தமிழ் மொழி பெருமையானது. அதன் பெருமைக்கு, அம்மொழியில் தோன்றியுள்ள வளமான இலக்கியங்களும் இலக்கணங்களுமே காரணமாகிறது. அவ்வாறானதொரு இலக்கிய பெருமையில் முதன்மையானதாக திருக்குறள் அமைகின்றது. ஏதொவொரு இலக்கியம், ஏதொவொரு சமுக எண்ணப்பிரதிபலிப்பாய் எழுவதே எதார்த்தமானதாகும். அது தவறுமில்லை. அவ்எதார்த்தத்தை திருக்குறள் உடைத்துள்ளது. ஆதலாலேயே உலகப் பொதுமறையெனவும் சிறப்பிக்கப்படுகிறது. இது தமிழன்னையை அழகுபடுத்துகிறது. தமிழன்னையை அழகுபடுத்தும் திருக்குறளை வரலாறு தோறும் பாதுகாக்கும் முனைப்பில் கருங்கற்களில் பதிப்பதனூடாக ஈழத்தமிழர், தமிழ் மீது கொண்ட காதல் உலகிற்கு பறைசாற்றப்படுகிறது. இப்பெருமையை ஈழத்தமிழருக்கு அளித்துள்ள சிவபூமிக்கும் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களுக்கும் துமி நன்றியை காணிக்கையாக்குகிறது.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையிலான சிவபூமி அமைப்பின் மற்றொரு முயற்சியாக, மாவிட்டபுரத்தில் பெப்ரவரி-02 அன்று திருக்குறளுக்கான வளாகம் திறக்கப்படுகின்றது. இது ஈழத்தில் சிவபூமியின் கடந்தகால பணிகளின் தொடர்ச்சியாக ஒரு மைல்கல்லாகவே அமைகின்றது.
திருக்குறள் வளாகம் நீண்டகால இலக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளை கருங்கற்களில் பதிப்பதனூடாக அதன் சிறப்பை எடுத்தியம்புவதுடன், முழுமையாக ஆய்வுக்கான இலக்குகளை மையப்படுத்தியே நிறுவப்பட்டுள்ளது. இதன் உருவாக்கத்தில் ஆறு. திருமுருகன் அவர்களின் எண்ணங்கள் பல்கலைக்கழகம் எனும் விருட்சத்திற்கான விதையாகவே அமைகின்றது. சிவபூமி அமைப்பினால் மாவிட்டபுரத்தில் திருக்குறளின் கருங்கல் பதிப்பு ‘வளாகமாக’ பெயரிடப்பட்டுள்ளது. இவ்வளாகம் எதிர்காலத்தில் தமிழ் ஆய்வுத் துறையில் பல்கலைக்கழகமாக உயர வேண்டும் என்ற உயரிய நோக்கம் உருவாக்கத்திலேயே காணப்படுகின்றது. திருக்குறள் வளாகம் பற்றி வலையொளி ஒன்றுக்கு வழங்கிய காணொளியில் ஆறு. திருமுருகன் அவர்கள், ‘எதிர்காலத்திலே இவ்வளாகம் விருட்சம் பெற்று ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகமாக தமிழ் ஆராய்ச்சி நிலையமாக பரிணமிக்க வேண்டும் எனக் கனவு காண்கின்றோம்’ எனத் தெரிவித்திருந்தார். இக்கனவு ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று தமிழகத்தில் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் ஆய்வுத்துறைகள் முதன்முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனித் திட்டங்களாக அறிவியல்–வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதித் திட்டம், தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் திட்டம் ஆகியனவும், பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம் ஆகியனவும் தமிழ் மொழியை மையப்படுத்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது தமிழகம் சார்ந்து தமிழ் இருப்பை பேணுவதிலும், தமிழ் மொழி சார்ந்த வரலாற்றை பேணுவதிலும் அறிவியல் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றது.
இத்தகையதொரு பரந்த ஆய்வு ஈழத்தமிழ் மொழி வரலாற்றுக்கும் அவசியப்படுகின்றது. தமிழ் மொழியின் வரலாறு என்பது பெரும்பாலும் தமிழகத்தை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. ஈழத்தமிழ் வரலாறு இடைச்செருகலாக அமைகின்றது. ஈழத் தமிழ் சமூகம் இந்தியாவின் தொப்புள் கொடி என வர்ணிக்கப்படுகின்ற போதிலும் தனித்துவமான தமிழ் வரலாற்றை இலக்கணத்தை இலக்கியத்தை பேணி வருகின்றார்கள். அவை பாதுகாக்கப்படுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும் அவசியமானதாகும். ‘நாமும் நமக்கென்றோர் நலியா கலையுடையோம்’ என்பதை மார்தட்டுவதால் மாத்திரம் ஈழத்தமிழ் வரலாற்றின் சிறப்பு நிலைபெற்றிட போவதில்லை. அதனை உறுதி செய்யக்கூடிய ஆய்வுகளும் சான்றுகளும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாக வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை 2024ஆம் ஆண்டு பொன்விழாவை நிறைவு செய்துள்ளது. எனினும் ஈழத்தமிழ் மொழியின் ஆய்வுத்துறையில் தனித்துவமான நிலையை உறுதி செய்யமுடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சர்வதேச ஆய்வு மாநாட்டை ஒழுங்குபடுத்தி வருகின்றது. இவ்ஆய்வு மாநாடு கருப்பொருட்களும் பொதுமையான தமிழக வரலாற்றை ஒத்ததாகவே அமைகின்றது. 2023ஆம் ஆண்டு நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டின் வாழ்த்துரையில் ஆறு. திருமுருகன் அவர்கள் இக்குறையை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் ஈழத்தமிழர்களின் தமிழ்ச்சிறப்பை சமகால நோக்கு நிலையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த்துறையின் பொறுப்பையும் நினைவுபடுத்தியிருந்தார். ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டின் கருப்பொருள், ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்: இலக்கியத்தின் ஊடான மானுடவிடுதலை’ என்பது குறிப்பிடத்தக்கது
.
ஈழத்து தமிழ் வரலாறு தனது தனித்துவத்தை நிலைநாட்ட பரந்த ஆய்வு விரிவாக்கம் காலத்தின் தேவையாகும். 1921ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் கல்விப் பாரம்பரியத்தின் சுயாதீனத்தை பாதுகாக்கும் முனைப்பில் சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வரா கல்லூரி 1974ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் உயர் கல்வி நிறுவனமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக உயர்ந்தது. அவ்வாறான பாதையில் எதிர்காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கான அஸ்திவாரமாக திருக்குறள் வளாகம் அமைய வேண்டும் எனும் கனவையே ஆறு. திருமுருகன் அவர்கள் திருக்குறள் வளாகம் நிறுவுவதில் கொண்டுள்ளார். நல்லோர் எண்ணங்களும் விதைகளும் நிச்சயம் பெரும் விருட்சமாகும்.