இதழ் 95

புத்தரின் சித்தாந்தம் மதத்தையா மாற்றத்தையா போதித்தது?

“முதலில் தோன்றியது மனிதனா? கடவுளா? “

‘முதன்முதலில் மனிதன் கடவுளைப் படைத்து, பின்பு கடவுள் மனிதனைப் படைத்தார்’ என்றார் அமெரிக்கத் தத்துவமேதை பேராசிரியர் லூயிபெல். மற்றொரு புறம், ஆண்ட்ரே மால்ராக்ஸ் எனும் பிரெஞ்சுத் தத்துவ அறிஞர், ‘கடவுள் என்ற கருத்துருவாக்கம் இல்லாதிருந்திருந்தாலும் ஏதாவதொரு வழியில் மனிதன் ஒன்றை உண்டாக்கி இருப்பான். ஏனென்றால், அவனது மனதிற்கு அது மிகவும் இன்றியமையாத ஒன்று’ என்று கூறுகின்றார். நமது உள்ளார்ந்த அச்சம், கவலைகள், தொல்லைகள், பதற்றம் ஆகியவற்றைத் அடக்கிவைக்க ஒரு தெய்வீக சக்தி தேவைப்படுகிறது. பிரச்சினைகளைத் தவிர்த்து, நமக்கு ஆறுதல் தர நாம் ஒரு ஒளிவட்டத்தை சார்ந்திருக்கிறோம்.

சமயம் தோன்றியது ஏன்? மனிதனின் அச்சம், ஐயப்பாடு, பாதுகாப்பின்மை இவற்றில் தான் சமயத்தின் பிறப்பிடம் உள்ளதா?

சமயங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட நாட்களில், மக்களுக்கு இந்த வாழ்க்கையின் உண்மையான இயல்பையும், மரணத்திற்குப் பின் அவர்களுக்கு என்ன நடக்குமென்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இயற்கையின் தோற்றங்களுக்கும் சீற்றங்களுக்கும் உள்ள காரணங்களை அறிய முடியாமல் இருந்தனர்.

இந்த மகிழ்ச்சியானதும், மகிழ்ச்சியற்றதுமான அனைத்தையும் உண்டாக்க, புலப்படாத சில காரணங்கள் இருக்க வேண்டுமென்று அவர்கள் சந்தேகித்தனர். இறுதியாக இயற்கையின் இந்த வலிமைகளுக்குப் பின்னால் ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டனர். அவர்கள் அந்த ஆற்றலை “சக்தி” என்றழைத்தனர்.

இவ்வாற்றல்கள் தங்களுக்கு எவ்வகையிலாவது தீங்கிழைக்கக்கூடும் என்றுணர்ந்த அவர்கள், அவற்றின் பேரில் விளக்க முடியாத ஒரு வியப்பும், அச்சமும் கொண்டனர். எனவே, தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அந்த சக்திகளை அவசியம் அமைதிப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென உணர்ந்தனர்.

இந்தச் சக்திகளுடன் சாதாரண மொழியில் பேசுவதை விட, அவர்கள் தங்கள் விடயங்களை சைகைகள் மூலம் தெரிவிப்பதே பயன் தருவதாக இருக்கும் என்று கருதினர். இறுதியாக இச் சக்திகளின் சகாயத்தைப் பெறுவதற்காக மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் வழிபாடுகளாகவும் சடங்குகளாகவும் மாறின.

கற்பனையும், மனிதாபிமானமும் ஒன்று சேர்ந்து பிணைந்து சமயம் உண்டானது இப்படித்தான் என்கிறது ஒரு வாதம்.

இத்தகையதொரு சூழ்நிலையில் தான் ஒரு மாற்றம் உருவானது. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் கபிலவஸ்துவில் வாழ்ந்த ஒரு இளவரசர் ‘சித்தார்த்தர்’ இவ்வுலகில் உயிர்கள் ஏன் துன்பப்படுகின்றன என்பது பற்றி மிக ஆழமாகச் சிந்திக்கத் தலைப்பட்டார். இந்தத் துன்பத்தின் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். ஒரு நாள், ஒரு இளஞ் சிறுவனாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த போது, திடீரெனத் தென்பட்ட ஒரு பாம்பு ஒரு தவளையைப் பிடித்ததை அவர் கண்டார். பாம்பும், தவளையும் போராடிக் கொண்டிருந்த போது, விண்ணிலிருந்து ஒரு பருந்து பாய்ந்து வந்து, பாம்பின் வாயில் தவளை இருந்தபடியே, அந்தப் பாம்பைத் தூக்கிச் சென்றது. இந்த நிகழ்ச்சி அந்த இளவரசருடைய உலகியல் வாழ்வைத் திருப்புவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நீரிலும், நிலத்திலும் வாழும் உயிர்கள் எப்படி ஒன்றையொன்று கொன்று உயிர் வாழ்கின்றன என்பது பற்றி அவர் சிந்தித்தார். ஓர் உயிரினம் பிடிக்கப் பார்க்கிறது; மற்றொன்று தப்ப முயல்கிறது. உலகம் உள்ளவரை இந்த முடிவற்ற போர் தொடரும். இந்த முடிவில்லாத வேட்டையும், தற்காப்புத் தவிப்புமே நம் மகிழ்ச்சியின்மையின் அடிப்படை. இதுவே எல்லாத் துன்பங்களுக்கும் பிறப்பிடம். இந்தத் துன்பத்திற்கு முடிவு காண்பதற்கான வழியைத் தான் கண்டறிய வேண்டுமென அந்த இளவரசர் அன்று தீர்மானித்தார்.

பல்வேறு சமய ஆசிரியர்களிடம் பயின்றார். எனினும், துன்பத்திற்கு முடிவுக்கட்டும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கேள்வியைச் சிந்தித்தவாறே பல ஆண்டுகளைக் கழித்தார். இறுதியாக இருபத்தொன்பது வயதில் பிணி, மூப்பு, சாக்காடு, துறவுவழி மற்றும் வீடுபேறு ஆகியன பற்றி தீவிரமாகச் சிந்தித்த அவர் தமது உலகியல் ஈடுபாடுகளையும், பொறுப்புகளையும், சுகபோகங்களையும் விட்டொழித்தாலன்றி விடை காண்பது இயலாதென்று முடிவுசெய்தார். இதன் காரணமாகவே அவர் துறவு கொண்டு அரண்மனையை விட்டகன்றார்.

ஆறாண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு அவர் இறுதியாக தன் சுய முயற்சியாலே மெய்யொளிப்பேறு எய்தினார். நம்முடைய துக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்டார். அவரே தான் பிற்காலத்தில் ‘புத்தர்’ – அதாவது ‘விழிப்பு அடைந்தவர்’ என்று மக்களால் அழைக்கப்பட்டார். இதுவே பௌத்தம் என்கிற மற்றொரு ‘சமய அமைப்புமுறை’யின் துவக்கமானது. உண்மையில் இன்று பல பேர் பௌத்தத்தை ஒரு சமயம் என்று கூட அழைக்க விரும்புவதில்லை; ஏனெனில், ‘சமயம்’ என்ற சொல் அவர்கள் மனதில் ஏராளமான எதிர்மறை மனவெழுச்சிகளை உருவாக்கி விடுகிறது.

இதனை இன்னொரு மதமாக அறிமுகம் செய்வதற்கான எண்ணமும் புத்தருக்கு அப்போது இருக்கவில்லை. ஏனென்றால் 2600 ஆண்டுகளுக்கு முந்திய அந்த காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமே எத்தனையோ சமய முறைகள் ஏற்கனவே இருந்துவந்தன. அவரது காலத்து சமயங்களால் அவரது வினாக்களுக்கு விடையளிக்க இயலாது போய்விட்டதால் அவர் தாமே சிந்தித்து உணர்ந்தவற்றை அறிமுகம் செய்துவைக்க அந்தச் சமயங்களின் கோட்பாடுகளையோ, கருத்துருக்களையோ பயன்படுத்தபோவதில்லை என்று முடிவு செய்தார்.

அந்தக் காலத்து இந்தியாவின் சமயச் சிந்தனை என்னவாக இருந்தது? ‘கடவுள் ஒவ்வொருவரையும் உண்டாக்குகிறார். கடவுளே எல்லாவற்றுக்கும் பொறுப்பு; கடவுள் வரம் தருவார். கடவுள் நம் பாவங்களை எல்லாம் மன்னிப்பார்; கடவுளே நம் மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்குப் பொறுப்பு; கடவுள் நம்மை சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பி வைப்பார்;’

புத்தர் தம்மைப் பின்பற்றுவோர் என்று கூறிக்கொண்டவர்களுக்கு சொர்க்க சுகமோ, வெகுமதியோ கிடைக்குமென்று வாக்குறுதியளிக்கவில்லை. அன்றி தம் பேரில் நம்பிக்கை வைத்தவர்களுக்குக் கடைத்தேற்றம் கிடைக்குமென்றும் வாக்குறுதி தரவில்லை. அவரைப் பொறுத்தவரை சமயம் என்பது வியாபாரம் பேசுவதல்ல; அது மெய்யொளிப் பேற்றையும் கடைத்தேற்றத்தையும் அடைவதற்கான ஒரு மேன்மைவாய்ந்த அரிய வாழ்க்கை நெறி. மக்கள் சிந்தித்துப் பார்த்து விளங்கி கொள்வதையே அவர் விரும்பினார். மனித நேயமும், நீதியும், அமைதியும் பேரரசு புரியுமொரு மேன்மைவாய்ந்த அரிய வாழ்க்கை நெறியே பௌத்தம் என்று சொன்னார்.

ஆனால், புத்தர் தமது கோட்பாட்டை அறிமுகம் செய்ய அன்றைய இந்தியாவில் புழக்கத்தில் இருந்துவந்த சமயக் கலைச் சொற்களையே பயன்படுத்தினார். ஏனென்றால், அப்படிச் செய்தால்தான் தம் பேச்சைச் செவிமடுப்பவர்களோடு பழக்கப்பட்ட தளத்தில் அவரால் உரையாட முடியும் என்று நம்பினார்.

தர்மம், கர்மா, நிர்வாணம், மோட்சம், நரகம், சம்சாரம், ஆத்மா என்பன அவரது காலத்தில் எல்லாச் சமயப் பிரிவினருக்கும் பொதுவாக இருந்துவந்த சில சொற்களாகும். அவ்வாறே புத்தர் தமது போதனையில் பழக்கத்திலிருந்த இந்தச் சமயச் சொற்களுக்கு பகுத்தறிவுக்கு உகந்ததாகவும், தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும் உள்ள பொருள்களை வழங்கலானார்.

எடுத்துக்காட்டாக தர்மம் (அல்லது தம்மம்) என்ற சொல்லைப் பார்த்தால், ‘தர்மம்’ எனும் இந்தச் சொல்லுக்கு தொல்பழங்காலத்தில் வழங்கி வந்த பொருள் ‘கடவுளால் வழங்கப்பட்ட ஒரு விதி’ என்பதாகும். தொன்மையானதொரு நம்பிக்கைக்கு இணங்க, இந்த தர்மத்தைக் காப்பதற்காக அவ்வப்போது பல்வேறு அவதாரங்களை எடுத்து காட்சியளிப்பதாகக் கடவுள் வாக்குறுதி அளித்துள்ளார். புத்தர் தர்மம் எனும் சொல்லைத் தம்முடைய போதனை முழுமையையும் வருணிக்கப் பயன்படுத்தியுள்ளார். எது தாங்குகிறதோ, எது ஆதரிக்கிறதோ அதுவே தர்மம்.
உயிர் வாழ்ந்திருப்பதால் உண்டாகும் துன்பத்திலிருந்து நாம் தப்பவும், நம் மேன்மையின் தரத்தைக் கெடுத்து கீழ்நிலைகளுக்குத் தாழ்ந்து சென்றுவிடாமல் தடுக்கவுமே புத்தர் தர்மத்தைப் போதித்தார். புத்தர் அறிமுகப்படுத்திய தர்மம் நம்மைத் தாங்கி ஆதரித்து இந்த உலகங்களின் துயரங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

பொதுவாக சமயத்தைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளும் போது ‘உங்கள் நம்பிக்கை (faith) என்ன?’ என்று கேட்பது வழக்கமாக உள்ளது. ஆனால் ‘நம்பிக்கையை’ வளர்க்க புத்தர் ஆர்வம் கொள்ளவே இல்லை. பகுப்பாய்வினால் விளைந்த அறிவு இல்லாமல் நம்பிக்கையை மட்டும் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்து என்னவென்றால் அது நம்மைச் சமய வெறியர்களாக்கிவிடக்கூடும் என்பதே. தங்கள் மனதில் நம்பிக்கையை உறுதிபட அனுமதிப்பவர்களால் பிறருடைய கண்ணோட்டத்தை உணர முடியாது. புத்தர் தம் சொந்தப் போதனைகளைக் கூட நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வற்புறுத்தினார். ஒருவர் அறிவைப் பெறவேண்டும்; அதன்பின் ஆய்வு, விவாதம், தியானம் மற்றும் இறுதியாக ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாக விளக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். செய்திகள் பற்றிய அறிவு என்பது ஒன்று; விளக்கம் என்பது வேறொன்று. விளக்கம் இருந்தால் ஒருவர் தமக்குள் தாமே தெளிவு பெற முடியும் என்றார்.

‘என்ன செய்ய வேண்டுமென்று புத்தரால் உனக்குச் சொல்ல முடியும்; ஆனால், அந்த வேலையை உனக்காக அவரால் செய்ய முடியாது’ என்பது ஒரு கூற்று. கடைத்தேற்றுவதற்கான வேலையை நீயே செய்து கொள்ள வேண்டும். கடைத்தேற்றுவதற்காக வழிகாட்டுவதைத் தவிர யாரும் மற்றொருவருக்கு வேறெதுவும் செய்துவிட முடியாது என்று புத்தர் தெளிவாகவே கூறியுள்ளார். ஆகவே, நாம் கடவுளை நம்பி இருக்கக்கூடாது; அதோடு புத்தரையும் கூட நம்பி இருக்கக் கூடாது. ஒரு மனிதராக இருப்பதில் உள்ள தன்மைகளையும், கடமைகளையும், பொறுப்புக்களையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

புத்தரின் போதனை முறை மற்றவர்களின் முறையிலிருந்து மாறுபட்டது. அவர் ஒரு போதும் தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்கள் முன் பேசியதில்லை, சொற்பொழிவாற்றியதுமில்லை. அவர் எப்பொழுதும் அந்த அந்த நேரத்து உடனடி நிகழ்வு, அல்லது உற்றுநோக்கிய சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே தம் பேச்சின் பொருளைத் தீர்மானித்தார்.
புத்தரின் போதனாவிலாசத்தையும், ஓர் ஆசிரியர் என்ற முறையிலான அவரது திறமையையும் காட்டும் கதைகள் பல. ‘எடுத்துக்காட்டாக, ஒரு ஆற்றங்கரை ஓரமாக ஒரு சமயம் அவரும் அவரது மாணாக்கர்களும் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு மரத் துண்டு ஆற்றோட்டத்தில் மிதந்து செல்வதைக் கவனித்தார். நின்று தம் மாணாக்கர்களைக் கேட்டார், ‘இந்த மரத்துண்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு என்ன நேரும்?’

ஒரு மாணவர் பதிலளித்தார். ‘ஆற்றின் நடுவே உள்ள ஒரு தீவில் அது கரை சேரலாம்.’

மற்றவர்கள், ‘அது நீரில் நன்றாக ஊறி மூழ்கிப் போகலாம்’ என்றார்கள்.

‘அல்லது அது யாராலாவது எடுத்துச் செல்லப்படலாம்’ என வேறு சிலர் கூறினார்கள்.

புத்தர் கேட்டார், ‘அப்படி எதுவுமே நடக்காவிட்டால், அந்த மரத்துண்டு எங்கே போய்ச் சேரும்?’.

அவர்கள் சொன்னார்கள், ‘அது நேரே கடலில் போய்ச் சேரும்’.

புத்தர் கூறினார்: ‘அதைப்போலத்தான் நாமும். நாம் வலது கரையில் (புலன் இன்பங்கள்) சிக்கிக் கொள்ளாமலும், இடது கரையில் (தவறான கொள்கைகள்) கரை ஒதுங்காமலும், நடுவில் அமிழ்ந்து போகாமலும் (சோம்பல்), யாராலும் எடுத்துச் செல்லப்படாமலும் (பிறரது தவறான வழிகாட்டுதல்) இருந்தால், நாமும் நேரே நிர்வாணம் எனும் கடலைச் சென்றடைவோம்’.

‘நிர்வாணம் அல்லது மோட்சம் என்பது இறப்பிற்குப் பின் கிடைக்கும் ஒன்றல்ல. அது இப்பொழுதே, இங்கேயே உங்கள் மன அமைதியிலும், தெளிவிலும் உணரப்பட வேண்டிய ஒன்று’ என்றார்.

புத்தர் தன்னுடைய கைகளை அசைத்து நம்முடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் தீர்க்கும் மாயவித்தைக்காரர் அல்ல. மாறாக நம்முடைய வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து நம்மை நாமே விடுவித்துக்கொண்டு அதனை நாம் பின்பற்றுவதற்கான பாதையை அமைத்து கொடுத்திருக்கிறார்.

புத்தர் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர் கற்பித்த போற்றத்தக்க தர்மம் அவர் காண்பித்த சமய வழியைப் பின்பற்றிய சீடர்களால் (சங்கம் என்று அழைக்கப்படுவர்) வழிவழியாக வாய்மொழிச் சொல்லாகப் பரவி உலகில் நிலை பெற்றது. அவர் தம் வாழ்நாளில் 45 ஆண்டுகள் சங்கத்திற்கு வழி காட்டியாக விளங்கினார்.

இச்சங்கம் பல நூற்றாண்டுகளாக அழியாது தொடர்ந்து புத்தரின் ஞானத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையினாலும் வாய்ச் சொல்லாலும் பாதுகாத்து வருகிறது. இது நாள் வரை புத்தர், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் எல்லாப் பௌத்த மதத்தினராலும் ‘மூன்று புகலிடங்கள்’ என்று மதித்துப் பாராட்டப் படுகின்றன.

புத்தர் காலத்திற்குப் பிறகு அவர் கற்றுக்கொடுத்த தர்மம் ஆசியாக் கண்டம் முழுவதும் அதற்கு அப்பாலும் பரவியது. அதனால் அந்தந்த நாடுகளின் கலாச்சாரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் அது பல மாறுபாடுகளையும் அடைந்தது. அதன் விளைவாகப் பௌத்த மதத்திற்குள்ளேயே பல உட்பிரிவுகள் தோன்றின. அவற்றுள் முக்கியமான மூன்று பிரிவுகளாவன : தேராவாதம் (பெரியோர் வாதம்) என்று அழைக்கப்படும் பிரிவு இலங்கை, தாய்லாந்து, பர்மா நாடுகளில் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. மஹாயானாம் (பெரிய வாகனம்) என்று அழைக்கப்படும் பிரிவு சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளில் காணப்படுகின்ற பழக்க வழக்கங்களைத் தழுவியது. வஜ்ரயானாம் (வைரக்கல் வாகனம்) என்று அழைக்கப்படும் பிரிவு திபெத் பகுதியில் காணப்படுகிறது.

ஒருமுறை புத்தரிடம் எதனால் அவர் சீடர்கள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று கேட்டதற்குப் அவரது பதில்:
“அவர்கள் கடந்து போனதை நினைத்துக் கவலை அடைவதில்லை
வரப்போவதை நினைத்து எண்ணி எண்ணி ஏங்குவதில்லை
அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள்;
அதனால் பிரகாசமாக இருக்கிறார்கள்.”

இந்த வழியை முழுமையாகப் பேணிவளர்த்தவர்கள் துன்பம் நேரும் போதும் உள்ளத்தில் அமைதியையும் பொறுமையையும் காண்கிறார்கள். காலம் கனிந்து வரும்போது தங்கள் செல்வங்களைப் பிறருடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப் படுகிறார்கள். குறையற்ற வாழ்வும், வன்முறையற்ற மனோபாவங்களுடனும் வாழ்வதனால், எந்தச் சூழ்நிலையிலும் தம் சீடர்களது உள்ளம் நிலையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்றார்.

கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்தே பௌத்தம் தொடங்கியது. ஆடம்பரங்களையும், அரசுடமைகளையும் விட்டு நீங்கியே அரசமரம் அடைந்தார் புத்தர். அரசமரத்தின் அடியில் புத்தராக இருப்பது ஆச்சரியமல்ல, போர்க்களத்திலும் புத்தர் புத்தராக இருக்க முடியுமா? அசோக மன்னன் தொட்டு வரலாற்றில் எத்தனையோ போர்க்களங்களில் பூக்களை பூக்கச்செய்தவை புத்தரின் போதனைகள்.
அந்தப் போதனைகள் வெறும் துறவறக் கருத்துகள் அல்ல; மனித மனத்தின் ஆழத்தில் வேரூன்றிய கருணை, அஹிம்சை, சமத்துவம் ஆகியவற்றின் உயிரோட்டம். இரத்தம் சிந்திய நிலங்களை கூட அமைதியின் வயல்களாக மாற்றும் சக்தி அதற்குண்டு என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சாட்சி கூறுகிறது.

அதனால், புத்தர் ஒரு காலத்தின் ஞானி மட்டுமல்ல—எல்லா காலங்களிலும் உயிர்ப்புடன் நிற்கும் ஒரு சிந்தனை.
போர்க்களம் எங்கே இருந்தாலும், மனம் மாறும் இடம்தான் உண்மையான புத்தரின் உறைவிடம். அதனை மீள வலியுறுத்தும் நோக்கிலேயே துமியின் முகப்பை அலங்கரிக்கிறார் புத்தர்.

Related posts

உழைப்பின் பெருமை பேசும் தொழிலாளர் தினம்

Editor

பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது துமி அமையம்

Editor

தோல்வி வெற்றியின் முதல் படி

Editor

Leave a Comment