உலகின் மிகப்பெரிய விளையாட்டு திரு விழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடை பெறும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் திருவிழாவில் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை சுமார் ரூ.68 ஆயிரம் கோடி செலவில் பிரான்ஸ் நடத்துகிறது. வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நதியில் நடைபெற்றது. போட்டிகள் பாரிஸ் உள்ளிட்ட பிரான்ஸில் உள்ள 16 நகரங்களில் நடக்கின்றன. மேலும் துணை நகரமான பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள தஹிதியிலும் போட்டி நடைபெறுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு பணியில் 45 ஆயிரம் போலீஸார், 10 ஆயிரம் ராணுவ வீரர்கள், 20 ஆயிரம் தனியார் பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பமும் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. முதன்முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பதக்கத்திலும் பிரான்ஸின் பாரம்பரிய சின்னமான ஈபிள் கோபுரத்தின் துகள்கள் 18 கிராம் இணைக்கப்பட்டுள்ளது. தங்கப் பதக்கத்தின் எடை 529 கிராமும், வெள்ளிப் பதக்கத்தின் எடை 525 கிராமும், வெண்கலப் பதக்கத்தின் எடை 455 கிராமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.