எல்லாத் தாவரங்களும் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. ஐரோப்பிய குளிர் நாடுகளில் காய்த்துக் குலுங்கும் அப்பிள்கள் எமது மண்ணில் காய்ப்பது இல்லை. அதே போல எமது மண்ணில் வாழையடி வாழையாக இனம் பரப்பும் வாழை மரங்கள் ஐரோப்பிய தேசங்களில் வளர்வதே இல்லை. நாம் வாழும் உலகம் ஒன்றுதான் என்றாலும் பிரதேசங்களுக்கு பிரதேசம் சூழல் வேறுபாடானது. மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளும் அவ்வாறு தான். பென் குயின்களும், துருவ கரடிகளும் எமது பிரதேசத்தில் காணக் கிடைக்காது. அதே போல் செண்பகங்களையும், செம்மறியாடுகளையும் ஐரோப்பிய குளிர் நாடுகளில் பார்க்க இயலாது. மனிதர்கள் மட்டும் குளிரேற்றிகள் மூலமும் சூடேற்றிகள் மூலமும், ஆடை வகைகள் மூலமும் எந்தப் பகுதியிலும் வாழக்கூடியவாறு தன்னை வருத்தி காப்பாற்றிக் கொள்கின்றான்.
மனிதன் உள்ளிட்ட விலங்குளாகட்டும், பறவைகள் ஆகட்டும், புல், பூண்டு, செடி, கொடி, மரம் என தாவரங்கள் ஆகட்டும் தாம் உருவான சூழலில் ஆரோக்கியமாக வாழ்வதற்கே இயற்கை அவர்களுக்கு வழி காட்டியிருக்கிறது. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அந்த சூழலில் அளித்திருக்கிறது. ஆனால் மனித மனம் என்ன செய்கிறது? அலை பாய்கிறது. இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை என்பது மாட்டிற்கு பொருந்துகிறதோ இல்லையோ மனிதனுக்கு சம்பூர்ணமாக பொருந்துகிறது.
உதாரணமாக சொல்லப்போனால் இங்கே கப்பல், கதலி, இதரை, மொந்தன், செவ்வாழை என்று வாழையில் மட்டும் எத்தனை வகை? எத்தனை ஊட்டச்சத்து. இந்த மண்ணிற்கேற்ற மக்களுக்கேற்ற பழம் வாழைப் பழம். ஆனால் எத்தனை பேர் வாழைப் பழத்தை உண்கிறீர்கள்? வீட்டு தோட்டத்தில் வாழைப்பழம் இருக்கும் போது அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிளையும், தோடையையும் ஆரோக்கியம் என்று நம்பி அவற்றை வாங்குமாறு நாம் பழக்கப்பட்டு விட்டோம். அவுஸ்ரேலியாவில் காய்த்த அப்பிள் மாதக்கணக்காக இலங்கை தெருக்களில் வெயிலில் இருந்தும் பழம் பழுதாகவில்லை என்றால் எவ்வளவு மருந்து அடிக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆரோக்கியம் எனும் பெயரில் அதிக விலை குடுத்து நஞ்சை அல்லவா வாங்குகிறோம். உடல்நிலை சரியில்லாமல் உள்ள உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் பார்க்கப் போகும் போது இந்த விசம் பூசிய பழங்களை கொண்டு செல்வதை எப்படி வாடிக்கை ஆக்கினோம்? உண்மையில் நீங்கள் அவர்களுக்கு கொடுப்பது பரிசு தானா?
இவ்வாறே மேலைத்தேச மரக்கறிகள், மற்றும் உணவுகள் கூட எங்கள் வாழ்வியலை முற்றாக ஆக்கிரமித்து விட்டன. பச்சை மரக்கறிகளை வைத்து சூப் செய்ய நேரமில்லாத நாங்கள் பைகளில் அடைத்த உடனடி சூப்பை தேடித் தேடி உண்கிறோம்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உணவும், அதை உட்கொள்ளும் விதமும் மாறிக்கொண்டே வருகின்றன. தான் வாழும் மண்ணில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், தன்னை சார்ந்து வாழும் மிருகங்களையும், பறவைகளையும் உணவாக்கிக்கொண்டான். அவை உணவாக மட்டுமல்லாமல், அவனுக்கு மருந்தாகவும் அமைந்தன. இன்று அறிவியல் வளர்ச்சி, நாகரிக எழுச்சி, உலகமயமாதல் போன்ற நவீனங்களால் உலகில் எங்கோ விளைந்த பொருட்கள் நமக்கு உணவாக வந்து நமது இறைப்பைகளை நிரப்புகின்றன. பீசா, பர்க்கர், சவர்மா என்று புதுப்புது பெயர்கொண்ட துரித உணவுகள் இளைஞர்களை எச்சிலூறச் செய்கின்றன.
ருசியை விட மேற்கத்தைய மோகமும் விளம்பரங்களும் தான் அவை நோக்கி நாம் போக காரணம். உள்ளூர் உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. ருசிக்கு மாற்றார் உணவை நமது நாக்குகள் நொட்டையிட்டு ஏற்றுக்கொண்டாலும், உடலோ ஒவ்வாமையால் ஏற்க மறுத்து புதுப்புது நோய்களையும், அதற்கான மருந்துகளையும் வரவழைக்கின்றன. பக்க விளைவுகளையும் அனுபவிக்கின்றன. ‘பாஸ்ட் புட்’ என்று அழைக்கப்படும் விரைவாக தயாரித்து வழங்கப்படும் உணவுகள் அனைத்திலும் உடம்புக்கு பயனில்லாத பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு அஜீரணம், வயிற்றுவலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவ்வாறான உணவுகள் எங்களை மரணம் வரை அழைத்துச் செல்வதோடு பரம்பரையை முடமாக்குகின்றது என்பதே உண்மை.
வல்லாரை, தூதுவளை, முருங்கை, சண்டி, பொன்னாங்காணி, முல்லை, முசுட்டை, கற்பூரவள்ளி, அகத்தி, பிரண்டை, கௌவை என்று ஆரோக்கியம் தரும் எத்தனையோ இலை வகைகள் இயற்கையாகவே எமது வேலிக் கரைகளில் உள்ளன. அவற்றை இனம் கண்டு நாளாந்த சமையலில் சேர்த்து வந்தாலே போதும். குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வரும் ப்ரோக்கோலி போன்ற அயல் பிரதேச இலைகள் எல்லாம் தேவையில்லாத ஆணிகள் தான். எமது பருவகாலத்திற்கு ஏற்ற இலைகளும் மரக்கறிகளும் அந்தந்த பருவ காலத்திலேயே எமது மண்ணில் விளைவதால் அவற்றை அந்தந்த காலத்தில் உண்பதுதான் உசிதமானது. இதனால் தேவையற்ற மருந்துகளுக்கு பணம் கொடுத்து பக்க விளைவாக வேறு நோய்களையும் விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை.
அதே போலத்தான் வரகு, திணை, சாமை, குரக்கன், எள்ளு, பயறு, உழுந்து என பல தானியங்கள் எங்கள் மண்ணில் விளைகின்றன. இவை உடனடியாக கிடைக்காத வெளிநாட்டவர் வேண்டுமென்றால் ஓட்ஸ் போன்றவற்றின் ஊடாக தங்கள் ஆரோக்கியத்தை நிரப்பிக் கொள்ளட்டும். இந்த இறக்குமதி பொருட்கள் எங்களுக்கு தேவையில்லை. விதம் விதமான பைகளில் அடைத்தவற்றை கண்டு ஏமாறாதீர்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. கையில் தானியங்களை வைத்துக் கொண்டு ஓட்ஸ்க்கு அலையாதீர்கள்.
எப்படி நாம் இந்த மேலைத்தேச பழங்களுக்கும் மரக்கறிகளுக்கும் உணவுகளுக்கும் அடிமையானோம்? இந்தக் கேள்வியின் பின்னால் பல உளவியல் காரணிகள் உள்ளன. மேலைத்தேச உணவுகளை பரிசளிப்பதோ பயன்படுத்துவதோ சமுக அந்தஸ்தை உயர்த்தும் என்கின்ற ஒரு மனநிலை இருக்கிறது. விலை கூடிய பொருளுக்கு தரமும் கூடும் என்கின்ற நம்பிக்கை அடிப்படையில் நம் அனைவரது மனங்களிலும் இருக்கிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும் போது நாம் பட்டிக்காட்டான் என்கின்ற மனநிலை உருவாகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் முற்றத்து மல்லிகைகள் எப்போதுமே மணப்பதில்லை தானே! மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் தான் மணம் பரப்புகின்றன என்று நம்புகிறோம். இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு தேவையானதை எல்லாம் கொட்டிக் கொடுத்துள்ளான் இறைவன். அதை உதாசீனம் செய்து விட்டு இல்லாத இடங்களில் தேடித்திரியாதீர்கள்.