“ஆசறு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே”
சம்பந்தர் பெருமானின் கோளறு பதிகத்தின் வரிகள் இவை. நவக்கிரகங்களின் தன்மை பற்றி கூறிய சம்பந்தர் அவற்றின் பார்வை எத்தகையதாக இருந்தாலும், இறைவன் மீது உண்மை பக்தியும் நம்பிக்கையும் கொண்ட மெய்யடியார்களுக்கு நாளும் கோளும் நல்லனவே செய்யும் என்கிறார். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லாமல் எல்லாவற்றுக்கும் நாளும் கோளும் பார்த்து, நவக்கிரகங்களுக்கு அஞ்சி நற்காரியங்களையும் பிற்போட்டுக் கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா வித்தியாசமாக தெரிகிறார்.
தொடர்ந்து சமயம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பல பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இறைவனை முழுமையாக நம்பி ஒரு நற்கருமம் தொடங்கினால், சாதகப்படி எங்கள் பலன் எதுவாக இருந்தாலும் நாளும் கோளும் நல்லனவே செய்யும் என்கிற நம்பிக்கை இவருக்கு உண்டு. இதுவரை மட்டுமல்ல எப்போதும் அவர் தொட்டவை எல்லாம் துலங்கியதாகத்தான் வரலாறு உள்ளது.
செஞ்சொற்செல்வர் அவர்களின் பிறந்தநாள் அன்று (28.05.2024) அதிகாலை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வழிபாடுகளில் கலந்து கொண்ட செஞ்சொற்செல்வர் அவர்களுக்கு மகளீர் இல்ல பிள்ளைகள் உள்ளிட்ட ஆலய சமூக்ததினர் தங்கள் அன்பை வெளிப்படுத்தி ஆசிகளை பெற்றனர். அதன் பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களின் 63 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சிவபூமி அறக்கட்டளையினால் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட பூமியில், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவர்கள் அவருடன் சேர்ந்து 63 மரக்கன்றுகளை (28.05.2024) நாட்டி வைத்தனர்.
சிவபூமி தனது பல்தரப்பட்ட சேவைகளால் இன்று பல்கிப் பெருகி பல கிளைகளோடு காணப்பட்டாலும் சிவபூமியின் ஆரம்பம் என்பது மனவிருத்திப் பாடசாலை தான். அந்த வகையில் தலைவரின் பிறந்த தினம் அந்த இடத்தில் கொண்டாடப்பட்டமை சிறப்பம்சமாகும். மேலும், நாட்டிய மரக்கன்றுகள் வேரூன்றி வளர்ந்து பயன்தருவது போல, சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவர்களும் வளர்ந்து எமது மண்ணிற்கு பயனுள்ளவர்களாக வேண்டுமென்பதே செஞ்சொற்செல்வர் அவர்களின் பெரு விருப்பம்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி என்பவற்றை தலைவர் பரிமாறி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் ஆன்மீகச்சுடர் ரிஷி. தொண்டுநாத சுவாமிகளுடன் சிவபூமி உறவுகளும் கலந்து கொண்டனர்.
அடுத்ததாக மாலை வேளையில் தொல்புரத்தில் உள்ள சிவபூமியின் முதியோர் இல்லத்தில் உள்ள மூத்தோர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட செஞ்சொற்செல்வர் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். முதியோருடன் இராப்போசனத்தையும் உண்டு அவர்களின் அன்பு மழையில் செஞ்சொற்செல்வர் முழுவதுமாக நனைந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நிகழ்வுகளுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தது போல கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் பிறந்தநாள் அறக்கொடை நிதிய சபை ஏற்பாட்டில் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது -2024 நிகழ்வு எதிர்வரும் 02.06.2024 தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தின் திருமண மண்டபத்தில் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பலரின் உயிரைக்காக்கும் இருதய சத்திர சிகிச்சை நிபுணர்.ஞா.காந்திஜி அவர்களுக்கும், 13வயதில் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை நிலைநாட்டிய திருக்கோணமலை கோணேஸ்வராக்கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்த் அவர்களுக்கும் இவ்வாண்டுக்கான விருது கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.