கட்டுமரக் கப்பல் செய்வதற்கு என்று கட்டுமரம் என்று ஒரு வகை மரம் இருக்கிறதாமே? அதைப்பற்றி சொல்கிறீர்களா?
ரவிக்குமார், உவர்மலை
யார் சொன்னது? கட்டுமரம் என்று ஒரு மரமே இல்லை. ஒதியம் எனப்படுகின்ற மரத்தில்த்தான் பெரும்பாலும் கட்டுமரம் செய்வார்கள். இப்போது கட்டுமரப் பயன்பாடு இல்லாததால் ஒதியமரங்களும் கவனிப்பாரற்றுப் போய்விட்டன.
ரஜனிக்கு பால்கே விருது கிடைத்தது பற்றியும் கமலுக்கு கிடைக்காதது பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
விஜீத், வட்டுக்கோட்டை
ரஜினிக்கு விருது கொடுத்ததே கமலை சீண்ட வேண்டுமென்றுதான். மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்ததன் விளைவுதான் இது. அரசியலுக்கு வந்த பிறகு கமல் இனி விருதுகளை எதிர்பார்க்கக் கூடாது. கமல் அரசியலால் அதித லாபம் அடைந்தது ரஜினியாகத்தான் இருக்கும்.
இரண்டு கண், இரண்டு காது படைத்த கடவுள் ஏன் ஒரேயொரு வாயை மட்டும் படைத்தார்?
தாருஜன், சுன்னாகம்
“ஒரு தடவைக்கு இரண்டு தடவை வடிவாகப்பார்! உன் பார்வை பிழைக்கலாம். ஒரு தடவைக்கு இரண்டு முறை கூர்மையாகக் கேள்! நீ தவறாக விளங்கி இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு முறைதான் நீ பேச முடியும். பேசிய சொல்லை திரும்ப பெற முடியாது. ஆகவே அவதானமாக பேசு. ” இப்படி ஒரு பெரிய முட்டாக கொடுக்க வேண்டியது தான் தாருஜன்.
தென்னாபிரிக்க அணிக்குள் மீள இன வெறி தாண்டவமாடுதாமே? என்ன கதை அது?
அயந்தன், வறணி
பதில்:- இந்த உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் ஒரு கால் மண்டியிட்டு ஒரு கரத்தின் விரல்களை மடித்து மேலே உயர்த்தி நாங்களும் கருப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அப்போது குய்ண்டன் டீ காக், நார்ட்ஜே ஆகிய வெள்ளைத் தோல் வீரர்கள் சிலர் இந்த உறுதிமொழியை ஏற்காமல் புறக்கணித்து அந்த போட்டியில் விளையாடி உள்ளனர்.
இதற்கிடையில் மேற்கிந்திய தீவுகளுடனான அடுத்த போட்டிக்கு முன்பு கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தனது வீரர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கையின் மூலம் அனைவரும் இந்த உறுதிமொழியை மண்டியிட்டு எடுத்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவது கட்டாயம் என்று கூறியது. இதை ஏற்க மறுத்த குய்ண்டன் டீ காக் அந்த போட்டியை புறக்கணித்து விட்டார்.
அனைத்து மக்களும் ஒன்றே நிற வெறி தவறு. கருப்பின மக்களை விட வெள்ளை நிற மக்கள் மேன்மையானவர்கள் இல்லை. சமத்துவத்தைப் பேணும் கொள்கையை ஏற்காமல் புறக்கணிக்கும் யாருக்கும் அணியில் இடமில்லை என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறாமல் கூறியிருக்கிறது .
மும்பை இந்தியன்ஸ் அணியும் குய்ண்டனின் இந்த முடிவையொட்டி அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து யோசிக்கிறது என்று செய்திகள் வருகின்றன. இது பார்க்க கடுமையான முடிவாகத் தோன்றினாலும் வளமான எதிர்காலத்திற்கு உரிய சிறந்த முடிவாகும்.
உலகில் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி யார்?
கனிகா, மாங்குளம்
கிட்னி தேவைப்படும் போது மட்டும் மதம் பார்க்காதவர்கள்
இதயம் தேவைப்படும் போது மட்டும் இனம் பார்க்காதவர்கள்
இரத்தம் தேவைப்படும் போது மட்டும் சாதி பார்க்காதவர்கள்
எல்லோருமே சந்தர்ப்பவாதிகள் தான்.
இந்தமுறை உலகக்கோப்பை இருபதுக்கு இருபதை யார் வெல்வார்கள்?
கஜீபன், உடுப்பிட்டி
ஏதோவொரு தெற்காசிய அணிக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிலும் பாக்கிஸ்தான் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எமது இலங்கையர்களின் எழுச்சியும் மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் அரையிறுதிக்கு போதுமானதாக இருக்கப்போவதில்லை.