டெல்லியில் என் முகவரி!
டெல்லிக்கான எனது பயணம் முகவரிக்கானதாகவே அமைந்தது. அது என் அடையாளம் சார்ந்ததாக அமைகின்றது. என் அடையாளத்தை செதுக்குவதற்கு நான் டெல்லியில் இரு வருடங்கள் நிலைத்திருப்பதற்கு ஒரு முகவரி தேவைப்பட்டது. அதனை பெறுவதற்கு ஒரு மாதம் இழுபறிப்பட வேண்டியதாயிற்று.
முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டதை போன்று செப்டெம்பர்-13 தமிழ் நாட்டு நண்பர்களின் விடுதி எனக்கு தற்காலிகமானதே ஆகும். தற்காலிகமானது என்ற நினைப்புடனேயே செப்டெம்பர்-13 இரவு நண்பன் லோகேசுடன் அவர்களின் விடுதிக்கு சென்றேன். மறுநாள் தொடக்கம் பல்கலைக்கழகத்துக்கு போக ஆரம்பிச்சாச்சு. தமிழ் நாட்டு நண்பர்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கென்று தனியான விடுதி உள்ளது. அது நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும், மீள வெளிநாட்டு மாணவர்கள் பதிவு அலுவலகத்தில் விடுதி தொடர்பில் விசாரிக்க வலியுறுத்தினார்கள். முதல் நாள் அனுபவம், ‘வெளிநாட்டு மாணவர்கள் பதிவு பீடாதிபதி விடுதி தொடர்பில் சீரான பதில் தரப்போவதில்லை’ என்பதில், எனக்குள் உயர்வான நம்பிக்கை இருந்தது. எனினும் தமிழ்நாட்டு நண்பர்களின் வலியுறுத்தலால் மீளவும் பீடாதிபதியிடம் சென்று விசாரித்தேன். பீடாதிபதி கொடுத்த வாக்கை மாற்றி பேசு பழக்கம் இல்லாதவர். ‘No means No’ தான். ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பகிரப்படுவதனால், ஏற்கனவே இலங்கையர்களின் எண்ணிக்கை முடிந்து விட்டதாக பெரிய நீண்ட கதையை சுருக்கமாக தந்து அனுப்பினார்.
பீடாதிபதியின் நடத்தை, திரைப்படங்களில் பார்த்த இந்திய நிர்வாகத்தின் ஊழலை நேரடியாக அனுபவிக்கும் எண்ணத்தை உருவாக்கியது. டெல்லி பல்கலைக்கழக்கழக வளாக கட்டமைப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக கட்டமைப்பு போன்றதே ஆகும். ஆன பரப்பு ஏக்கர் ஏக்கர் கணக்கில் வேறுபட்டது. இந்தியாவில பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தின் கீழ் Colleges காணப்படும். Colleges-இலும் இங்கு பட்டப்படிப்புக்களே இடம்பெறும். டெல்லி பல்கலைக்கழகத்திற்கு கீழ் 77 Colleges காணப்படுகின்றது. Colleges-இல் இளமானி (Bachelor) பட்ட கற்கைளே நடைபெறும். முதுமானி (Masters) பட்ட கற்கைகளுக்கான அனுமதிகள் Colleges-இல் வழங்கப்படும். எனினும் கற்கைகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துறைகளிலேயே (Departments) இடம்பெறும். மேலும் டெல்லி பல்கலைக்கழகம் North Campus, South Campus என அலகாக காணப்படுகின்றது. North Campus-ஐ சுற்றி தான் நிர்வாக கட்டங்களும் காணப்படும். South Campus மாற்றன் பிள்ளை மனப்பாங்குடனேயே அணுகப்படும். வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி குறிப்பாக இந்திய புலமைப்பரிசிலுக்கு ஊடாக நகர்த்தப்படும் அனுமதிகள் நேரடியாக பல்கலைக்கழக துறைகளுக்கூடாகவே வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழக கட்டமைப்பு விளக்கத்தை தாண்டி ஊழல் பிரச்சினைக்குள்ள வருவோம். பரந்த கட்டமைப்பாக காணப்படுவதனால் டெல்லி பல்கலைக்கழகத்தை ஒரு எல்லைக்குள் சுருக்க முடியாது. டெல்லி பல்கலைக்கழக கட்டட வளாகங்களை சுற்றி பல தனியார் விடுதிகள். ஏழை, பணக்காரன், நடுத்தரம் என சகல தரத்திலும் தனியார் விடுதிகள் காணப்படுகின்றது. விஜய் நகர், கமலா நகர் மற்றும் முகர்ஜி நகர் போன்ற இடங்கள் முழுமையாக தனியார் விடுதிகள் நிறைந்த இடங்களாகவே காணப்படுகின்றது.
முகர்ஜி நகரில் அதிகம் வண்டுகள் மொய்க்கும். அழகிய பூக்களில் தேனினை பருக. இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த போதும் முகர்ஜி நகருக்கே சென்றிருந்தார்.
தனியார் விடுதிக்கான வருமானத்தை பல்கலைக்கழக பதிவு அலுவலகங்களே அனுப்பி வைக்கின்றது. குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள், அதிலும் இந்திய புலமைப்பரிசியல் வழங்குகின்றது. அதனை கொடுத்து இருக்கலாம் என்ற ஆதங்கம். என் நண்பர்கள்;, ‘இந்திய புலமைப்பரிசில் என்ற பேரில காசு தருது. நல்லா செலவழிச்சு, அதனை இந்தியாட்டயே கொடுத்துட்டு போகலாமே’ என்பார்கள். அப்படி ஒரு எண்ணத்தில தான் பீடாதிபதியும் தனியார் விடுதிக்கான திசையை காட்டுறார் போல.
ஆக பல்கலைக்கழக விடுதி இல்லை என்பது முடிவாகியது. தற்காலிகம் தான் நிரந்தரம் என தீர்மானமாகியது. டெல்லியின் ஆரம்ப முகவரி ‘இல:8ஃ33, முதல் தளம், 8வது தொகுதி, இரட்டை மாடி-விஜய் நகர், டெல்லி 110009’.
தமிழ் நாட்டு நண்பர்களுடன் விடுதியை பகிர்ந்து இருக்க முடிவாகிச்சு. தங்கி ஐந்து நாட்களுக்குள் முதல் மாத வாடகையும் கொடுத்தாச்சு. தங்கும் விடுதிக்கான வாடகை 5000. அங்கு சமையல் செய்பவருக்கு 1500 என மொத்தமா 6500 கொடுத்தாச்சு. சமையல் பொருட்களுக்கான நாளாந்த செலவுகள் தொலைபேசி App-இல் கணக்கிடப்பட்டு பகிரப்படுவதாக பேசிக்கொள்ளப்பட்டது. விடுதியும் மொத்த வாடகை 25000. நாங்கள் ஐந்து பேர் தான் விடுதியின் நிரந்தர வதிவிடவாசிகள் என்ற கணக்கில் வாடகை பகிரப்பட்டது. அதிலும் ஏமாற்றப்பட்டேன்.
ஒரு மாத முடிவில், அந்த விடுதியிலிருந்து வெளியேறு வதற்கான முன்னாயர்த்தங்களை மேற்கொள்கையிலேயேயே ஏமாற்றப் பட்டதை உணர்ந்தேன். மற்ற நண்பர்கள் ஏமாற்றியவனிடம் முரண்டுபிடித்து ஏமாறிய பணத்தை சீராக்கி கொண்டார்கள். அதாவது மேலதிகமாக ஒரு மாதம் வாடகை கொடுக்காமல் இருந்து விட்டு வெளியேறினார்கள். எனக்கு ஏமாற்றம் கடினமாக தான் இருந்தது. எனினும் செப்டெம்பர்-13 இரவு வீடு தேடி அலையாது ஒரு மாதம் தங்குவதற்கான இடம் கிடைத்த வரைக்கும் சந்தோசம் என்ற எண்ணத்துடன் ஏமாற்றத்தை சமாளித்து கொண்டேன். மேலும், இந்தியாவில் வெளிநாட்டினர் வேலை மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்காக வந்து நீண்ட காலம் தங்குகையில் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தில் பதினான்கு நாட்களில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். நாட்கள் பிந்துகையில், ஆகக்குறைந்தது 5000 வரையில் செலுத்த வேண்டி ஏற்படும். இந்நிலையில் அவசரமாக எனக்கொரு முகவரி தேவைப்பட்டது. அம்முகவரி தமிழ்நாட்டு நண்பர்களின் விடுதியில் கிடைத்தது. யாவற்றுக்கும் மேலாக ஏமாற்றிய ஒருவனை விட தமிழ்நாட்டு சொந்தங்கங்கள் என்ற பெரிய நட்பு வட்டம் கிடைத்தது. டெல்லி பல்கலைக்கழக தமிழ் நாட்டு மாணவர் ஒன்றிய நிகழ்வுகள் சந்திப்புகளுக்கு என்னையும் தமிழ் என்ற அடையாளத்துடன் அழைப்பார்கள். இத்தகைய நன்மைகளை தமிழ்நாட்டு நண்பர்களின் விடுதி கொடுத்துள்ளமையால், ஏமாற்றத்தையும் படிப்பினை எனும் நன்மையாக எடுத்து கொண்டு கடந்து சென்றேன்.
தமிழ் நாட்டு நண்பர்களின் விடுதி செப்டெம்பர் மாதம் நான் உட்பட ஐந்து பேரே நிரந்தர வதிவிடவாசிகள். எனினும் அக்காலத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தேர்தல் நடைபெற்றமையால், எங்கள் விடுதி காங்கிரஸ் மாணவர் ஒன்றிய தேர்தல் போட்டியாளர்களின் குட்டி அலுவலகம் போன்று ஆட்கள் நிறைந்து காணப்பட்டனர். ஏறத்தாழ 10-15 பேர் தங்கினோம். விடுதியின் நிதிப்பொறுப்பை பார்த்தவன் தேர்தலை மையப்படுத்தி வந்து தற்காலிகமாக தங்கியவர்களிடமும் வாடகை பணம் வாங்கியுள்ளான். அவன் 25000 வாடகை பணத்திற்கு செப்டெம்பர் மாதம் 50000-75000 சேகரித்துள்ளான். இவ்ஏமாற்றம் அறிந்ததிலிருந்து அவ்விடுதியில் சகஜமாக இருக்க முடியவில்லை. தொடர்ச்சியாக வேறு சந்தர்ப்பங்களிலும் நிதி பகிரப்படுகையில் மற்றையவர்களும் ஏமாற்றுவார்களோ என்ற சந்தேகத்துடனேயே எவரையும் அணுக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையிலேயே புதிய விடுதி, புதிய முகவரிக்கான தேடல் ஆரம்பமாகியது. தமிழ் நாட்டு நண்பன் சிபியுடன் இணைந்து தனியார் விடுதிக்கான தேடல் ஆரம்பமாகியது. புலமைப்பரசியல் பணத்திற்கு ஏற்றவாறு 10000க்குள் வாடகை வழங்கக்கூடிய வகையில், ஏனையவர்களுடன் பகிராத வகையில் தனி அறை தேடப்பட்டது. எனினும் வாடகை பணம் சரி என்பதில் இடம் பிழையாக இருக்கும். இடம் சரி என்கையில் வாடகை பணம் பிழையாக இருக்கும். அவ்வாறாக டெல்லி தனியார் விடுதிகளை சுற்றி களைத்தாகிற்று.
மறுதளம் பல்கலைக்கழக நண்பர் குழாமிடமும் தனியார் விடுதி தேடுவது தொடர்பில் தகவலை பகிர்ந்திருந்தேன். பல்கலைக்கழக நண்பர்கள் சத்யா மற்றும் ப்ரதீப் பல்கலைக்கழக விடுதிக்கான தேடலுடன் இருந்தார்கள். அவர்கள் தங்களுடன் என் தேடலையும் இணைத்து கொண்டார்கள். ஒருநாள் எதேச்சையாக டெல்லி பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள பல்கலைக்கழக விடுதிகள் அனைத்திற்கும் நேராக சென்று, புதிய அனுமதிகளுக்கான காலத்தை விசாரிக்க பயணப்பட்டோம். மன்சரோவர் விடுதி முதல் க்வயர் கோல் என ஏறத்தாழ 5-6 பல்கலைக்கழக விடுதிகளுக்கு அலைந்தோம். அதில் ஒன்றாய் ஆண்களுக்கான டெல்லி பல்கலைக்கழக சர்வதேச மாணவர் விடுதிக்கும் சென்றிருந்தோம். அங்கு முறைப்பாட்டு விண்ணப்பத்தை கோரியிருந்தார்கள். என் இயல்பான சோம்பறி தனத்தால் என் அறைக்கு சென்று எழுதிவிட்டு மறுநாள் கடிதத்தை கொண்டு வந்து கொடுப்போம் என தீர்மானித்தேன். எனினும் நண்பன் ப்ரதீப் என்னை ஏசி விட்டு எனக்கான முறைப்பாட்டு விண்ணப்பத்தை தானே எழுதி தந்தான்.
ஒரு வார காலத்தில் ஆண்களுக்கான டெல்லி பல்கலைக்கழக சர்வதேச மாணவர் விடுதி, டெல்லியில் எனது புதிய முகவரியானது. ‘அறை இல:33, சர்வதேச மாணவர் இல்லம், மால் வீதி, டெல்லி-110007’.
புதிய முகவரியில் புதிய அனுபவங்களுடன்….