இதழ் 71

தமிழ்ப் பேரறிஞருக்கு இதய அஞ்சலி

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேசுவரன் ஞாயிற்றுக்கிழமை 21.04.2024 அன்று சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

பன்னிரு திருமுறை முழுவதையும், 1254 பதிகங்கள், 18,268 பாடல்கள், கோயில் வரலாறு, அருளாளர் வரலாறு, ஆசியுரைகள் என அச்சுப் பதிப்புக் காலங்களில் (1997-1998) மயிலாடுதுறை தருமபுரம் திருமடத்தில் ஓராண்டுக்கு மேலாகத் தங்கி இருந்தும், இரண்டாவது முறையாகத் தமிழகம் வந்து (2000-2001) சென்னை, தியாகராயநகர் தருமபுரம் திருமடக் கிளையில் பல மாதங்கள் தங்கி இருந்தும் மெய்ப்புப் பார்த்த பெருமகனார்.

தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் தவத்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமச்சாரியாரின் ஆலோசகராக அக்காலங்களில் பணிபுரிந்தார். தமிழில் கற்றுத் துறை போதிய புலமையாளர். யாப்பு இலக்கணம் கைவரப் பெற்றவர். வடமொழியை நன்கு கற்றறிந்தவர். ஆங்கில மொழி ஆசிரியராக இலங்கையில் பல பாடசாலைகளில் பணிபுரிந்தவர். ஆங்கிலத்தில் வித்தகர்.

பன்னிரு திருமுறையின் 23 திருப்பண்களையும் வகை தெரிந்து பிரித்தறிபவர். ஒவ்வொரு பண்ணிலும் விரிவுகளையும் சார்புகளையும் வேறுபாடுகளையும் நுணுக்கமாக அறிந்தவர். இசைஞானத்தில் நுண்மா நுழைபுலத்தர். கர்நாடக இசையை நன்கு தேர்ந்தவர். சென்னையில் வாழ்ந்த காலங்களில் இசைக் கச்சேரிகளுக்குத் தனது உடல் நலக் குறைவையும் பாராது மாலை வேளைகளில் சென்று வருபவர்.

செதுக்கிச் செதுக்கிக் கூர்மையான யாழ்ப்பாணச் சைவத் தமிழ்ப் பண்பாட்டின் உச்ச நிலை அவரது இயல்பு. வலிந்து பேசார். இனிய சொற்களின் உறவாளர். எளிதில் எவருடனும் இணையார். இணைந்தால் பிரியார். பற்றுகள் குறைந்தவர். ஆகக் குறைந்த ஆசைகள் அவருக்கு. தவத்திரு சந்நிதானத்தின் முழுமையான ஆசீர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் பெற்ற திருமகனார். அவரோடு இணைந்து மெய்ட்புப் பார்த்தவர்கள் ஏழாலை பண்டிதர் மு. கந்தையா அவர்களும் தருமபுரம் ஆதீனப் புலவர் வித்வான் க. ஆறுமுகம் அவர்களும்.

அன்னாரின் பிரிவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறோம்.

Related posts

வினோத உலகம் – 34

Thumi202121

ஐபில் ரன்‌ மழையின் இரகசியம் என்ன..?

Thumi202121

என் கால்கள் வழியே… – 04

Thumi202121

Leave a Comment