இதழ் 79

என் கால்கள் வழியே… – 12

டெல்லியில் மெட்ரோ ட்ரெய்ன் பயணம்!

டெல்லி எனக்கு பல சந்தர்ப்பங்களில் புதுமையையும்; ஆச்சரியத்தையும்; சிறு தாழ்வு மனப்பாங்கினையும் உருவாக்கியிருந்தது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் பாடசாலை கற்கை. அதனை முடித்த பின் பல்கலைக்கழகத்துக்கு இடைப்பட்ட ஒரு வருட காலப்பகுதியில் கொழும்பு வாழ்க்கை; ஐந்து வருட பல்கலைக்கழக கற்கை காலத்தில் (கூட யோசிக்காதீங்க நான்கு வருட கற்கை எல்லாம் எங்க ஊர்ல ஐந்து / ஆறு எல்லாம் செல்லும்) இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்றுலா என முதிர்ச்சியான அனுபவத்தை கொண்டுள்ளேன் என்ற மிதப்பில இருந்தேன். இடையில இரு தடவை இந்தியாவில் சென்னைக்கும் பயணம் செதுள்ளேன். இரண்டாவது பயணம் நான் தனியவே சென்றிருந்தேன்.

நிறைய மிதப்புகளை டெல்லி அனுபவம் கலைத்திருந்தது. குறிப்பாக டெல்லிக்கு பயணம் செய்த சிறிது நாட்கள், சொற்ப அனுபவங்களிலேயே, நான் இலங்கை எனும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்துள்ளேன் என்றொரு எண்ணத்தை பெறக் கூடியதாக அமைந்தது. இதில் நான் சென்னையில் உரையாடிய ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் அக்காவின், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆரம்ப நாட்களில் மனதை உருத்தியதாக கூறிய கருத்து பதிவு செய்வதும் பொருத்தமாக அமையும்.

“தமிழ்நாட்டின் சனத்தொகையை பார்த்து இவ்வளவு மக்கள் இருந்துமா ஈழத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க முடியல”

தமிழகத்துக்கும் இலங்கையில் இடம்பெறும் தமிழ்-சிங்கள முரண்பாட்டுக்கும் நிறைய பந்தம் உண்டு. சுருக்கமாக சொல்வது என்றா என் மானசீக ஆசிரியர் மு.திருநாவுக்கரசு சேர் சொல்வது போன்று, தென்னிலங்கை-இந்தியா மோதலையே ஈழத்தமிழர்கள் சுமக்கின்றார்கள். இதன் விரிவான விளக்கத்தை மு.திருநாவுக்கரசு ஆசிரியரின்ட ‘’பூகோளவாதமும் புதிய தேசியவாதமும்’ புத்தகத்தை புரட்டிப் பாருங்க.

அது சரி நாங்கள் டெல்லி என்ர மிதப்ப கலைச்சதுக்கு போவோம்.

எனது உயர்ந்தபட்ச வெளிநாட்டு பயணம் இந்தியா என்ற அனுபவத்துக்கு உள்ளேயே முதல் சொன்ன ‘கிராம (இலங்கை) – நகர (டெல்லி)’ ஒப்பீட்டை என் மனம் வரைந்து கொண்டது. ஒரு சிலவேளை எதிர்காலங்களில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பயணங்கள் இன்னும் ஒப்பிட்டுக்கான அளவீடுகளை அதிகரிக்கலாம். அதனை காலம் தான் பதில் சொல்லும்.

சரி. மிதப்பை முதலில முறிச்சது மெட்ரொ ட்ரெயின் பயணம். மெட்ரோ என்ற வார்த்தைகள் பல தடவைகள் கேட்டுள்ளேன். குறிப்பாக எனது பல்கலைகக்கழக இளங்கலைமானி கற்கையில் முதலாம் வருடத்தில் சமூகம் மற்றும் பிராந்திய திட்டமிடல் (Community and Regional Planning) பாடம் கற்றேன். அதில் ‘மெட்ரோ நகரங்கள்’ பற்றி கற்றது உண்டு. அதாவது அபிவிருத்தியின் அளவீட்டில் உயர்வானதொரு நிலை. இலங்கையில் எந்த ஒரு நகரமும் மெட்ரோ என்ற அளவு பெருமானத்துக்குள் இல்லை என்பதையே எனது ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். எங்களுக்கு செழிப்பான நகரமே கொழும்பு தான். எங்கள் நினைவுகளுக்குள் இன்று யாழ்ப்பாணம் பல மடங்கில் வளர்ந்துள்ளது. ஆனால் போதாது. சுருக்கமான சொன்னா பத்து வருடங்களுக்கு முன்னர் கொழும்புக்கான முதல் பயணத்தில் ஆச்சரியப்பட்டவை தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளது. வளர்ச்சியை உணர முடிகிறது. ஆனாலும் இவ்வளவும் 2024இல் போதாது.

இங்கு கொழும்பிற்கு முதன் முறையாக பயணம் செய்த போது அடைந்த பூரிப்பையும், இன்று நினைக்கையில் சிரிப்பாக இருந்தாலும், அன்று அதனை பிரமிப்பாய் இரசித்தம் என்பதில் நாங்கள் (யாழ்ப்பாணம்) எந்நிலையிலிருந்தோம் என்பதையே மீட்டக் கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான பயணத்தில் எம்.சி (MC) என அழைக்கப்படும் ‘Majestic City’ சுற்றி பார்ப்பதும் நிச்சயமானதொரு செயற்பாடாக இருக்கும். Majestic City என்பது இப்ப யாழ்ப்பாணத்தில வைத்தியசால வீதில இருக்கிற Cargills Square கடைத்தொகுதி போன்றது. இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கும். நானும் என் அண்ணாவோட போன ஞாபகம். இன்றைக்கு யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்பு போறவங்க காலிமுகத்திடல் கடற்கரைல இருக்குற One Galle Face Mall போறாங்கள்.

கொழும்புல போய் தான் நான் முதல் தடவை புகைவண்டி பயணமும் செய்தேன். போர் தந்த வடு எங்கள் தலைமுறைக்கு 2014இற்கு பிறகே வவுனியாவை தாண்டி புகையிரதத்தை பார்த்தோம். என் முதல்லபுகையிரத பயணம் ஏறத்தாழ ஒரு மணித்தியாலங்கள் காத்திருந்து கொழும்பு புகையிரத நிலையத்தில் ஏறி, மருதானை புகையிரத நிலையத்தில இறங்கினோம். ஏறத்தாழ 3கி.மீ இடைவெளி. நடந்து வந்தா கூட அரை மணித்தியாலம் தான். திரும்பி கொழும்பு கோட்டை வீதிக்கு நடந்து தான் சென்றோம். பின்னர் பல தடவை புகையிரத பயணங்களை செய்துள்ளேன். மணி கணக்கில் புகையிரத பயணங்களுக்குள்ளேயே நேரத்தையும் களித்துள்ளேன்.

டெல்லியில நான் பதிவு செய்யும் மெட்ரோ பயணமும் ஒரு வகையில் புகையிரத பயணமே. ஆயினும் இது அதிக வேகத்தில் பயணிக்க கூடியதும், குறுந்தூர பயணத்துக்குமான புகையிரதம்னு விளக்கத்துக்கு சொல்லலாம். இது டெல்லி மாநிலத்துக்குள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய போக்குவரத்து வழிமுறையாகும். மெட்ரோவின் வடிவம் புகையிரதம் போன்றது தான். ஆனால் பெட்டிகளின் எண்ணிக்கை 4 / 6 / 8 என்பதாகவே காணப்படுகின்றது.

டெல்லியில் அதிகம் தரைக்கு கீழ்ப்பயணமாகவே மெட்ரொ காணப்படுகின்றது. ஒரு சில இடங்களில் தரைக்கு மேலயும் பயணிக்கும். மெட்ரோ பயணங்களில்  தரைக்கு கீழ் செல்கையில் நான் என் இந்திய நண்பர்களிடம் நகைச்சுவையாக கேட்பது, “உடைஞ்சு விழாதோடா, இது இந்திய பராமரிப்பு என்டதால சந்தேகமா இருக்குனு” விளக்கத்துக்கு, சென்னை சர்வதேச விமான நிலைய கூரை இடிந்து விழும் செய்திகளை காட்டுவது. இந்தியாவின் ஊழல் நிர்வாகத்தை சொல்லி அவங்களும் சிரித்து கடப்பாங்கள். நாம தென்னிந்திய சினிமாக்குள்ள இந்தியாவ பார்த்து ஊழல் நிர்வாகம் அது இதுனு இந்தியாவ விமர்சிச்சு போனாலும், தென்னிந்தியா சினிமாக்குள்ள காட்டாத பெரும் வளர்ச்சிகளும் இந்தியாவின் இன்னொரு முகமாக இருப்பதை மறுக்கேலாது.

மெட்ரொ ட்ரெய்னில் பயணிப்பது பற்றி பிரான்சில் வசிக்கும் எனது அக்கா, அண்ணா சாதாரணமாக சொல்லி கேட்டதுண்டு. வேலை முடிந்து அண்ணா வரும் போது அல்லது வேலைக்கு போகும் பொது அலைபேசி அழைப்பு எடுத்தால் “மெட்ரோல இருக்கன்” என்டு தான் சொல்வார்கள். ஆக நானும் முதல் மெட்ரோ பயணத்தின் போது பெரும் புழுகமாக அக்காக்கு Video அழைப்பு எடுத்து “நாங்களும் இப்ப மெட்ரோல இருக்கம்”னு பந்தா காட்டினேன்.

முதலாவது மெட்ரோ ட்ரெய்ன் பயணம், GTB மெட்ரோ நிலையத்தில இருந்து Central Secretariat மெட்ரோ நிலையத்துக்கான பயணமாகவே அமைந்தது. தமிழ் நாட்டு நண்பர்களுடன் அப்பயணம் அமைந்தது. பயணத்துக்கான பற்றுச்சீட்டில் உள்ள QR codeஐ Scan செய்தே மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு உள்ளே போகலாம். மற்றும் வெளியே வரலாம். ஆரம்ப நாட்களில Scan செய்தவுடன் அடைப்பு எடுத்ததும் உடனே ஓடிடுவன், மறுபடி மூடிடுமோனு பயத்தில. ஆரம்ப நாட்களில் அதிகம் நண்பர்களோடு சேர்ந்து போகையிலேயே மெட்ரோ பயணத்தை தெரிவு செய்வேன். தனியே செல்வதில் குழப்பம். ஏனெனில் தூர பயணங்களில் சில நேரங்களில் இடையில் வேறொரு மெட்ரோ மாறி பயணிக்க வேண்டி அதில் குழப்பங்கள்.

ஆனாலும் இரு வருட வாழ்க்கை ஆச்சே டெல்லியில். பழகி தானே ஆஹனும். பின்னாட்களில் சாதாரணமாக பழகியாச்சு. இலங்கை, சென்னைக்கு பயணமாகும் போதெல்லாம் விமான நிலையத்துக்கு செல்வதற்கு மெட்ரோ பயணத்தையே தெரிவு செய்து. அதற்கு ஏற்றவாறே விமான சீட்டுகள் முன்பதிவு செய்வது. மெட்ரோ பயணம் 90 ரூபால முடிஞ்சிடும். Rapido அல்லது Uber என்ற சொகுசை தேடினால் 500-800 ரூபாக்களை கரைத்திடும்.

டெல்லியில் என் பயணங்களை நிரப்பிய மெட்ரோ பயணத்திற்கு சமாந்தரமாக Rapido, Uber-உம் பயன் செய்துள்ளது. சில துன்பங்களையும் விளைத்தது.

தொடர்ந்து பயணிப்போம்….!

Related posts

ஓய்வு பெறுகிறார் கிரிக்கெட் நிபுணர் அஸ்வின்

Thumi202121

மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆன்மீக அன்னை சைவத் தமிழ் உலகின் வரலாற்று நாயகி

Thumi202121

இருக்கும் இடத்திலேயே எல்லாம் இருக்கிறது.

Thumi202121

Leave a Comment