இதழ் 72

முழுவதுமாய் உணரமுடியாத விந்தை..! தந்தை……!

கல் தோன்றி, மண் தோன்றி, பின் ஒருசெல் உயிரி தோன்றி பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்பது அறிவியல் கூற்று. உருவங்கள் உருவாக பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாடு உள்ளது. ஆனால் உணர்வுகளுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட முடியாதது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தாத்தா, பாட்டி என ஒவ்வொரு உறவும், உறவுகளுக்கான உணர்வுகளும்தான் மனித வாழ்வின் அடித்தளம். தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைந்து போன சொந்தங்களின் சந்தோஷங்கள் பல இருந்தாலும், அப்பா எனும் உறவு குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம். கருவை உருவாக்கும் அன்னையின் பந்தம் ரத்தத்தால் இணைக்கப்படும். அப்பாவின் பந்தம் உணர்வுகளால் உணரப்படும். தந்தை என்ற உறவு சரியாக அமைந்தால் ஒரு மனிதனின் தலையெழுத்தே மாறிப்போகும்.

//தெய்வங்கள் எல்லாம்
தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே..//

வளரும் ஒவ்வொரு குழந்தையின் முதல் கதாநாயகன் தனது தந்தையாகத்தான் இருக்க முடியும். பல தந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்கள்.

தந்தை என்பவர் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் வசதியாக வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம். நாம் எழுமுன் வேலைக்கு சென்று, நாம் தூங்கிய பின்பு வீடு திரும்பும் தன்னலமில்லா உள்ளம்.

//எனக்கெது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமலும் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலேயே…//

அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்னும் ஒளவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது.

//தோழனென நீ தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகமெதையும் உன்னுள் மறைத்து
புன்னகையை எனக்கென தருவாய்..//

உலகெங்கிலும் உள்ள தந்தையர்களை பௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையின் அன்பு, உழைப்பு, அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை நம்மில் பலரும் கொண்டாடினாலும், இந்த தினத்திற்கான பாரம்பரியம் எப்படி தொடங்கியது என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண்மணி என்றால் நம்ப முடிகிறதா. மனைவியை இழந்த தன்னுடைய தந்தையின் அரவணைப்பை போற்றும் வகையில் அந்த பெண், தந்தையர் தின கொண்டாட்டத்தை முன்மொழிந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் வசித்து வந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா என்னும் பெண்மணி தான் தந்தையர் தினம் உருவாக காரணமாக இருந்தார்.

சோனோராவின் தாய் தனது ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கும் போது இறந்தார், அதன் பிறகு சோனோராவை அவரது மூத்த சகோதரர்களுடன் சேர்த்து அவரது தந்தை பிரியத்துடன் வளர்த்தார்.

வளர்ந்த பின் ஒருநாள், அன்னையர் தினத்தைப் பற்றிய ஒரு பிரசங்கத்தை அவர் தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது, தந்தையின் பாத்திரத்திற்கும் அங்கீகாரம் தேவை என்று உணர்ந்தார். தாய் இல்லாத ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த தன் தந்தைக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், தந்தையர் தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அவர் அரசாங்கத்திடம் தனது தந்தை ஸ்மார்ட்டின் பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதியை தந்தையர் தினமாக உலகெங்கிலும் உள்ள அப்பாக்களை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு முதலில் ஒப்புதல் கிடைக்கவில்லை, இருப்பினும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் பி ஜான்சன் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, 1907ம் ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி 362 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செல்லும் வகையில் 1908 ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தையை தாய்வழி பெற்றெடுப்பவர்கள் மட்டும் தந்தை ஆகி விட முடியாது. யாரெல்லாம் ஒரு தந்தையை போல் குழந்தைக்கு வழிகாட்டி, அமைதியை, பொறுமையை, நற்குணங்களை, பண்புகளை, வாழ்க்கை கல்வியை ஊட்டி வளர்க்கிறார்களோ அவர்கள் தான் அப்பா என்ற வார்த்தைக்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள்.

//கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும்
தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்..//

உடல் தந்து உயிர் தந்து முகம் தந்து முகவரியும் தந்ததாலோ தந்தை!!! முழுவதுமாய் உணரமுடியாத விந்தை!!!

சமூகத்தில் தந்தைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள்.

Related posts

பனை பற்றி பலரையும் பேச வைத்திருக்கும் பனைத் திருவிழா

Thumi202121

நல்லதை சொல்கிறோம்…

Thumi202121

கொக்கோ கோலாவின் கதை

Thumi202121

Leave a Comment