இதழ் 79

புவியில் ஆள் செய்யாததையும் நாள் செய்யுமாம்

2024! நாம் போக நினைத்தது எங்கே?
ஆனால் வந்து நிற்பது எங்கே?

“சாகாலாம் என்று கடலிலே விழுந்தவன்
கைநிறைய முத்துக்களோடு திரும்புவதும் உண்டு.
முத்து எடுக்கச் சென்றவன் செத்துப்போனதும் உண்டு.
நோக்கம் உன்னுடையது.
ஆக்கம் அவனுடையது”
இது கவியரசு வாசகம்!

நம் பாதையை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. எம் பாதைகள் தான் எம்மை தேர்ந்தெடுத்துள்ளன.

கடந்த வருடத்தில்
சிலர் சிறகுகள் பெற்றோம்.
ஆனால் கரங்களை இழந்துவிட்டது போல் உணர்ந்தோம்.

கன்னங்கள் வலிக்க புன்னகைத்தோம்.
போலிப்புன்னகையே ஜீவனோபாய பொதுவழி என்று நம்பத்தொடங்கினோம்.

பல விளக்குகளை ஏற்றிக்கொண்டோம்.
ஆனால் இரசிக்க மனமின்றி கண்களை மூடிக் கொண்டோம்.

நேற்று எல்லாம் கிடைத்தது.
இன்று அதனினும் அதிகம் பறிபோனது.

பின்னால் திரும்பிப் பார்க்கிறோம். இது நடந்து முடிந்த இந்த ஒருவருட கதை அல்ல. வருடாவருடம் இதுவே கதை.

பிறகு என்ன நம்பிக்கை 2025 இன் மேல்.

எதற்கு இத்தனை வரவேற்பு ஆரவாரங்கள்..

நிறைகுடம் வைத்து வரவேற்று நாம் என்ன கண்டு கொள்ளப் போகிறோம்…

நின்று நிதானமாக இன்னுமொருமுறை பின்னால் திரும்பி பாருங்கள்.
தொட்டிலில் கிடந்த நாள் வரை சென்று பாருங்கள்.
நினைவுகளை மீட்டுங்கள்…

தாலாட்டிலும், ஓராட்டிலும் கண்ணயர்ந்த காலங்கள்..
தீத்தி விடப்பட்ட தீஞ்சுவை…
கைபிடித்து எழுத்தறிவித்த குரு..
பிஞ்சில் வெடித்த கோபத்தையும் பிரளியையும் பொறுத்து இரசித்த உற்றார் சுற்றார் எல்லோரையும் நினைத்துப் பாருங்கள்..

அப்போது போல் இப்போது எதுவுமில்லை. இருக்கவும் முடியாது. இருந்தாலும் நினைத்துப் பாருங்கள்..

பள்ளிக்கூடம்.. எல்லோருக்குமான நினைவுப் பொக்கிசம். பருவங்கள் எம்மை ஆட்டுவித்த காலம். காதல் என்னும் மாயவிளையாட்டில் திளைத்திருந்த காலம். மாயங்கள் உண்டாக்கிய காயங்கள்.. காயங்களிற்கு மருந்து தடவிய நட்பின் கருணைக் கரங்கள்.. எல்லாம் தொலைவில்.. வெகுதொலைவில் ஞாபகத்தில் உள்ளன.

விட்டுவிட்டு வந்ததை நினைத்து பெருமூச்சு விடுகிறோம். நினைத்தாலும் செல்ல முடியுமா மீண்டும்..
முடியாது..
காலநதி எப்போதும் ஒருவழிப் பயணம் தானே.

நம் வாழ்வில் கடைந்த அனுபவக்கடலில் அமிர்தத்தை விட ஆலகாலத்தை தான் அதிகம் கண்டு கொண்டோம். ஆனாலும் நாம் சாகவில்லையே.
ஆலகாலத்தை மிடரினில் அடக்கி மீண்டு வந்துவிட்டோமல்லவா?

மீண்டு வருவதே வாழ்வில் வெற்றி!
இப்போது இன்னுமோர் ஆண்டிற்கு மீண்டு வந்துள்ளோம். வாழ்நாளின் இத்தனை ஆண்டுகளை வென்று வந்துள்ளோம்.
இப்போது சொல்லுங்கள் .. புதிய ஆண்டை வரவேற்பது நம் வெற்றியின் கொண்டாட்டமல்லவா?

இதழ் வாசல் முகப்பில் நிறைகுடம் வைத்து
பிறந்த வருடத்தை வரவேற்பதும் எம் இதழ்குழுவின் வெற்றிப்பயணத்தின் ஒரு குறியீடல்லவா?

நடுச்சபையில் மானபங்கமடைந்த பாஞ்சாலி அன்றே தன் உயிரை மாய்த்திருக்கலாமல்லவா? எதனால் இந்த உலகில் இன்னும் வாழவேண்டும் என்று நினைத்தாள்?

அசோக வனத்தில் அலங்கோலமே உருவாய்க்கிடந்த அயோத்தியழகி எதற்காக உயிர் கொண்டு காத்திருந்தாள்? எதற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

இன்னும் எத்தனையோ கதைகளில் துயரத்தின் உச்சத்தையே தொட்டுவிட்ட கதாபாத்திரங்கள் இன்னுயிரை மாய்க்காமல் எந்த நம்பிக்கையில் உயிர் காத்து நின்றனர் என்பதை எண்ணிப்பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.

‘புவியில் ஆள் செய்யாததையும் நாள் செய்யும்’

நாட்களின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையே எல்லாவற்றிற்கும் காரணம்.. என்றோ ஒரு நாள் எல்லாம் மாறும் என்பது சாதாரண நம்பிக்கை அல்ல.

அப்படியொரு நாள் எல்லோர் வாழ்விலும் இந்த ஆண்டில் வரவேண்டும் என்பதே எம் வேண்டுதல்.

எவ்வித வர்க்க வேறுபாடும் இன்றி எல்லோரும் சமனாய் நிறைவாய் வரமளிக்க வருகிறது ஒரு நிறைவர்க்க ஆண்டு.

ஆம்.. எம் வாழ்நாளிலே நாம் காணப்போகிற.. வாழப்போகிற ஒரே நிறைவர்க்க ஆண்டு 2025 மட்டுமே.

வாழ்வின் வளமான நினைவுகளை தந்து வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் செழிப்பான ஆண்டாய் எல்லோருக்கும் 2025 அமையப்போகிறது! எமதருமை வாசகர்களிற்கு வாழ்த்துகள்!

Related posts

இருக்கும் இடத்திலேயே எல்லாம் இருக்கிறது.

Thumi202121

மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆன்மீக அன்னை சைவத் தமிழ் உலகின் வரலாற்று நாயகி

Thumi202121

ஓய்வு பெறுகிறார் கிரிக்கெட் நிபுணர் அஸ்வின்

Thumi202121

Leave a Comment