சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனுஸ்ரிக்கப்படுகின்றது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சர்வதேச சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்கள் என்று கூறுகிறது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய, 1991 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச முதியோர் தினமும் குறித்த நாளில் இணைத்து கொண்டாடப்படுகின்றுது.
உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளாரவர்களில் சிறுவர்களும், முதியவர்களும் உள்ளடங்குகின்றனர். எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களினதும், முதியவர்களினதும் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் இந்த தினத்தினை கொண்டாடுகின்றனர்.
இதேவேளை, உலக அளவில் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகிலுள்ள சிறுவர்களில் 16 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். 10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 2 மில்லியன் பேர்வரையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களில்; 56 % சிறுமிகளாக உள்ளனர். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழக்கின்றது. உலகம் முழுவதிலும் மரணிக்கின்ற ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50% போசாக்கின்மையால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர்களுக்கு எதிராக மேற்க்கொள்ளப்படும் பொருளாதார சுரண்டல்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உரிமை, பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாக்கும் உரிமை, சித்திரவதைகள் போன்ற தண்டனைகளில் இருந்து தம்மை தவிர்த்துக் கொள்ளும் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்குமான உரிமைகள் அனைத்து சிறுவர்களுக்கு உரித்தானவையாகும்.
இன்றைய காலத்தில் சிறுவர் மீதான துஸ்பிரயோகம் என்ற விடயமானது ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கும் பேராபத்தான விடயமாக பார்க்கப்படுகின்றது. சிறுவர் துஸ்பிரயோகம் என்பது சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அனைத்துவித தவறுகளையும் உள்ளடக்குகின்றது. சமூக கட்டமைப்புகள் அடிப்படையில் ஆண் பிள்ளைகளானாலும், பெண் பிள்ளைகளானாலும் எந்தவொரு வயது வேறுபாடுகள் இன்றி தினம் தினம் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் நடந்தேறிய வண்ணமுள்ளன. விபரமறியாத சிறுவர் – சிறுமியரை வயதில் மூத்தவர்கள் தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மறுபுறத்தில் போட்டித்தன்மை வாய்ந்த கல்வியின் பிடியில் குழந்தைப் பருவம் சிக்கியுள்ளதுடன், இன்னொருபுறத்தில், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆபாச மற்றும் கொடூர காட்சிகளைக் கொண்ட சினிமா, போதை மற்றும் புகைத்தல், ஏனைய சமூகக் காரணிகள் காரணமாக சிறுவர்கள் பல்வேறு பாதிப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.
எமது நாட்டை பொறுத்த வரையில் பொருளாதார சிக்கல் நிலைமை காரணமாக சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், அவர்களின் கல்வியினை தடைசெய்தல், வீட்டுவேலைக்கமர்த்தல், பாலியல் திருமணம் (சிறுவர் திருமணம்) போன்ற சிறுவர் உரிமைகளை மீறும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நிகழ்கின்றன.
இலங்கையில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் , 5 முதல் 17 வயது வரை 45 இலட்சத்து 71 ஆயிரத்து 442 சிறுவர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுள், 41 இலட்சத்து 18 ஆயிரத்து 781 சிறுவர்கள் பாடசலைக்கு செல்கின்றதாகவும், ஏனைய 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 பேர் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சிறுவர்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.9 சதவீதமாக இது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 704 சிறுவர்கள் வேலை செய்பவர்களாக உள்ளாகவும், அவர்களுள், 59 ஆயிரத்து 990 சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றபோதும்;, சிறுவர் தொழிலாளர்களாக அவர்கள் வகைப்படுத்தப்படவில்லை. எஞ்சியுள்ள 43 ஆயிரத்து 714 சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் தொழிலாளர்களுள், 4 ஆயிரத்து 707 பேர் மட்டுமே அபாயகரமற்ற தொழிலில் ஈடுபவதாகவும், ஏனைய 39 ஆயிரத்து ஏழு சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபடுவதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலான வகைப் படுத்தல்களின்படி, 10 இலட்சத்து 85 ஆயிரத்து 908 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும் செயற்பாட்டில் மட்டும் ஈடுபட்டுள்ளனர்.3 இலட்சத்து 17 ஆயிரத்து 158 சிறுவர்கள் வீட்டுப் பராமரிப்பு பணிகளில் மட்டும் ஈடுபடுகின்றனர். 6 ஆயிரத்து 580 சிறுவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகின்றனர்.
29 இலட்சத்து 92 ஆயிரத்து 582 சிறுவர்கள், பாடசாலைக்கு செல்வதுடன், வீட்டு பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.38 ஆயிரத்து 111 சிறுவர்கள் பாடசாலைக்கு சென்றுகொண்டு, வீட்டு பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், பொருளாதார நடவடிக்கைகளிரும் ஈடுபடுகின்றனர். 56 ஆயிரத்து 834 சிறுவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், வீட்டுப் பராமரிப்பு பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.2 ஆயிரத்து 179 சிறுவர்கள் பாடசாலைக்கு சென்றுகொண்டு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுகின்றதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களது உரிமைகளும் மறுக்கப்படுகின்றமை வேதனைக் குரியது மட்டுமல்லாமல், அது தண்டனைக்குரிய பாரிய குற்றமாகவும் கருதப்படுகின்றது.அதேவேளை, சிறுவர்களுக்கெதிரான கொடூரமான தண்டனைகள் அவர்கள் மத்தியில் உள ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன்,இப் பாதிப்புக்கள் அவர்களது இளமைப் பருவத்திலும் அதிகளவு தாக்கம் செலுத்துவதாக ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 60 கோடி முதியவர்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது, 2050ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் 3ஃ1 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் உலகில் 1200 கோடி மக்கள் வயோதிபர்களாக இருப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் முதியோர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டளவில் 22% அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சுமார் 22 இலட்சம் முதியோர் உள்ளனர். மொத்த சனத்தொகையில் இது 13 சதவீதமாகும்.
முதியவர்களை அவர்களின் இயலாமையின் போது சரியாக கவனிக்காமை, சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காமை, உரிய வகையில் – உரிய நேரத்திற்கு உணவளிக்காமை, அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருத்தல், அவர்களின் கருத்துக்களுக்கு செவிகொடுக்காமை, துன்புறுத்தல், வார்த்ததைகளால் காயப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் மிகவும் பாதிக்கின்ற விடயங்களாக அமைகின்றன.
நாம் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் செலவிடும் நேரத்தினை குறைத்து – சிறிய நேரத்தையாவது ஒதுக்கி முதியவர்களுடன் உறவாடுவதில் செலவிடுவோமாக இருந்தால் அவை அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுடக் மாத்திரம் அல்லாது, அவை எமது எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாகவும் அமையும்.
“காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்” என்ற பழமொழியைப்போல நாம் எம்முடைய வீட்டில் வசதிக்கும் முதியோரை எவ்வாறு நடத்துகின்றோமோ, அதனை பார்த்து பின்பற்றி எம்முடைய பிள்ளைகளும் எம் நடாத்துவார்கள் என்பதை மனதில் இருந்தி செயற்படுவோம். உலகளவில் சிறுவர்களின,; முதியவர்களின் உரிமைகள் மீறப்படும் போது அவர்களால் தங்களை வெளிப்படுத்த முடிவதில்லை. நலிவுற்றவர்களாக மற்றும் தீங்கு விளைவிக்கப்படும் அல்லது சுரண்டப்படும் அபாயத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோர்களை மீட்க வேண்டியது தேவை எம் அனைவருக்கும் உள்ளது.
சிறுவர்களை கட்டாய வேலைக்கமர்த்தல், உடல், பாலியல் மற்றும் உள – உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக அதிகார பதவிகளில் இருப்பவர்கள், பெற்றோர், ஆசிரியர், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அதேசமயம் முதியோர் விடயத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு, உணவு, உறைவிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சமூகம் மற்றும் சட்டரீதியான பாதுகாப்பளித்தல், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை முதியோர் அனுபவிக்க வழிவகை செய்தல் போன்ற முதியோர் நலன்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதும் அவசியமாகின்றது. வேறுபட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியில் ஆதரவற்றவர்களாக மாறும் வயதான முதியோரைக் கவனித்துப் பராமரிப்பதற்கு மனிதாபி மானரீதியில் பங்களிக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச ரீதியான முதியோர் பராமரிப்புச் சேவையிலிருந்து அறிவு மற்றும் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு விரிவான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதும் அத்தியாவ சியமானதாகும்.
சிறுவர்களின் எதிர்காலத்தை வளம்மிக்கதாக ஒளி பெறச்செய்வதும், முதியோர்களை பாதுகாப்பதும் சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைகளினதும் பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் தம்மால் இயன்ற திடசங்கற்ப்பத்தினை ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களும் மேற்கொள்வார்களாக இருந்தால் அதுவே இந்த சிறுவர் மற்றும் முதியோர் தினத்தின் வெற்றியாக அமையும்.