;; என்றார் விவேகானந்தர்.

‘உழைத்தால்தான் உணவு” என்ற சட்டம் வேண்டும் என்றான.; ஜான்ஸ்மித். இந்தச் சட்டத்தை உலக நாடுகள் இயற்றவேண்டும். அதற்கு நாம் எல்லாரும் கீழ்ப்படிய வேண்டும்.

உழைப்புடன் கூடிய வாழ்க்கை சொர்க்கத்தின் கதவைக்கூடத் தட்ட உதவும்.

உழைப்பை உயர்த்துங்கள்..!
உழைப்பால் உயருங்கள்..!

Related posts

பட்டினத்தாரின் தாய்ப் பதிகம்

Thumi202121

சிறப்பாக நடந்த மகளீர் இல்ல ஆண்டுவிழா

Thumi202121

வினோத உலகம் – 34

Thumi202121

Leave a Comment