2024க்கான ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் உத்தியோகபூர்வமாக யூன் முதலாம் திகதி (உள்ளூர் நேரம் பின்னிரவு 7.30 மணிக்கு) USA இல் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் தொடரை இணைந்து நடாத்தும் அமெரிக்காவும் கனடாவும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டின் பழம்பெரும் வைரி – கனடா மற்றும் அமெரிக்கா. ஆசஷ் தொடருக்கு முன்னரே, இந்த இரு அணிகளுக்கும் இடையே முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 1844ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்தது. இந்த 3-நாள் போட்டியில் கனடா 23 ஓட்டங்களால் வென்றது. இந்த ஆண்டுக்கான போட்டி டல்லாஸில் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடைபெறும், இது முன்னாள் பேஸ்பால் பூங்காவாகும், இது 2023 ஆம் ஆண்டு தொடக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடருக்காக, கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டது.
ரி20 உலகக் கிண்ண தொடரை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. பெரிய ஐசிசி போட்டித் தொடரை, அமெரிக்கா நடத்துவது இதுவே முதல் முறை. மேற்கிந்தியத் தீவுகள், இதற்கு முன் இரண்டு ஆடவர் உலகக் கிண்ணத் தொடர்களை நடத்தியிருக்கின்றன – 2007 இல் ஒரு சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2010 இல் ஒரு T20 உலகக் கிண்ணம். ஆடவர் ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியாவும் ரி20 உலகக் கிண்ணத்தை இங்கிலாந்தும் வென்றிந்தன. இரண்டு மகளீர் T20 உலகக் கிண்ணங்களும் கரீபியனில் நடைபெற்றுள்ளன.
2024 ஆடவர் T20 உலகக் கிண்ண தொடர் வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும், 20 அணிகள் ஒன்பது நகரங்களில் 55 போட்டிகளில் விளையாடுகின்றன. ரி20 உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும், 16 முதல்-சுற்று ஆட்டங்கள் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (நியூயார்க்), கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம் (டல்லாஸ்) மற்றும் ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம் (லாடர்ஹில்) ஆகியவற்றில் நடைபெறவுள்ளது. புளோரிடாவில் உள்ள லாடர்ஹில், 2010 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது, கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கிந்திய தீவுகள் இரண்டு T20 போட்டிகளை இந்தியாவிற்கெதிராக இங்கு நடத்தியுள்ளது. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம் மேஜர் லீக் கிரிக்கெட்டுக்காக கட்டப்பட்டது மற்றும் 2023 ஆம் ஆண்டு ஆரம்ப தொடரில் 12 போட்டிகளை நடத்தியுள்ளது. நியூயார்க்கில் ஒரு புதிய சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கிண்ண தொடருக்காக, 34,000 இருக்கைகள் கொண்ட ஸ்டேடியம் மன்ஹாட்டன் நகரத்திற்கு கிழக்கே 50 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தொடரின் முதல் சுற்றில், ஜூன் 9 (உள்ளூர் நேரம்) இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் உட்பட, எட்டு போட்டிகள் இந்த புதிய மைதானத்தில் நடைபெறும். இம் மைதானத்திற்கான ஆடுகளங்களை டாமியன் ஹக் மற்றும் அவரது அடிலெய்டு ஓவல் மைதான ஊழியர்கள் குழு தயாரித்து கொடுக்கிறது.
கரீபியனில் ஆறு நாடுகள் (பார்படாஸ், கயானா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, செயின்ட் லூசியா மற்றும் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்) சேர்ந்து பிரையன் லாரா ஸ்டேடியம், டிரினிடாட் மற்றும் பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானாவில் அரையிறுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில்; ஜூன் 29 அன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். கிங்ஸ்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சபீனா பார்க் தொடரின் போது போட்டிகள் எதையும் நடத்தாது குறிப்பிடத்தக்கது.
2024 ரி20 உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைக்க 20 நாடுகள் போட்டியிடயுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட தொடரில் 16 அணிகள் பங்கேற்றன. தொடர் நடாத்தும் அணிகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவைத் தவிர, 2022 தொடரில் சிறந்த இடத்தைப் பிடித்த எட்டு அணிகளும் நேரடியாக தகுதியைப் பெற்றன – இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து. ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆடவர் ரி20 அணி தரவரிசை மூலம் நேரடியாக தகுதி பெற்றன. அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஐரோப்பிய தகுதிச் சுற்று மூலமும் நேபாளம் மற்றும் ஓமன் ஆசிய தகுதிச் சுற்று மூலமும் முன்னேறியது, அதே நேரத்தில் கனடா அமெரிக்கா தகுதிச் சுற்றில் வென்றது. நமீபியா மற்றும் உகாண்டா ஆகியவை ஆப்பிரிக்காவிலிருந்து தகுதி பெற்ற இரண்டு அணிகளாகும். கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்று போட்டியில் பப்புவா நியூ கினியா வெற்றி பெற்றது. கனடாவும் உகாண்டாவும் முதன்முறையாக ஆடவர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது, அதே சமயம் அமெரிக்காவும் தங்கள் முதல் T20 உலகக் கிண்ணத் தொடரில் போட்டியிடுகிறது.
தொடரின் வரலாற்றில் மிகப்பெரிய T20 உலகக் கிண்ணம், மீண்டும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும் தொடராக அரங்கேறவுள்ளது – ஒரு ஆரம்பக் குழு நிலை அதைத் தொடர்ந்து சூப்பர் எட்டு மற்றும் இறுதிப் போட்டிகள். போட்டியின் ரவுண்ட்-ராபின் முறையிலான முதல்-சுற்றுக்காக, 20 அணிகளும் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு நாடும் தங்கள் மற்ற நான்கு குழு அணிகளுடன் விளையாடிய பிறகு குழுக்களில் முதல் இரண்டு இடம் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அணிகளின் ஒரு வெற்றிக்கு இரண்டு புள்ளிகளும், முடிவு இல்லாததற்கு ஒரு புள்ளியும் கிடைக்கும். சமநிலையானால், சூப்பர் ஓவர் முறை மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.. குழு A இன் அனைத்து போட்டிகளும், குழு D இன் முதல் ஆறு போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறும்.
குழு நிலை முடிந்ததும், நான்கு குழுக்களில் இருந்து முதல் இரண்டு அணிகள் போட்டியின் சூப்பர் எட்டு நிலைக்குச் செல்லும். முதல் சுற்றில் தங்கள் குழுக்களில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள் சூப்பர் எட்டு நிலைக்குத் தகுதி பெற்றால், குழு அட்டவணையில் தங்கள் இறுதி நிலை கருத்தில் கொள்ளப்படாமல், அடுத்த சுற்றில் அதே தரவரிசையை தக்க வைத்துக் கொள்ளும். உதாரணமாக குழு B இல் இங்கிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் தரப்பட்டுள்ளன, அதாவது ஆஸ்திரேலியா இரண்டாவது சுற்றில் குழு 1 க்கு B2 ஆக அட்டவணையில் அவர்களின் நிலையைப் கருத்தில் கொள்ளாமல் செல்லும். தரவரிசை பெறாத அணி குழுவிலிருந்து முன்னேறினால், அவர்கள் வெளியேற்றிய அணியின் தரவரிசையை அவர்கள் எடுப்பார்கள். இரண்டு தரப்படுத்தப்படாத அணிகள் தகுதி பெற்றால், அது குழு நிலை அட்டவணையின் படி தெரிவு செய்யப்படும். அனைத்து சூப்பர் எட்டு போட்டிகளும் கரீபியனில் மட்டும் நடைபெறும்.
ஜூன் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கயானா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெறும் அரையிறுதிக்கு, சூப்பர் எட்டின் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் முன்னேறும். இறுதிப் போட்டி ஜூன் 29 சனிக்கிழமை பார்படாஸில் நடைபெறவுள்ளது.
பார்படாஸில் ஜூன் 29 அன்று திட்டமிடப்பட்ட இறுதிப் போட்டி, கனமழை அல்லது வேறு ஏதேனும் குறுக்கீடு ஏற்பட்டால், அடுத்த நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு அரையிறுதிகளில் (ஜூன் 26 டிரினிடாட்டில் மற்றும் ஜூன் 27 கயானாவில்), டிரினிடாட்டில் நடைபெறும் முதல் அரையிறுதிக்கு மட்டுமே மறுநாள் ஒதுக்கப்படுள்ளது. ஏனென்றால், கயானாவில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியானது ஒரு நாள் பின்னுக்குத் தள்ளப்பட்டால், அடுத்த நாள், வேறு ஒரு தீவில் மற்றும் சில மணி நேரங்களுக்குள் வெற்றியாளர் இறுதிப் போட்டியை விளையாட வேண்டும். எனவே அதற்குப் பதிலாக, இரண்டாவது அரையிறுதியில் (உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்குத் தொடங்கும்) தேவையான ஓவர்களைப் பெறுவதற்கு ஆட்டத்தை நான்கு மணி நேரம் வரை நீட்டிக்க முடியும். அரையிறுதி போட்டி முடியாவிட்டால், சூப்பர் எட்டு நிலையிலிருந்து அதிக புள்ளி பெற்று முன்னிலையில் உள்ள அணி முன்னேறும்.
ஒன்பதாவது ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் கடமையாற்ற 26 போட்டி அதிகாரிகள் (20 நடுவர் – umpires மற்றும் ஆறு போட்டி நடுவர் – match referees) கொண்ட குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. பின்னர் அவர்களில் இருந்து சூப்பர் எட்டு நிலை, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
புகழ்பெற்ற ஒளிபரப்பாளர்களான ரவி சாஸ்திரி, நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், ஜோன்ஸ், ஹர்ஷா போக்லே மற்றும் இயன் பிஷப் ஆகியோர் 40க்கும் மேற்பட்ட வர்ணனையாளர்களின் குழுவை 29 நாள் போட்டிகள் கொண்ட தொடரில் வழிநடத்துவார்கள்.
2024 ரி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியா நடத்திய முந்தைய தொடரில் US$5.6 மில்லியன் இருந்து பங்கேற்ற அனைத்து அணிகளும் ஏதாவது ஒரு பங்கை பெற்றுக் கொண்டனர். MCG இல் 2022 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக இங்கிலாந்து 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது, அதே நேரத்தில் இறுதிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் அதில் பாதியைப் பெற்றது.
1 comment