இந்தியாவிற்கான பயணத்தில் அதிகம், எனது பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுடன் இணைந்த ஒரு தேசத்திற்குள் பயணப்படுகின்றேன் என்ற எண்ணங்களுக்குள்ளேயே பயணம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக வட இந்தியா சார்ந்த ஹிந்தி மொழி மாத்திரமே எனக்குள் முரண்படக்கூடியதாக எண்ணியிருந்தேன். எனினும் எண்ணங்களும் நடைமுறைகளும் முரண்படுவதை ஆரம்பம் முதலேயே உணரக்கூடியதாக இருந்தது. குறிப்பாக உணவு மற்றும் இந்து மதக் கடவுள்களில் வேறுபாட்டை முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இப்பதிவு மதங்களில் கடவுள்களின் தொடர்ச்சியாக பண்டிகைகள் விரதங்களின் வேறுபாட்டை விபரிக்கிறது.
இந்தியா பல நாடுகளின் சேர்க்கை என்பதை இந்தியாவை பழகுகையிலேயே உணர்ந்து கொண்டேன். முன்னர் ஒருமுறை பேஸ்புக் செய்தியில பார்த்த ஞாபகம், ‘இந்தியாவின் மாநிலங்கள் ஒவ்வொன்றின் சனத்தொகையும் வேறு நாடுகளின் சனத்தொகைக்கு நிகராக அமைகின்றது.’ எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டு சனத்தொகை ஜேர்மன் நாட்டின் சனத்தொகைக்கு நிகராக அமைகின்றது. இந்தியாவின் மிகவும் சிறியதொரு நிர்வாக மாநிலமாகவே டெல்லி காணப்படுகின்றது. டெல்லி ஒன்றிய பிரதேசத்தின் சனத்தொகையும் இங்கிலாந்து நாட்டு சனத்தொகையும் சமமாக காணப்படுகின்றது. இவ்வாறே அனைத்து மாநிலங்களும் மற்றும் ஒன்றிய பிரதேசங்களும் காணப்படுகின்றது.
பல நாடுகளின் சேர்க்கை மாதிரியை கொண்டுள்ள இந்தியா, மொழி ரீதியாக மாத்திரமன்றி பண்பாட்டு ரீதியாகவும் பல மாறுதல்களையும் வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. மொழியிலும் வட இந்தியாவை ‘Hindi Belt’ என ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களாக சுருக்கி விட முடியாது. ஒவ்வொரு மாநிலமும், மாநிலத்துக்குள் சில பிரதேசங்களும் வேறுபட்ட பேச்சு மொழிகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக மத்திய பிரதேசத்தில் ப்ராஜ், மலேய், அகிதி, பஹிலி, புந்தேலி, சதிஷ்கடி என்பனவும் உத்தர பிரதேசத்தில் ப்ராஜ், போஜ்பூரி என்பனவும் சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றில் பெரும்பாலனவற்றுக்கு எழுத்து வடிவம் காணப்படுவதில்லை. ஒரு சில முதியவர்கள் பிரதேச மொழி மாத்திரமே அறிந்தவர்களாயும் உள்ளார்கள்.
இந்தியாவை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் அகண்ட இந்திய உபகண்டத்தை ஆள்வதற்காக வேறுபட்ட விடயங்களை ஒன்றாக்கி பொதுப் பெயரிட்டு உள்ளார்கள். ஹிந்தி மொழியும்; இந்து மதமும் அவ்வாறானதாகவே அமைகின்றது. வேறுபட்ட மத நம்பிக்கைகள் வழிபாடுகளை ஒன்று சேர்த்து இந்து என்ற அடையாளத்துக்குள் சுருக்கி உள்ளார்கள். இந்த வேறுபாடு வடக்கு-தெற்குக்குள் மாத்திரம் பிரதிபலிப்பதில்லை. வடக்கினுள்ளேயே முரணான விடயங்கள் பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக வட இந்தியா ஸ்ரீராமரை பூசிக்கின்றது; தெய்வீக நிலையில் உயர்வாக கொண்டாடுகின்றது. அதே வட இந்தியாவில் இராவணனும் பூசிக்கப்படுகின்றான்; தெய்வீக நிலையில் கொண்டாடப்படுகின்றான்.
வட இந்தியாவில், (பின்னர் அறிந்து கொண்டேன் தென்னிந்தியாவிலும் சில இடங்களில்) தசரா எனும் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாங்களும் தசார கொண்டாடுகிறோம். வேறு பெயர். வேறுபட்ட நோக்கம். ஆம். நவராத்திரியின் பத்தாம் நாள் தசரா என அழைக்கப்படுகின்றது. நாம் சூரன்போர் என்ற பெயரில் அம்மன் மகிசா சூரனை வதம் செய்வார். எங்க ஊரில, இணுவிலில், அது இன்னும் சிறப்பு. ஊர் முழுக்க சேர்ந்து பக்தியாகவும் திருவிழாவாகவும் கொண்டாடி தீர்ப்போம். நவராத்திரியின் இறுதி நாள் சூரன் போரில் இணுவில் சிவகாமி அம்மன் கோயிலில் மகிசா சூரவதம் இடம்பெறும். வடக்கு வீதியில் அம்மனின் சிங்க வாகனத்தின் வாய்க்குள் சூரனின் குடல். சிங்கத்தின் காலுக்குள் சூரனின் தலை துடிக்கும். சூரனின் வயிறு கிழிக்கப்பட்டு சிவலிங்கம் காட்சி தரும். எனினும் சூரன் மரணிக்கவில்லை. நெல்லி மரத்தில் மறைந்து கொண்டார் என்பது நம்பிக்கை. மறுநாள் சூரவதத்திற்கு சிவகாமி அம்மன் கிழக்கு இணுவிலில் இருந்து மேற்கு இணுவிலில் உள்ள கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்வார். வாழைவெட்டு என்று அழைப்போம். வாழை மரம் நெல்லி மரமாக கற்பனை பண்ணி வெட்டப்படும். மாலையில் கிராமத்தை சுற்ற ஆரம்பிக்கும் ஊர்வலம் நடுச்சாமத்திலேயே முடிவுறும். கந்தசாமி கோவிலில் வாழை வெட்டு இடம்பெற்று, சிறிது நேரம் அம்மன் அங்கு குளிராத்தி, மீள அம்மன் கோயிலுக்கு வருவது நடுச்சாமம் ஆகும். இளையோர்கள் முகமூடி அணிந்தும் முகமூடி அணியாதும் ஆடிப்பாடி மகிழ்வது, அது ஊரின் பெருந்திருவிழா. சரி. நாங்கள் டெல்லிக்கு திரும்புவோம். டெல்லியில் நவராத்திரி இறுதி நாளாக தசாரா கொண்டாடப்படுகின்றது. இங்கும் சூர வதம் தான். இங்கு சூரனாக இராவணனும், வதம் செய்யும் நிலையில் இராமனும் காணப்படுகின்றார்கள். தசரா இங்கு பெருந்திருவிழா. வெடிகள் கொழுத்தி பெரும் ஆராவாரம். 2023இல் தசரா கொண்டாட்டம் பற்றிய அறிமுகம் கிடைக்கையில் பெரும் ஆச்சரியம், ‘நவராத்திரிக்கும் இராமருக்கும் இடையில் என்ன தொடர்பு’ என்று. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு விரதம் இருக்கின்றோம். இங்கு இராமர் எப்படி வந்தார்? வட இந்தியாவில் பண்டிகைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் இராமர் முதன்மைப்படுத்துவது இயல்பானதாகும். அதாவது நவராத்திரி இறுதி நாளிலேயே இராவணனை இராமன் வதம் செய்ததாக நம்பப்படுகின்றது. அதனையே வட இந்தியாவில் தசராவாக கொண்டாடுகிறார்கள்.
தீபாவளி கொண்டாட்டமும் வட இந்தியாவில் வேறுபட்ட நோக்கங்களையே போதிக்கின்றது. தீபாவளி கொண்டாட்டத்திலும் இராமரே முதன்மைப்படுகின்றார். நவீன தமிழ்த் தேசியத்தில் தீபாவளி எமது பண்டிகையா? இல்லையா? என்பதே பெரும் வாதமாக காணப்படுகின்றது. அதாவது எமது நம்பிக்கையில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி எனக் கொண்டாடப்படுகின்றது. நவீன தமிழ்த் தேசியத்தில் ஆரிய முரண்பாடுடன் கடவுள்கள் எல்லாரையும் ஆரியர்களாகவும்; சூரர்களை தமிழ் மூத்த குடிகளாகவும் விவரிக்கும் புதிய மரபு காணப்படுகின்றது. இவ்புதிய மரபுக்குள் தீபாவளி சார்ந்த சச்சரவும் காணப்படுகின்றது. வடஇந்தியாவில் தீபாவளிக்கு புது கதையே சொல்லப்படுகின்றது. இராமர் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு 14 வருட வனவாசத்திற்கு பின்னர் அயோத்தி திரும்பிய நாளாக நம்பப்படுகின்றது. இராமரை வரவேற்க தீபங்களேற்றி கொண்டாடப்படுகின்றது. தசராவில் இராவணனை வதம் செய்து ஒரு மாத கால இடைவெளியில் அயோத்தி திரும்பியதாக நம்பப்படுகிறது.
இராமர்-இராவணன் பூசிப்பு இந்தியாவின் பன்மைத்துவ சிறப்பு ஆகும். இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் தசராவில் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை இராவணனின் உருவ பொம்மைகளை எரித்து நினைவுகூரும் வகையில் கொண்டாடி தீர்ப்பார்கள். எனினும் வடஇந்தியாவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இராவணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களில் மக்கள் கூடி அவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த இடங்களில், ராவணன் ஒரு சிறந்த அறிஞராகப் பார்க்கப்படுகிறார். மேலும் இந்த குறிப்பிடத்தக்க நாளில் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இராவணன் பிறந்த நிலமாகவும், ஆட்சி செய்த நிலமாகவும், மனைவி மண்டோதரியின் நிலமாகவும், இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடைபெற்ற நிலமாகவும் வட இந்தியாவில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ராஜஸ்தான் என பல மாநிலங்களிலும் இராவணனுக்கு ஆலயமும் பூசிப்பும் இடம்பெறுகின்றது. இதுவே இந்தியாவின் பன்மைத்துவத்தின் அழகு. இராமரையும் கொண்டாடுகிறது. இராவணனையும் கொண்டாடுகிறது. என் நண்பன் சந்தோசன் ஒரு சந்தர்ப்பத்தில எங்களுக்கு கூறியது தான் ஞாபகம் வருகிறது. ‘கொண்டாட்டம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு. அதில் காரணங்கள் தேவையில்லை. கொண்டாடி மகிழ்வோம்.’
இந்தியாவின் பன்மைத்துவத்தில் ஒற்றுமையை இவ்வாறே பேணுகிறது. அர்த்தங்களுக்குள் மூழ்கவில்லை. அவரவர் நம்பிக்கைகளை அவரவர் வரையறைக்குள் அனுமதிக்கிறது. இலங்கை மக்கள் கனிசமாக முன்னேற வேண்டியுள்ளது. இந்திய மக்களிடம் கற்க வேண்டியும் உள்ளது.