இதழ்-30

ஆஹா! கல்யாணம்…!

வயது – இருபத்தொன்பது வருடங்கள் எட்டு மாதங்கள்.

தொழில் – விஞ்ஞான ஆசிரியை.

விவாக நிலை – தனியாள்.

வீட்டில் வரன் தேட ஆரம்பித்து ஐந்து வருடங்கள். இவளுடைய கிரகநிலைக்கு பொருத்தம் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது. இளமை அரும்பி ஊஞ்சலாடும் பருவத்தில் வந்த அத்தனை காதல் கடிதங்களையும் நிராகரித்து விட்டு, இன்று காதோரம் நரைக்க ஆரம்பித்திருக்கும் முடிகளை மறைக்கவே கண்ணாடியின் சிறிது நேரத்தை அதிகம் செலவு செய்துகொண்டிருக்கிறாள்.

“காதல் கொண்டேன்

கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி

நீ தானே என் சந்நிதி”

என்று, சாதாரண தரம் தொடங்கி கல்லூரி காலங்கள் வரை அவளிடம் காதல் விண்ணப்பம் செய்த அத்தனை ஆண்களையுமே பெற்றோர் விருப்பத்தின் படியே மணம் முடிப்பது என்ற வைராக்கியத்தில் நிராகரித்து விட்டாள். கூடப் படித்த அத்தனை தோழிகளின் திருமணங்களுக்கும் சென்று வந்துவிட்டாள். அங்கெல்லாம் அவள் சந்திக்கும் ஒரே கேள்வி,

உனக்கு எப்ப கலியாணம்?

காலம் உருள அந்த கேள்வி தொடர்ந்து அவளை துரத்திக்கொண்டே இருந்தது. பதில் தெரியாத கேள்வியை சுமந்து கொண்டு நாளும் வேதனையில் குமுறுவாள். பின்னர் எதுவோ நமக்கு நடக்க இருந்தால் நடக்கும் என்று தன்னை தேற்றிக்கொண்டு பாடசாலை – வீடு என்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள். திருமணம் பற்றிய அத்தனை ஆசைகளும் எங்கோ ஒரு மூலையில் பூட்டப்பட்டு தூசி படிந்திருக்கிறது.

“இது தானா இது தானா

எதிர்பார்த்த அந்நாளும் இது தானா

இவன் தானா இவன் தானா

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானேன்

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்”

அதிசயம், அவளினாலேயே நம்ப முடியாத அற்புதம். அத்தனை காலமும் அவளின் காத்திருப்புக்கான பதில் கிடைத்துவிட்டது. இரு வீட்டாரும் கலந்து பேசி சம்பந்த கலப்பும் முடிந்தது. இளமை துடிப்பு ததும்பும் வயதிலிருந்து சேமித்த  திருமணம் தொடர்பான அத்தனை எதிர்பார்ப்புகளும் இப்பொழுது மீள பெருக்கெடுக்கிறது.

//திருமண மலர்கள் தருவாயா

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே

தினம் ஒரு கனியை தருவாயா

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே

கனிவாய் கனிவாய் மரமே

நதியும் கரையும் அருகே

நானும் அவனும் அருகே//

குதூகலமாக இருக்கிறாள். அவளுடைய மகிழ்ச்சிக்கு வானமே எல்லை. தன்னுடைய அத்தனை தோழிகளுக்கும் நேரிலும் தொலைபேசியிலும் திருமண அழைப்புக்கள். அவள் மட்டுமன்றி, அதுவரை இவள் எதிர்காலத்தை எண்ணி வருந்திய குடும்பமும் இப்பொழுது மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறது.

“என்னவோ என்னவோ என்வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை

உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ

ப்ரியமானவனே!”

அவனுடன் மணமேடையில் மணமகளாக அமரப்போகும் அந்த நொடிக்கான காத்திருப்பில் அவள்.

வீடு மீள திருத்தி அமைக்கப்பட்டு, புதிதாக வர்ணங்கள் தீட்டப்பட்டது. நாள் நெருங்க சொந்தங்கள் எல்லாம் கூடி பலகாரங்கள் சுட ஆரம்பித்தார்கள். அதனை ஜன்னல் வழி ஒளிந்து பார்க்கும் இவளோ,

“இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்”

~ feel free to tag yourself or others in the photos ~ Like us at

பொன்னுருக்கும் முடிந்தது. நாளை மறுதினம் திருமணம். அவளுடைய தோழிகள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். வீடு  முழுதும் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறது. வெளியில் வாழைமரங்கள் கட்டுவதையும் சொக்கட்டான் பந்தல் அலங்காரங்களையும் சீரியல் பல்ப் கொழுவுவதையும் வேடிக்கை பார்க்கும் இவளுக்குள் ஏதோ பரவசம்.

“வானவில்ல கொண்டு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு

விண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீரியல் பல்பா மாத்தி போடு”

நாளை திருமணம். திருமண சேலை, நகை, அலங்காரங்கள் அத்தனையும் ரெடி. தூர இடங்களில் இருந்து வந்த தோழிகளெல்லாம் இவளது மாப்பிள்ளை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்,

“யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்”

மணமேடையில் அந்தணர் மந்திரம் ஓதி அக்னி வளர்க்க, அங்கே மணாளன் இவளை பாத்திருக்கிறான். இவள் மணப்பெண் அலங்காரத்துடன் முகத்திரை அணிந்து கையில் மலர்மாலையுடன் தோழிகள் சகிதம் மெதுவாக மணமேடையை நோக்கி நடந்து வருகிறாள். நாதஸ்வரத்தில்,

“வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?

மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ?”

இசைக்க, மணமேடையேறி கையில் கொண்டு வந்த மாலையை தன்னவனுக்கு சூட்டினாள். மேளமும் நாதஸ்வரமும் மங்கல கீதம் பொழிய அந்தணர் சொல்லும் செய்முறைகளை செய்து கொண்டே, மண்டபத்தில் நிறைந்து கொண்டிருக்கும் விருந்தினர்களையும் அவர்களை வரவேற்று உபசரிக்கும் தன் உறவினர்கள்களையும் சுற்றி கண்களால் உலா வந்தாள்.

“வாங்க வாங்க என்று சொல்லணும்

சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்

வந்தவங்க வயிறு நெறையனும்

வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்”

கூறை மாற்றி வந்து, பெரியவர்கள் மலர் தூவி அர்ச்சதை போட தவில் நாதஸ்வரம் முழங்க மாப்பிள்ளை தாலி கட்டினான்.

“மூணு முடி போடுவதெதுக்கு

உரிமைக்காக ஒத்த முடிச்சு

உறவுக்காக ரெண்டாம் முடிச்சு

ஊருக்காக மூணாம் முடிச்சு”

கழுத்தில் தாலியேற அதுவரை அவள் தேக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களும் தன்னவனின் திடீர் வரவினால் பொங்கி வழிந்த மகிழ்ச்சி ஊற்றும் சேர்ந்து கண்ணீர் குடங்களை உடைத்து விட்டது. ஊராரின் வசைகளை கேட்டு எத்தனையோ இரவுகள் தூக்கம் விழித்து தலையணை நனைத்தவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

“மரகத வள்ளிக்கு மணக்கோலம் – என்

மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்!

கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தாள்

கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்?

கோலம்! திருக்கோலம்! “

அவள் கண்கள் மட்டுமன்றி பெற்றோரின் கண்களும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியது.

பின்னர், நெற்றியிலும் கட்டிய தாலியிலும் குங்குமம் தரித்து, அம்மி மிதித்து மெட்டி அணிந்து யாக குண்டம் சுற்றி

அத்தனை சொந்தங்களும் கூடி அர்ச்சதை அரிசி போட்டு அன்பளிப்புகளை அள்ளி வழங்க இவளுடைய  திருமணம் பெரும் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது.

“உள்ள சொந்தமெல்லாம் சேர்ந்து வந்து திருமணத்தை நடத்துரப்போ

அடடா ஆட்டம் பாட்டம் தான்

அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்”

அனைவருக்கும் மதிய விருந்து. பலவகை கறிகள்,வடை, பாயாசம் என்று தடல்புடலான விருந்து.

“பச்சை இலை பந்திய போட்டா

மொத்த சனமும் தேடுது சோறு”

தன்னவனுடன் இவளும் சபைக்கு செல்கிறாள். அவன் கூட இருக்கின்றான் என்ற சந்தோஷம் தாண்டி அதுவரை அவள் அனுபவித்த வலி அத்தனையும் சந்தோஷ சூரியனின் வெப்பத்தால் ஆவியாகிக்கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருந்தவள், தன்னை துயரக்கடலிலிருந்து மீட்க வந்த தலைவனை இப்பொழுது முழுவதுமாக ரசிக்கிறாள்! யார் அவன்?

//பாவாடை அவிழும் வயதில்

கயிறு கட்டி விட்டவன் எவனோ

தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்

கொலுசுயிடும் ஓசை கேட்டே

மனசில் உள்ள பாஷை சொல்வான்

மழை நின்ற மலரை போல பதமானவன்

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்//

அவன் அமெரிக்காவில் மென்பொருள் இயந்திரவியலாளன். இவளது குடும்பம் தொண்ணூறுகளின் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்திருந்த போது, அவனுடைய குடும்பமும் அதே வீட்டில் இடம்பெயர்ந்து இருந்தார்கள். இவளுக்கு அப்பொழுது எட்டு வயது அவனுக்கு பதினொன்று. இடம்பெயர்ந்து இருந்த போது இரண்டு வருடங்களும் இரு குடும்பமுமே ஒரே குடும்பமாக வாழ்ந்தவர்கள். இவளும் அவனும் சேர்ந்தே விளையாடுவார்கள். கூடவே சுற்றுவார்கள். வெளியில் எங்கு சென்றாலும் அவளை கவனமாக பார்த்துக்கொண்டவன்.

போரோடு அவனுடைய குடும்பம் அப்படியே வெளிநாடு சென்றுவிட, இவர்கள் போர் முடிய மீண்டும் தங்களது இருப்பிடம் வந்துவிட்டார்கள். பின் எந்த தொடர்பும் இல்லை. இப்பொழுது அவர்கள் குடும்பமாக நாடு திரும்பிய போது இவர்களை தேடி வீட்டுக்கு வர, அவனுக்கு இவளை கண்டதும் பிடித்து விட்டது. பொருத்தங்களும் கூடி வர, சந்தோச மழை பொழிய ஆரம்பித்தது.

“மலரென்ற உறவு பறிக்கும் வரை!

மகளென்ற உறவு கொடுக்கும் வரை!

உறவொன்று வருவதில் மகிழ்ந்துவிட்டேன்!

உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்!

எந்தன் வீட்டுக் கன்று இன்று

எட்டி எட்டிப் போகிறது!

கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து

எட்டி எட்டிப் பார்க்கிறது!”

மணமகன் வீட்டுக்கு வழியனுப்பும் போது தாய் தந்தையின் கண்கள் குளமாகியது. இவளுடைய கண்களிலும் இருபத்தொன்பது வருட நேசம் பெருக்கெடுத்தது.

//தாலி கொள்ளும் பெண்கள்

தாயை நீங்கும்போது

கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு//

தன்னவன் கைய பிடித்தபடியே காரிற்குள் ஏறும் முன், தான் அதுவரை வாழ்ந்த வீட்டை ஏக்கத்தோடு பார்க்கிறாள்.

//மாடி கொண்ட ஊஞ்சல்

மடி மேல் கொஞ்சும் பூனை

சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு//

அவள் அழ, சொந்தங்களின் கண்களிலும் கண்ணீர். தன்னவனுடைய தாயும் தந்தையும் அவள் ஏற்கனவே மாமா , அத்தை என்று அழைத்து மகிழ்ந்த அவர்கள், இவளை சமாதானம் செய்தார்கள்.

//கன்னம் கிள்ளும் மாமி

காதை திருகும் மாமா

என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு

இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா//

தன்னவனின் தாய், அந்நாட்களில் தனக்கு உணவு ஊட்டிவிட்ட நினைவுகள், அவளை கட்டிப்பிடித்துக்கொண்டே உறங்கிய நாட்கள், அவளுடன் கோயில் திருவிழாக்களுக்கு சென்று வந்த நினைவுகள் அத்தனையும் மீண்டும் அலையடிக்க, அம்மா என்று விக்கித்து அவளை கட்டிக்கொண்டு அழுதாள்.

//மாதம் பத்து செல்ல

மழலை பெற்றுக்கொள்ள

அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை//

தன்னவன் தாயை தன் தாயாக்கி நெகிழ்ந்த அதே நேரத்திலேயே, அதுவரை திருமணம் பற்றிய கனவில் இருந்தவளுக்கு ‘தான் தாயாகும்’ நாள் பற்றிய கனவுகள் இறக்கை முளைக்க ஆரம்பித்தது.  தன்னுடைய தோழிகள் எல்லாம் தங்கள் குழந்தைகளை அள்ளிக்கொஞ்சும் போது ஏற்பட்ட ஏக்கத்தின் மிச்சம் அது.

//போனவுடன் கடிதம் போடு

புதினாவும் கீரையும் சேரு

புத்திமதி சொல்லும் தாயின்

மொழியே இல்லை//

திருமணமானதும் உணவில் ஏன்  கீரை வகை சேர்க்க வேண்டும்? மகப்பேற்று காலத்தின் போது சிசு வளரும் பொழுது அதன் மூளை,முன்னாண் போன்றவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ‘போலிக் ஆசிட்’ என்ற விற்றமீனும் குழந்தையின் குருதிக் கலங்களின் வளமான உற்பத்திக்கு ‘இரும்புச்சத்தும்’ அவசியம். இது இரண்டு கீரை வகைகளில் அதிகம் இருக்கிறது. அதனால் பழைய காலங்களில் புதிதாக திருமணமான பெண்ணுக்கு இப்படியான அறிவுரைகள் வழங்கப்படும். அம்மாவின் இப்படியான அறிவுரைகள் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பு, மழலை கனவுடன் சேர்த்து கீச்சம் போடுகிறது.

//தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே

தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே//

அத்தனை உறவுகளும் நீர் படித்த கண்களினால் வாழ்த்தி நிற்க, வாடும் நிலையில் இருந்த முல்லைக்கொடி ஒன்று சந்தோஷ மழையில் செழித்து மகிழ்ச்சி பூக்களால் மலர்ந்து தன்னவனின் கைகளை பற்றிக்கொண்டு கார் உள்ளேயிருக்க, கார் புறப்பட்டது.

“வைகறை பனியே பூமியின் அழகு

வாழ்க்கையின் துணையே வாலிப அழகு

ஏற்றிய தீபங்கள் கோவிலின் அழகு

மார்கழி கோலங்கள் வாசலில் அழுகு

நீ எனக்கும் நான் உனக்கும் அழகு அழகு அழகோ அழகு”

Related posts

முதலாளித்துவம் – Capitalism 01

Thumi2021

சொந்தச் சிறைக்குள் சுதந்திரம்

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 04

Thumi2021

Leave a Comment