இதழ் 81

நீரின்றி அமையாது உலகு

நீர் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. இன்றைய காலகட்டத்தில் மழை குறைவதும், வறட்சி நீடிப்பதுமான நிலை அவ்வப்போது காணப்படுகிறது. எனவே, நீர்வளத்தின் அருமையையும், அதை திறம்பட சேமித்து பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உணர்வது அவசியமாகிறது. திருவள்ளுவர் தனது திருக்குறளில் “நீரின்றி அமையாது உலகு” எனக் குறிப்பிடுவதன் மூலம் நீரின் அத்தியாவசியத்தைக் கூறியுள்ளார். திருக்குறளில் நீரினை வான்நீர், நில நீர் என்று இரு பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார். வள்ளுவர் உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு பருவம் தவறாமல் பெய்யும் மழை அடிப்படை என்பதால் மழையை அமிர்தமாக போற்றுகின்றார். மேலும்
“துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை”

என்று குறளின் வாயிலாக உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உணவினை விளைவிக்க பயன்படுவது மட்டுமின்றி, தானும் உணவாக மாறும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டானதாகும் என்கிறார். உயிர்களின் வாழ்வாதாரமே தண்ணீர் என்பதால், அதனை “திரவத் தங்கம்” என்று சிறப்பிக்கின்றனர்.

தண்ணீர் மூன்று நிலைகளில் காணப்படுகிறது—திண்மம், திரவம், வாயு. பனிக்கட்டியாகத் திண்ம நிலையிலும், நீராகத் திரவ நிலையிலும், நீராவியாகவோ நீர்கோவையாகவோ வாயு நிலையிலும் உள்ளது. நீர் சுவையற்றது, மணமற்றது, உருமற்றது என்பதால், அது சார்ந்திருக்கும் பொருட்களின் வடிவத்தைப் பெறுகிறது. உலகின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது, ஆனால் இதில் 3% மட்டுமே நன்னீர் ஆகும். அதில் 2% பனிக்கட்டியாக உள்ளதால், மக்களுக்கு கிடைக்கக்கூடியது வெறும் 1% மட்டுமே. இந்த மிகச்சிறிய அளவிலான நீரே உலக மக்கள் வாழ்வுக்கு அவசியமானதாகும்.

மனித உடலில் 70% நீர் உள்ளது. நீர் இல்லையெனில் உடலில் உள்ள செல்ல்கள் அழிந்து, மனிதன் உயிரிழக்க நேரிடும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். நீர் பலவிதமான பொருட்களை கரைத்து, அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும் வாசனைகளையும் வழங்குகிறது. வேதிப்பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்விப்பானாகவும், சிறந்த கடத்தியாகவும் நீர் பயன்படுகிறது. வர்த்தக ரீதியாகவும் நீர் மிக முக்கியமான பொருளாக மாறியுள்ளது.

மழைநீர் என்பதே இயற்கையின் வரமாகும். காடுகளே மழைக்கு காரணமாக இருப்பதால், அவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். மழைநீரே அருவியாக, நதியாக உருகி ஓடி, நம் நீர்தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, காடுகளையும் மலைவளங்களையும் பேணி காக்க வேண்டும். வீணாக ஓடி கடலில் கலக்கும் நீரை புதிய நீர்நிலைகளை உருவாக்கி தேக்கி வைப்பதன் மூலம் நீர்வளம் பெருக்கலாம். மழைநீர் சேகரிப்பு முறைகளை மேம்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் வளத்தை உயர்த்தலாம்.

“தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்கக் கூடாது” என்ற பழமொழி நீரின் மதிப்பை உணர்த்துகிறது. பழந்தமிழர்கள் நீரை உயர்ந்த பண்பாடாகக் கருதினர். சிறந்த நீர்மேலாண்மை முறைகளை பின்பற்றினர். 10ம் நூற்றாண்டிலேயே மன்னர் ராஜராஜன் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், சமீப காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை அரசு அகற்றினாலும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. நீர் வற்றும் போது ஏரிகள், குளங்கள் குப்பைகளால் நிரம்பி, தரை நிலமாக மாறுகின்றன. பின்னர், அவற்றில் வீடுகள் கட்டப்பட்டு குடியேறப்படுகின்றன.

இவ்வாறு நீர்நிலைகள் அழிக்கப்படுவதால், நீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நீர்வளங்களை பாதுகாக்க முடியாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் நீர் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சாலையோர குடிநீர் குழாயில் நீர் வீணாக ஓடினால், அதை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதையில் குடிநீர் குழாய் உடைந்து நீர் பெருக்கெடுத்து ஓடினால், அதை கண்டும் காணாமல் விடாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நீரை பாதுகாக்க முடியாததால், இன்று நாம் அதை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நீரின் மதிப்பை உணர்த்துவதற்காக உலக தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகளவில் நீரின் முக்கியத்துவத்தையும், நீர் மேலாண்மையின் அவசியத்தையும் மக்கள் மனதில் பதிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களுக்கிடையே நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1993ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த நாளை உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. அந்த நாளில் மட்டுமல்லாமல், நாள்தோறும் நீரை பாதுகாக்க உருதிப் பட வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, வருங்கால சந்ததியினருக்கு நீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். எமக்கு எம் முன்னோர் தந்த அருஞ் செல்வத்தை எம் அடுத்த சந்ததிக்கு கொடுக்காவிட்டால் அது மகாபாவம் ஆகிவிடும். இந்த பூமிப் பந்து உயிர்ப்போடு சுற்ற சுத்தமான தண்ணீர் இன்றியமையாதது.

“விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே
பசும் புல் தலை காண்பு அரிது”

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி மேம்பாட்டு உத்திகள்

Thumi202121

அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்த இலங்கை அணியின் இளம் சிங்கங்கள்

Thumi202121

தாய்மைகள் போற்றும் தெய்வத் தாய்மை

Thumi202121

Leave a Comment