இதழ் 72

என் கால்கள் வழியே… – 05

டெல்லியில் ஆரம்ப நாட்கள்!

டெல்லியின் ஆரம்ப நாட்கள் நான் தங்கியிருந்த தமிழ் நாட்டு நண்பர்களின் விடுதிக்கும் எனது பல்கலைக்கழகத்துக்குமான நடையிலேயே காலம் போனது. ஆம்! பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நாளும் பதிவது அவசியமாகின்றது. எனது இரண்டு வருட இந்திய பயணத்தை வடிவமைப்பதில் அதீத பங்கு பல்கலைக்கழகத்துக்கான முதல் நாள் பயணமும் சந்திப்பும் ஏற்படுத்தியிருந்தது.

முன்னரே பதிவு செய்திருந்தேன். செப்டெம்பர்-04ஆம் திகதியே விரிவுரைகள் ஆரம்பித்துவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக அரசறிவியல் துறை இணையப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எனது தாமதத்துக்கான காரணத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருந்த போதும் பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. நான் செப்ரெம்பர்-14அன்று முதலாவது விரிவுரைக்கு சென்றேன்.

ஆம், தமிழ்நாட்டு நண்பன் ஒருவனுக்கும் காலையில் விரிவுரை இருந்தமையால் அவனுடன் நடையில் பல்கலைக்கழக வளாகம் சென்றாச்சு. என்னுடன் வந்த நண்பன் முதுகலைமானி பௌதீகவியல் கற்கையை தொடர்பவன். அவர்களுடைய துறை வளாகத்துக்கு எதிர் வளாகத்திலேயே கலைப்பீட வளாகம் காணப்படுகின்றது. இது உலகப்பொது வழமை ஆச்சே. இந்த சந்தர்ப்பத்தில என் பாடசாலை நினைவுகளையும் சிறிது பகிர்ந்துட்டு போவம். டெல்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துட்டு போவம். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி. என் அன்னையவள். நாம க.பொ.த உயர்தரம் படிக்கேக்க (2013) இன்றைய சபாலிங்கம் அரங்கின் மேடைப்பகுதி தான் எங்கள் கலைத்துறையின் வகுப்பறை எதிர் முனை கலைத்துறையின் மற்ற பிரிவின் வகுப்பறை. அதாவது ஞான வயிரவர் கோயில் வளாகத்தில தான் கலைத்துறையின் வகுப்பறைகள். க.பொ.த உயர்தரத்தின் கணிதம் மற்றும் உயிரியல் துறையின் வகுப்பறைகள் வீதிக்கு மறுபக்கம் குமாரசுவாமி மண்டப வளாகத்தில் காணப்படும். டெல்லி பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பும் எனக்கு எங்கன்ட பாடசாலை ஞாபகத்தை தான் இழையோடிச்சுது.

அதுசரி. நாம மறுபடியும் டெல்லிக்கே வருவம். ஒருவாறாக பல்கலைக்கழக வளாகத்துக்குள் நின்றவர்களிடம் வழிகேட்டு நம்ம அரசறிவியல் துறையை தேடி கண்டுபிடிச்சு போயாச்சு. அங்க போய் அலுவலகரிடம் நான் என் தத்து மொழியில் ஆங்கிலத்தில் என் அறிமுகத்தை கொடுக்க. அலுவலக ஊழியர்களும் தத்து மொழியில் ஆங்கிலத்தில் பதிலளித்தனர். எனினும் அவர்களது பதில் சரியாக புரிவதற்கு முன்னரே, அலுவலக தேவைக்காக வந்திருந்த இன்னொரு அறியாதவர் தன் அறிமுகத்தை கூறி, தானும் என் வகுப்பின் சகபாடி என்பதை விழித்தார். அன்றைய அறிமுகத்தில் சகபாடியாக அமைந்த சத்யபிரகாஷ் ராஜ்புத் என்கின்ற சத்யாவே பின்னாளில் என் நெருங்கிய தோழனாயும், புதிய தோழர்களை அறிமுகப்படுத்தியவனாயும், இந்தியா பற்றிய, இந்து மதத்தை பற்றிய புரிதல்களையும் கேள்விகளையும் உருவாக்கியவனாகவும், பல சந்தர்ப்பங்களில் ஆசானாக புரியாத பாடங்களை கற்பிப்பவனாகவும் தொடர்ந்தான்.

செப்டெம்பர்-14 பல்கலைக் கழகத்துக்கான விஜயம் சத்யாவினது அறிமுகத்துக் கானதாகவே அமைந்தது. சத்யாவின் அறிமுகத்தினாலேயே அன்றைய தினம் விரிவுரைகள் இல்லை என்ற செய்தியையும் அறிந்து கொண்டேன். தொலைபேசி இலக்கங்களை பரிமாறி கொண்டோம். மறுநாள் காலை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விரிவுரைகள் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், காத்திருந்து விரிவுரை மண்டபத்திற்கு என்னை அழைத்து சென்றிருந்தார். ஆரம்ப நாட்களில் புதிய இடங்களில் இயல்பாக தொற்றும் தனிமை எனும் கூச்சத்தை கலைத்து சந்தித்த முதல் நாளில் இருந்தே டெல்லியை எனக்கு இயல்பாக்கியதில் சத்யாக்கு அதிக பங்கு காணப்படுகின்றது. சத்யாவின் இயல்பான நட்பும், சூழல் ஹிந்தி மொழி பேசுவதனால் நான் காட்டும் தயக்கத்தை புரிந்து எனக்கு தேவையான உதவிகளை கேட்டு கேட்டு செய்யும் பண்பே என்னை டெல்லியுடன் இயல்பாக்கியது.

சத்யாவினால் எனக்கென்றொரு சிறு நட்பு வட்டம் உருவாகியது. அந்த வட்டத்தின் முதல் பிணைப்பில் சத்யா, பிரதீப், சாகர், யஸ்வந் மற்றும் நிசாந். இந்த நண்பர் குழாம் சுவாரஸ்யமானது. ஒவ்வொருத்தருமே வெவ்வேறு மாநிலத்தவர். சத்யா மத்யபிரதேஷ் (MP). பிரதீப் உத்தரபிரதேஷ் (UP). சாகர் உத்தரபிரதேஷ் எனினும் அவன் தன்னை அறிமுகப்படுத்துகையில் வரணாசி என்பதையே விளிப்பான். யஸ்வந் பீஹார். ஏனைய நண்பர்கள் பீஹாரி என கேளியாக விளிப்பதையும் அவன் பெருமையாக சிரித்து கடந்து செல்வான். இடப்பெயரை சொல்வது என்ன கேளினு குழம்பாதீங்கள். பொருளாதாரம் மற்றும் கல்வி மட்டத்தில் பீஹார் மாநிலம் வளர்ச்சி குறைவானதாகும். நிசாந் அசாம். இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம். இப்பிராந்திய மக்கள் பெரும்பாலும் சீன மக்களின் உடற்தோற்றத்தை கொண்டிருப்பார்கள். நிசாந் அவ்வாறான தோற்ற வெளிப்பாடு இல்லை. எனினும் ஏனைய நண்பர்கள் சைனிஸ் என கேலி செய்வார்கள். நிசாந் சினந்து பார்த்ததில்லை.

இந்த முதல் பிணைப்பு நட்பு வட்டத்துக்கு வெளியே சத்யாவின் உறவு முறை தோழியான அர்ச்சனா மூலம் கிடைக்கப்பெற்ற அக்ஷயை சூழ்ந்து ஒரு நண்பர் குழாம். மேலும் சிவா பயில்வான் எனும் ஒரு சிநேகிதன். பல பல வட்டங்களாய் இரு வருட டெல்லி பல்கலைக்கழகம் பல நண்பர்களை இணைத்து தந்தது.
நண்பர்களுடன் இந்தியா பற்றி, இந்து மதம் பற்றி பல்வேறு வாதங்களை தொடருவோம். என்னுடைய நட்பு வட்டங்கள் எல்லாவற்றிலுமேயே நண்பர்கள், மாநிலம் மாத்திர மன்றி கொள்கையளவிலும் வேறுபட்டவர்கள். ஆனால் நண்பர்களானோம். வேறுபாட்டை சுட்டிக்காட்டி கேலிகளை செய்வோம். ஆனால் சினங்கொண்டு பிளவுற்றதில்லை. என் நட்பு வட்டத்தின் இயல்பு, மொழி மற்றும் கலாசராத்தால் வேறுபட்ட இந்தியா எப்படி ஒரு நாடா இருக்குது என்பதை பட்டறிவில் புரிய வைத்தது. நண்பர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் வாதங்களிலிருந்து பல யதார்த்தங்களை பட்டறிவில் பெறக்கூடியதாக அமைந்தது. அவற்றையும் இடையிடையே தொடரில் தொடராய் பதிவு செய்வேன். அது சில தேடலுக்கான ஆதாரமாக அமையுமென நம்புகிறேன்.

இந்த இடத்தில் எழுத்தாளர் என்.சரவணன் அண்ணான்ட அறிந்தவர்களும் அறியாதவைகளும் நூலை பற்றியும் பகிர்வது பொருத்தமாக அமையும். அந்த புத்தகத்தில் பல இடங்கள் குறிப்புகள் நமக்கு தெரிந்தவை தான். நாம் அவற்றை வெளிப்புறத்திலேயே பார்த்துள்ளோம். எனினும் சரவணன் அண்ணா அவற்றின் உள்ளார்ந்த பின்னணிகளை எடுத்துரைத்திருப்பார். அதனை வாசிப்பதனூடாக நமக்கு அவற்றை பற்றி மேலும் தேட வேண்டும் எனும் ஆவல் ஏற்படும். அந்த புத்தகத்தின் வெற்றியாகவும் எழுத்தாளர் சரவணன் அண்ணா அதனையே நோக்குகின்றார். உதாரணத்துக்கு ஒன்றை சொல்வதாயின் கொழும்புக்கு செல்பவர்களுக்கு, குறிப்பாக மொறட்டுவ பக்கம் படிக்க போற நம்மாளுகளுக்கு மவுன்ட் லெவினியா(Mount Lavinia) என்ற இடத்தை தெரிஞ்சிருக்கும். அதன் பின்னாலுள்ள பிரித்தானிய ஆளுநருக்கும் இலங்கையின் தாழ்த்தப்பட்ட நடன பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையும் அதுசார் பிரித்தானிய சீர்திருத்தங்களையும் அந்நூலில் சரவணன் அண்ணா தெரிவித்துள்ளார். இது மவுன்ட் லெவினியா சார்ந்த தேடலுக்கு வழிவகுக்கிறது.

இவ்அனுபவங்களினை பின் தொடர்ந்தே முதுகலைமானி கற்கைக்கான எனது இந்திய பயணத்தின் அனுபவங்களை பதிவு செய்யும் ‘என் கால்கள் வழியே…” எனும் தொடரையும் எழுதுகிறேன். இதில் என் அனுபவங்களின் குறிப்புகள் வாசகர்களுக்கான தேடலுக்கான திறவுகோலாக அமைய வேண்டும் எனும் எதிர்பார்க்கையுடனே எழுதுகிறேன்.

சரி தொடர்ந்து டெல்லியின் ஆரம்ப நாட்களின் நினைவுகளில் டெல்லிக்கு பழக்கப்படுதலை தொடர்ந்து பார்ப்போம்….

தொடரும்……

Related posts

மரம் நாட்டும் முன்மாதிரியான மாணவர்கள்

Thumi202121

சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவம்

Thumi202121

கருக்கலைப்பும் அது சார்ந்த கல்வியின் தேவைப்பாடும்

Thumi202121

Leave a Comment