இதழ் 73

முன்னோர்கள் ஒளித்து வைத்துள்ள பொக்கிசங்கள்!

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளான வேடுவர்கள் வழிபாட்டில் உத்தியாக்கள் வழிபாடு என்று ஒன்றுள்ளது.

கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் வழிபாட்டுச் சடங்குகள் பற்றி வேடர் சமூகத்தை சேர்ந்த க. பத்திநாதன் என்பவர் தனது வேடர் மனிடவியல் என்கிற ஆய்வுக்கட்டுரையில் கூறுகிறார்.

அவர்களது சடங்குகளில் முதலாவதாக வழிபாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுவது உத்தியாக்கள் வழிபாடு ஆகும்.

இவ்வழிபாட்டு முறை பற்றி ஒரு வேட மதகுரு சொல்கிறார்.
“ஆரம்பத்துல ஆசுவாதிகள் (மூதாதையர்) தான் இந்த நடைமுறை எல்லாம் செய்து வந்தவங்க. அவங்க செத்ததுக்குப் புறகு இந்த உலகத்துல இருந்து அந்த உலகத்துக்குப் பொயித்தாங்க. அதாலதான் அவங்க எல்லாம் இப்ப தெய்வங்கள். நாங்க ஒரு சடங்கச் செய்யக்குள்ள அவங்களுக்கு ஒரு பூ வைக்கத்தான் வேணும். அவங்க வந்து உடம்புல ஆடின புறகு தான் எங்களுக்கு மத்த தெய்வமெல்லாம் வரும்.”

அதாவது, இவர்களின் கடவுளர் என்பது கண்ணுக்குத் தெரியாத மாய உருவங்களோ அல்லது உண்மைத் தன்மையற்ற கருத்துத் திரிபுகளோ கிடையாது. மாறாக தாம் ஒன்றாகக் கூடி வாழ்ந்த, வளர்ந்த, நல்ல கெட்ட நிகழ்வுகளுடன் ஒன்றித்துப் போன தமக்கு முந்தைய உறவுகளினை வழிபாடு செய்பவையாகவே காணப்படுகின்றன.

அந்தகைய ஒரு உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. .
சடங்கு நடவடிக்கைகள் செவ்வனே ஆரம்பமாகி வழிபாட்டின் அரையிறுதியில் இருந்து பக்தர்களின் வேண்டுகோளிற்கான, காத்திருப்புக்கான நேரம் வந்தது. அங்கு சிலர், பல பொருட்கள் தாங்கிய ஓலைப்பெட்டியுடன் (பழவகைகள், உணவுப் பண்டங்கள், மற்றும் சில பொருட்களுடன்) காத்துக் கிடந்தனர். அதில் ஒரு சிலரே ஆண்கள். அவர்களின் இருப்பிடம் நோக்கி உருவாடுகின்ற தேவாதி (கலையாடுபவர்) அழைத்துச் செல்லப்பட்டு, அவர் கொட்டு வாத்திய ஒலி மற்றும் பாடல்களின் மூலம் உருவேற்றப்படுகின்றார். அந்த உருவேற்றல் முறையானது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதாவது உருவேற்றப்பட்ட தேவாதி அழத்தொடங்கினார். பின்பு அழுகை அதிகரித்து விம்மி விம்மி அழத்தொடங்கினார். அவருடைய குரல் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது.

அந்த குரலினைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த நடுத்தர வயதான பெண் “எண்ட மகனே” என அழைத்த வண்ணம் அழுது கொண்டு அவர் தனது பெட்டியுடன் முன்னோக்கி வந்தார்.

அவ்வாறு வந்தவுடன் தேவாதியும், குறித்த அப்பெண்ணும் மாறி மாறி அழுத வண்ணம் ஒருவரையொருவர் கட்டித்தழுவிய படி தமது உறவுக்கான சம்பாசணைகளைச் செய்து கொள்கின்றனர். அவை ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்த பின்னர் தேவாதி அப்பெண் கொண்டு வந்த பெட்டியினுள் இருந்த உணவுகளை எடுத்து புசிக்கின்றார். அதனுள் இருந்த உடைகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொள்கின்றார். அதனைத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கின்றார். அவ்வுரையாடலானது சைகை மொழியாகவே காணப்பட அதற்கான விளக்கத்தினை அருகில் இருப்பவர்கள் கூறினர்.
அவ்வாறு நடந்த பின்னர் குறித்த பெண் உரத்த குரலில் அழத்தொடங்கினார். மார்பில் அடித்தடித்து அழுதார். அவரோடு வந்திருந்தவர்களும் சேர்ந்து அழுதனர். பல நிமிடங்களுக்கு இச்செயல் நீடித்தது. சில மணித்தியாலயங்களின் பின்னர் அவர்கள் சடங்கு நடடிக்கைக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டனர்.

குறித்த அப்பெண்ணுடன் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு கூறினார்.
“எண்ட மகன 2014ம் ஆண்டு சி.ஐ.டி புடிச்சுப்போன. அவரத் தேடாத இடமில்லை. தெரிஞ்ச எல்லாரிட்டையும் கேட்டுப்பாத்தும் பலனில்லை. பிறகு தான் இஞ்ச வந்தனாங்க. மூண்டு வருசமா சடங்குக்கு வந்தனாங்க. இந்த முறதான் எண்ட மகன் வாக்குத்துறந்து இருக்காரு. இவளவு நாளும் உண்ம என்னெண்டு தெரியாம நாங்க செரியான துன்பப்பட்டனாங்க. இந்த முற மனசுக்கு கவலைய விட கொஞ்சம் ஆறுதால இருக்கு. எண்ட புள்ள செத்துப்பொனது தெரியாம இருந்திட்டம். என்ன செய்ய முடியும் நம்மளால. எல்லாம் இவங்கதான் பாத்துக் கொள்ளனும்” என்றார்.

உண்மையில் இச்சந்தர்ப்பமானது குணமாக்கல் செயன்முறையின் உச்சகட்ட விளைவாகும். மனிதருடைய மனப்பாதிப்புக்களைப் போக்குவதென்பது அவ்வளவு இலகுவான காரியமன்று. ஆனால் இவ்வகையான வேட்டுவச் சடங்கின் அடியாக, ஒரு குறிப்பிட்ட கண நேரத்தினுள் உளவிடுபடு நிலையினை முற்றிலுமாகக் கொடுத்து விட முடிகின்றமையானது வேட்டுவ வழிபாட்டின் உத்தியாக்கள் சடங்கின் ஊடாக ஈடேறுகின்றமை மிக வலுத்திறமான நோய் நீக்கல் நடவடிக்கை ஆகும்.

சடங்கு, வழிபாடு என்பவற்றின் அடியாக விளைந்த சடங்காசார நிகழ்வுகளின் மூலமே அது சாத்தியம் எனலாம். இன்றைய எமது தமிழ்ச் சூழலில் போரின் தாக்கம் மற்றும் அதனோடு இணைந்த நடவடிக்கையினால் எமது மக்கள் பட்ட, படுகின்ற சொல்லொணா மன அழுத்தங்களினைப் போக்கிக் கொள்வதற்கு இவ்வாறான சடங்காற்றுகைகள் பெரிதும் உதவியாக இருப்பதும், இருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.
இவ்வாறான தன்மை கொண்டதாகவே சிங்களப் பகுதிகளில் வாழ்கின்ற வேடர்களின் மூதாதையர் வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன. இவர்கள் தமது மூதாதையினரையே தமக்கான பாதுகாப்புக் கட்டமைப்பாக நினைத்துக் கொள்கின்றார்கள். இவர்கள் தமது இறந்த முன்னோர்களின் ஆவியினை வழிபாடு செய்து அவர்களைக் கௌரவப்படுத்தாவிடின், தமது உறவுகளில் யாருக்காவது நோய் பிணிகள் வந்து விடும் எனவும், தமது வேட்டைகளில் பிரச்சினைகள், இடையூறுகள் ஏற்பட்டு விடும் எனவும் அச்சம் கொள்கின்றனர்.

இவையெல்லாம் அபத்தமான நம்பிக்கைகள் – நேரவீண் விரயங்கள் என்று இன்றைய உலகின் வேகப்பிராணிகள் – அதாவது சிந்திப்பதற்கே நேரமற்று ஓடித்திரியும் மானிட வர்க்கத்தினர் சிலர் சொல்லலாம். இவையெல்லாம் நம்பிக்கை என்பதைத்தாண்டி ‘வளம்’ என்பதை சிந்திக்கின்றோமா?

இக்காலகட்டத்தில் உலகின் ஆகப்பெரிய செல்வம் எது என்று தெரியுமா? பணமா? நிச்சயமாக இல்லை. பணம் என்பது ஒரு செல்வ மாயை. செல்வமற்றவர்கள் செல்வம் என்று கருதி ஓடுகிற ஒரு மூடநம்பிக்கை தான் பணம் என்பது. அந்த பணத்தை தேடி அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள்- அந்தப்பணமா செல்வம் என்று? அந்த பணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்? அந்த சிந்தனை.. சிந்தனையின் பால் உருவாகிற வளமான எண்ணக்கருக்களே ( Concepts) செல்வமாகும். எண்ணக்கருக்களுக்கான தேடலிலே தான் பணம் படைத்தவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். வளமான எண்ணக்கருவில் முதலிடவே அவர்கள் பணத்தை வைத்து காத்திருக்கிறார்கள்…
ஆக இன்றைய உலகிற்கு முதலில் மூலமுதலாய் தேவைப்படுவது வளமான எண்ணக்கருக்களே.. அதுவன்றி இன்றைய யுகத்திற்கு மாடல்ல மற்றயவை.

மின்குமிழை கண்டுபிடித்தார் தோமஸ் அல்வா எடிசன். கண்டுபிடிப்பு இரண்டாம் இடம் தான். பகலில் தோன்றுகிற ஒளிவெள்ளம் இரவிலும் ஒளிர்ந்தால் எப்படியிருக்கும்? என்கிற எண்ணக்கரு தான் முதல் விடயம். அதுவே ஆகச்சிறந்த செல்வமாகும். Youtube வலைத்தளத்தில் காணொளி உருவாக்குபவர்களை பாருங்கள். எண்ணக்கருக்களை தேடி எங்கெல்லாம் அலைகிறார்கள் என்று..

சரி. நீங்கள் இப்போது உங்கள் அறையின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியே இருந்து கொண்டு இந்த உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். சுழன்று கொண்டே சூரியனை சுற்றி வருகிற பிரமாண்ட உலகத்தை நீங்கள் இப்போது உங்கள் கற்பனையில் காண்கிறீர்கள். அவ்வாறே சூரியனை பூமியோடு சேர்ந்து சுழன்று வருகிற நவக்கிரகங்களையும் உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? பாருங்கள். மொத்தமாக இந்தப்பிரபஞ்சத்தை உங்கள் கற்பனையால் காணுங்கள். அண்டப்பெருவெளி எவ்வளவு பெரிது என்பதை காணமுடிகிறதா? இப்போது சொல்லுங்கள் அண்டப்பெருவெளி பெரியதா? அதனை ஒரு அறையின் மூலையிலிருந்தே பார்த்து விடுகிற உங்கள் கற்பனை பெரியதா? அண்டப்பெருவெளியே உங்கள் கற்பனைக்குள் அடக்கம் என்றால் கற்பனை தானே மிகப்பெரியது.

உண்மை பொய் என்பதைத்தாண்டி கற்பனை பிரமாண்டமானது என்பதை உங்களால் உணரமுடிகிறதா?

இந்தப்பூமி உருவான காலத்தில் இருந்த வெற்றுப்பூமியை எண்ணிப்பாருங்கள்! இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகத்தை எட்டிப்பாருங்கள். எம் அன்றாட வாழ்க்கை முறையை பாருங்கள்.. எம் பழக்கவழக்கங்களை பாருங்கள். நம் அனுபவிக்கின்ற செல்வங்களை பாருங்கள்… எல்லாம் எப்படி இந்த பூமிக்குள் வந்தன… பூமி தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகளாய் வாழ்ந்து மடிந்து சென்ற மக்களின் எண்ணங்களாலும் கற்பனைகளாலுமே பூமி இந்த அளவிற்கு உருப்பெற்றுள்ளது என்பதை உணர்கிறீர்களா??
முன்னோர்கள் கடந்து வந்த வாழ்க்கைமுறையில் எண்ணற்ற எண்ணக்கருக்களை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த எண்ணக்கருக்களை தொடர்ந்து பற்றி வந்த மக்களாலே இன்றைய எம் வாழ்க்கை முறை இந்த விதமாக அமைந்துள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது.

இன்று மிக எளிதாக அவற்றை மூடப்பழக்கம் என்று சாடிவிடுகிற ஒரு அறிவார்ந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற ஒரு புரியாத சமுதாயமும் வளர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. தாம் வாழும் உலகின் கட்டமைப்பையே அவர்கள் மூடநம்பிக்கை என்று அவமதிப்பதாகவே தோன்றுகிறது.

ஒரு எடுத்துக்காட்டு. அவசரவேலையாக வெளியில் செல்கிறபோது ஒரு பூனை குறுக்கால் போகிறது. வீட்டில் யாரோ சொல்கிறார்கள் அபசகுனம் என்று, முட்டாள் தனம் என்றே சிரித்துவிட்டுப் போகிறீர்கள்..
மனிதன் மெள்ள மெள்ள நாகரீகமடைந்து வந்த உலகத்தை எண்ணிப்பாருங்கள். அப்போது வீடுகள் என்பது எங்கெங்கோ தொலைவில் இருக்கும். சாலை வழி என்பது இப்போது போன்ற தார்முலாமிட்ட கடைவீதிகளல்ல. காட்டு வழிப் பாதைகள் தான். காட்டு வழியே காட்டுவிலங்குகளை சமாளித்தே பயணம் போக வேண்டும். காட்டின் கொடிய விலங்குகளான சிறுத்தை, சிங்கம், புலி குடும்பத்தை சேர்ந்த ஒரே வீட்டு விலங்கு பூனை தான். இந்தக் குடும்பத்தின் விலங்குகளிற்கு பகலின் வெளிச்சத்தில் கண்பார்வை தெளிவு கிடையாது. இருண்ட பின் தான் தெளிவான பார்வை கிடைக்கும். பூனை வெளியில் தடையின்றி நடக்கிறதென்றால் காட்டின் கொடிய விலங்குகளிற்கும் கண்பார்வை தெளிவு என்று அர்த்தம். இருள் சூழ்ந்த பிறகு காட்டு வழி செல்லும் பயணம் ஆபத்தானது என்று சொல்லவே பூனையை சகுனக்குறியீடாக்கினார்கள் முன்னோர்கள். இதை அறிவுரையாக சொன்னால் யார் கேட்பார்கள்? பயமறியாத இளங்கன்றுகள் இதனை கருத்தில் கூட கொள்ள மாட்டார்கள் என்று முன்னோர்கள் அறிவார்கள். அதற்காகவே சகுனம் என்கிற எண்ணக்கருவை உருவாக்கினார்கள்.

அபசகுனம் என்று சொன்னால் மனிதன் நின்று கேட்பான். உண்மையில் ஒரு செயலைச் செய்ய வல்லது மனிதனின் மனோபலம். சகுனம் என்ற சிந்தனை அவன் மனோபலத்தோடே விளையாடுகிறது. அவன் மனோபலத்தில் சகுனம் மெள்ள மெள்ள ஊடுருவி செயலாக மாறுகிறது. இந்த எண்ணக்கருவை சகுனம் என்ற பெயரில் விதைத்து மனிதர்களை ஆபத்திலிருந்து காக்க வழிவகை செய்திருந்தனர் எம் முன்னோர். நாகரீகம் வளர்ந்துள்ளது. வாழ்க்கை முறை அபிவிருத்தியடைந்துள்ளது. காட்டுவழி காணக்கிடைப்பதில்லை. மறுப்பதற்கில்லை. அதற்காக அன்றைய சகுன முறையை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? அது எத்தனை மகத்தான எண்ணக்கரு.

பிரமாண்டமான கோயில்கள் பல நம்மத்தியில் உள்ளன. இந்தக் கோயில்களின் கட்டமைப்பையும் பூசை முறைகளையும் உற்றுக் கவனியுங்கள் ஒருமுறை. மதத்தை தாண்டி , இறை நம்பிக்கையை தாண்டி இது நம் வாழ்க்கை முறை என்ற கோணத்தில் கவனித்துப் பாருங்கள். எத்தனை எண்ணக்கருக்கள் கோயில் என்ற கட்டமைப்புக்கள் புதைந்துள்ளன என்பது புரிய ஆரம்பிக்கும். உயர்ந்த கோபுரங்கள் கட்டப்பட்டது எதற்காக? அதன் உச்சியில் தானியங்களை பாதுகாக்க. கலசங்களில் தேக்கி வைத்த தானியங்கள் வெள்ளப் பெருக்கில் பாதுகாக்கப்பட்டன. உயர்ந்த கலசங்களால் இடிமின்னல் தாக்கங்களிலிருந்து பூமி காக்கப்பட்டது. விஞ்ஞானமும் அறிவியலும் விளக்கஞ் சொல்ல முதலே அதற்கான வழியை சொல்லியுள்ளன எம் முன்னோர் வாழ்க்கை முறையின் எண்ணக்கருக்கள்.

இறைவனிற்கு – இறைவனை மனிதனாய் சித்தரித்து மானிடர்களால் செய்யக்கூடிய அத்தனை மரியாதையையும் பாருங்கள்… அபிடேகம், அலங்காரம், நைவேத்தியம், தூப ஆராதனை, தீப ஆராதனை அத்தனைக்கும் பின்னுள்ள எண்ணக்கருக்களையும் பற்றி எண்ணிப் பாருங்கள்.

கண் திருஷ்டி என்கிற எண்ணக்கருவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எமக்கு ஊறு விளைவிக்கும் எத்தனையோ அம்சங்கள் இந்த உலகில் உள்ளன. ஆனால் அத்தனையையும் விட அடுத்தவர்களது கண்பார்வையால் விளைகிற ஊறு அதாவது கண்ணூறு என்பது எம்மைச் சுற்றி நின்று எம் ஆத்மசக்தியை குறைக்கின்றது. எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பது அனுபவங்கள் மட்டும் தான். உங்களிற்கு எனக்கென்று அல்ல; பல்லாயிரம் ஆண்டுகளாய் மானிட குலம் கண்ட அனுபவங்களைச் சார்ந்தே கண்ணூறு என்கிற எண்ணக்கரு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு என்ன? எம் உடலைச் சுற்றி எம் ஆத்மபலத்தை குறைக்கின்ற அந்த தீய சக்தியினை (aura) இனை சுட்டுப் பொசுக்கவே உடலைச் சுற்றி கற்பூரத்தை காட்டுகிறார்கள். வெளியில், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் போது வாசலில் ஆர்த்தி எடுத்து உடலைச் சுற்றி நின்று ஊறுவிளைவிக்கின்ற சக்தியை சுட்டு அழிக்கிறார்கள். பெண் பூப்பெய்தும் போதும் எத்தனை வகை ஆர்த்திகள்.. அத்தனைக்கும் காரணமுண்டு. இறைவனிற்கு கற்பூரதீபம் காட்டுவதன் எண்ணக்கருவும் இதுதானே. கற்பூர தீபம் மட்டுமா? நாகதீபம் , அடுக்கு தீபம், பஞ்சாரத்தி என எல்லாவற்றிற்கும் பின்பும் மனிதன் அனுபவத்தால் கற்றுணர்ந்த பல எண்ணக் கருக்கள் உள்ளன.

நம் தலைமுறைக்கு கண் திருஷ்டி கழிப்பது ஒரு வேடிக்கைச் செயல் என்றாகியுள்ளது. இனி வரும் தலைமுறையில் அந்த நடைமுறை இல்லாமல் கூட போகலாம். ஆனால் அப்போது மேற்குலகிலிருந்து பைகளில் அடைக்கப்பட்ட கற்பூரம் சந்தைக்கு வரும். ‘Super healing power’ என்று செல்லி எம் அடுத்த தலைமுறையினரே அதை கடைகளில் வாங்கி உடலைச் சுற்றிக் காட்டுவார்கள். புரிகின்றதா நம் அறியாமையின் அவலம்? எம் முன்னோர்களின் அத்தனை மகத்தான எண்ணக்கருக்களை நாம் சிறிதும் சிந்திக்காமல் வேடிக்கையாக கடப்பதன் தாற்பரியம் இதுதான்.

வெள்ளைக்காரன் நம் தேசங்களில் படையெடுக்காமல் இருந்தால் உலகமயமாக்கல் சாத்தியமாகியிருக்காது என்பார்கள். உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் வெள்ளைக்காரன் படையெடுக்காமல் இருந்திருந்தால் உலகம் எம்மயமாகியிருக்கும். அத்தனை வளமான எண்ணக்கருக்கள் எம்மிடமிருந்தன. மருத்துவம், சோதிடம், கலைகளென ஆயகலை நுட்பங்களை எம்மிடமிருந்தே மேற்குலகம் தேடிப் பெற்றுக் கொண்டது. அறியாமையில் தொலைத்தவர்களே நமெல்லோரும்.

அமெரிக்க தேசத்திற்கு உரையாற்றச் சென்ற விவேகானந்தர் தன்னை இப்படி அந்த தேசத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‘நான் எப்படியான தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றால் உங்கள் மூதாதையர்கள் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்தபோது நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த ஒரு தேசத்தில் இருந்து வருகிறேன் ….’ என்றார்.

ஆம்… ஐரோப்பியரும் அமெருக்கரும் மரத்திற்கு மரம் தாவித்திரிந்து பொழுதில் இராச்சியம் அமைத்து கோட்டை கட்டி ஆண்டவர்கள் நம் முன்னோர். அவர்கள் கட்டிய கோட்டைகள், சொத்துக்கள் காலத்தால் அழிந்துவிட்டன. ஆனால் அவர்கள் அனுபவத்தால் கண்டுணர்ந்த எண்ணக்கருக்களையே பெருஞ்செல்வமாய் தலைமுறை தலைமுறையாய் தம் வாழ்க்கை முறையோடு கடத்தி வந்துள்ளனர்.

அட்டைப்டத்தின் தூக்கணாங்குருவி கூட்டைப் பாருங்கள்.. ஒரு குருவி பச்சை நாரினால் கூட்டினை கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கூடு உறுதியாய் இருப்பது காலங்காலமாய் கட்டிக் காய்ந்த நார்களாலே ஆகும். அந்த நார்களாலே அந்தக் கூடு வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க யாராலும் முடியாது. அந்தக் கூடு தான் நாம் வாழும் இந்த உலகக் கூடு.

நம்மால் இந்தக்கூடு வலுப்பெறவில்லை. நம் முன்னோரின் எண்ணங்கள் என்னும் பெருஞ்செல்வத்தாலே இந்தக்கூடு இத்தனை உறுதி கண்டுள்ளது. எம் வாழ்க்கை முறை இத்தனை அழகாயுள்ளது.
இதில் நம் பங்கு என்ன? அதை அந்தக் குருவியே சொல்கிறது. எம் மூத்தோர் போல நம் அடுத்த தலைமுறைக்கும் தகுதியான மூத்தோராய் நாம் இருக்க வேண்டும். எதையும் மூடநம்பிக்கை என்று இலகுவாய் புறந்தள்ள முன் அதன் பின்னாலுள்ள மகத்தான எண்ணக்கருக்களை பற்றி சிந்தியுங்கள்.. உங்கள் அறியாமையால் அடுத்த தலைமுறைக்கான பெருஞ்செல்வங்களை அழித்து விடாதீர்கள்!

சிந்தியுங்கள்.. ஏனெனில் எல்லாவற்றையும் விட வலுவானது உங்கள் சிந்தனை. அதில் உதயமாகிற புதிய எண்ணக்கருக்கள் இந்த உலகையும் வாழ்வியலையும் இன்னும் மேன்மை கொள்ளச் செய்யட்டும்.

Related posts

என் கால்கள் வழியே… – 06

Thumi202121

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை நிலைநாட்டிய தமிழ் வீராங்கனை

Thumi202121

தாயின் நினைவாக இன்னொரு தாய்க்கு உதவி

Thumi202121

Leave a Comment