கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் கிடைப்பார்கள். ஆனால் புத்திசாலித்தனமான வீரர்கள் கிடைப்பது அரிது. அவரது ஆழ்ந்த கிரிக்கெட் பற்றிய அறிவு இந்திய அணியை பல தடவைகளில் காப்பாற்றியுள்ளது. எதிரணியோடு உளவியல் ரீதியாக விளையாடக் கூடியவர் அஸ்வின். தமிழக வீரர் ஆன அஸ்வின் ஒரு சகாப்தம். நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இனி இவர் போல் இந்திய அணிக்கு யாரும் கிடைப்பது அரிதான விடயம்.
அனைத்து சர்வதேச போட்டிகளிலும் ஓய்வை அறிவிக்கும் போது ஐசிசி தர வரிசை பட்டியலில் பந்துவீச்சாளராக ஐந்தாவது இடத்திலும் சகலதுறை வீரராக மூன்றாவது இடத்திலும் இருந்தார் 38 வயதான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ப்ளே இருக்கிறார்.
தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 106 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியாக அடிலைட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார்….
டெஸ்ட் போட்டியில் 250,300,350 என அதிவேக விக்கெட் எடுத்த பவுலர் அஸ்வின். மொத்தம் 537விக்கெட் எடுத்துள்ளார். உலக அளவில் 7வது அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார்.
தனது ஓய்வை அறிவித்த அஸ்வின் பத்திரிகையாளர் சந்திப்பில் பின்வருமாறு கூறுகிறார்.
“நான் கிரிக்கெட் ஆக இன்னும் சில சாதனைகள் செய்யவேண்டிய இருக்கிறது.. ஆனாலும் நான் ஓய்வை அறிவித்து தான் ஆக வேண்டும். இது தான் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாள். ரோகித் சர்மா மற்றும் என்னுடைய சக வீரர்களுடன் அற்புதமான தருணங்களை உருவாக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். BCCI மற்றும் என்னுடைய சக வீரர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.என்னுடைய அனைத்து பயிற்சியாளர்களுக்கும் அதே போல் முக்கியமாக விராட் கோலி, ரோகித் சர்மா, ரகேனே, புஜாரா போன்றவர்கள் தான் அதிக கேட்ச் பிடித்து நான் அதிக விக்கெட் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி!! அதே போல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் என்னுடைய நன்றிகள்! அவர்கள் ஒரு சிறந்த எதிரணி நான் அவர்களுக்கு எதிராக விளையாடும் போது மிகவும் அனுபவித்து விளையாடினேன்.”
அஸ்வின் மொத்தம் 37 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார். அதில் ஒன்று அவர் அறிமுகம் ஆன போட்டியிலேயே என்பது குறிப்பிடத்தக்கது. ஷேன் வார்ன் 37 முறை 5 விக்கெட் எடுத்து உள்ளார். அஸ்வினுக்கு முன்பு இலங்கையின் முரளிதரன் 67 முறை ஐந்து விக்கெட் எடுத்து முன்னிலையில் உள்ளார். இடதுகை துடுப்பாட்ட வீரர்களை மட்டும் 268 முறை ஆட்டமிழப்பு ஆக்கிய சாதனையை தன் வசம் வைத்துள்ளார் அஸ்வின்.
துடுப்பாட்டத்திலும் சிறப்பாக விளையாடி உள்ளார். 3503 டெஸ்ட் கிரிக்கெட் ஓட்டங்களை கடந்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடங்கும். ஒரு டெஸ்ட் போட்டியில் நூறு ரன்களும் மற்றும் 5 விக்கெட்டுகளும் மட்டும் அஸ்வின் 4 முறை எடுத்துள்ளார்… இவருக்கு முன்பு 5 முறை லேன் போதம் எடுத்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார் அஸ்வின். மொத்தம் 3 டெஸ்ட் ஆல்ரவுண்டர் தான் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட் எடுத்தது. அதில் ஒருவர் அஸ்வின்.
மொத்தம் 11 முறை மேன் ஆஃப் த சீரிஸ் அவார்ட் வாங்கி இருப்பார். முத்தையா முரளிதரனும் 11 முறை அவார்ட் வாங்கி உள்ளார். 11 முறையும் அவர்கள் விளையாடிய அணியே வெற்றி பெற்றிருக்கும்..
இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன் கிண்ண கோப்பை வென்ற தருணங்களில் அஸ்வின் வெற்றிக்கு முக்கிய பங்கு அளித்துள்ளார். இம்முறை TNPL ல் அஸ்வின் தலைமையில் விளையாடிய அணியே கோப்பை வென்றது.
அஷ்வினுக்கு இருக்கும் கிரிக்கெட் அறிவுக்கு, எதிரணி வீரர்கள் மற்றும் உலகின் ஆடுகளங்கள் பற்றிய மதிப்பீடு, தோனி அடிக்கடி சொல்லும் அஷ்வினின் அந்த முதிர்ச்சி இவை எல்லாவற்றுக்கும் அஸ்வின் குறிப்பிட்ட காலம் இந்திய அணியின் தலைவராக இருந்திருக்க வேண்டும்.
கிரிக்கெட்டில் ஒன்று சொல்வார்கள். துடுப்பாட்ட வீரராக இருந்தால் அணித்தலைவராகும் வாய்ப்பு அதிகம்; பந்து வீச்சாளர் என்றால் மிகக்குறைவு; ஆனால் அதுவே சகலதுறை வீரர் என்றால் அவருக்கு துடுப்பாட்ட வீரர்களை விட தலைவராகும் வாய்ப்பு அதிகம். அஷ்வின் 6 செஞ்சுரிகளுடன் தன்னை சகலதுறை ஆட்டக்காரராக நிரூபித்த ஒரு வீரர். எந்த இடத்தில், எப்படி பேச வேண்டும், என்ற சபை அணுகுமுறை தெரிந்த ஒரு வீரர்.
ஆனால் 2010 க்குப் பின், இந்திய கிரிக்கெட் கலாச்சாரம் தனியே துடுப்பாட்ட வீரர்களை சுற்றியே அமைக்கப்பட்டு விட்டது. IPL தலைவர்களும் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரர்கள் ஆகவே மாறிப்போக, ஒரு புத்திசாலி வீரருக்கு தலைமைத்துவ வாய்ப்பு வழங்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தவறிவிட்டது.
இந்திய அணி சார்பாக இரண்டாவது அதி கூடிய விக்கெட்களை கைப்பற்றிய வீரராக அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கின்றார்.
இனிவரும் நாட்களிலாவது இவரது திறமையை, ஆளுமையை, அந்தத் தலைமைத்துவ பண்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அஸ்வின் போன்றவர்கள் ஒதுக்கப்பட்டால் நிச்சயம் ஏதாவது ஒரு எதிரணி இவர்களை பயன்படுத்திக் கொள்ளும். ஏனெனில் அவர்கள் திறமைசாலிகளை சரியாக எடை போட்டு வைத்திருப்பார்கள்.