ஒரு சமுகத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் அச்சமுகத்தின் கல்வி அடைவு மட்டங்களே நெறிப்படுத்துகின்றது. ஒரு சமுகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளர்களால் வெளிக்கொணரப்படுகின்றன. ‘புலமையாளர்” எனும் பதம் அறிவு, காரணி மற்றும் விளக்க ஆற்றலுடையோரைக் குறிக்குமென பேராசிரியர் சிவத்தம்பி விளக்குகின்றார். இத்தகைய புலமைசார் பாரம்பரியத்தை ஈழத்தமிழ் சமுகத்தில் உருவாக்குவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதன்மையான நிலையை பெறுகின்றது. மேலும், ஈழத்தமிழ் சமுகத்தின் மகிழ்ச்சியை, கோபத்தை, வேட்கையை காலத்துக்கு ஏற்ப வெளிப்படுத்துவதில் ஈழத்தமிழர்களின் கண்ணாடியாக திகழ்ந்துள்ளது எனும் விதந்துரைப்பும் மறுக்கமுடியாததொரு பதிவாகவே அமைகின்றது. இத்தகைய சிறப்பை பெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2024-செப்ரெம்பரில் பொன் விழா சிறப்பை பெறுகின்றது. இத்தருணத்தில் அதன் வரலாற்று பரிமாணத்தை முதன்மைப் படுத்துவதும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்வதும் அவசியமானதாக அமைகின்றது. ஆதலினால் துமியின் பவள மலர் பொன் விழாக்காணும் யாழ் பல்கலைக்கழகத்தினை அட்டைப்படமாகக் கொண்டு வெளிவருகிறது.

ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு கல்வி சாலைகளின் அவசியம் உணரப்பட்டு, பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான கோரிக்கை நீண்டகாலமாக கல்வியாளர்கள் மற்றும் ஈழத்தமிழரசியல் தரப்பினால் முன்வைக்கப்பட்டது. ஈழத்தின் புகழாக அடையாளம் காணக்கூடிய சுவாமி விபுலானந்தரும் பல்கலைக் கழகத்துக்கான தேவைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சனப் பெருக்கம் கூடியதும், மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததும், பாரம்பரிய கல்வி வளர்ச்சி அடைந்ததுமான இடமே பல்கலைக்கழகம் அமைவதற்கு பொருத்தப்பாடுடையதெனவும், யாழ்ப்பாணம் அத்தகைய பண்பை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சுதந்திர இலங்கையில் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் என்பதும் கட்டமைக்கப்பட்டிருந்தது. இலங்கையின் முன்னோடிக் கல்வியாளரான வித்யாஜோதி ஆ.வி.மயில்வாகனம்(1906-1987) அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறிவியற் பீடத்தின் தலைவராகப் பணியாற்றியவர். ‘இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் 1957இல் சிறு பிரசுரம் ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். அப்பிரசுரத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான பல்கலைக்கழக தேவைக்கான காரணங்களை பல கோணங்களில் விபரித்திருந்தார். ஒரு சமுகத்தில் பல்கலைக்கழகத்தின் வகிபாகம் குறித்து அவர் குறிப்பிட்டிருந்த காரணங்கள் முக்கியமாகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்களின் வாழ்க்கை, தமக்குப் புறம்பான பண்பாட்டுச் சூழலில் ஏதோ வெறுக்கப்பட்டவர்கள் போல, அமைந்துள்ளது. இந்நிலை மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரிய வகுப்பையும் பாதித்துள்ளது. நமது சமுதாயத்தின் எதிர்காலத் தலைவர்களாக வரக்கூடிய இளஞ் சந்ததியினர் தமது கல்வியை ஐதீகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ற சூழலில் பெறுதல் மிக மிக அவசியம்.
அரசாங்கப் பதவிகளில் தமிழரின் திறமை பலியாகின்றது. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைப் போக்கைத் திருத்தியமைக்க உதவுவதுடன், அவர்களது உள்ளத்துக்குப் புத்துயிரூட்டும் ஆற்றல் வாய்ந்த நிலையமாக எமது தமிழ்ப் பல்கலைக்கழகம் அமையவேண்டும். வெகு காலமாக நம்மவர்கள் அரச உத்தியோகங்களை நம்பி வாழ்ந்துவிட்டனர். ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் எம்மவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்புற்றிருந்தனர். ஆயர்வேத வைத்தியம், வங்கியமைப்பு, உழவுத்தொழில், வணிகம், கலைப்பணிகள், கப்பலோட்டத் தொழில், கடற் தொழில் முதலிய பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கினர். இன்று எமது ஆற்றலையும் புத்திக் கூர்மையையும் திறமையையும் முற்றிலும் அரசாங்க சேவையில் செலவுசெய்கிறோம். இப்படுகுழியிலிருந்து எமது சமூகத்தை மீட்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உதவிசெய்ய வேண்டும்.
மனித குலத்தை உய்விக்கும் பல அரிய உளப்பண்புகளை எம் முன்னோர் வளர்த்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக எமது ஒழுக்கத்தை வகுத்துவந்த திருக்குறள், நாலடியார் முதலிய நூல்கள் அவ்வுண்மைகளைக் கொண்டுள்ளன. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் இவற்றையெல்லாம் கவனியாமல் வாழ்கின்றனர். இன்று எமது இளைஞர்களுக்குத் தேவையான பண்புகள் யாவை? நன்றும் தீதும் கண்டறியும் ஆற்றல், செயலாற்றவல்ல திடசித்தம், மலைபோல வரும் துன்பங்களைக் கண்டஞ்சாமை, ஒழுக்க உயர்வு முதலிய உயர்ந்த பண்புகளை நமது சமூகத்தில் வளர்த்தல் வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் பண்புகள் எமது இளைஞர்களுக்கு உறுதுணையாக நிற்கவல்லன. வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப அமைந்த ஒரு பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய பண்புகளைப் பேணி வளர்த்தல் இயலும்.எனச்சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறு பல கோணங்களில் தமிழ் சமுகத்தின் இருப்பியலினை வலியுறுத்திய பல்கலைக்கழகத்தின் தேவை தமிழ் சமுகத்திடையே உணரப்பட்டது.

1958ஆம் ஆண்டு இலங்கையின் மகாதேசாபதி சேர் ஒலிவர் குணதிலக்கவினால் உருவாக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழு(Ceylon University Commission) தனது அறிக்கையில், ‘யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவாக்கப்பட வேண்டுமென்பதையும், அது விரைவில் சுயாதீன பல்கலைக்கழகமாக்கப்பட வேண்டுமென்பதும்” குறிப்பிட்டிருந்தது. இவ் ஆணைக்குழுவில் உயிர் வேதியியல் கல்வியாளர் மற்றும் கேம்பிரிட்ஜ், சீனா நிபுணர் கலாநிதி ஜோசப் நீதம், ராஜஸ்தான் யு.மு.யு ராஜ்புதானா துணைவேந்தர் பேராசிரியர் ஞானேஷ் சி. சட்டர்ஜி மற்றும் இலங்கை சிவில் சேவை அதிகாரி லியோபோல்ட் ஜேம்ஸ் டி சில்வா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்ஆணைக்குழு மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கை ‘நீதம் ஆணைக்குழு” (Needham Commission) மற்றும் ‘நீதம் அறிக்கை” (Needham Report) எனவும் அழைக்கப்படுவதுண்டு. யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தின் தேவையை கலாநிதி ஜோசப் நீதம் மற்றும் பேராசிரியர் ஞானேஷ் சி. சட்டர்ஜி ஆகியோரே வலியுறுத்தியிருந்தனர். 1959 ஜனவரியில் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை மூன்றாவது ஆணையாளரும் இலங்கையருமான செனவிரத்ன என்பவரால் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. அரசியல் குழப்பங்களால் நீதம் அறிக்கை 1959களில் முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை. எனினும் இன்றைய பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு நீதம் அறிக்கை வலுவான அடிப்படையை வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகம் சார்ந்த ஈழத்தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு 1974ஆம் ஆண்டிலேயே சாத்தியமாகியது. இதன் பிரகாரம் 1974ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பல்கலைக்கழக வளாகமொன்றை அமைப்பதற்கான திட்டமொன்று அமைச்சரவை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகிய டு.ர்.சுமணதாச கொழும்பில் அவருடைய அதிகாரிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றைத் திறந்து வைப்பது தொடர்பாக அடிப்படை தீர்மானங்கள் பற்றிக் கலந்தாலோசித்தார். ஜூலை-15அன்று கல்வி அமைச்சரும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சார்பு வேந்தருமான டாக்டர் அல்.ஹாஜ்.பாடி-உத்-தின் மஹ்மூத் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகத்தை, சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தை மையமாக கொண்டு நிறுவுவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார். ஜூலை-19அன்று வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கை தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி க.கைலாசபதி அவர்களை யாழ்ப்பாண வளாகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை இலங்கை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெளிப்படுத்தினார்.

1972ஆம் ஆண்டின் இலங்கைப் பல்கலைக்கழகச் சட்டம் எண் 1இன் பிரிவு-85, பிரிவு-18இன் பிரகாரம் இலங்கை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், கல்வி அமைச்சருடன் கலந்தாலோசித்து, ஜூலை-25அன்று 121/15ஆம் இலக்க வர்த்தமானியில், ‘ஆகஸ்ட்-01அன்று விஞ்ஞானம், சட்டம், மனிதநேயம் மற்றும் உடற்கல்வித் துறை ஆகிய பீடங்களுடன் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு” வெளியிடப்பட்டது. எனினும் ஆகஸ்ட்-01அன்று விஞ்ஞானம் மற்றும் மனிதநேயம் ஆகிய இரு பீடங்களுடன் மாத்திரம் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. கலாநிதி க.கைலாசபதி அன்றைய தினமே உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண வளாகத்தின் முதலாவது தலைவராக பொறுப்பேற்றார். யாழ்ப்பாண வளாகத்தின் முதலாவது பிரதிப்பதிவாளராக வித்யாலங்கார வளாகத்தின் பிரதிப் பதிவாளர் திரு. கே.பி.ஜி.விஜயசுரேந்திரா ஆகஸ்ட்-09அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஆகஸ்ட்-13அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரி மாணவ பிரிவு கல்வி அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண வளாகத்தின் விஞ்ஞானபீடம் நிறுவுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கல்லூரியின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே கல்வியமைச்சினால் பட்டதாரி மாணவ பிரிவு கையகப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக கிறிஸ்தவ மி~னரியின் நெறியாள்கையில் இயங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரி மாணவர் பிரிவு விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் விஞ்ஞான மாணவர்களுக்கான நூலக வசதிகளுக்கு பொருத்தமானதாக காணப்பட்டது. இப்பின்னணியில் ஆரம்ப யாழ்ப்பாண வளாகம் பரமேஸ்வராக் கல்லூரியுடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் இணைத்தாகவே காணப்பட்டது. எனினும் 1978ஆம் யாழ்ப்பாண வளாகத்தின் விஞ்ஞானபீடம் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி வளவிற்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரி மாணவ பிரிவு மீள யாழ்ப்பாணக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். செப்டெம்பர்-01, 1974இல் முதல் போதனைசார் ஊழியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஒக்டோபர்-01, 1974இல் பேராதனை வளாகத்தின் கணிதப் பிரிவின் தலைவர் பேராசிரியர்.பி.கனகசபாபதி யாழ்ப்பாண வளாக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகவும், பேராதனை வளாகத்தில் வரலாற்றுப்பாட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.இந்திரபால மனிதநேய பீடத்தின் முதல் பீடாதிபதியாகவும் நியமிக்கப் பட்டனர். போதனாசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனங்களுடன் யாழ்ப்பாண வளாகம் அறிவியல்ப் போதனைக்கான முழுமையான நிறுவன கட்டமைப்பிற்கான தயார் நிலையை பெற்றிருந்தது.
ஒக்டோபர்-06 1974அன்று, பிற்பகல் 2.25 மணியளவில், இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்க யாழ்ப்பாண வளாகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அரசியல் முரண்பாடுகளால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் அன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்திய போதிலும், யாழ்ப்பாணத்திற்கான கல்வி ஒளிர்வீச்சு அன்றையதினம் இருளைபோக்க ஆயத்தமாகியது. கல்வி அமைச்சர் டாக்டர் அல்-ஹாஜ் பாடி-உத்-தின் மஹ்மூத் அவர்களின் அழைப்பின் பேரில் நினைவுப் பலகையை திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி வளாகத்தில் இராமநாதன் கட்டடத்திற்கு அருகில் இன்றும் நினைவுக்கல் எழுச்சிபூர்வமாக உள்ளது.
சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட அன்று, யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டது. முதல் தொகுதி மாணவர்களாக யாழ்ப்பாண வளாகத்தில் 208 மாணவர்கள் கல்வி கற்றிருந்தார்கள். ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் ஆய்வுக்கற்கையையே வழங்கியது. மனிதநேய பீடமும் வரலாறு, தமிழ், இந்துநாகரீகம் மற்றும் சிங்களம் ஆகிய ஆய்வு கற்கைகளையே வழங்கியிருந்தது. 1975ஆம் ஆண்டில் மனிதநேய பீடம் கலைப்பீடமாக மாறியதுடன் பொருளாதாரம், புவியியல், சமஸ்கிருதம், தத்துவம் மற்றும் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் உட்பட ஆய்வுக் கற்கைளின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்தியது. 1998 வரையில் பொருளாதார கற்கைக்குள்ளேயே அரசறிவியல், சமுகவியல் மற்றும் வர்த்தக கற்கைகள் உள்ளடங்கியிருந்தது.

வளாகமாக இயங்கும் காலப்பகுதியிலேயே, மெல்ல மெல்ல யாழ்ப்பாண வளாகத்தில் ஆய்வு கற்கைகளும் விரிவடைந்தது. 1975/76 கல்வியாண்டில் 35 மாணவர்களுடன் இயற்பியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான பாடங்கள் தொடங்கப்பட்டது. டிசம்பர்-01, 1975இல் இராமநாதன் நுண்கலை கல்விக்கூடம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இராமநாதன் நுண்கலை கல்விக்கூடம் தமிழ் பாரம்பரிய இசை மற்றும் பரத நாட்டியத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக சேர்.பொன்.இராமநாதனின் மருமகன் செ.நடேசன் அவர்களினால் 1960ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் பணியாற்ற தமிழ்நாட்டிலிருந்து முன்னணி அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். செ.நடேசனின் மறைவுக்குப் பிறகு, யாழ்ப்பாண வளாகத்தால் கையகப்படுத்தப்பட்ட இராமநாதன் நுண்கலை கல்விக்கூடம் ஆரம்பத்தில் நுண்கலைத்துறையின் ஒரு அலகாகவும், 1992 முதல் கலைப்பீடத்தின் ஒரு துறையாகவும் தரம்உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட்-16 2022அன்று 2293/22ஆம் இலக்கம் வர்த்தமானி அறிவிப்பினூடாக தனிப்பீடமாக மாற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண வளாக காலப் பகுதியிலேயே ஆகஸ்ட்-07, 1978இல் கைதடியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையின் கட்டிடங்களில் மருத்துவபீடம் நிறுவப்பட்டது. பின்னர் 1981இல் தற்போதைய இடத்தில் (திருநெல்வேலியில்) புதிய கட்டிடத்திற்கு மருத்துவபீடம் மாற்றப்பட்டது. மாணவர்களின் ஆய்வுக்கற்கைக்காக 1978ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையும் போதனா வைத்தியசாலையாக உயர்த்தப்பட்டது.
கலைப்பீடம், விஞ்ஞானப்பீடம் மற்றும் மருத்துவ பீடங்களின் பொலிவோடு யாழ்ப்பாண வளாகம் நீதம் அறிக்கை எதிர்பார்த்தவாறே விரைவாக பல்கலைக்கழகமாகவும் உயர்ச்சியடைந்தது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, டிசம்பர் 22, 1978 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், யாழ்ப்பாண வளாகம் 1979 ஜனவரி 01 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் சுதந்திரமான மற்றும் தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக மாறியது. பேராசிரியர் க.கைலாசபதியை தொடர்ந்து ஆகஸ்ட்-01, 1977ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தின் இராண்டாவது தலைவராக பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக பதவியேற்றிருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பின்னாட்களில் பீடங்களாக உயர்வுபெற்ற சில ஆய்வுக்கற்கைள், வேறு பீடங்களுக்குள் அலகுகளாக, கற்கையாக நீண்ட காலம் செயற்பட்டுள்ளன. முகாமைத்துவ ஆய்வுகள் மற்றும் வணிகத்திற்கான வரலாற்று வளர்ச்சி 1977இல் கலைப்பீடத்துக்குள் அறியப்படுகின்றது. வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பு 1977இல் கலைப்பீடத்தில் பொருளாதாரத் துறையின் கீழே தொடங்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள் காரணமாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிமூல முகாமைத்துவ பட்டப்படிப்புக்கு உள்வாங்கப்பட்ட 14 இளங்கலை மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இளங்கலை அறிவியல் முகாமைத்துவம் அல்லது வணிக நிர்வாகத்தில் பட்டம் வழங்குவது குறித்த ஆக்கபூர்வமான செனட் விவாதத்திற்குப் பிறகு, இறுதியாக குறித்த பட்டதாரிகளுக்கு வணிக நிர்வாக இளங்கலை பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வணிகவியல் துறைக்கு ஜூலை-31, 1982அன்று ஒப்புதல் அளித்து, டிசம்பர்-18, 1983இல் செயல்படத் தொடங்கியது. முகாமைத்துவ பீட வளர்ச்சி 1999ஆம் ஆண்டிலேயே சாத்தியமாகியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது பீடமாக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடம் மே-29 1999 அன்று நிறுவப்பட்டது. இது இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களின் முகாமைத்துவ பீடங்களில் 6வது பீடமாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிரசவிக்கப்பட்ட காலப்பகுதி இன மோதல்களின் ஆயுதப்பரிமாணத்தின் ஆரம்ப பொறிக்குள் காணப்பட்டது. அவை பல பாதகங்களை உருவாக்கிய போதிலும், சில சாதகமான விளைவுகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுத்துறை வி~;தரிப்பில் ஏற்படுத்தியிருந்தது. 1983இல் இனக்கலவரங்களைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுதேச மருத்துவ நிறுவகத்தின் சித்தா பிரிவு ஜூலை-02, 1984இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு மாற்றப்பட்டு கலைப்பீடத்தின் கீழ் ஒரு துறையாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து அக்டோபர்-01, 1993 முதல் துணைவேந்தரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் தனி அலகாக இயங்கியது. பின்னர், செப்டம்பர்-2003 முதல் பல்கலைக்கழக கவுன்சிலால் நியமிக்கப்பட்ட மேலாண்மைக் குழுவால் மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது. தனிப்பீடத்துக்கான முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனமோதல் ஏனைய பல்கலைக் கழகங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தை ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பின்னகர்த்தியுள்ளது என்ற பார்வை காணப்படுகின்றது. யுத்த வடுக்களுக்குள்ளேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது இயங்குநிலையை தக்க வைத்துள்ளது. பல்கலைக் கழகத்துக்கான முதன்மை நூலக கட்டிடம் மற்றும் மாணவர் மையத்தின் கட்டுமானம் எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. எனினும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் 1987களில் அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடையின் விளைவாக கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. நூலகத் தொகுதியின் தரைத்தளத்தின் ஒரு பகுதி மட்டுமே 1986இல் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 1987ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலத்தில் இந்திய அமைதி காக்கும் படைகளின் இராணுவ நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் கல்வித் துறைகள் இரண்டின் செயல்பாடுகளும் முற்றிலுமாக சீர்குலைந்தன. இந்த நடவடிக்கைகளால் பல்கலைக்கழக கட்டிடங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இராணுவ நடவடிக்கைகளால் ஆய்வக உபகரணங்கள், அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள் போன்றவற்றிற்கு கணிசமான சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது, ஒரு சில கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் உயிரையும் இழந்தனர்.
பல்கலைக்கழகம், போர்வடுக்களின் தடைகளைத் தாங்கிக் கொண்டு, அதன் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்தது, வளர்ச்சியில் ஓரளவு முன்னேற்றமும் கண்டுள்ளது. கிளிநொச்சியல் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடத்திற்கான முன்னாயர்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு முதல் விவசாயப் பீடத்தை நிறுவுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவை வலியுறுத்தி வந்தது. ஆனால் 1985ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டது. 1986இல் விவசாய பீடத்திற்கான கட்டிடங்கள் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் கட்டத் தொடங்கியது. இருப்பினும் துரதிருஷ்டவசமாக 1987இல் அது சீர்குலைந்தது, அதன்பின் உள்நாட்டுப் போரின் காரணமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டிசம்பர்-03, 1990இல் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், கிளிநொச்சியில் பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான பகிரப்பட்ட கட்டிடங்களில் நிறுவப்பட்டது. வேளாண்மைத் துறையின் சேவைப் பயிற்சி நிறுவனத்தின் கட்டிடங்களும் ஆய்வுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு அவற்றின் பௌதீக வளங்களைப் பகிர்ந்து கொண்டன. 1996ஆம் ஆண்டு வரை நான்கு தொகுதி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 1996ஆம் ஆண்டு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக, வன்னியில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிய விவசாய பீடம், இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய பல்கலைக்கழக பேரவை தீர்மானித்தது. 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்வித்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட மௌனிப்பிற்கு பின்னர், 2013ஆம் ஆண்டு புதுப்பொலிவுடன் மறுசீரமைக்கப்பட்ட கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்திற்கு மீள விவசாயபீடம் இடமாற்றம் செய்யப்பட்டது.
பொறியியல் பீடத்தை ஸ்தாபிப்பதற்கான முதல் முன்மொழிவு 1979ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செனட் சபையில் முன்வைக்கப்பட்டு, பல்கலைக்கழக செனட் மற்றும் பேரவை அங்கீகாரம் வழங்கியது. சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டது. இது 1980இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, ‘கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தை நிறுவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க பரிந்துரைத்து” ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. நீண்ட தாமதத்திற்கு பிறகு, 1991ஃ92 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 1988இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனிலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் கிளிநொச்சி போர்வலயமாக தனிமைப்பட்டதால், பொறியியல் பீடத்தின் ஆரம்பம் இடைநிறுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, பிராந்தியம் இயல்பு நிலைக்கு மேம்பாடு அடைவதை வெளிப்படுத்தும் முனைப்பில் பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கற்கைகளுக்கான மீளெழுச்சி முன்னுக்கு வந்தது. 2012ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2013ஆம் ஆண்டு அமைச்சரவை ஒப்புதலுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் முதல் தொகுதி மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பதிவு செய்தார்கள். கிளிநொச்சி அறிவியல் வளாகத்தில் விவசாய பீடத்துடன் பொறியியல் பீடமும் சேர்ந்து கொண்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் விவசாய பீடம், பொறியியல் பீடத்துடன், தொழில்நுட்ப பீடத்தையும் தன்னுள் உள்வாங்கி கொண்டுள்ளது. தொழில்நுட்பம், அதன் இயல்பால், மிகவும் அதிநவீனமானது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், மனிதனின் அன்றாட வாழ்விலும் மகத்தான செல்வாக்கைக் கொண்டுள்ளது. தொழிநுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை கண்டறிந்த கல்வி அமைச்சு தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து 2013ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு ‘தொழில்நுட்ப நெறியை” அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, உயர்கல்வியை ஆரம்பிப்பதற்கான வழியை வழங்குவதற்காக, இலங்கைப் பல்கலைக்கழக அமைப்புகளில் புதிய இளங்கலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு இணங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வியின் முன்னோடியாக, தொழில்நுட்ப பீடத்தை நிறுவுவதற்கு ஒப்புக்கொண்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் தொழிநுட்ப பீடத்தை நிறுவுவதற்கான விண்ணப்பம், 2015 டிசம்பரில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. மார்ச்-29, 2016அன்று திகதியிடப்பட்ட 9/1960 இலக்க வர்த்தமானி அறிவித்தலூடாக உயர்கல்வி அமைச்சர்களின் ஸ்தாபன உத்தரவுக்கு இணங்க யாழ்.பல்கலைக்கழகத்தின் 10வது பீடமாக 2016ஆம் ஆண்டு தொழில்நுட்ப பீடம் ஸ்தாபிக்கப்பட்டது. முதல் தொகுதி மாணவர்கள் 2015/2016 கல்வியாண்டில் தொழில்நுட்ப பீடத்தில் சேர்க்கப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உருவாக்கத்தில், அதுவோர் இந்து பல்கலைக்கழகமாக நிறுவுவதற்கான முனைப்புகள் மேகொள்ளப்பட்டது. எனினும் தமிழ்த்தேசியத்தின் மதச்சார்பற்ற அரசியல் கலாச்சாரம் இந்து பல்கலைக்கழக உருவாக்கத்தை நிராகரித்திருந்தது. எனினும் தமிழர் பண்பாட்டில் இந்து மத போர்வையில் சைவம் ஆழமாக வேரூன்றியதாகும். தமிழ் மீதான பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்பது சைவசமயத்தின் மீதே நிகழ்த்தப்படுகின்றது எனவே, ஈழத்தமிழர்களின் பண்பாட்டை பேண சைவ மதத்தை நெறிப்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. அதுசார் ஆய்வுப்பரப்புகளும் விரிவடைய வேண்டிய தேவை கல்வியாளர்கள் மற்றும் மதப்பெரியவர்களிடையே உருவாகியது. இதனை நிவர்த்தி செய்யும் முனைப்பில், மார்ச்-18, 2019அன்று திகதியிடப்பட்ட 5/2115 இலக்க வர்த்தமானி அறிவித்தலூடாக யாழ்ப்பாணப் பல்கலைக்ககழத்தில் இந்துக் கற்கைகள் பீடம் நிறுவப்படுவதற்கான வழிகாட்டலை உயர்கல்வி அமைச்சு வழங்கியது. இதன் பிரகாரம், ஜூன்-6, 2019அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழக அணுகுமுறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இந்துக் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை பல்கலைக்கழத்தின் வளகமாக ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இன்று தனக்குள் வளாகங்களை உள்ளடக்கியுள்ளதுடன், வளாகத்தினை சுயாதின பல்கலைக்கழகம் வரை தரமுயர்த்தியுள்ளது. வடக்கு மாகாணத்தில் இரண்டாவது அரச பல்கலைக்கழகமாக 2021ஆம் ஆண்டு முதல் தரமுயர்த்தப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக 1997முதல் இயங்கி வந்துள்ளளது. வடமாகாண இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி 1991 இல் வவுனியாவில் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே பின்னர், 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் செய்யப்பட்ட உத்தரவின்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக ஏப்ரல்-1997இல் பயன்பாட்டு அறிவியல் பீடம் மற்றும் வணிக ஆய்வுகள் பீடம் ஆகிய இரண்டு பீடங்களுடன் நிறுவப்பட்டது. 2020இல், 2160/43 இலக்க 30.01.2020 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக தொழில்நுட்ப கற்கைகள் பீடம் நிறுவப்பட்டது. ஈழத்தமிழ்ப்பரப்பில் மேலுமொரு பல்கலைக்கழகத்தின் தேவை உணரப்பட்ட நிலையில், ஜூன்-08, 2021ஆம் அண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், சுயாதீன அரச பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டு வவுனியா பல்கலைக்கழகம் என நிறுவப்பட்டது. வர்த்தமானி அறிவிப்பின்டபடி, ஆகஸ்ட்-1, 2021அன்று முதல் வவுனியா பல்கலைக்கழகம் 17வது அரச பல்கலைக்கழகமாக மாறியது. வவுனியா பல்கலைக்கழகம், மருத்துவ பீடம், சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ பீடம், சுகாதார விஞ்ஞான பீடம், மீன்வளர்ப்பு, மீன்பிடி மற்றும் கடல்சார் ஆய்வுகள், சுற்றுச்சூழல் அறிவியல் பீடம், கால்நடை பீடம், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடம், மற்றும் பட்டதாரி ஆய்வுகள் பீடம்போன்ற உத்தேச பீடங்களை நிறுவுவதுடன் புதிய படிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எதிர்பார்க்கிறது.
போர் ஈழத்தமிழர்களை மாத்திரமின்றி கல்விக்கூடங்களையும் இடம்பெயர செய்திருந்தது. 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகரம் மற்றும் வலிகாமம் பகுதியில் இருந்து வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளுக்கு குடாநாட்டிலும் பெருநிலப்பரப்பிலும் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். வெளியேற்றத்தின் விளைவாக, பல்கலைக்கழக சுற்றுப்புறங்கள் மக்கள்தொகை இல்லாமல், அணுக முடியாததாக மாறியது. பல்கலைக்கழக நிர்வாகம் தற்காலிகமாக கிளிநொச்சியில் உள்ள விவசாய பீடத்திற்கு மாற்றப்பட்டது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நிர்வாகத்தின் உப அலுவலகம் நிறுவப்பட்டது. வெளியேற்றம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு பேரழிவாக நிரூபிக்கப்பட்டது. நூறு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஆய்வுக்கூடம் மற்றும் அலுவலக உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை இழந்தது. 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருநெவேலி வளாகத்தில் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தது.
2024ஆம் ஆண்டு பொன்விழா காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 350 கல்வி ஊழியர்களுடன், 10,500 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களையும் 11 பீடங்களையும் ஆறு அலகுகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளியே கிளிநொச்சியில் ஒரு வளாகத்தையும் கொண்டு இயங்குகின்றது. போர் தின்ற வடுக்களிலிருந்து முழுமையான மீள்ச்சியை பெறமுடியாவிடினும், மெல்ல மெல்ல புதியதொரு எழுச்சியை நோக்கி பயணிக்கின்றமை மறுக்க இயலாத நிதர்சனமாகவே அமைகின்றது.