ஆய்வாளரான முருகையா சதீஸ் அவர்கள் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம்: திரியாய் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சிறந்த கதை சொல்லியாகவும், கவிதை சொல்லியாகவும் திகழ்கின்றார். இளம் வயதிலேயே ஆய்வுப்பரப்பினுள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இதுவரை நான்கு ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளதுடன், சர்வதேச ஆய்விதழ்களிலும் சர்வதேச ஆய்வுமாநாட்டு மலர்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இவரது ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு” என்ற இப்படைப்பு இவரின் முதல் ஆய்வு நூலாகும். 2022ஆம் ஆண்டு, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலைப் படிக்கும்போது ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆய்வாளர் முருகையா சதீஸ் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் – தமிழ்த்துறையில் (முதலாம் வருடம் – புது முக வகுப்பில்) கற்கும் பொழுதே, அவரது ஆளுமையையும், திறனையும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஆய்வாளர்களுக்கென்று ஒரு தனி நடை இருக்கும். அந்த நடையில் அவர்களது ஆளுமை வெளிப்படும். முருகையா சதீஸ் அவர்களுக்கென்று தனியான நடை இருக்கின்றது. ஒரு விடயத்தை விளங்கி அதனைத் திறனாய்ந்து கூறும் மனப்பாங்குவிருத்தி இவரிடம் இருக்கின்றது.
இன முரண்பாடு பற்றி அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியினரே பொதுவாகக் கதைப்பது வழக்கம். ஆனால் ஆய்வாளர் முருகையா சதீஸ் அவர்கள், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளினூடாக இனமுரண்பாடு பற்றிக் கதைப்பது, அவரின் ஆளுமை விருத்தியைக் காட்டுகின்றது. இந்தப் பேசுபொருளைப் பேச முன்வந்தமை பாராட்டுக்குரியது. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் டீநiபெ யு வுயஅடை யுனெ ளுசiடுயமெய என்ற ஆங்கில நூலில், தமிழர்களின் பிரச்சினை மையங்களை எடுத்துக்காட்டுவது இவ்விடத்தில் ஞாபகம் வருகின்றது. முருகையா சதீஸ் அவர்கள், மூன்று பகுதிகளாக இந்நூலைக் கட்டமைக்கிறார்.
‘ஈழமும் இன முரண்பாடும்”, ‘சிறுகதைகளில் இன முரண்பாட்டின் பிரதிபலிப்பு”, ‘சிறுகதைகளில் இனமுரண்பாட்டின் எடுத்துரைப்பியல்” என்பவையே அவையாகும். முதலாம் இயலில்: இனமுரண்பாடு தோற்றம் பெறுவதற்கான காரணிகளைத் தனது மொழிநடையில் அலசி ஆராய்கின்றார். பின்னர் இனமுரண்பாடு என்றால் என்ன? என்பதை வரைவிலக்கணமாகக் கூறுகிறார். அத்துடன் சிங்கள – பௌத்த மேலாதிக்கக் கருத்தியல்கள், தேசியக்கொடி, பிரஜாவுரிமை பற்றிய கருத்தியல்களை முன்வைக்கின்றார். திட்டமிட்ட குடியேற்றம், தனிச்சிங்களச் சட்டம், நீதிமன்ற மொழி, தரப்படுத்தல், காணிச்சீர்திருத்தம், தடைச்சட்டங்கள், இன வன்முறைகள் எனச் சமூக – அரசியல் திறனாய்வு நோக்கில் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைக்கின்றார்.
அடுத்து ‘சிறுகதைகளில் இனமுரண்பாட்டின் பிரதிபலிப்பு” என்ற இயலில்: தமிழ்மொழி புறக்கணிப்பு, தோட்டங்களின் தேசிய மயமாக்கலின் மூலம் ஏற்பட்ட ஏமாற்றங்கள், மலையகத் தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட அவலங்கள் என்பவற்றை, 1980 – 1990 வரையான காலகட்டத்தில் எழுந்த ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை மையமாக வைத்து நோக்குவது சிறப்புக்குரியது. இனக்கலவரங்கள், இன மோதல்கள், இலங்கை இராணுவத்தின் வன்முறைகள், விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், இந்திய இராணுவத்தின் கெடுபிடிகள் என்பவற்றை 1980 – 1990 காலகட்ட ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளினூடாகச் சமூகவியல் நோக்கில்; ஆராய்கிறார்;. இலங்கைத் தமிழரின் கடந்தகால அவலங்கள் பற்றிய தேடலுக்கு இந்நூல் முன்மாதிரியாக அமைகின்றது.
அடுத்த பகுதியாக, ‘சிறுகதைகளில் இன முரண்பாட்டின் எடுத்துரைப்பியல்” அமைகின்றது. கதைத்தலைப்பு, குறியீடு, சம்பவக் கோர்வைகள், தொன்மம், நனவோடை உத்தி, பின்னோக்கு உத்தி, கடிதமுறை உத்தி, நாட்குறிப்பு உத்தி, நோக்குநிலை, மொழிநடை, உரையாடல் என்ற முறையில் எடுத்துரைப்பியலைத் திறனாய்ந்து கூறுவது சிறப்பாக அமைகின்றது. இறுதியாகத் ‘தொகுப்புரை” அமைகின்றது. பொதுவாக ஆய்வுப்பரப்பில் அறிவியல் நோக்கிலான தீர்வினையே எதிர்பார்க்கிறார்கள். சதீஸ் அவர்களும், இனமுரண்பாட்டின் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என்று தனது கருத்தியலை முன்வைப்பது சிறப்பாக அமைகின்றது.
எனவே இவர் மேலும் பல ஆய்வுகளை எழுதி வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகின்றேன். இவரின் ஆய்வு முயற்சிகளைப் பாராட்டுகின்றேன். பல சர்வதேச ஆய்வு மாநாடுகளைக் கண்டவர். பல சர்வதேச ஆய்விதழ்களில் எழுதியவர். இப்பொழுது தமிழ்ச் சமூகம் பயனுறும் வகையில் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது.