இதழ் 78

இலங்கை கிரிக்கெட் அணியில் சாதிக்கும் தமிழ் வீரர்கள்

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் அணியொன்றில் மூன்று தமிழர்.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் ஆசியக் கிண்ணப் போட்டியில். சாருஜன் (St.Benedicts – Colombo ), நியூட்டன் (Central College – Jaffna ), மாதுளன் (St.John’s College – Jaffna ) ஆகிய மூவருமே ஆடுகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற நேபாளத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு கிரிக்கெட் போட்டியில் 55 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ப்ரவீன் மனீஷ, ரஞ்சித்குமார் நியூட்டன், குகதாஸ் மாதுளன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது. கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் அணித் தலைவர் ஷாருஜன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 99 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். 3ஆவது விக்கெட்டில் விமத் தின்சாரவுடன் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாருஜன், 4ஆவது விக்கெட்டில் லக்வின் அபேசிங்கவுடன் மேலும் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். லக்வின் அபேசிங்க 50 ஓட்டங்களைப் பெற்றார். ஷாருஜன், லக்வின் ஆகியோரைவிட கவிஜ கமகே 37 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

234 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மயன் யாதவ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 90 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார். ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது. பந்துவீச்சில் ப்ரவீன் மனீஷ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாழ். மத்திய கல்லூரி வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஹாஸ் தெவ்மிக்க 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதே சமயம், 17 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச்
சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில், அறிமுகப்போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். இலங்கை விஜயம் மேற்கொண்டு விளையாடி வரும் பங்களாதேஷ் 17 வயது அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம் பெற்றது. மழை காரணமாக 42 ஒவர் குறைக்கப்பட்டு போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 37.5 ஒவர்களில் 141 ஒட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது. இப் போட்டியில் யாழ்.வீரா் விக்கினேஸ்வரன் ஆகாஷ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு வெவ்வேறு வயது பிரிவுகளில் நான்கு இளம் தமிழ் வீரர்கள் சாதித்து இருப்பது பல செய்திகளை சொல்லாமல் சொல்கிறது. இது தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவென்ற கோட்டா அடிப்படையில் வழங்கப்பட்டதோ, நல்லெண்ண வெளிப்பாட்டில் வழங்கப்பட்டவொன்றோ, மாற்றமோ அல்ல. கடந்த சில வருடங்களாகவே தம் கல்லூரி அணிகளுக்காக சிறப்பாக ஆடி, கிடைத்த வாய்ப்புக்களில் எல்லாம் தம்மை வெளிப்படுத்தி 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் பதினொருவரில் மூவராக இடம்பிடித்துள்ளனர் இத்தம்பியர். இம்மூவரின் ஒவ்வொரு ஆட்டமும் இனி வரும் ஒவ்வொரு தமிழ் பேசும் கிரிக்கெட் வீரர்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கவேண்டும்.

Related posts

உலகின் பேரழகின் இரகசியம் தெரியுமா?

Thumi202121

ஈழத்து மாணவன் கண்டுபிடித்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம்

Thumi202121

தேசியளவில் சாதிக்கும் யாழ் இந்துவின் மைந்தர்கள்

Thumi202121

Leave a Comment