இதழ் 73

நெல்லுக்கு இறைக்கிறோமா? புல்லுக்கு இறைக்கிறோமா?

கடந்த சில வருடங்களாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் கட்டிடங்களாலும் கட்டுமானங்களாலும் தன்னை நிரப்பி வருகின்றன. அரச முதலீட்டில் நிகழும் கட்டுமானங்களை விட தனியார் முதலீட்டில் அதிலும் குறிப்பாக புலம்பெயர் உறவுகள் முதலீட்டில் நிகழும் கட்டுமானங்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. பெருமளவு முதலீடுகள் கட்டிடங்களுக்குள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அதிக கேள்வி உள்ள துறையாக கட்டிட ஒப்பந்ததாரர் துறை (Construction contractors field) காணப்படுகிறது. எனவே, ஓரளவு பணபலம் உடையவர்கள் கூட கட்டிட ஒப்பந்தகாரர்களாக மாறி வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் எமது மண்ணில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை ஆராய்கிறது இம்மாத ஆசிரியர் பதிவு.

ஒரு கட்டிடம் கட்டுகிறீர்கள் என்றால் செலவுக்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். செலவுக்கு(cost) நிகராக நேரம் மற்றும் தரத்தை கவனிக்க வேண்டும்(time and quality). ஒரு கட்டிடம் ஒரு வருடத்தில் கட்டி முடிப்பதாக கூறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய ஒப்பந்தகாரர்களோடு ஒப்பிடும் போது மலிவான விலை. ஆனால் நான்கு வருடங்களில்தான் நிர்மாண பணிகள் பூரணத்துவமடைந்தன. இதனால் கட்டிட உரிமையாளருக்கு விளைந்தது இலாபமா? நட்டமா? ஏனைய மூன்று வருடங்களில் அந்த கட்டிடத்தால் கிடைக்கவிருந்த ஆதாயம் அவருக்கு முற்றிலுமாக தடைப்பட்டது. அதுமட்டுமா? தாமதமான காலத்தில் கட்டிட ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஏற்பட்ட மன ரீதியான பாதிப்புக்களுக்கு ஏது விலை? சமூகத்தில் அந்த கட்டிடம் மீதான மறைமுக பார்வை கூட மிகப்பெரும் பாதகமான அம்சம். இவ்வாறு குறைந்த செலவில் கட்டி முடிக்கப்பட்டாலும், நேரத்திற்கு ஒரு நிர்மாண பணி முடியாவிட்டால் அது கூட ஒரு நட்டமே.

அடுத்து தரம் பற்றி பார்ப்போம். குறைந்த செலவிலும் உரிய காலத்திலும் கட்டப்பட்ட கட்டிடத்தில் அடுத்த மாரி மழைக்கே நீர்க்கசிவுகள் ஏற்பட ஆரம்பித்து விட்டால் அது இலாபமா? நட்டமா? குளியலறையில் தண்ணீர் போவதற்காக விடப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்காமல் வேறு ஒரு மூலையில் தேங்கினால் அது இலாபமா? நட்டமா? சிறிய காற்றுக்கே தூக்கி வீசப்படும் கூரைகள், ரேகையாய் படரும் வெடிப்புகள், பூட்ட முடியாமல் அல்லது பூட்டினால் திறக்க முடியாமல் கிடக்கும் யன்னல் கதவுகள், கறையான் பிடிக்கும் சுவர்கள், காற்றோட்டமில்லாத உட் கட்டிடங்கள் என்று குறைகளோடு ஒரு கட்டிடத்தை கட்டி முடித்து என்ன பயன்? யாதொன்றும் இல்லை என்றால் அது எத்தகைய பாரிய நட்டம்! ஆக, கட்டிடத்தின் தரம் என்பதும் முக்கியமாகிறது.

இன்று காணப்படுகின்ற பெரும்பாலான கட்டிட ஒப்பந்தகாரர்களிடம் கட்டிட நிர்மாண மற்றும் வடிவமைப்புத் துறைசார்ந்த வல்லுநர்கள் இருப்பதில்லை. மேசன்மாரை நம்பியே பெருமளவு கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. கட்டிடம் கட்டும் போது மேற்பார்வை என்பது மிக முக்கியம். அதுபோல கட்டப்பட்டு குறைந்தது 28 நாட்கள் கட்டுமானம் ஈரப்பதனாக இருப்பதற்காக நீர் பாய்ச்ச வேண்டும் (curing). ஆனால் இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாத, அக்கறைப்படாத சமூகமே எங்கள் மத்தியில் இருக்கிறது.

அந்தக்காலங்களில் வீடுகள் எல்லாம் இவ்வாறு படித்தவர்கள் மேற்பார்வையிலா கட்டப்பட்டது என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் அந்தக் காலத்தில் செய்யும் தொழிலுக்கு பயந்தார்கள். விசுவாசமாக இருந்தார்கள். இன்றைய நிலை அவ்வாறு இல்லை. எல்லாமே வியாபாரமாக பார்க்கப்படுகிறது. அதே போல எமது பிரதேச தரைத் தோற்றத்தில் பெரும்பாலான பகுதிகளில் தரையை அண்டி பெருமளவு கற்பாறைகள் இருப்பதால் கட்டிடங்களுக்கு போதுமான உறுதியை அவை வழங்கின. ஆனால் சமீப காலமாக இங்கும் நில நடுக்கங்கள் உணரப்படுவதால் கட்டிடங்களின் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டுமானம் ஆரம்பிக்க முன் திட்டமிடலும், கட்டிட வடிவமைப்பும் உரிய முறையில் நிகழ்ந்தால் பெருமளவு பணம் சேமிக்கப்படும்.‌ இன்று உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தேவையான இடங்களில் கம்பிகளை வைக்காமல் விடும் அதே வேளை தேவையில்லாத இடங்களில் வீணே கம்பிகளை நிரப்பும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன.

எனவே, இன்றைய பெரும்பாலான தனியார் கட்டுமானங்களில் செலவு மட்டுமே கவனிக்கப்படுகிறதே தவிர தரமும் நேரமும் கவனிக்கப்படுவதே இல்லை. இதைப்பற்றிய அறிவும் அக்கறையும் பொதுமக்களிடம் பொதுவாக குறைவாகவே உள்ளது. இத்துறைசார் வல்லுநர்களான பொறியியலாளர்கள் மக்களுக்கு போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பொது நிகழ்வுகளில் இது பற்றிய கருத்தமர்வுகள் இடம்பெற வேண்டும். மருந்தகங்கள் நடத்த உரிய தகைமைகள் பார்க்கப்படுவது போல வீடு போன்ற தனியார் கட்டுமானங்களை கட்டும் ஒப்பந்தகாரர்களிடமும் உரிய தகமைகள் பரிசோதிக்கப்பட வேண்டும். அத்தகைய தகமை பெற்றவர்களிடமே பொதுமக்கள் தமது வேலைகளை வழங்க வேண்டும்.

ஏற்கனவே, பல பூமிகள் கட்டிடங்களால் நிரம்பிவிட்டன. எஞ்சியவற்றையும் மிச்சம் விடும் நோக்கமில்லாமல் அபிவிருத்தி எனும் ஆழிப்பேரலை அமிழ்த்தப் பார்க்கிறது. எனவே, இனி மண்ணில் விதைக்கும் கட்டிட விதைகளையாவது ஆராய்ந்து உரியவர்களிடம் கொடுங்கள். மருந்து பிழைத்தால் உண்டவருக்கே ஆபத்து. கட்டிடம் பிழைத்தால் அந்த கணம் அதில் உள்ள அனைவருக்கும் ஆபத்து.

சிந்திப்போம்…!
செயற்படுவோம்…!

Related posts

இயற்கை படைப்பாகிய ஏரிமலைகள் எமக்கு வரமா? சாபமா?

Thumi202121

யாழ்ப்பாணத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம்

Thumi202121

பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சிவத்தமிழ்ச்செல்வியின் 16ஆவது குருபூசை நிகழ்வுகள்

Thumi202121

Leave a Comment