இதழ் 74

சுற்றுலாத் தீவினுக்கோர் கோபுரம்

கோடை வெயில் கொழுத்தும் காலம். இன்னொருபக்கம் எல்லா மாதங்களின் வறட்சியும் இந்தக் கோடையில்தான் துளிர்விடுகிறது. காரணம் கோடை விடுமுறை.

இயந்திர வாழ்க்கையின் நின்று விலகி உலகத்தோர் இயற்கையை சில நாள் திரும்பிப் பார்க்க விரும்பும் தருணம் கோடை விடுமுறை. அதிசயமானவை, ஆர்வமூட்டக்கூடியவை, மனதைக் கவர்பவை, இயற்கை நன்கொடைகள் போன்றவைகளைக் காண மக்கள் கடல் தாண்டி மலை தாண்டி பயணப்படும் கொண்டாட்ட காலம் இது.

தாங்கள் வசிக்கும் இடங்களிலிருந்து சென்று இன்னுமொரு இடத்தை புதிய கண்கள் கொண்டு புல்லரிக்கும் மேனி கொண்டு இரசித்து ருசிக்கும் ஆர்வமே சுற்றுலா தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

இன்பமாக பொழுது போக்கவேண்டும் என்பது மனிதனின் அடிப்படை விருப்பமாகும். இந்த உணர்வானது உலகம் தழுவிய ஒன்றாகும்.
TOURISM என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கமே சுற்றுலா ஆகும். பல இடங்களைச் சுற்றி வருவதற்கு பயணம் என்று பெயர். பயணம் என்பதில் ஆங்கில வார்த்தை TOUR ஆகும். இதிலிருந்து உருவான வார்த்தையே TOURISM.
TOUR என்ற ஆங்கில சொல்லானது TORNOS என்ற இலத்தீன் சொல்லிருந்து பிறந்தது ஆகும். டோர்னஸ் என்ற லத்தீன் வார்த்தை சக்கரத்தினைக குறிக்கிறது. அதாவது சுற்றிவருவதைக் குறிக்கிறது. இவ்வாறு லத்தீன் மொழியிலிருந்து பிறந்தTOUR என்ற சொல்லானது கி.பி.1292-ல் ஆங்கில மொழியில் இணைந்தது. எனவே பல இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டு மீண்டும் தனது இருப்பிடம் வந்து சேர்வதைத்தான் இந்த TOUR என்ற வார்த்தை குறிக்கிறது.

எனவே சுற்றுலா என்பது ஒருவர் தாம் வாழும் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பொருள் தேடும் எண்ணம் இல்லாமல், நிலையாகத் தங்கி வாழ வேண்டும் என்னும் கொள்கையில்லாமல் பல்வேறு காரணங்களுக்காகப் பணம் செலவு செய்து பயணம் செய்வதாகும்.

அதிகமாக கிடைக்கும் ஓய்வு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, மக்களின் வாழ்க்கைத்தரம், போக்குவரத்து முன்னேற்றம், விரைவான செய்தித் தொடர்பு வசதி, மக்களின் செலவழிக்கும் திறன் போன்றவை சுற்றாலாவை உலகின் ஒரு முக்கியமான தொழிற்துறையாகவே தற்சமயம் மாற்றியுள்ளன.

ஏன் எங்கள் சிறுதீவின் பெருவருவாயே சுற்றுலா அல்லவா? சுற்றுலாத்துறையில் எத்தனை முதலீடும் கொட்டுமளவு அரசினர் தயார் நிலையிலுள்ளனர். கண்ணொளியில் மலரும் இயற்கைக் காட்சிகளும் மின்னொளியில் மலரும் செந்தாமரைக் கோபுரமும் இலங்கை சிறுதீவின் சுற்றுலாப் பிரயத்தனத்தை பறைசாற்றி நிற்கின்றன.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் $687.5 மில்லியனாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறையானது இந்த வருடம் 2.3 மில்லியன் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ள அதேவேளை 2024 ஆம் ஆண்டில் 4 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2014 மற்றும் 2019 க்கு இடையில் மொத்த வெளிநாட்டு நாணய வருமானத்தில் சுமார் 14% சுற்றுலாத்துறை பங்களித்துள்ளது.

எனினும் ஈஸ்டர் குண்டுத்தாக்கு, பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்றுப்பரவல் போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் சுற்றுலாத்துறை வருமானத்தில் சுமார் 15 பில்லியன் டொலர் இழப்பை இலங்கை சந்தித்துள்ளது. 

ஆயினும் இவ்வருடம் எதிர்பார்ப்பு அளவைத் தாண்டி வருவாய் கண்டுவரகிறது நாடு. ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்படி, கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என ஊகிக்க முடிகிறது.

போருக்குப் பிறகு, 2018 இல் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்திருந்தனர். அந்த ஆண்டில் 2,333,796 பேர் இலங்கைக்கு வந்தனர். அப்போதைய சுற்றுலா வர்த்தக வருமானம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும், அதிலிருந்து வரும் வருமானத்தையும் 2018 ஆம் ஆண்டை விட அதிகரித்துக்கொள்ள முடியும் என்கிறார் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் 2023 ஆம் ஆண்டில் “Sri Lanka – You’ll come back for more” என்ற விளம்பரத் தொனிப்பொருளின் கீழ் புதிய வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தியதுடன், 2024 ஆம் ஆண்டில் அதிகமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து அங்கீகாரத்தையும் வென்றது. மக்கள் தொடர்பாடல் திணைக்களத்தினால் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட “Seeing is Believing” திட்டத்தின் கீழ், 189 சர்வதேச பயண வலைப்பதிவாளர்கள் மற்றும் தொடர்பாளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, இலங்கைக்கு ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ஊடகப் பிரசுரங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஜெர்மனியில் ITB, லண்டனில் WTM, துபாயில் ATM, பிரான்சில் IFTM மற்றும் இந்தியாவில் SATTE உட்பட 15 முக்கிய பயண கண்காட்சிகள் மற்றும் 29 (Roadshows) சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான சந்தைப்படுத்தல் துறையால் பயன்படுத்தப்பட்டன. இந்த விளம்பர நடவடிக்கைகளில் 75இற்கும் மேற்பட்ட பயண முகவர் மற்றும் ஹோட்டல் வல்லுநர்கள் பங்கேற்றனர். இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற TAAI (Travel Agents Association of India) மாநாட்டில் 500 இந்திய சுற்றுலா முகவர்களும் 50 இந்திய ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர். பல உலகளாவிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் கட்ட மக்கள் தொடர்பு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான “Travel Off Path” அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பட்டியல் எஸ்.சி.ஓ (Search engine optimization ) நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பை உருவாக்க பெரிய அளவிலான இணைய தேடல் அளவு தரவு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கைத் தீவானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை மாறமுடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இல்ஙகையின் வருமானத்தின் அடிநாதமாக விளங்கும் சுற்றுலாத்துறைக்கான அடையாளமாகவும் அழைப்பிதழாகவும் காணப்படும் செந்தாமரைக் கோபுரம் கறுத்த இரவொன்றில் மின்னொளியில் பிரகாசிப்பதையே அட்டையில் காண்கிறீர்கள். இலங்கையின் அடையாளமாக இன்று பார்க்கப்படும் இந்த கோபுரத்தினை வினைத்திறனாக பயன்படுத்தி வருமானம் ஈட்ட வேண்டும் என்பதே அனைவரதும் பேரார்வம்.

அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத ஒருவனுக்கு ஒரு செல்வந்தர் பெரிய மாளிகையை இலவசமாக பரிசளிக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஆராய்ந்தவர்கள் அது பரிசில்லை என்றும் மீள முடியாத கடன் என்றும் சொன்னார்கள். எதுவானாலும் அந்த மாளிகையைப் பராமரிக்க செலவுக்கு என்ன செய்வான் என்ற கேள்விக்கு பதில் தெரியாதவரை அவனுக்கு அது பரிசாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது அவனுக்கு புரியாதவரை எதுவும் மாறப்போவதில்லை.

Related posts

ஊடகங்களைப் பற்றி பூடகமாக சில செய்திகள்

Thumi202121

இலங்கை சுற்றி நடக்கும் இளைஞன்

Thumi202121

சிங்கப் பெண் சமாரி அத்தப்பத்து

Thumi202121

Leave a Comment