இதழ் 80

ஈழத்தின் நாடகக் கலையின் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் – நினைவுகளின் நிழல்கள்

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார்.

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக, நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு ஈழத்துத் தமிழ் கலையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் புகழ் வணக்கங்களையும் துமி தெரிவித்துக்கொள்கிறது.

வாழ்க்கைக் குறிப்பு:

குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் பட்டப்படிப்பை முடித்து, அதே பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

கலை இலக்கியப் பணிகள்:

இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவர் எழுதி இயக்கிய மண் சுமந்த மேனியர் என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. இவரது ஆர்கொலோ சதுர‍ர் நாடகம் எல்லா நாடகங்களிலும் உச்சமானது.யுத்த‍த்தில் வெற்றி அல்லது முடிவு ஒன்றில்லை. தோற்பது மனிதம் தான் என்பதை பாரதப் போரின் 14ம் நாள் போரை மையப்படுத்திக் காட்டுகின்றார்.

இவர் மொழிபெயர்த்த வெண்கட்டி வட்டம் மக்கள்களரி தயாரிப்பில் 2016இல் தமிழ் சிங்கள மலையக முஸ்லிம் கலைஞர்களின் சங்கமிப்பில் யாழ்ப்பாணத்திலும் பண்டத்தரிப்பிலும் கொழும்பிலும் மேடையேறியமை குறிப்படத்தக்கது. நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பாக உறவுகள் நாடகம் 2017இல் மீளவும் இரதிதரன் இயக்கி பண்டத்தரிப்பு, காரைநகர், புத்தூர், வ‍வுனியா ஆகிய இடங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் மேடையேற்றப்பட்டு வருகின்றது. அதேபோல் அவரது மொழிபெயர்ப்பில் தான் விரும்பாத் தியாகி நாடகமும் பல மேடையேற்றங்களைக் கண்டு வருகின்றது. 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் மொழிபெயர்த்த கவிதைகள் சில தாயகம் இதழில் பிரசுரமானதுடன் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார்.

நாடகக் கல்வி மற்றும் பயிற்சி:

1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

கௌரவங்கள்:

நாடகத்துறையில் அவரது முக்கிய பங்களிப்பை மதித்து, 2001ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழகம் அவருக்கு கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியது.

சிறுவர் நாடகங்கள்:

ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர், “கூடிவிளையாடு பாப்பா”, “காட்டுராஜா”, “முயலார் முயல்கிறார்” போன்ற பல சிறுவர் நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.

கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவு ஈழத்துத் தமிழ் நாடக உலகிற்கு பேரிழப்பாகும். அவரது நினைவுகள் அவரது கலைப்பணிகள் ஊடாக எம் மனங்களில் என்றும் நிலைத்திருக்கட்டும்.

Related posts

ATM இயந்திரம் உருவாக காரணமாக இருந்த காதல்

Thumi202121

sports

Thumi202121

பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையின் முக்கியத்துவமும் வழிகாட்டல் ஆலோசனை சேவையை திறம்பட செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளும்

Thumi202121

Leave a Comment