நடைபெற்று வருகின்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகளவான ஓட்டங்கள் குவிக்கப்படுகிறது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் 250 ஓட்டங்கள் இலக்கு என்ற காலம் போய் இப்போது 20 பந்து பரிமாற்றத்தில் 250 ஓட்டங்கள் பெறப்படும் தொடராக மாறிப் போய் உள்ளது. இதற்கான காரணங்களாக ஐபிஎல் இல் உள்ள இம்பக்ற் பிளேயர் விதி, சிறிய அளவிலான மைதானங்கள், மற்றும் தட்டையான ஆடுதளங்கள் என்பன கூறப்படுகிறது.
இம்பக்ற் பிளேயர் விதியானது 11 பேர் விளையாடும் கிரிக்கெட் என்பதை 12 பேர் ஆடும் ஆட்டமாக மாற்றியுள்ளது. இதனால் சகலதுறை வீரர்களின் முக்கியத்துவம் குறைகிறது என்று இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, அவுஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் முதலானோரும் கருதுகின்றனர். இம்பக்ற் பிளேயர் விதி, ஏழு துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் ஐந்து பந்து வீச்சாளர்கள் என்று அணியை தெரிவு வழிவகுக்கிறது. இது அத்துடன் நின்றுவிடாமல் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடவும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது. எனவே இது ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்று மட்டுமல்ல இந்திய மைதானங்கள் எப்போதும் அளவில் சிறியவை என்பதால் இதை ஒரு காரணமாக எடுத்தல் முறையன்று. மும்பை வான்கடே மற்றும் பெங்களூர் சின்னச்சாமி ஆடுதளங்கள் எப்போதும் தட்டையான துடுப்பாட்டத்திற்கு சாதகமான அதிக அளவில் ஓட்டங்கள் பெறப்படும் ஆடுதளங்களே. ஆனால் சென்னை லக்னோ அகமதாபாத் ஆகிய ஆடுதளங்களும் தட்டையானமை நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் இம்முறை கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியில் இணைந்த போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுதளம் ஈடன் கார்டன் இல் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் தட்டையான ஆடுதளமே.
ஆனால் இவற்றை விட சில காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக ரேவிஸ் ஹெட், பிலிப் சோல்ட், வில் ஜாக்ஸ், ஹென்றி கிளாசேன், சுனில் நைரன், புதிய வரவான ஜாக் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் 100 பந்திற்கு 200 ஓட்டங்கள் எடுக்கும் வல்லமை கொண்டவர்கள்; இவர்கள் பிற லீக் போட்டிகளிலும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடுபவர்களே. நேரடியாக பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் பின்னர் அதை பயன்படுத்தி ஓட்டங்கள் குவிப்பது இவர்களின் நோக்கமே.
266, 277, 287 என்ற இமாலய ஓட்டங்களை குவித்து 300 என்ற இலக்கை குறிவைக்கும் அணியான சன் ரைஸ்சர் அணியில் ஹெட் மற்றும் கிளாசேன் உள்ளனர்; அவர்களுடன் அபிஷேக் சர்மா போன்ற இந்த வீரர்களின் துணையும் இருக்கிறது. 261 மற்றும் 272 ஓட்டங்களினை குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; இந்த அணியில் சோல்ட் மற்றும் நைரன் உள்ளனர். எனவே இவ்வாறான வீரர்கள், தட்டையான ஆடுதளங்கள் மற்றும் இம்பக்ற் பிளேயர் விதி என்பன 250ூ என்ற இமாலய ஓட்டங்களை பெற உதவுவதுடன்; தட்டையான
ஆடுதளங்கள் மற்றும் இம்பக்ற் பிளேயர் விதி என்பன தொடர்ச்சியான 200ூ மற்றும் 200 இனை அண்மித்த ஓட்டங்களுக்கும் உதவுகின்றன.
இவற்றை விட இன்னொரு காரணமாக பந்து வீச்சாளர்கள் ஒழுங்காக பந்து வீசவில்லை என்று லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.