இதழ் 73

இயற்கை படைப்பாகிய ஏரிமலைகள் எமக்கு வரமா? சாபமா?

இன்று நாம் வாழுகின்ற பூமியானது இயற்கையின் கொடைகள் பலவற்றினைக்கொண்டு அமையப் பெற்றுள்ளது. அந்தவகையில் பார்க்கும் போது பூமியின் மேற்பகுதியில் பல கண்டங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. முக்கியமான 15 தகடுகள் கண்டங்களை நகர்த்தும் ஆற்றல் பெற்றவை. குறிப்பாக கடற்கரைப்பகுதிகளில் இருக்கும் தகடுகளும், நிலப்பகுதியில் இருக்கும் தகடுகளும் ஒன்றோடொன்று மோதும் பகுதிகளில் எரிமலைகள் அதிகம் éமியில் தோன்றுகின்றன. இங்கு கண்டங்களின் மோதல் காரணமாக எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பசுபிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குப்பகுதி, ஜப்பானின் கடற்கரைப்பகுதி, இந்தோனேசியாவின் கடற்கரைப்பகுதி போன்றவை இவற்றில் முக்கியமானவை. இவ்வாறான பகுதிகளில் அதிகமாக எரிமலைகள் காணப்படுகின்றன. இவற்றின் வடிவம் ஒரு குதிரை லாடம் வடிவத்தில் உள்ளது. இப்பகுதி புவியியல் ரீதியாக ‘நெருப்பு வளையப்பகுதி” என்று அழைக்கப்படுகிறது.

இது தவிர அட்லாண்டிக்பெருங்கடலின் மத்தியப் பகுதி, பசுபிக்பெருங்கடலின் மத்தியப்பகுதி ஆகியவற்றில் பிளவுகள் உருவாகின்றன. இப்பிளவுகள் கடலின் மத்தியில் ஏற்படுகின்றன. இவை குறைந்தபட்சம் 50,000 கி.மீ நீளமுடையவையாக உள்ளன. இவற்றால் கடற்கரையின் பகுதி இரண்டாகப் பிளந்து அங்கு புதிய தரைப்பகுதி உருவாகிறது. பூமியின் உட்பகுதிக்குள் செல்லச் செல்ல அங்கு பாறைக்குழம்புகள் காணப்படுகின்றன. இதன் வெப்பநிலை மிக அதிகம். இதனால் வெப்பசுழற்சி ஏற்படுகிறது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த எரிகுழம்பு மேலும், கீழுமாக சுழலும்போது, வெளி நோக்கி அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியின் மேற்பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கும் கண்டங்கள் மோதி எரிமலைகள் உருவாகின்றன. 720 கண்டங்கள் ஒன்றோடொன்று மோதும்போது அவற்றில் கடினமான பகுதி கீழாகவும், லேசானது மேலாகவும் செல்கின்றன. உள்நோக்கிச் சென்று பகுதி வெப்பத்தால் உருகிய நிலையில் குழம்புடன் வெளிநோக்கிப் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

கடற்பகுதியில் ஏற்படும் பிளவுகளால் எரிமலைகள் ஏற்பட்டு அவை தீவு போல மாறுவதும் உண்டு. கடலின் நடுவில் ஏற்படும் எரிமலைகளில் சிலிகா என்ற தாதுப்பொருள் மிகக் குறைவாக இருக்கும். இரும்பு, மக்னீசியம் போன்ற பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் எரிகுழம்பின் திரவத்தன்மை நீர் போல உள்ளது. பூமியின் தரைப்பகுதிக்குள் இருக்கும் வரை இந்தக் குழம்பு மேக்மா என்றும், பூமிக்கு மேல் வந்தபின் இது லாவா என்றும் அழைக்கப்படுகிறது. இக்குழம்புகள் சுமார் 500 முதல் 1400 டிகிரி வரை வெப்பம் கொண்டதாக இருக்கும். சிலிகா குறைவாக உள்ள எரிமலைகள் மறுபடி அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச்சிதற வாய்ப்புள்ளது. இவற்றில் எரிமலைக்குழம்பு துவாரங்கள் வழியாகவே வெளிவரும். இத்துவாரங்கள் வழியாக அவ்வப்போது எரிமலைக் குழம்பு கக்கிக்கொண்டே இருக்கும். இந்தத் துவாரங்கள் புனல் போன்ற ஒரு வடிவத்தில் காணப்படுகிறது. இவ்வாறு வெளியில் வரும் குழம்பு அடுக்குகளாக வெளிவருகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் வேறு அடுக்குகள் தோன்றுகின்றன. இவை எல்லாம் சேர்ந்து ஒரு கவசம் போல மாறுகிறது.இதனால் இவ்வாறு உருவாகிய எரிமலைகள் எளிதில் ஒருவர் மேலே ஏறிச் செல்லும் வகையில் கேடயம் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும்.

அதிக பாதிப்பை உருவாக்கும் எரிமலைகள் ஆங்கிலத்தில் Composit Valcanos என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் எரிமலைக் குழம்பில் சிலிகாவின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் இதன் கடினத்தன்மை சுலபமாக நீர் போலப் பாயமுடியாத அளவு கடினமாக இருக்கும். சிறிதளவே எரிமலைக்குழம்பு வெளியில் வந்தாலும் இது பீறிட்டு வெளிவரும். இதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம். இவை கண்டங்களின் மோதலால் ஏற்படுகின்றன. பசுபிக்பெருங்கடலின் தரைப்பகுதியில் அதிகம் உள்ளன. இவை 50 முதல் 250 கி.மீற்றர் வரை ஆழத்தில் உருவாகக்கூடியவை. அதனால் பீய்ச்சியடிக்கப்படும் எரிமலைக்குழம்பின் வேகம் மிக அதிகமாக இருக்கும். அதிக வேகத்துடன் குழம்பு வெளியே வருவதால் உள்ளே இருக்கும் வாயுக்களையும் இது வெளியே சுமந்து கொண்டு வருகிறது. இத்தகைய எரிமலை சீற்றத்தின் போது உருவாகும் சத்தம் பல மைல்கள் தூரத்திற்குக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றில் எரிமலைக்குழம்பு துவாரங்கள் வழியாக வெளியே வராமல் முட்டிக்கொண்டு பீறிட்டு வருவதால் தரையின் பகுதி ஒரு மலை போல உப்பிவிடுகிறது.

பூமியின் ஆழத்தில் எங்கோ புதையுண்டு கிடக்கும் தீப்பிழம்புப்பாறைகளையும், எரிகற்களையும் பூமியின் தரைப்பகுதிக்குக் கொண்டு வரும் அற்புத இயற்கை நிகழ்வே எரிமலை. இது சாதாரணமான ஓர் இயற்கை நிகழ்வு என்பதில் இருந்து, ஓர் இயற்கைப் பேரிடராக மாறுவதற்கும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. எரிமலை பாதிப்பு உள்ள நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இத்தாலி, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதி, கரீபியன் தீவுகள், ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் 2010 முதல் இவை இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டன. 2010ல் ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை பல மைல் தூரத்திற்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் விமானங்கள் செல்லும் வான்பாதைகள் கூட பாதிப்புக்கு உள்ளாயின.

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வணிகரீதியிலான ஒரு விமானம் 10 முதல் 12 கி.மீ உயரத்தில் பறக்கக் கூடியது. அந்த அளவு உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பால் உருவான வாயுக்களின் கலவை புகைமண்டலமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. விமான என்ஜின்களே பாதிக்கப்படும் அளவிற்கு இது இருந்தது. பொருளாதார இழப்பும் பெரிய அளவில் ஏற்பட்டது. இது தவிர புகையில் அடங்கியிருந்த சாம்பல்துகள்கள் பல கிலோமீட்டர் வரை பரவியது. எரிமலை வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வசித்த மக்களால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்தனர். பயிரிட்ட பயிர்கள் மீது இந்தச் சாம்பல் ஒரு போர்வை போல மூடிக் கொண்டது. அவை முற்றிலுமாக அழிந்தன. பல ஆண்டுகளுக்கு இந்தப்பகுதிகளில் பயிர் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. விலங்குகளும் பாதிக்கப்பட்டன. 500 முதல் 1400 டிகிரி வரை வெப்பத்துடன் எரிமலை வெடித்துச் சிதறும் போது பரவி அவை செல்லுமிடங்களில் எல்லாம் அழிவை ஏற்படுத்தியது. இப் பாதிப்புகளில் இருந்து எதுவும் எளிதில் தப்பமுடியவில்லை. உலக அளவில் நடந்த மிகப் பெரிய 10 எரிமலைப் பேரிடர்களை நோக்கினால், அந்நிகழ்வுகள் எல்லாவற்றிலும் 10,000 முதல் 40,000 பேர் வரை உயிரிழக்க இப்பேரிடர்கள் காரணமாக இருந்துள்ளன. எரிமலை இருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்த கிராமங்கள் பலவும் முழுமையாக எரிமலையால் அழிக்கப்பட்டன. எல்லா எரிமலைகளையும் இது போல பேரிடர்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தமான்;இ நிக்கோபார் தீவுகளில் 2004ல் சுனாமிக்குப் பின் உடனே எரிமலை வெடித்தது. ஆனால், அதன் சீற்றம் மிகவும் குறைவாக இருந்தது. பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏரிமலை எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது போன்றவற்றைப் பொறுத்தே ஓர் எரிமலை வெடிப்பு ஒரு பேரிடராக மாறுகிறது. பூமியில் எரிமலைகள் வெடிக்கக்கூடிய பகுதிகளை புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் செயற்கைக்கோள்களின் பங்கு மகத்தானது. ஒரு எரிமலை எங்கு உருவாகும், அது அவ்வாறு உருவாவதில் இருந்து எவ்வாறு கண்காணிப்பது போன்ற துறைகளில் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், முன்கூட்டியே எரிமலை வெடிப்பைப்பற்றி கணித்துக் கூறுவது கடினம்.ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன் அது சில வாயுக்களை வெளியிடுகிறது. இந்த வாயுக்களை முன்கூட்டியே கண்டுடித்து அதன் மூலம் எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதா என்பதைப் பற்றி முன்கூட்டிக்கூறுவது என்பது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த வாயுக்களைக் கொண்டு பூமியின் காந்த அதிர்வுகளை வைத்து ஓர் எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கூற முடிந்தாலும் கூட, வெடித்தபின் அது எந்த அளவுக்குப்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி இன்னமும் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை.

எரிமலைகள் உருவாகக்கூடிய இடங்களில் சில நிறங்கள் கொடுக்கப்பட்டு அவற்றின் தீவிரம் எடுத்துக்காட்டப்படுகிறது. சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்தால், அவை மிகத் தீவிர பாதிப்புகளை உருவாக்கக் கூடியவை என்று பொருள். மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சாதாரணமானது, என்றாலும் அது பற்றி சிறிய முன்னெச்சரிக்கை தேவை என்று பொருள். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வெடித்துச் சிதறி மறைந்துபோன எரிமலைகள் பச்சை போன்ற நிறங்களில் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய எரிமலைகள் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. பூமியின் மேற்பகுதியில், எந்தப் பகுதிகளில் எரிமலை வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது எந்த அளவுக்குத் தீவிரமானது என்று கணித்திருந்தாலும், சீற்றம்வர வாய்ப்பு இருக்கிறது என்ற அளவில்தான் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. எந்த அளவில் அதன் சீற்றம் இருக்கும், பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றி முன்கூட்டியே அறிவிக்கும் அளவுக்கு நாம் இன்னும் முன்னேறவில்லை.இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்தும் நடை பெறுகின்றன.

எந்த ஒரு இயற்கை நிகழ்வும் மனிதனுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றால் நிலநடுக்கம் ஏற்படும்போது வலுவான கட்டிடங்களைக்கட்ட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சுனாமி வரும்போது கடலோரத்தில் கடலாத்திக்காடுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இருக்கும் காடுகளைக்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. எந்த ஒரு இயற்கைப்பேரிடர் என்றாலும் அதன் பிற்கால விளைவுகளாக பல நல்ல விடயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. பல சேதங்களை இவை ஏற்படுத்தினாலும் இவற்றால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன.

பூமியின் மேற்பரப்பில் 70 வீதத்திற்கும் மேலான பகுதி எரிமலைகளால் தான் உருவாகியுள்ளன. இவை இல்லை என்றால், அந்தமான்இ நிக்கோபார் தீவுகள் உருவாகியிருக்கமுடியாது. ஹவாய் தீவுகள் தோன்றியே இருக்காது. இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் மகாரர்டிராவில், மும்பை முதல் குஜராத் வரை உள்ள பகுதிகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைகளால் உருவானவையே. இங்குள்ள மலைப்பகுதிகள் எல்லாம் எரிமலைக் குழம்பினால் உருவான பஸால்ட் என்ற ஒருவகைப் பாறைகளால் உருவானவையே.

எரிமலை வெடிப்பு என்பது காணக்கண் கோடி வேண்டும் என்று சொல்லுமளவுக்கு ஓர் அற்புத நிகழ்வு. அதன் சீற்றத்தை நேரில் பார்த்தவர்களுக்கு அது ஏற்படுத்திய இனம் புரியாத பேரானந்தத்தை உணர முடியும். வானத்தின் வர்ணஜாலங்கள் போல இவை பூமியின் வர்ணஜாலம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி, இருந்து, பின்னர் மறைகிறது. ஆனால், அவை பல பாடங்களை நமக்குக் கற்றுத்தருகின்றன. எரிமலைகள் நமக்குத் தந்த பாடங்களை, அவை தரும் நன்மைகளை மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தினால் மேலும் நாம் வளரலாம், வாழலாம்.

Related posts

யாழ்ப்பாணத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம்

Thumi202121

125 ஆவது பிறந்த நாள் காணும் இலக்கிய கலாநிதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Thumi202121

வினோத உலகம் – 36

Thumi202121

Leave a Comment