இதழ் 76

ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு

ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள். கூட்டமாக வாழ்ந்து வருதல் அவர்களிற்கு பாதுகாப்பைத் தந்ததோடு, குழுவாக வேட்டையாடி அதன் மூலம் கிடைக்கின்ற உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். நாகரீகத்தில் மேம்பட்ட பின்னரும் கூட மனிதர்கள் கூட்டங்கூட்டமாக இணைந்து கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கேற்ப கூட்டாக விவசாயம் செய்து உணவை பகிர்ந்துண்டு பண்டமாற்று முறையில் பொருட்களை பரிமாறி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

ஏனைய விலங்குகளால் ஆபத்து நேரும் போது ஒன்றாகத் திரண்டு அதனை எதிர்கொள்கின்றன. காடுகளில் வாழும் விலங்குகளான யானைகள், மான்கள், சிங்கங்கள் அனைத்துமே கூட்டாக வாழ்பவையே. ஒற்றுமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்கும் பறவையினம் காகம். காகங்கள் ஏதேனும் சிறு உணவைக் கண்டால் கூட, சத்தமாகக் கரைந்து தன் கூட்டத்தை அழைத்தே உண்ணும். மேலும் தேனீக்கள் ஒற்றுமைக்கு மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு. தேனீக்கள் தனித்தனியாக தேனை சேகரித்த போதும், அதனை சேமித்து வைக்கும் வதையை சேர்ந்தே ஒற்றுமையாக அமைக்கின்றன. தமது வாழ்விடத்தை ஏதேனும் ஒரு ஆபத்து நெருங்கும் போது கூட்டாகச் சென்று தாக்குகின்றன. அத்துடன் எறும்புகள், கறையான் போன்றவையும் ஒன்றாகச் சேர்ந்து மண்ணைக் குடைந்து வாழ்விடத்தை அமைக்கின்றன. இவ்வாறு ஐந்தறிவு கொண்ட விலங்குகள் பறவைகள்
கூட ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒற்றுமையாக வாழ்கின்றன. ஆனால் பகுத்தறிவும் நிரம்பிய மனிதர்களின் இன்றைய நிலை எமது சமூகத்தில் எவ்வாறு உள்ளது?

ஒரு குடும்பமாகட்டும், ஒரு ஆலய நிர்வாகம் ஆகட்டும், ஒரு சங்கமாகட்டும், ஒரு சபை ஆகட்டும், ஒரு அமைப்பு ஆகட்டும் அல்லது ஏதாவது ஒரு சிறிய மக்கள் கூட்டமாகட்டும் அங்கே ஆளுக்கு ஒரு வழியில் பயணித்து மற்றவர் செயலில் தவறுகள் கண்டுபிடித்து சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் போக்கே அதிகமாக உள்ளது.

பண்டைய காலம்தொட்டு இன்று வரை புலவர்களும், அறிஞர்களும் ஒற்றுமையின் பலத்தை வலியுறுத்தி வந்துள்ளார்கள். முண்டாசுக் கவிஞனாகப் போற்றப்படும் பாரதியார், “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” என்றார். அதாவது ஒற்றுமை இல்லையேல் அனைவரும் தாழ்ந்து விடுவர் என்று குறிப்பிடுகின்றார். அதுமட்டுமின்றி ஒளவையார் தனது நூலாகிய கொன்ற வேந்தனில் “ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்கின்றார். அனைவருடனும் பகைமையை வளர்க்காது வாழ்வதே சிறந்ததாகும். ஏனெனில் ஊருடன் பகைமை பாராட்டினால், மன அமைதியுடன் வாழ இயலாது.

எனவே ஒரு கூட்டம் தான் ஒற்றுமையாக இல்லாமல் இன்னொரு கூட்டத்திடம் இருந்து எதனையுமே பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள் ஒவ்வொரு விருப்பங்கள் இருந்தால் எல்லாருமே தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில்தான் இயங்குவார்கள். கூட்டத்திற்காகவாவது ஒற்றுமையாகி தங்கள் சுய விருப்பு வெறுப்புக்களை மறந்து விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராக வேண்டும். இதுவே முதற்படி. இது சாத்தியமாகாமல் எதுவுமே சாத்தியமாகாது.

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர்களின் வாக்கிற்கமைய ஒற்றுமையே அனைவருக்கும் அவசியமானது. இயந்திரமயமான இந்த மனித வாழ்க்கை அழகாக மாற வேண்டுமாயின் நாம் அனைவரும் விட்டுக்கொடுப்புடன், ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழவேண்டும். அன்பின் வழியாக ஒற்றுமையுடன் ஒன்றாகி எண்ணியவற்றை அடைவதே எமக்கு இருக்கும் ஒரே வழி. சிந்தித்து செயற்படுவோம்.

Related posts

என் கால்கள் வழியே… – 09

Thumi202121

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது

Thumi202121

ஜஸ்பிரித் பும்ரா கடந்து வந்த கடினமான பாதை

Thumi202121

Leave a Comment