இந்த சித்தர்கள் யார்? வாழுங் காலத்தில் தன்னலமற்று வாழ்ந்தவர்கள். இனம், சாதி பேதங்கள் கடந்து உலகில் உள்ள மக்கள் பசிப்பிணி அற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள். அவர்கள் இறைவழிபாட்டை எளிமையாக்கிக் காட்டியவர்கள்; ஆடம்பரம், அலங்காரம் தேவையற்றது என்றவர்கள். எளிய வழியே ஏகனை காணும் வழி என்பதே அவர்களின் தத்துவம்.
தமிழகத்தில் வாழையடி வாழையாய் சித்தர்கள் மரபு தொடர்ந்து வந்ததைப் போல் ஈழத்திலும் சித்தர் மரபு இருந்தது. அந்த மரபை தொடங்கி வைத்தவர் கடையிற் சுவாமிகள். ஆனால் அவர் இலங்கையைச் சேர்ந்தவரில்லை. பெங்களுரிலே நீதித்துறையில் பணியாற்றி குருவிடம் தீட்சை பெற்று, அவர் ஆணைப்படி யாழ்.நகர் வந்து, யாழ்ப்பாணக் கடைவீதிகளில் கையில் குடையுடன் நடமாடி ‘கடையிற் சுவாமிகள்’ என போற்றப் பெற்றவர்.
கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார்.
இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும்.
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.
யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது.
சுவாமிகள் தனது உறைவிடமாக பெரியகடைச் சதுக்கத்தினை தெரிவு செய்தார். அது ஒரு பொதுச் சொத்து. அதின் மேற்கு, வடக்கு வீதிகளிலிருந்த வியாபார நிலையங்கள் பெரும்பாலும் வாணிபச் செட்டியார்களுக்குச் சொந்தமாயிருந்தன. அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இயல்பாகவே, தெய்வ பக்தியிலும், அடியார் சேவையிலும், ஆர்வமுள்ளவர்கள். அவர்களில் சிலரே சுவாமிகளின் மகிமையை முதலில் அறிந்து கொண்டனர். முதன்முதலாக சுவாமிகள் வீடு தேடிச்சென்று உணவு கேட்டு அருந்தியது, திரு வைரமுத்துச் செட்டியார் மனையிலாகும். இவர் ஓர் பழைய தொண்டர். இவரின் குரு, பக்தியின் சின்னமாகப் பின்னாளில் தோன்றியதே கந்தர்மட அன்னசத்திரம்.
தம்மை நாடும் மெய்யடியாரிடையே சாதிபேதம், உயர்வுதாழ்வு, செல்வர் வறியர் என்ற வித்தியாசம் பாராது எல்லாருக்கும் ஒரேவித கருணைகாட்டி அவர்களது உடல்நோய்க்கும், மனநோய்க்கும், வறுமைக்கும், பரிகாரம் செய்வதில் அனுக்கிரகம் காட்டத் தொடங்கவே, சுவாமிகளிடம் அடியார் கூட்டம் பெருகியது. ஏழைகள் தங்கள் வீடுகளுக்கும் வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். அவ்வாறு அங்கு செல்லும் போது, அவர்கள் தாம் வழமையாக உண்ணும் மாமிசங்களையும் உணவுகளையும் விருப்புடன் விருந்தாக அளித்தனர். விருப்பு வெறுப்பற்றவரான சுவாமிகள் அவற்றையும் ஏற்றார். இதனால் சைவ மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த சம்பவம் சார்ந்து யோகர் சுவாமிகள் கூறிய சம்பவம் ஒன்றை இங்கே பகிர்கிறோம்.
கடையிற் சுவாமிகளின் உத்தம சீடர்களுள் ஒருவரும், யோகரின் குருநாதருமான, நல்லூர் செல்லப்ப சுவாமிகளுக்கு தமது குருநாதன் மதுபானம் அருந்துகிறார் என்பதைப் பிறர் சொல்லக் கேட்டுச் சகிக்க முடியவில்லையாம். அது அவரால் நம்ப முடியாத விஷயமாகவும் இருந்ததாம். நேரே பரிசோதிக்கக் கருதி ஒரு போத்தல் சாராயத்துடன் குருநாதரைத்தேடி பெரியகடை சென்றார். போத்தலைச் சால்வையில் சுற்றி மறைத்துக்கொண்டு அருகில் உட்கார்ந்ததும், “ஓகோ! நீயும் எனக்குச் சாராய விருந்தளிக்க விரும்பிவிட்டாயா? சரி பின்னாலே மறைத்து வைத்திருக்கும் போத்தலை எடுத்துத் திற. நீயும் நானும் இங்கிருக்கும் அன்பர்களும் எல்லாரும் பகிர்ந்து குடிப்போம்”, என்றாராம். நடுக்கத்துடன் செல்லப்பா சுவாமிகள் போத்தலை முன்வைத்துத் திறந்ததுமே, திராவகம் முழுவதுமே ஆவியாக மாறிக் காற்றோடு கலந்துவிட்டதாம். சீடர் குருநாதரின் பாதங்களை இறுகப்பிடித்துக் கண்ணீரால் கழுவிவிட்டு நல்லூர்த் தேரடிக்குத் திரும்பிவிட்டாராம்.
இதுபோன்ற அற்புத நிகழ்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. அவரது ஊன் எச்சிலை உண்டு நோய் தீர்ந்தோர் பலர்; சித்திகள் பெற்றோர் சிலருமுண்டு. சுதுமலையைச் சேர்ந்த ஒருவர் சோதிட வல்லுனரானார்; இன்னொருவர் புகழ் பெற்ற வைத்தியரானார். மீன் பிடிக்கப் போயிருந்த கரையூர் வாசியான சுவாமிகளது அடியார் ஒருவர், நடுநிசியில் புயல்காற்றினாலும், பெருமழையினாலும் தாக்கப்பட்டு ஆழ்கடலில் அமிழ்ந்திப் போகும் வேளையில் வேறு தஞ்சமின்றி, கருணைமலையான சுவாமிகளைச் சிந்தித்து அலறவே, உடனே, அப்பக்தனது குடிசைக்குச் சென்று சவளக்கோல் ஒன்றை எடுத்து, “ஏலேலோ”ப் பாடி முற்றத்து மண்ணைக் கிளறி, அந்தப் பக்தனின் உயிரை அவர் காப்பாற்றிய அருட் கதை கேட்போர் உளத்தை உருக்கும்.
இவ்விதம் முப்பது ஆண்டளவு யாழ்ப்பாண மக்களுக்கு அல்லல் களைந்து, அளப்பரும் அத்யாத்ம வழிகாட்டி, ஞானகுரு பரம்பரைக்கு வித்திட்ட இந்த மகானுபவர், கர வருடம், புரட்டாசி மாதத்தில் பூரணையும் பூரட்டாதி நட்சத்திரமும் பொருந்திய புண்ணிய வேளையில் மகாசமாதியடைந்தனர். சுவாமிகளுடைய சமாதிக் கோயில் வண்ணார்பண்ணை நீராவியடியில் உள்ளது.