குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல ஒரு தவம் என்பது இன்றைய வேகமான நவீன உலகில் பலருக்கும் தெரிவதில்லை. ஒரு குழந்தை பிறக்க முதல் தாயின் வயிற்றில் இருக்கும் போது கொடுக்கும் கவனத்தையும், அக்கறையையும், முக்கியத்துவத்தையும் அந்த குழந்தை பிறந்த பின்பு பெரும்பாலான பெற்றவர்களும் அவர்கள் தம் குடும்பத்தினரும் அளிப்பதில்லை. இன்று எமது மண்ணில் நடக்கும் கலாசார பிறழ்வுகளுக்கும், சமூக விரோத செயற்பாடுகளுக்கும் அடிப்படைக் காரணமாக இதனையே நோக்க வேண்டியுள்ளது.
நிறைய பின்னோக்கிச் செல்லத் தேவையில்லை. யுத்தத்தின் இறுதிக் காலகட்டங்கள் வரை எமது வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். குழந்தை வளர்ப்பு எப்படி இருந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். தேவைகளும் விருப்பங்களும் குறைவாக இருந்தது. குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நேரடியாக பகிர்ந்து கொள்ள போதுமான நேரம் இருந்தது. பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன. குழந்தைகளை கவனிக்க வீட்டில் பலர் இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலை எவ்வாறு இல்லை.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் தனிக் குடும்பத்தினரே… நீங்கள் ஓடி ஓடி உழைக்கும் பணம் உங்களுக்கானது என்றால் தாராளமாக அதை தொடருங்கள். அவ்வாறு இல்லாமல் அந்த பணம் உங்கள் குழந்தைக்கானதாக இருந்தால் கொஞ்சம் யோசியுங்கள். பணம் மட்டும் உங்கள் குழ்நதையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. நல்ல ஒழுக்கத்துடனான பழக்க வழக்கங்களே உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடிப்படை என்பதை மறவாதீர்கள். அந்த அத்திபாரம் நன்றாக இருந்தால் அந்த குழந்தை தனக்கான வளமான எதிர்காலத்தை தானே அமைத்துக் கொள்ளும். நீங்கள் அமைத்துக் கொடுக்கும் எதிர்காலத்தை விட அது பலமடங்கு சிறப்பானதாக இருக்கும். எனவே, யோசிக்கவே தேவையில்லை! உங்களில் ஒருவர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வேலையை விட்டு நிற்க வேண்டியது கட்டாயமானதாகிறது.
தம்பதிகளில் ஒருவர் வீட்டில் இருக்கும் தனிக் குடும்பங்களிலோ அல்லது தாத்தா பாட்டிகளுடன் வாழும் கூட்டுக் குடும்பங்களிலோ மேற்கூறிய ஆபத்தான நிலைமை இல்லை என்று கூறிவிட முடியாது. அங்கும் பல சிக்கல் நிலைமைகள் உள்ளன. இன்று பெரும்பாலான வீடுகளில் உள்ளவர்கள் தொலேபேசிகளுக்குள்ளும், தொலைக்காட்சிகளுக்குள்ளும் தங்களை தொலைத்து விட்டார்கள். கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் எமது சமூகத்தை வேரறுப்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சத்தமே இல்லாமல் எம் சந்ததிகளை இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் சத்தம் போட்டு அழுது தங்கள் வேலைகளைக் குழப்பக்கூடாது என்று அந்த பிஞ்சுக்கைகளில் தொலைபேசி எனும் நஞ்சை கொடுத்து விடுகிறார்கள். அவர்களும் அதற்கு பழக்கப்பட்டவய்களாக, நாளடைவில் அதற்கு அடிமையானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதன் பின் குழந்தைகள் சற்று வளர்ந்ததும், தன் பிள்ளைகள் மற்ற பிள்ளைகள் போல படிப்பதில்லை, விளையாடுவதில்லை, எப்போதும் தொலைபேசியுடனேயே உள்ளது எனும் குற்றச்சாட்டை முன்வைத்து குழந்தைகளுடன் சண்டை பிடிக்கிறார்கள். குழந்தையை அதற்கு அடிமையாக்கியது அவர்கள். இப்போது குழந்தையை அதைச் செய்யாதே, இதைத் தொடாதே என்று கட்டளைகள் போட்டால் எப்படி? ஐந்தில் வளையாவிட்டால் அது ஐம்பதிலும் வளையாது தானே!
இந்தப் பிரச்சினைகளின் தொடர்ச்சி குழந்தைகளுக்கும் பெற்றவர்களுக்குமான உறவில் பெரிய விரிசல் விழக் காரணமாகிறது. இது அனைவரது எதிர்காலத்தையும் சூனியமாக்குகிறது. இது பல சமூகப் பிரச்சினைகளுக்கு வழிசமைக்கிறது. இது சம்பந்தமான பல உண்மைச் சம்பவங்கள் தினந்தோறும் பத்திரிகைகளில் வந்து எங்களை பயமுறுத்துகின்றன. அண்மையில் கூட, தெல்லிப்பழையில் ஒரு சிறுவன் தன் தாயை கத்தியால் குத்தியதாகவும், அதற்கு காரணம் தொலைபேசியை பறித்தமை என்றும் பத்திரிகைகள் பதற வைத்தன.
எங்கள் சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. தாய் மண்ணுக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் வாழ்ந்த பூமியில் தாய்க்கு எதிராகவே ஆயுதம் ஏந்தும் துர்பாக்கிய நிலைக்கு வந்துவிட்டோம் என்பது தான் உண்மை. எல்லோருமே, நிற்க நேரமில்லாமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். சில நிமிடங்களாவது நிற்போம்! சிந்திப்போம்! செயற்படுவோம்!
இந்தக் கணம் கடந்துவிட்டால் திரும்ப வராது!
இதுதான் உலகத்தின் இரகசியம்!