இதழ் 80

பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையின் முக்கியத்துவமும் வழிகாட்டல் ஆலோசனை சேவையை திறம்பட செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளும்

மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை வடிவமைப்பதில் பாடசாலைகளில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்கால கல்வி வலையமைப்பு சிக்கலானதாகவும், போட்டித்தன்மையுடனும் இருப்பதனால், மாணவர்களுக்கு ஆதரவான சூழலை கட்டியமைக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைச் சேவைகள் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த சவால்களைச் சமாளித்திடவும், தகவலறிந்த தொழில் தேர்வுகளை மேற்கொள்ளவும், அவர்களின் செயற்திறனைப் பாதிக்கக்கூடிய தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளை நிர்வகிக்கவும் தேவையான ஆதரவுகளை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

வில்லியம் புரொக்டர் (1925) எனும் அறிஞர் “கல்வியும் தொழில்துறை வழிகாட்டலும்” எனும் நூலில் வழிகாட்டல் என்பது “மாணவர்கள்; பாடசாலையிலும் வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு பயன்படும் செயற்பாடு” என எடுத்துக்காட்டியுள்ளார்.
கால் ரோஜர்ஸ் (Carl.R.Rogers) என்பவர் “ஆலோசனை என்பது ஒருவருக்கு அவரைப் பற்றிய சுய விளக்கத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக் கொள்ளுமாறு வழங்கும் உதவி” என குறிப்பிடுகின்றார் அத்துடன் ஆலோசனை என்பது புத்தி;கூறல், உபதேசித்தல,; எச்சரித்தல் ஆகிய ஒருமுகப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை என்பது தனிநபர்கள் தங்களைப் பற்றியும் அவர்களின் சூழலைப் பற்றியும் புரிந்துகொண்டு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், தனிப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒன்றோடொன்று தொடர்புடைய துறைகளாகும். டேவிட் வி ரைட்மான் எனும் அறிஞர் “கல்வியை பொறுத்தவரையில் நமது இலக்கை அடைவதற்கான இலட்சியம் வழிகாட்டுதலாகும் அதை அடைவதற்கான உத்திகள் ஆலோசனையாகும்” என விளக்குகின்றார். வழிகாட்டல் மற்றும் ஆலோசனையானது சேவை தொடர்ச்சியானதாகவும், நெகிழ்ச்சித் தன்மையானதாகவும், இருத்தல் வேண்டும்.

வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் செயல்பாடுகளை ஐந்து பிரதான பிரிவுகளின் கீழ் நோக்க முடியும்.

• கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் (Educational Counselling)
• உளவியல் ஆலோசனை (Psychological Counselling)
• தொழில் சார் வழிகாட்டலும் ஆலோசனையும்(Career Guidance and Counselling)
• குடும்ப ஆலோசனை (Family Counselling)
• மனவடு தொடர்பான ஆலோசனை (Trauma Counselling)

இவை ஐந்தும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து செயல்படுவதில்லை மாறாக ஒன்றோடு ஒன்று இடைத்தொடர்புடையன என்பதனை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

தற்காலத்தில் நாளுக்கு நாள் மாணவர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளிலிருந்து உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான மன அழுத்தம் வரை சென்று கல்வியில் சிறப்பாக செயல்படும் திறனை பாதிக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் சார் செயற்திறனை மேம்படுத்துவதில் தற்கால சூழலில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் சேவை மிகவும் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது.

ஆரம்பகாலத்துடன் ஒப்பிடும் போது தற்காலத்தில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையானது பாடசாலைகளில் சற்று விரிவடைந்து காணப்படுகின்றது. இருப்பினும் காலத்தின் தேவைக்கேற்ப மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதென்பது நாம் அறிந்த விடயமேயாகும். இனிவரும் காலங்களில் பாடசாலைகளில் ஆலோசனை சேவையை திறம்பட செயற்படுத்துவதற்கான பரிந்துரைகள் பின்வருமாறு:

பாடசாலை அதிபர்களுக்கான பரிந்துரைகள்
• வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான அலகொன்றினை ஸ்தாபித்து நடத்திச் செல்லல். (கட்டிட இடவசதி : பாடசாலை உள ஆற்றுப்படுத்தல் சேவைக்கென பாடசாலையில் ஒரு தனிக்கட்டிடம் அல்லது ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுக்கென இடையூறுகளற்ற ஒதுக்கமான ஒரு தனி அறை, இணைப்பு ஆற்றுப்படுத்துனருக்கு ஒரு தனியறை, கோவைகள் மற்றும் பதிவேடுகளைப் பேணுவதற்குரிய ஒரு தனியறை, ஆய்வுகள் மற்றும் உளச்சோதனைகளை நடாத்துவதற்கென ஓர் ஆய்வுகூடம், தொழில் வாழ்க்கை வழிகாட்டலுக்கான ஆவணங்களை பார்வையிட வைப்பதற்கான இடம் என்பன கட்டிடத்தில் அமைய வேண்டும்).
• வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையை மேற்பார்வையிடல்.
• வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையை மேம்படுத்துவதற்கான பொருளாதார தேவைகளை நிறைவேற்றுதல்.
• பாடசாலை நேய அட்டவனையில் ஆற்றுப்படுத்தலுக்கென நேர ஒதுக்கீடு செய்தல்.
• ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.

பாடசாலை ஆசிரியர்களுக்கான பரிந்துரைகள்
• ஆற்றுப்படுத்தல் தேவைப்படும் மாணவர்களை இனங்காணல்.
• சாதாரண வகுப்பறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
• மாணவர்கள் பற்றிய தகவல்களை ஆற்றுப்படுத்துனருக்கு வழங்குதல்.
• காலத்துக்கு காலம் ஆற்றுப்படுத்தல் சார்பான உள்ளகப் பயிற்சிகளில் பங்குபெறல்.

வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்குப் பொறுப்பான ஆசிரியர்களுக்கான பரிந்துரைகள்
• வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகள் தொடர்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.
• இணைப்பு ஆற்றுப்படுத்து னர்களுடன் இணைந்து செயற்படல்.
• கல்வி, தொழில், சமூக சார்ந்த துறைகளில் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
• ஆசிரியர்களது ஒத்துழைப்புடன் கல்வி முன்னேற்றத்தை காலத்துக்கு காலம் மீளாய்வு செய்தல்.
• விசேட தேவையான மாணவர்களை இனங்கண்டு உதவி வழங்குதல்.
• உளச்சோதனை, பேட்டி காணல் போன்ற நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தல், பதிவுப் புத்தகங்கள், தனியாள் ஆய்வு சேவைகள், பதிவேடுகள் அடைவுத்தரவுகள், பெற்றோர் பின்னணி விபரங்களை பெற்று முறையாக பேணல்.
• கல்வி அமைச்சின் விசேட கல்வி ஆலோசனை வழிகாட்டல் பிரிவு, கைத்தொழில், தொழில் நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நநிறுவனங்கள், தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மருத்துவ நிலையங்கள், சுகாதார சேவை நிலையங்கள், சமூக நல ஸ்தாபனங்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருத்தல்.

பாடசாலை மாணவர்களுக்கான பரிந்துரைகள்
• வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைக்கு பொறுப்பான ஆசிரியர்களுடன் சிறந்த தொடர்பை பேணல் வேண்டும்.
• வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவையை களங்கமாக நோக்குவதை தவிர்த்தல் வேண்டும்.
• கற்றல் மற்றும் தொழில் சார் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்களை நாடுதல் வேண்டும்.
• வீட்டில் மற்றும் பாடசாலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வகுப்பாசிரியர்களிடமோ அல்லது பொறப்பான ஆசிரியரிடமோ தெரிவித்து ஆலோசனை சேவையைப் பெற முன்வருதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை முறையாக கையாள்வதன் மூலம் பாடசாலைகளில் சிறந்த வழிகாட்டல் ஆலோசனை சேவைகளை செயற்படுத்த முடியும். அத்தோடு மேம்பட்ட ஆளுமைத்திறனுடைய மாணவர்களைக் கட்டியெழுப்ப முடியும்.

Related posts

மரடோனா எனும் அசகாய சூரன்

Thumi202121

ஈரடியால் உலகளந்த வள்ளுவர்

Thumi202121

ஈழத்தின் நாடகக் கலையின் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் – நினைவுகளின் நிழல்கள்

Thumi202121

Leave a Comment