இதழ் 71

திரிகோண வளச் சங்கமத்தில் உருவாகியுள்ள கருவளர்ச்சி சிகிச்சை நிலையம்

ஒரு செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமானால் அதன் சாதக பாதக தன்மைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப திட்டமிட போதுமான அறிவுசார் வளம் முதலாவதாக இருக்க வேண்டும். அடுத்து, அந்த அறிவினால் உருவாக்கப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான நிதி வளம் வேண்டும். இவற்றையெல்லாம் மட்டும் பெற்றுவிட்டால் போதுமா? என்றால் போதாது. இவற்றை செயற்படுத்தவும் களத்தில் வேலை செய்யவும் போதுமான ஆளணி வேண்டும். அதாவது மனித வளம் வேண்டும். அறிவுசார் வளம்(புலமை வளம்), நிதி வளம், மனித வளம் என்கின்ற இந்த மூன்று வளங்களும் கிடைக்கின்ற போதுதான் அந்த செயற்திட்டம் வெற்றியடையும்.

சமீப காலத்தில் எமது மண்ணில் நடந்த செயற்திட்டங்கள் பல அவற்றின் இலக்கை எய்துகொள்ள முடியாமைக்கான மூல காரணம் இந்த மூன்று வளங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வளத்தினது பற்றாக்குறையாகவே இருக்கும். எனவே, இந்த மூன்று வளங்களையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்திருக்கிறது. அரச சார் செயற்திட்டங்களில் மனித வளத்திற்கோ, புலமை வளத்திற்கோ தட்டுப்பாடு இல்லாத போதும் அரச திறைசேரியில் வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நிதி வளம் காரணமாக வினைத்திறனான செயற்திட்டத்தை உருவாக்க முடியாமல் போகலாம். அவ்வாறு உருவாக்கினாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அரசியல் தலையீடுகள், திணைக்கள தலைமைகள் மாற்றம், செயற்திட்டத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மூன்றாம் தரப்பு இல்லாமை போன்றவற்றை அவ்வாறான சில காரணங்களாக சொல்லலாம்.

அந்த வகையில் அண்மையில் யாழ்நகரில் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி கருவளர்ச்சி சிகிச்சை நிலையம் எமது மண்ணிற்கு கிடைத்த மிக முக்கியமான மருத்துவ வரம் என்பதற்கு அப்பால் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதம் யாம் மேற்கூறிய மூன்று வளங்களையும் ஓர் புள்ளியில் சந்திக்க வைத்த ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டும். ஆளணி வளம் குன்றாமல் வந்து கொண்டிருக்கும் யாழ் போதனா வைத்தியசாலையும், புலமைசார் வளம் நிறைந்திருக்கும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடமும் இந்த செயற்திட்டத்திற்குள் காணப்படும் அரசசார் நிறுவனங்கள். எனவே மனித வளமும், புலமை வளமும் இவர்களுக்கு என்றும் கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே நிதி வளம் என்பதும் தொடர்ச்சியாக கிடைக்குமானால் இந்த செயற்திட்டம் வெற்றிகரமாக ஆண்டுகள் கடந்து பயணிக்க இயலும். ஆனால் பல லட்சங்கள் செலவாகும் இந்த கருவளர்ச்சி பிரிவுக்கு போதுமான நிதியினை தொடர்ச்சியாக வழங்க அரச கருவூலத்தால் இயலாது. இயன்றாலும் அது வடபுலத்திற்கு வருமா என்பதும் ஐயமே!

ஏற்கனவே கட்டடமின்றி தவிக்கும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நிதி வளம் என்பது பாரிய பிரச்சனை. இந்த நிலையில் தான் சிவபூமி, அபயம் போன்ற தொண்டு நிறுவனங்களின் தேவைப்பாடு இந்த செயற்திட்டத்திற்குள் முக்கியத்துவம் பெறுகிறது. எமது உறவுகளுக்கு உதவுவதற்கு பல செல்வம் படைத்தவர்களும் தயாராக இருந்தாலும், அவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை யாரூடாக இந்த உதவிகளை செய்வது என்பதுதான். தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் தங்களை வளர்த்துக்கொள்ளும் மோசடிக் காரர்கள் நிறைந்த உலகத்தில் தேடித்தேடி மக்களுக்கு உதவிகளை செய்து அறப்பணிகளை ஆற்றி வரும் அபயம், சிவபூமி அமைப்புக்கள் மக்களின் நூறு வீத நம்பிக்கையைப் பெற்றவை. இங்கே கொடுத்த பணம் சேர வேண்டிய இடத்தில் சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால்த்தான் மாதந்தோறும் பல லட்சங்கள் பெறுமதியான அறப்பணிகளை இவர்களால் செய்ய முடிகிறது. அதற்கான பணமும் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. யாழ் நகரின் மையத்தில் பல கோடிகளுக்கு விற்பனையாகக்கூடிய பெரிய வீட்டினை செனட்டர் கனகநாயகம் குடும்பத்தினர் இலவசமாக சிவபூமிக்கு வழங்கியமை இந்த நம்பிக்கையினால்த்தான் என்றால் அது மிகையில்லை.

அதோடு இந்த கருவளர்ச்சி சிகிச்சை நிலைய செயற்பாடுகளை கண்காணிக்கும் மூன்றாம் நபராகவும் சிவபூமி இருக்கப்போவதாலும், வைத்தியசாலை செயற்பாடுகள் திருப்தியளிக்காவிட்டால் கட்டடம் திரும்பப்பெறப்படும் என்கிற நிபந்தனை ஒப்பந்தத்தில் இருப்பதாலும் தலைமைகள் மாறினிலும் வினைத்திறனான சேவையை காலங்கள் கடந்தும் பெறக்கூடியவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

சிவபூமி மற்றும் அபயம் அமைப்புக்கள் (நிதி வளம்), யாழ் பல்கலைக்கழகம் (புலமை வளம்), யாழ் போதனா வைத்தியசாலை (மனித வளம்) ஆகிய மூன்று வளங்களும் ஒரு புள்ளியில் சந்திக்க முடிந்திருக்கிறது என்றால் அது எவ்வாறு சாத்தியமாகி இருக்கிறது? அதற்கான காரணம் கலாநிதி. ஆறு. திருமுருகன் ஐயா அவர்கள். ஈழத்தின் மிக முக்கியமான மனிதராகவும், உலகளவில் ஈழத்தின் அடையாளமாகவும், எல்லோருடைய அபிமானத்தையும் அன்பையும் நம்பிக்கையையும் பெற்ற சமயப் பெரியவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக பல வருடங்களாக தொடர்ச்சியான மக்கள் சேவையால் செயல்வீராக செயற்பட்டுவரும் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா அவர்களால் மட்டுமே இந்த மூன்று வளங்களும் ஒரு புள்ளியில் சந்தித்திருக்கின்றன.

எனவே, இந்த கருவளர்ச்சி சிகிச்சை நிலையத்தில் வளங்கள் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதோ அது போல இனிவரும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் யாவற்றிலும் புலமை வளம், மனித வளம், நிதி வளம் ஆகிய வளங்களை ஒன்றாக்கி நிலைபேறானதும் வினைத் திறனானதுமான செயற்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்க வேண்டிய எத்தனையோ இளம் தலைமுறைகள் வீதிகளில் இலக்குகள் இன்றி சுற்றித்திரியும் இந்த நேரத்தில் இதுபோன்ற வினைத்திறனான செயற்திட்டங்கள் பலவற்றை எமது மண்ணில் தூர நோக்கோடு உருவாக்குவதன்மூலம், மண்ணின் மைந்தர்கள் யாவரையும் உழைக்கும் தொழிலாளர்கள் ஆக்க வேண்டும்! அந்த சிந்தனையோடு இந்த தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்!

உழைப்போம்!
உழைக்க வைப்போம்!
உயர்வோம்!

அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்!

Related posts

தமிழ்ப் பேரறிஞருக்கு இதய அஞ்சலி

Thumi202121

சிறப்பாக நடந்த மகளீர் இல்ல ஆண்டுவிழா

Thumi202121

‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு” ஆய்வுநூல்

Thumi202121

Leave a Comment