இதழ் 81

தாய்மைகள் போற்றும் தெய்வத் தாய்மை

செந்தமிழையும் சிவநெறியையும் தம் இரு கண்களென கருதி வாழும் சார்பினர் ஈழத் தமிழ் மக்கள். திருமந்திரம் தந்த குரு திருமூலரும் ஆதலினாலே இலங்கை மண்ணை ‘சிவபூமி’ என்று சிறப்பித்துச் சென்றார்.

சிவபூமியில் தோன்றி மறைந்த எத்தனையோ மாந்தார்களால் சைவத்திற்கும் தமிழிற்கும் ஆற்றப்பட்ட தொண்டுகள் நினைக்கப்பட வேண்டியவை.

‘அறிஞர்களால் தான் ஒரு நாடு பெருமை அடைகிறது. சோக்கிறற்றீஸ் தோன்றியதால் கிரேக்க நாடு நினைவிலிருக்கிறது. ஆபிரகாம் லிங்கனால் அமெரிக்கா பெருமை அடைகிறது. சுவாமி விவேகானந்தரால் பாரத நாடு போற்றப்படுகிறது. அதே போல் நாவலர் பெருமானால் யாழ்ப்பாணம் பெருமை அடைகிறது’ என்று கூறுகிறார் செந்தமிழ்ச்செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்கள்.

நாவலர் பெருமான் காட்டிய சைவ நெறிக் கோட்பாடுகளை அடுத்த நூற்றாண்டில் நடைமுறைப்படுத்தி வந்து பெருமையும் அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களையுமே சேரும்.

சைவ உலகம் போற்றும் மங்கையர்களாய் ஓர் அம்மையாரையும், ஓர் அரசியாரையும், ஒரு தமக்கையாரையும் பெரியபுராணத்தில் காணலாம். காரைக்காலம்மையாரும், மங்கையற்கரசியாரும், திலகவதியாரும் ஆற்றிய மகத்தான சிவப்பணிகளிற்கு ஈடாக சிவப்பூமியில் சைவத்தமிழ் வளர்த்த தீரராக சிவத்தமிழ்ச்செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்கள் போற்றப்படுகிறார்.

ஆசிரியராக தன் பணியை தொடங்கிய அம்மையார் அவர்கள் சொற்பொழிவால் தம் மக்கள் மனங்களில் சமயத்தை விதைக்க ஆரம்பித்தார்.

சைவசித்தாந்தத்தில் பாண்டித்தியம் பெற்ற இவர் சைவ மாநாடுகளிலும் சமய விழாக்களிலும் ஆற்றிய பேருரைகள் இலங்கை மட்டுமல்லாது தமிழர் வாழும் தேசமெல்லாம் ஒலித்து பெரும் பாராட்டை பெற்றன.

‘யாழ்ப்பாணத்து செந்தமிழ்ச்செல்வி அப்பாக்குட்டி தங்கம்மாவின் சொற்பொழிவுகள் ஏன் தமிழ்நாட்டில் எடுபடுகின்றன?’ என்கிற கேள்விக்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறினார்; ‘ முதலாவது பேச்சின் பொருளை ஒழுங்குபடுத்திப் பேசுதல், இரண்டாவது கால நேரத்தை உணர்ந்து கட்டுப்பட்டுப் பேசுதல், மூன்றாவது யாழ்ப்பாணத்தமிழின் தனிச் சிறப்பு, நான்காவது ஓரெழுத்தையும் சிதைக்காது விழுங்காது உச்சரித்தல்’.

‘தோன்றின் புகழொடு தோன்றுக’ வாசகப்படி தோன்றிய இடமெல்லாம் சைவப்புகழ் பாடி தன் புகழை செதுக்கிச் சென்றார் அம்மையார். ஏறக்குறைய 5000 தனிச் சொற்பொழிவுகளை நடத்திய தவச் செல்விக்கு ஆலயங்களும் மன்றங்களும் ஆதினங்களும் வழங்கிய பட்டங்களும் புகழாரங்களுமே இதற்குச் சான்று. 1966ஆம் ஆண்டு மதுரை ஆதினம் ‘செஞ்சொற் செம்மணி’ என்ற பட்டத்தையும், 1970 ம் ஆண்டு ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயில் ஆதீனம் ‘சிவத்தமிழ்ச்செல்வி’ என்ற பட்டத்தையும், 1971ம் ஆண்டு காஞ்சி மெய்கண்டார் ஆதீனம் ‘சித்தாந்த ஞானாகரம்’ என்ற பட்டத்தையும், 1972ம் ஆண்டு மலேசியா சிலாங்கூர் இலங்கைச் சைவர் சங்கம் ‘திருவாசகக் கொண்டல்’ என்ற பட்டத்தையும், 1973ம் ஆண்டு வண்ணை வைத்தீஸ்வரம் ஆதீனம் ‘திருமுறைச் செல்வி’ என்ற பட்டத்தையும், 1974ம் ஆண்டு தெல்லுப்பளை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ‘துர்க்கா துரந்தரி’ என்ற பட்டத்தையும் ,1974ம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆதீனம் ‘சிவமயச் செல்வி என்ற பட்டத்தையும், 1983ம் ஆண்டு இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் ஆதீனம் ‘திருழொழி அரசு’ என்ற பட்டத்தையும் அளித்து கௌரவித்தன.

ஈழநாட்டின் புகழ்பூத்த பழமை வாய்ந்த ஓராலயம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம். ஆரம்பத்தில் தர்மகர்த்தாக்களின் பொறுப்பில் இருந்த இந்த ஆலயத்தில் ஒரு சபை உருவாக்கப்பட்டது. அச்சபையின் முயற்சியால் 1948ம் ஆண்டு தொடக்கம் சிறிது சிறிதாகத் திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி 1958ம் ஆண்டு பாலத்தாபனம் செய்யப்பட்டது. எனினும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெறவில்லை. 1963ம் ஆண்டு புதிதாக ஒரு திருப்பணிச்சபை ஆலய அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டது. இக்காலத்திலேயே செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களும் ஓர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். சபையுடன் சேர்ந்து உற்சாகமாக பணிபுரிந்து குடமுழுக்கு நடைபெறுவதற்கு உதவிய காரணத்தால் குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதுடன் நிர்வாக சபை ஒன்றை கோயிற் பரிபாலனத்திற்காக நிறுவி அதன் பொருளாளராக அம்மையாரும் தர்மகர்த்தா சபையால் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து பத்து ஆண்டுகள் அம்மையார் பொருளாளராக இருந்த காலத்தில் கோயிலில் கொடிமரம் நாட்டி மகோற்சவம் நடைபெற்றது. 25 ஆண்டுகளிற்கு மேல் மூலைமுடக்கெல்லாம் சொற்பொழிவாற்றியதால் ஆயத்தின் பெருமையும் உலகெங்கும் அறியப்பட்டது. வெளிநாட்டுப்பிரமுகர்கள் ஆலயத்திற்கு வந்து அம்மையார் ஊடாக மனமுவந்து பல அன்பளிப்புகளை வழங்கிச்சென்றனர். இதனால் திருப்பணி வேலைகள் வெகு துரிதமாக நடைபெற்று வந்தன.

தர்மகர்த்தா சபையால் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகசபைக் குழுவின் தலைவராக சிவத்தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டார். இவர் தலைவரான காலமே ஆலயத்தின் பொற்காலம் உருவாகத் தொடங்கியது. 1978ம் ஆண்டே அம்பாளிற்கு சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. கோயில் முகப்பு இராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
இன்னும் பல பல மண்டபங்களும், சிற்ப வேலைகளும், தீர்த்தக்கேணிகளும் என ஆலய பேரழகை வளர்த்துக் கொண்டே சென்றார் அம்மையார்.

இறைபற்று ஒன்றையே தன் ஊதியமாக கொண்டிருந்த அம்மையார் ஆற்றிய மிக முக்கிய பணிகளில் ஒன்று துர்க்காபுரம் மகளிர் இல்லம். சமூகத்தொண்டே சமயத்தொண்டு என்பதை நினைந்து தன் தூய அறிவினை தொண்டாக மணம் வீசச் செய்தார். 1981ம் ஆண்டு ஆலயத்தில் சென்னை சைவசிந்தாந்த சமாசம் நடாத்திய பவள விழாவின் போது மகளிர் இல்லம் ஒன்று அமைத்து ஆதரவற்ற இளம் பெண் குழந்தைகளை பேணிப்பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை அம்மையாரின் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. சிந்தனை உடன் செயலாக்கப்பட்டது. 1982-02-03 இல் மகளிர் இல்லம் தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 5 தொடக்கம் 12 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுடன் ஆயத்தமானது. மேலும் நாற்பது வயதிற்கு மேற்பட்ட திக்கற்ற , விவாகமாகாத அல்லது விதவைப் பெண்களிற்கும் நல்வாழ்வு அளிக்கும் சீரிய நோக்குடன் உருப்பெற்றது. அவர்களிற்கு உணவு, உடை, உறையுள் அளித்து சைவ நற்பணிகளில் பயிற்சி பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

“தாய் ஒருத்தி ஒரு பொருளை தான் பெறும் போது அடையும் மகிழ்ச்சியை விட தன் பிள்ளை பெறும் போது அடையும் மகிழ்ச்சி அளப்பரியது. அதைப்போல் நாம் இறைவனுக்குக் கொடுக்க நினைப்பதையெல்லாம் இறைவன் உறையும் இதயங்களை கொண்டிருக்கும் ஏழைகளிற்கு வழங்கினால் அஃது இறைவனுக்கு எவ்வளவோ மகிழ்ச்சியைக் கொடுக்கும்.” என்று கூறி ஆலய சமூகத்தை சமூகத் தொண்டெனும் நல்வழிக்கு அழைத்து வந்தார் அம்மையார்.

ஓர் ஆலயம் எப்படியிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டினார் அம்மையார். துர்க்கை அன்னை வசிப்பதற்கு இதை விட அழகிய இடம் வேறு எதுவுமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அம்மையார்.

அதுவும் எப்படியான காலப்பகுதியில்? அன்றைய வருடங்களில் எம் மண்ணின் அவலங்கள் யாவரும் அறிந்ததே. சூழ்நிலைகள் சரியில்லை. எம்மால் செயற்படமுடியாது. செயற்பட்டாலும் வேறு அர்த்தங்கள் கூறப்படும் என்று சொல்லிச் சமுதாய முன்னோடிகள் பலர் தமது பணியில் இருந்து விலகுகின்ற வேளையில் இச் சூழ்நிலையில்தான் நாம் செயற்பட வேண்டும். செயற்பட முடியும். என்று நிரூபித்து ‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என ஏனையோரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார் அம்மையார்.

அதைச்செய்வதற்கு தேவையான தைரியமும் உறுதியும் அம்மையாரிடமும் வலுப்பெற்றிருந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க ஒரு குழுவினர் முற்றுகையிட்டு ஆலயக்குருமார் தொண்டர்களை பணயம் வைத்தனர்.

ஒரு வஞ்சகன் அம்மாவின் நெஞ்சில் துவக்கினை வைத்து மிரட்டினான். அஞ்சா நெஞ்சம் கொண்ட அம்மையார் தயவோடும் துணிவோடும் ‘தம்பி அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என் ஆத்மா பிரிவு இந்த ஆலயத்தில் நிகழ்வதை நான் விரும்புகிறேன்’ என்றார். வஞ்சகர் நெஞ்சம் இளகி கிடைத்த நகை பொருட்களோடு தலை மறைவாகி விட்டனர். அம்பாளிடம் அம்மா கதறியழுது மன்றாடினார். அம்மையாரின் வேண்டுதலை துர்க்கையம்மன் செவி சாய்க்காமல் இருக்க முடியுமா? அதிசயம் நிகழ்ந்தது! சில நாள்களின் பின் ஆலய வீதியில் அம்பாளின் நகைகளை எல்லாம் குறைவின்றி மீட்டெடுத்தனர்.

அம்மையார் மேடையில் அடிக்கடி சொல்லும் ஒரு பாரதி பாடல்
‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்
வைர நெஞ்சமுடைய நெஞ்சு வேண்டும்- இது வாழும் முறைமையடி பாப்பா.’

அம்மையார் இப்பாடலை எடுத்து மட்டும் காட்ட வில்லை. வாழ்ந்து காட்டினார்.

பெண்ணியம் என்பதை பேசுபொருளிலிருந்து செயல் வடிவில் செய்து காட்டிய அம்மையாரே பெண்ணின் சர்வவல்லமைக்கு சாட்சியாய் நிற்கிறார். மகளிர் தினம் கொண்டாடப்படும் நாளில் மகளிர் மனோதிடம் பெருக ஒவ்வோர் மனத்திலும் நினைக்கப்பட வேண்டியவர் சிவத்தமிழ்ச்செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்கள்.

அந்த வகையிலே அன்னை சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அம்மையாரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலயத்திலிருந்து காங்கேசன்துறை வீதி வழியாக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை வந்தடைந்தது. வழியெங்கும் பெருமளவு மக்கள் பூரண கும்பம் வைத்து, அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வீதிகளை தோரணங்களால் அலங்கரித்து, அன்னையின் சொற்பொழிவுகளை ஒலிபெருக்கிகளில் போட்டு ஈழத்தமிழ் தேசத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த தெய்வத்தாயை வரவேற்று மரியாதை செய்தார்கள். இடைக்கிடையே வானத்து தேவர்களும் மழையாக தங்கள் மலர் வணக்கங்களை செலுத்தினார்கள். கால்நடையாக பெருமளவு மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அன்னை ஆற்றிய சேவையே அன்னை மறைந்தும் ஈழத்திருமண் நன்றியோடு கொண்டாடியதை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்.

அந்த ஊர்வலம் நிறைவடைந்த பின் தனியாக நின்ற அந்த ஊர்தியில் அம்மையாரின் திருவுருவப்படத்தை பலரும் வணங்கிச் சென்றனர். அதில் முத்தாப்பாய் ஒரு மூத்த பெண்மணி இயல்பாய் இரு கைகளையும் சிரம் மேல் கூப்பி மெய்யன்புடன் வழிபட்ட காட்சி கமராவின் கண்களுக்குள் அகப்பட்டது. அடடே… இதுவல்லவோ காட்சி…! தாய்மை மதிக்கும் தாய்மை..! பல பெண்களுக்கு அம்மையார் வாழ்க்கை தந்தவர், வழி காட்டியவர். பெண்களின் சுதந்திரம் எதுவென்று பெண்களுக்கும் சேர்த்தே பாடம் புகட்டியவர்.

பெண் சுதந்திரம் என்பது ஆண்களோடு போட்டி போடுவது என எண்ணி பெண்கள் தினம் கொண்டாடும் மக்களுக்காய் துமி இந்த மகளீர் தினத்தில் அம்மையாரை முன்னிலைப்படுத்த விரும்புகிறது. இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் அம்மையார் நினைவாக மகளீர் தினம் கொண்டாடுவோம். அம்மையாரின் சமய சமூக பணிகளை அவரைத் தொடர்ந்து கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் பலவாறாய் செய்வது ஈழத் தமிழர்கள் செய்த தவப்பயன். அந்த தாயைப் போல பெண்களும் பொது வாழ்விலும் சமய வாழ்விலும் ஈடுபடுவதோடு பிரசங்கங்களிலும் ஈடுபட முன்வர வேண்டும். அதற்காக இந்த மகளீர் தினத்தில் சிந்திப்போம். எல்லோருக்கும் அம்மையாரின் ஆசிகள் கிடைக்கப்பெறட்டும்.

Related posts

அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்த இலங்கை அணியின் இளம் சிங்கங்கள்

Thumi202121

நீரின்றி அமையாது உலகு

Thumi202121

பாடசாலை மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி மேம்பாட்டு உத்திகள்

Thumi202121

Leave a Comment