இதழ் 71

வினோத உலகம் – 34

காஸா துயரத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படம் ‘வேல்ர்ட் பிரஸ்’ புகைப்பட அறக்கட்டளையால் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் முகமது சலீம் கடந்த அக். 17-இல் எடுத்துள்ளார்.

அந்தப் படத்தில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த குழந்தையின் உடலை அவரது உறவினர் சோகத்துடன் ஏந்தியிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Moet Hennessy Louis Vuitton (LVMH)-ன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட், எலன் மஸ்க்கை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இந்த பிரெஞ்சு கோடீஸ்வரரின் குடும்பத்தின் நிகர மதிப்பு $207.6 பில்லியனாக வளர்ந்துள்ளதாக கூறியுள்ளது.

இரண்டு கோடீஸ்வரர்களும் 2022ஆம் ஆண்டிலிருந்து கோடீஸ்வரர் பட்டியலில் யார் முன்னிலை என்ற போரில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அர்னால்ட், அந்த ஆண்டின் பிற்பகுதியில் முதலிடத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

டெஸ்லாவின் $586.14 பில்லியனுடன் ஒப்பிடுகையில், டியோர், பல்கேரி மற்றும் செபோரா போன்ற ஆடம்பரப் பிராண்டுகளுக்குப் பின்னால் உள்ள நிறுவனமான LVMH-ன் சந்தை மதிப்பு $388.8 பில்லியனை எட்டியுள்ளது என்று அறிக்கை வெளிப்படுத்தியது.

ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலின் படி, உலகின் முதல் 10 பணக்காரர்கள்:

பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் ($207.6 பில்லியன்)

எலன் மஸ்க் ($204.7 பில்லியன்)

ஜெஃப் பெசோஸ் ($181.3 பில்லியன்)

லாரி எலிசன் ($142.2 பில்லியன்)

மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன்)

வாரன் பஃபெட் ($127.2 பில்லியன்)

லாரி பேஜ் ($127.1 பில்லியன்)

பில் கேட்ஸ் ($122.9 பில்லியன்)

செர்ஜி பிரின் ($121.7 பில்லியன்)

ஸ்டீவ் பால்மர் ($118.8 பில்லியன்).

மனித மூளைக்கும், கம்ப்யூட்டருக்கும் இடையே இணைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வை காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது நியூராலிங்க் நிறுவனம்.

ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அவருக்கு மருந்து கொடுத்து தீர்வு காண்பதுதான், வழக்கமான மருத்துவ அறிவியல். ஆனால், அதற்கு பதிலாக, கம்ப்யூட்டரில் இருந்து மனித மூளைக்கு சிக்னல் அனுப்பி, உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் வகையில் உருவாக்கியிருப்பதுதான் நியூராலிங்க் சிப். அந்த வகையில், ஆட்டிசம், பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இந்த சிப் பொருத்தப்படும். இந்த சிப் மூளையின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, நரம்புகளை செயல்பட வைக்கும்போது, ஆட்டிசம், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும் என்பதுதான் எலான் மஸ்க் நிறுவனத்தின் விளக்கம்.

அதாவது, மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு எந்த மருந்தை கொடுத்தாலும், அதை செயல்பட வைப்பதற்கான உத்தரவுகளை கொடுப்பது மனித மூளைதான். மூளை உத்தரவு கொடுக்காவிட்டால், உடல் நன்றாக இருந்தாலும், அதில் இருக்கும் எந்த உறுப்புகளும் இயங்காது. ஆனால், இந்த சிப் பொருத்தப்படும்போது, கம்ப்யூட்டரில் இருந்து சிக்னல் அனுப்பி, உடல் உறுப்புகளுக்கு என்ன மாதிரியான உத்தரவுகளை மூளை கொடுக்க வேண்டும் என கட்டுப்படுத்தப்படும்.

இந்த வகையில், எந்த மருந்துகளும் இன்றி, கடந்த ஆண்டு நடுக்கவாத பாதிப்பை கம்ப்யூட்டர் சிப் மூலமே சரி செய்து, ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள் ஜெர்மனி மருத்துவர்கள். இதையே மேம்படுத்தி, பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் முயற்சிக்காக தயாரிக்கப்பட்ட உபகரணத்திற்கு டெலிபதி (Telepathy) என பெயர் வைத்துள்ளார் எலான் மஸ்க். இந்த உபகரணத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து சோதனையை நடத்தியது நியூராலிங்க். அது வெற்றிபெற்றதை அடுத்து, மனிதர்களை கொண்டு சோதனை செய்ய நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம்.

இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடந்தாலும், இந்த சிப் சந்தைக்கு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும் என்கிறது நியூராலிங்க் நிறுவனம்.

முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் பார்வை இழந்தவர்கள் என சுமார் 100 கோடி பேருக்கு வரும் 2040ஆம் ஆண்டுக்குள் இந்த உபகரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் மஸ்க். கம்ப்யூட்டரில் இருந்து மூளைக்கு சிக்னல் அனுப்பி கட்டுப்படுத்துவதைப் போல, மூளையில் இருந்து சிக்னல் அனுப்பி கம்ப்யூட்டரையும் கட்டுப்படுத்த முடியும். நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த முயற்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய வரமாக அமையும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே உள்ள அபு முரேகாவில் அந்நாட்டின் முதலாவது இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கு 2019-ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். கோயிலின் கட்டுமானப் பணிகளை பிஏபிஎஸ் (BAPS) அமைப்பு மேற்கொண்டது, இந்நிலையில், 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற இந்திய பிரதமர், கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றார். 

கோயில் கட்ட 2015-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்போதைய பட்டத்து இளவரசரும், தற்போதைய அதிபருமான பின் சயீத் அல் நஹ்யான், 27 ஏக்கர் நிலம் வழங்கினார்.

இந்தக் கோயில் மத நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய மன்னர் இந்து கோயிலுக்காக நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.

கோயிலைக் கட்டியவர் கத்தோலிக்க கிறிஸ்தவர், கட்டடத்தின் திட்ட மேலாளர் சீக்கியர், அடித்தள வடிவமைப்பாளர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். கட்டுமான நிறுவனம் ஒரு பார்சி குழு, நிறுவனத்தின் இயக்குனர் ஜைன பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.

27 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்தக் கோயில், 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற சுவரில், அனைத்து கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வரலாறுகளும், இந்து கடவுள்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. கோயிலின் வெளிப்புறத்தில் ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்களும் உட்புறத்தில் இத்தாலியின் வெள்ளை பளிங்கு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் ஒரு இரும்புக் கம்பி கூட பயன்படுத்தப்படவில்லை.

கோயிலின் பீடத்தில் இந்திய நாகரிகம் தவிர, மாயா, எகிப்தி, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க நாகரிக வரலாறுகளும் இடம்பெற்றுள்ளன.

மொத்தமுள்ள 7 கோபுரங்களில் ராமர், சிவன், ஜெகன்னாதர், கிருஷ்ணர், ஏழுமலையான் மற்றும் ஐயப்பன் சிலைகள் உள்ளன. ஏழு கோபுரங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களைக் குறிக்கின்றன.

Related posts

வல்வெட்டித்துறையும் இந்திரவிழாவும்

Thumi202121

‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு” ஆய்வுநூல்

Thumi202121

என் கால்கள் வழியே… – 04

Thumi202121

1 comment

Leave a Comment